களரி கிராமியக்கலைவிழா

ma

மணல்வீடு ஹரிகிருஷ்ணன் சென்ற சில வருடங்களாகச் சலிப்பில்லாமல் நாட்டர் கலைகளுக்கான ஒரு விழாவையும் பயிற்சிநிலையத்தையும் நடத்திவருகிறார். நன்கொடைகளைக்கொண்டு நடத்தப்படும் இந்த நிகழ்ச்சி இந்தவருடம் சென்னை வெள்ளம் காரணமாக போதிய நிதி இன்றி நிகழவிருக்கிறது என்றார்.

நாளை [2-1-2016] முதல் நிகழ்வு தொடங்குகிறது. நிதியளிக்கும்படி ஆர்வமுடையவர்களைக் கோருகிறேன்

அவரது கடிதத்தை இணைத்துள்ளேன்

ஜெ

 

அன்புடையீர் வணக்கம்

மண்ணில் ஜனித்த கலைகள் ஆயிரமாயிரம். அவற்றுள் முந்திப் பிறந்தவை தோற்பாவை, கட்டப்பொம்மலாட்டம் ,தெருக்கூத்து,முதலான நிகழ்த்துக்கலைகள்தாம் என்றால் அது மிகையில்லை. மனிதனுக்கு மண் அளித்தமாபெருங்கொடையென்று இவற்றைச் சொல்லலாம். நவீனயுகத்தில் இதுபோன்ற மண்சார் நிகழ்த்துக்கலைகள்,மற்றும் கிராமியக்கலைகள் கேலிக்கும், கேள்விக்கும் உள்ளாகி நாம் தொலைத்துவரும் வாழ்வாதாரங்களின் பட்டியலில் இடம் பெறத்துவங்கிவிட்டாலும் நுண்கலைகளின் தாய்வடிவம் அவற்றில்தான்கற்சிற்பமாய் உயிர்ப்புடன் வீற்றிருக்கிறது என்பது தெளிவு

இன்று ஏகோபித்த சனங்களிடையே புழங்கும் சினிமா, டி.வி, இன்னும்பிறவுள்ள ஊடகங்களின் வழியே வெளிப்படும் கலை உற்பத்திகளில் மேலதிகமான வறட்சியேஎஞ்சி நிற்கிறது. அது மட்டுல்ல விளம்பரயுகத்தில் வலிந்து வெளிச்சப்படுத்தப்படும் கலைவடிவங்கள்தாம் கவனம் பெற்றுவருகின்றன,, பெற வைக்கிறார்கள். ஆனால் இவற்றுக்கெல்லாம் எட்டாத உயரத்தில் மிக உன்னதமான கலை சிருஷ்டிகளென நிகழ்த்துக்கலைகள் ஜீவிதம் பெற்று காலத்துக்கும் நிலைத்து நிற்கின்றன. சினிமா உள்ளிட்ட நவீன ஊடகங்கள் போன்றே தோற்பாவை, கட்டபொம்மலாட்டம், தெருக்கூத்து ஆகியனவற்றையும் வெறும் பொழுது போக்குச்சாதனங்கள் என்கின்றாற்போல் தீர்த்துப்பார்க்க முடியாது.

மரபார்ந்த தொல்கலைக்கூறுகளிலிருந்து நசிந்துவிட்ட நிகழ்கால வாழ்மானங்களை ஆற்றுப்படுத்திக்கொள்வதுடன், சக உயிர்களின் மீதான கரிசனத்தையும் ,அக்கறையையும் , அதிகாரங்களுக்கு எதிரான, போர்க்குணங்களையும் கலகக்குரல்களையும் நாம் அங்கிருந்துதான் பெற வேண்டியிருக்கிறது. அத்துடன் ஒரு உடல் உழைப்பாளிக்கு தன்னை மறந்து ஒன்றிக்கிடக்கும் உத்சாகத்தையும் உத்வேகத்தையும் இவற்றைத்தவிர வேறெந்த கொம்பு முளைத்த கலை இலக்கிய உற்பவனங்களும் தந்துவிட முடியாது கலைத்தாயிடம் ஞானப்பால் அருந்தியவர்களுக்கு மாத்திரமே பீடம் என்றாகிவிட்ட இன்றைய காலகட்டத்தில் படிப்பு வாசனை ஏதுமின்றி வழிவழியாக தாம்பெற்ற கேள்வி அறிவை முதலாக வைத்து கைக்கொண்ட காரியத்தில் துலங்கி அந்த அரியக்கலைகளுக்கு உயிரூட்டிவரும் கிராமியக்கலைகளின் சூத்ரதாரிகள்தாம் உண்மையான கலையின் பிதாமகர்கள் என்று அறைகூவ வேண்டியிருக்கிறது.

நம் சகோதரர்களை இனங்கண்டு பாராட்டுவதும் அரசியல் சூழ்ந்துள்ள இந்த நெடிய உலகத்தில் அவர்களுக்கு உரிய அங்கீகாரத்தை வழங்குவதும், அவர்தம் வாழ்வாதரத்தை உயர்த்தும்படியான பொருளாதாரச்சூழலை உருவாக்குவதும் நம் இன்றியமையாத கடப்பாடு ஆகும். கலைஞர்கள் வாழ்வை மேம்படுத்துவதன் மூலம் தொல்கலைகளை மீட்டெடுப்பதோடு அதன் தொன்மம் மாறாது பராம்பர்யம் வழுவாது வளர்தலைமுறைகளிடம் அவற்றை (நமது ஒப்பற்ற பண்பாட்டு அடையாளங்களாக) கையளிக்கும் கடமையும் நமக்கிருக்கிறது.

மேற்சென்ன களப்பணிகளில் கடந்த 9 ஆண்டு காலங்களாக முனைப்புடன் செயல்பட்டு வரும்களரி தொல்கலைகள் மற்றும் கலைஞர்கள் மேம்பாட்டு மையம்|சாஸ்தா தமிழ் அறக்கட்டளையுடன் இணைந்து நிகழ்த்து கலைஞர்களை கௌரவிக்கும் முகமாக மக்கள் கலையிலக்கிய விழாவை எதிர் வரும் 2016 ஜனவரி மாதம் இரண்டாம் நாள் சேலம் மாவட்டம் , மேட்டூர் வட்டம் , ஏர்வாடி கிராமத்தில் நடத்த திட்டமிட்டு இருக்கிறது . ஆகவே ஆர்வமுள்ள அன்பர்கள்   நேரில்  வந்திருந்து  நிகழ்வை  சிறப்பு  செய்வதுடன்   தங்களால் இயன்ற நிதியுதவி வழங்கி உதவவேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.

இப்படிக்கு,

மு. ஹரிகிருஷ்ணன்,

ஆசிரியர் -மணல்வீடு.

தொடர்புக்கு [email protected]

9894605371

முன்னூட்டம்

https://www.youtube.com/watch?v=cdJeNl7h2ZY

https://www.youtube.com/watch?v=UCcLbRFSLj8

https://www.youtube.com/watch?v=8Qh-uKOkuBU

https://www.youtube.com/watch?v=ZzErA5Qh3tM

https://www.youtube.com/watch?v=upwyHSw0Xk0

https://www.youtube.com/watch?v=QHoFGghuAwE