கோவையில் சங்கரர் குறித்து…

1

[கோவையில் நாளை [3-1-2016] அன்று சங்கரர் பற்றி உரையாற்றுகிறேன். கிருஷ்ணா ஸ்வீட்ஸ் ஏற்பாடுசெய்திருக்கும் எப்போ வருவாரோ என்னும் உரைநிரையின் மூன்றாவது நிகழ்ச்சி. கிக்கானி பள்ளி அரங்கு. மாலை ஆறுமணி]

பெருமதிப்பிற்குரிய ஜெமோ அவர்களுக்கு,

வணக்கம்.

புத்தாண்டு வாழ்த்துக்கள்! உங்கள் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பெரும்பாலும் ஏன் கோவையை சுற்றியே அமைகின்றன?.கடைசியாக உங்களின் ‘நேர் உரையை’  ‘ஹிந்து தமிழ்’ பதிப்பின் ஆண்டுவிழாவில் நெல்லையில் கேட்டதுதான். அதற்கு பின் இந்தப் பக்கம் வரவேயில்லை. அண்மையில் அதற்கு ஏதாவது வாய்ப்பு இருக்கிறதா என்பதை அறிய விரும்புகிறேன்.

அன்புடன்,

அ .சேஷகிரி.

அன்புள்ள சேஷகிரி,

நான் பேச்சாளன் அல்ல. அதற்குரிய குரலும் உச்சரிப்பும் எனக்கில்லை. உரைகளை திரும்பத்திரும்ப பேசி சீரமைப்பதில்லை. ஒவ்வொரு உரையும் புதியவை. ஆகவே அதற்கான எல்லா சிக்கல்களும் உண்டு.

ஆயினும் பேசுவதற்கான காரணம் பேசுவது ஒருவிஷயத்தை ஒட்டுமொத்தமாக தொகுக்க உதவுகிறது. விவாதங்கள் மூலம் விரிவாக்கவும் முடியும் என்பதனால்தான். நண்பர் நடராஜனின் கோரிக்கையும் தூண்டுதலாயிற்று.

கோவையில் கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் இந்த அரங்கை அமைக்கிறது. வேறு இடங்களில் இத்தகைய அமைப்பு இல்லை.

மேலும் பிற ஊர்களில், சென்னையில்கூட, இத்தகைய ஒரு கேள்வியாளர் இல்லை. என் உரை பக்திப்பேருரை அல்ல. மதச்சொற்பொழிவும் அல்ல. இத்தகைய உரைகளுக்கு எங்கும் நூறுபேர் தேற மாட்டார்கள். அதற்கும் குறைந்தால் பேசுவதில் பொருளில்லை.

ஜெ

அன்பு ஜெ ,

இதற்கு முன் நான் எந்த கீதை உரையையும் படித்தது கிடையாது உங்கள் உரையைத் தொடர்ந்து கீதை சம்பந்தமான பலவேறு பேச்சுக்களையும் விவாதங்களையும் தொடர்ந்து கேட்டுக்கொண்டும் படித்துக்கொண்டும் இருந்தேன் . பொதுத்தளத்தில் கீதை குறித்து புழங்கும் பிழையான வாசிப்பும் , குறுகல் வாசிப்பும் பின் அதிலிருந்து தத்தம் சொந்த தரப்புகளுக்குள் கீதையை அடைக்க உருவாக்கப்படும் பல்வேறு திரிபுகளும் எவ்வாறு நிகழ்கிறது என்று உணர்ந்துகொள்ள முடிந்தது .கீதையை சரியாக அணுக சில நல்ல முயற்சிகளும் தென்பட்டாலும் அம்முறைகளில் ஒரு முழுமை காணக்கிடைக்கவில்லை , அரசியல் பேசுவது தத்துவத்தை தவறவிடுகிறது , ஆன்மீகம் பேசுவது வரலாற்றை தவறவிடுகிறது.

இந்தப் பின்புலத்தில் கீதை குறித்த உங்கள் உரையும் அதன் நோக்கமும் இன்னும் முக்கியத்துவம் கொள்கிறது ஒரு வகையில் உங்கள் நோக்ககு 360 degree view என்று சொல்லலாம். இன்று தளத்தில் சங்கரர் / அத்வைதம் குறித்த தாங்கள் ஆற்றவிருக்கும் உரை பற்றிய அறிவிப்பை கண்டதும் மேலும் உற்சாகமாக இருந்தது.

வேதாந்த மரபின் நோக்கில் அத்வைதம் பற்றி சில உரைகள் கேட்டுள்ளேன் , ராமகிருஷணர் குருமரபில் வந்த யோகிகளுடன் , குறிப்பாக சர்வபிரியானந்தாவின் உரை எளிதாக உள்வாங்கும்படி இருந்தது. மேற்கத்திய மெய்யியல் அறிஞர்களிடையேயும் சங்கரின் அத்வைதம் மிகவும் மதிப்பிற்குரிய இடத்தில் வைத்துப் பார்க்கப்படுவதை உணர முடிந்தது .உங்கள் கோணத்தில் சங்கரர்/அத்வைதம் பற்றிய உரையை கேட்க ஆவலாய் உள்ளேன் .

இதே போன்று ஒரு வரிசையில் உங்கள் உரைகள் தொடர்வது நல்ல விஷயமே.

அன்புடன்

கார்த்திக்

அன்புள்ள கார்த்திக்,

என் உரை ஒரு ஒரு நவீன கேள்வியாளனை நோக்கி, அதாவது என் எழுத்துக்களை வாசிக்கும் வாசகனை நோக்கி பேசமுற்படுவது. அதற்கும் ஓர் இடம் உண்டு என நினைக்கிறேன். பார்ப்போம்.

ஜெ

முந்தைய கட்டுரைவெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 14
அடுத்த கட்டுரைவிழா 2015 கோபி ராமமூர்த்தி பதிவு