விழா 2015 கடிதங்கள் 7

1[கவிஞர் இசை]

அன்புள்ள ஜெ ,

நீங்கள் நண்பர் தூயனுக்கு எழுதிய பதிலில் சொன்னது போல ஒரு விழா முடிந்ததும் ஒருவிதமான சோர்வு சூழ்ந்து கொள்ளத்தான் செய்கிறது. ஆனால் அதில் நடந்த முக்கியமான விவாதங்கள் சந்திப்புகளை அசை போடுவதின் மூலமே நம்மை மீட்டுக் கொள்ளவும் முடிகிறது. முக்கியமாக புதியதாக வருகை தரும் நண்பர்களின் ஆர்வமும் பங்களிப்பும் உற்சாகம் தருவதாக உள்ளது.(பழைய நண்பர்கள் சிலர் பல் வேறு காரணங்களால் வராமல் இருக்க  நேர்வது சற்று ஏமாற்றம் அளித்தாலும்). புதியவர்கள் பெரும்பாலும் 30க்குள் இருப்பவர்கள் அநேகமாக எல்லோருமே கடிதங்கள் எழுதுவது காண திருப்தியாக இருக்கிறது.நீங்கள் சொல்வது போல இடைவிடாமல் அவர்கள் அந்த உற்சாகத்தைத் தக்க வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.நிறைய எழுத்தாளர்களை எதிர்பார்க்கலாம் என்று நினைக்கிறேன்.
 ஒரு விஷயம் கவனித்தேன் . நிறைய நண்பர்களுக்கு புதியதாக வெளிவரும் நூல்களில் எதைத் தெரிவு செய்து வாசிப்பது? அது எங்கே கிடைக்கும்? மற்றும் எல்லாவற்றையும் வாங்குவது சாத்தியமா ? என்ற கவலையும் உள்ளது. தெரிவுகள் குறித்து கிருஷ்ணன் கூறியதும் உண்மை. ஏதோ இங்கே கோவையில் எங்களுக்குத் த்யாகு புத்தக நிலையம் இருப்பது ஒரு வரப்பிரசாதம். கோவையிலும், அருகிலும் இருக்கும் நண்பர்களை தியாகு நூல் நிலையத்திற்கு அன்புடன் அழைக்கிறேன்.
 அப்புறம் நண்பர் முருகேஷ்  // அங்கே வேலைசெய்வதற்கு ஆளில்லை என்று தோன்றியது. உங்கள் நண்பர் ஆடிட்டர் சுரேஷ் பலரிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதைப்போலத் தோன்றியது.// என்று குறிப்பிட்டிருக்கிறார். அப்படியல்ல.ஏதோ விளையாட்டாக நடந்த உரையாடலிலிருந்து அவருக்கு அப்படி ஒரு சித்திரம் கிடைத்திருக்கும் என்று  நினைக்கிறேன். உண்மையில்அந்த இரண்டு நாட்களிலுமே எல்லா நண்பர்களும் மிக உற்சாகத்தோடு போட்டி போட்டிக் கொண்டுதான் எல்லா வேலைகளுக்கும் முன்வந்தார்கள்.பரிமாறும் இடத்தில் நிறைய பேர் இருந்தால் குழப்பம் அதிகமாகும் என்பதால் பலரை வற்புறுத்தித் தடுக்கத்தான்  வேண்டி இருந்தது. ஊர் கூடித்தான்  தேரிழுத்தோம். திருவிழா களைகட்டியது.முருகேஷும் கூச்சப்படாமல் அடுத்த முறை வடம் பிடிக்க வரலாம்.
சுரேஷ் கோவை.
விழாவில் ஷ்ண்முகவேலை கௌரவித்தது  மிகச்சிறந்த விஷயம். அற்புதமான ஒரு மனிதர். நான் அவரிடம் பேசப்போனேன். பேசவே கூச்சப்பட்டார். ஆனால் கைகளிலே கலை இருக்கிறது. அவர் இல்லாவிட்டால் வெண்முரசை என்னைப்போன்றவர்கள் கண்களால் பார்த்திருக்கமாட்டோம். கூச்சப்பட்டபடியே அவர் மேடைக்கு வந்தது மிகவும் அற்புதமான காட்சியாக இருந்தது. வாசகர்களே அவரைக் கௌரவித்ததும் மிகநல்ல விஷயம்
செல்வகுமார்
1
 அன்புள்ள ஜெ சார்
விழாவைப்பற்றிய பதிவுகளை வாசிக்கும்போது அங்கு வந்து மேலும் சிலநாட்கள் உடன் தங்கியிருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று தோன்றியது. நான் 27 ஆம்தேதி மட்டும்தான் வரமுடிந்தது. அன்று நிகழ்ந்த ஒரே விவாதத்தில்தான் கலந்துகொண்டேன். அதில் யுவன் சந்திரசேகரும் கே.என்.செந்திலும் இசையும் சுரேஷும் மிகச்சிறப்பாகப் பேசினார்கள். பல வகையான சிந்தனைகள் ஒரே நாளில் வந்துசென்றன. விவாதம் என்பது என்ன பயனை அளிக்கும் என்று புரிந்தது
 நாஞ்சில்நாடனையும் இசையையும் சந்தித்துப்பேசினேன். மேலும் பலரை சந்திக்க ஆசைப்பட்டேன். வழக்கம்போல கூச்சத்தால் தவிர்த்துவிட்டேன். யாராவது அறிமுகம்செய்துவைத்தால் பேசலாம் என்று நினைத்தேன். அப்படி நினைக்கக்கூடாது என்று தெரியும். ஆனாலும் வேறுவழியில்லை. அற்புதமான சந்திப்புகள். அளவளாவல்கள். இத்தகைய இலக்கியச்சந்திப்புகள் இன்றைக்கு கோவையில் இந்த விழாவில் மட்டுமே நடக்கின்றன என நினைக்கிறேன்
 நான் ஹைதராபாதில் இருக்கிறேன். விடுமுறைக்கு வந்தபோதுதான் இங்கே வரவேண்டுமென்று தோன்றியது. மிகச்சிறப்பான விழாவாக இருந்தது. அருமையான சந்திப்புகள் அமைந்தன. ஆனால் பெரும்பாலானவற்றைப்புரிந்துகொள்ளமுடியாததும் கஷ்டமாகவே இருந்தது. தேவதச்சனின் கவிதைகள் அங்கே வாசிக்கப்பட்டு அர்த்தம் சொன்னபோதுதான் எனக்குப்புரிந்தன
 அனைவருக்கும் நன்றி
 கார்த்திக் எம்
முந்தைய கட்டுரைசேகர் பதிப்பகம்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 16