விழா 2015 கடிதங்கள் 6

 

8

அன்புள்ள ஜெ சார்

வெண்முரசை வாசித்ததுமே உங்களைச் சந்திக்கவேண்டுமென்று தோன்றியது. பலமுறை தயங்கினேன். பிறகு சந்தித்தே தீர்வது என முடிவெடுத்தபடித்தான் விஷ்ணுபுரம் விருதுவிழாவுக்கே வந்தேன். மிகவும் உற்சாகமாக இருந்தது . நான் முதல்நாளே வரமுடியவில்லை. அங்கே வேலைசெய்வதற்கு ஆளில்லை என்று தோன்றியது. உங்கள் நண்பர் ஆடிட்டர் சுரேஷ் பலரிடம் கெஞ்சிக்கொண்டிருப்பதைப்போலத் தோன்றியது. நான் சென்று உதவலாமா என நினைத்தேன். ஆனால் எனக்கு அறிமுகம் இல்லாததனால் கூச்சமாக இருந்தது.

நிகழ்வுகளெல்லாம் அருமை. நம்மூரில் எந்தக் கல்லூரியிலும் இதைப்போன்ற ஒரு இலக்கியப்பாடம் நடப்பதில்லை என்று தோன்றியது. ஒன்றரைநாட்களுக்குள் எத்தனைவகையான சிந்தனைகள். தமிழில் இத்தனை வகையான சிந்தனைகள் இருந்துகொண்டிருக்கின்றன என்பதே ஆச்சரியமானதுதான். ஒருவரோடு ஒருவர் அவற்றை அவர்கள் மோதவிட்டுப்பார்ப்பதும் நீங்கள் இரண்டுதரப்புக்குமே ஆதரவாக பாயிண்ட் எடுத்துக்கொடுப்பதும் ஆச்சரியமான விவாதங்களாக இருந்தது.

 

3

உண்மையிலேயே கலையில் பிரஞ்ஞாபூர்வமாக எழுதவேண்டுமா இல்லை செய்யவேண்டுமா என்பதும் சரி சரித்திரம் என்பது மனித உள்ளத்துக்கு அப்பால் தனியாக உண்ட அல்லது அதுவெறும் கற்பனைதானா என்பதும் சரி பேசி முடிக்கக்கூடியவை அல்ல. ஆனால் முருகவேள் அவர்கள் சொன்னதுபோல அதனால் என்னபயன் என்பதைவைத்தே முடிவுசெய்யவேண்டும். சரித்திரத்தை உண்டுபண்ணி நம்மை ஒருவன் சுரண்டினால் சரித்திரமே இல்லை என்று சொல்லிக்கொண்டு சும்மா இருக்கமுடியுமா என்ன? எங்கள் நண்பர்களுடன் இதைப்பற்றித்தான் நிறைய பேசிக்கொண்டிருந்தோம்.

 

eeeee

பலகோணங்களில் விவாதங்கள் நடந்தன. எல்லா எழுத்தாளர்களையும் பார்த்தோம். நான் கோபாலகிருஷ்ணன் அவர்களிடம் மட்டுமே சில சொற்களைப்பேசினேன். ஏதோ ஒரு தயக்கம் நம்மை கட்டுப்படுத்துகிறது. நம்மை சாதாரண வாசகன் என நினைத்துவிடுவார்களோ என்ற சந்தேகம்தான். நாம் நல்ல வாசகன் என்ரு காட்டும்படியாக சிறப்பாகப்பேச நம்மால் முடியாது. பேச ஆரம்பித்தாலே குரல் அணைந்துவிடுகிறது. ஆகவே எவரிடமும் பேசவில்லை. அடுத்தவருடம் பேசவேண்டும் என நினைத்துக்கொண்டேன்

 

5

அரங்கத்தில் நடந்த விழா மற்ற விவாதங்களுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் மிகச்சாதாரணம்தான். பெரிய ஏற்பாடுகள் இல்லை. ஸ்டாண்ட் மைக் கூட ஏற்பாடு செய்யப்படவில்லை. ஆடியோ சரியாக இல்லாததனால் பேசியது சரியாகப்புரியாமல் போய்விட்டது. நீங்கள் மைக்கை கொஞ்சநேரம் கழித்து கீழே வைத்துவிட்டுப்பேசியதனால் பேச்சில் ஒலி மாறிக்கொண்டே இருந்தது. பரவாயில்லை, குறைவான வசதிகளைக்கொண்டு அதிகம் பேர் வேலைசெவதற்கு இல்லாமல் இத்தனைசெய்திருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டேன்

