அன்புள்ள ஜெயமோகன்,
புறப்பாடு வாசித்த அந்தக் கணம் முதல் இதோ இந்த நொடிவரை எனது வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மானசீகமாக உங்களோடு பேசிக் கொண்டிருக்கிறேன். இந்த இரண்டு ஆண்டு காலத்தில் முதலில் சற்று குழம்பிய மனநிலையில்தான் இருந்தேன், ஒரு பாம்பு சட்டையை உரித்து வெளிவருவதற்கான காலம் அதுபோலும். இப்போது நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். உங்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி.
இப்போது தான் உங்களை வாசிக்கத் தொடங்கியது போல் இருக்கிறது ஆனால் நிறைய தூரம் பயணித்து வந்திருக்கிறேன் என்பதை எனது பெட்டியில் உள்ள உங்களுடைய புத்தகங்கள் சொல்கின்றன. நேற்று தான் ‘காடு’ வந்து சேர்ந்திருக்கிறது. இன்று. தொடங்கிவிடுவேன். உங்களைப் போல் ஒரு அர்த்தமுள்ள வாழ்வை வாழ்ந்துவிட ஆசை.
வணக்கம்.
அன்புடன்
ஜானகிராம்
அன்புள்ள ஜானகிராம்
வாழ்த்துக்கள்
செயலில் இருப்பது அதன் விளைவுகளுக்காக அல்ல என்ற கீதையுரைக்கு அப்பால் சொல்வதற்கொன்றும் இல்லை.
வாழ்த்துக்கள். தொடர்பில் இருப்போம்.
உங்களைப்போன்ற புதியவர்கள் வழியாக நான் இன்றிருக்குமிடத்திலிருந்து முன்னகர விரும்புகிறேன்
ஜெ
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். கடந்த வருடத்தில் என் வாழ்க்கை முறையை மாற்றிய மிக முக்கியமான ஒன்று வெண்முரசு. ஒரு நாவல் இவ்வளவு என் வாழ்க்கையோடு ஒன்றிடுமா என நான் திரும்ப திரும்ப கேட்டாலும் வெண்முரசு என் புத்தக அலமாரியில் இருந்து சிரித்து “ஆம்” என்று பதில் அளிக்கின்றது. போன வருடம் முழுதும் நீங்களே என் ஆசானாக இருந்துள்ளீர்கள் விசும்பு,அறம் வெண்முரசு என உங்களுடைய கொடையில்தான் வாழ்ந்தேன். இப்பொழுது இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள் புடித்து கொண்டிருக்கிறேன். அலுவலகத்தில் அல்லது வெளியில் கற்பதை விட உங்களிடம் நிறைய கற்றுக்கொண்டிருக்கின்றேன். அதற்காக உங்களுக்கு மிக மிக நன்றி. உங்களின் இந்த அற்புத பணி மென் மேலும் தொடர இறைவனை பிரார்த்திக்கின்றேன்.
இப்பொழுதுக்கூட உங்களின் “வரும் ஆண்டும்” படித்தேன். நீங்கள் கூறுவது போல் உங்களுக்கும் & உங்கள் குடும்பத்துக்கும் “நலம் திகழ்வதாக”.
இப்படிக்கு அன்புள்ள,
விஜி.
அன்புள்ள விஜி,
நலம்தானே?
இந்தவருடம் வந்த அத்தனை புதியவர்களின் கடிதங்களையும் எடுத்துப்பார்த்துக்கொண்டிருக்கிறேன். எவ்வகையிலேனும் என்னிடம் ஒரு தேக்கநிலை உருவாகியிருக்குமென்றால் இந்தப்புதியவர்கள் வழியாகவே முன்னகர வேண்டும் என நினைத்துக்கொள்கிறேன்
கேட்பவர்கள்தான் சொல்பவர்களை உருவாக்குகிறார்கள். நன்றி, நாம் சந்திப்போம்.
ஜெ