அடுத்தமுறை நிறையத்தயாரிப்புகளுடன் வருவேன் சார்

முருகேஷ்

 

1

 

அன்புள்ள ஜெ

மிகச்சிறந்த இரண்டு நாட்கள். எனக்கு நட்பு வட்டம் என்கிற ஒன்று கை நழுவிப்போய் 18 வருடங்களாகின்றன. பதினெட்டாம் வயதில் வேலை தேடி சென்னை வந்த காலம் முதல் நண்பர்கள் என்றால் உறவினரும் அலுவலகத்தில் கூட வேலை செய்பவரும்தான். என் பிறந்தநாள் வாழ்த்துக்கள் தவிர வேறெதிலும் அதிகம் ஈடுபடாத நண்பர்களே அதிகம்.

சென்னையில் இப்போது உங்கள் மூலம் ஒரு நட்பு வட்டம் வளர்ந்துகொண்டிருக்கிறது. இந்தமுறை எங்களுடன் வந்த அருண் புதியவர். டெம்போ டிராவலரில் கிளம்பினோம். எப்போதும் போல சீனிவாசன் சாரும் சுதா மேடமும் உற்சாகத்தோடு பயணத்தை துவங்கி வைத்தார்கள். உளுந்தூர்பேட்டை சேலம் சாலையில் டிரைவர் சாமியாட ஆரம்பித்தார். தமிழிலக்கியத்திற்கு களப்பலியாகிவிடுவோமோ என்ற பயத்தில் மெல்லமாக வந்ததில் நல்ல தாமதமாகிவிட்டது.விஜயராகவன், ப்ரசாத், சிவாகி (செல்வாவின் ஆருயிர்த்தோழர்) ஆகியோர் வழியில் இணைந்துகொண்டனர்.

 

1

கோவையில் வேனிலிருந்து இறங்கிய போது விஜய் சூரியன் கூவி அழைத்தபடி ஓடி வந்து கட்டியணைத்தபோது அத்தனை வருடங்களுக்கும் பின்னோக்கி சென்றது போல தோன்றியது. எப்போதும் போல சிரித்த முகத்துடன் சுரேஷ் அண்ணா.. கக்கத்தில் ஆடிட்டர் பையோடு ஆங்காங்கு அலைந்து மேற்பார்வையிட்டுக்கொண்டும், ” ஒருவரின் சிரிப்பினிலே விளைவது கவிதையடா” என்று பாடிக்கொண்டும் அதே நேரம் நேற்று வந்த நாவல் வரை படித்து தெரிந்து வைத்திருப்பதும் ஆச்சரியம்.

விழா அன்று காலை தேநீர் மண்டகப்படி எனக்குத்தான் என்று முதல் மரியதையை விட்டு கொடுக்காமல் வந்த ஆடிட்டர்.. அவரை இப்போதே முதல் முறை பார்க்கிறேன். நல்ல பெயர்..(எப்படியும் நினைவிற்கு வந்துவிடும்..)

காலை உணவு முடித்து 10:30 மணிக்கு வந்த போது உங்களை சுற்றி 30 பேர் உட்காரந்து வெய்யோன் குறித்தான கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தார்கள். கர்ணனுக்கு துரியோதனனை பிடித்து போனதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது? ஒரு குதிரைக்காரன் மகனை ராஜாவாக்கியதற்கு அவன் காலம் முழுதும் கடன் பட்டவனாகிறான். ஆனால் துரியோதனனுக்கு கர்ணன் மேல் ஏன் இந்தளவு நட்பு மற்றும் பாசம் என்ற கேள்வியும் அதற்கான உங்கள் பதிலும் நல்ல புரிதலை அளித்தன.

 

1

வாரம் ஒருமுறை எப்படியேனும் சந்திக்கும் செளந்தர் வரவில்லையென்பது ஒரு குறை. முத்துராமன்சார் வந்திருந்தார். மகிழ்ச்சியாக இருந்தார். ( கிசு கிசுக்கள் அனுமதியென்றால், ஆறுமாதமாக முறைத்துக்கொண்டிருந்த ஒரு நண்பர் அன்று அவருடன் பேசிவிட்டார்..பெரியவர்களும் டூ விட்டுக்கொள்வதை காண ஆசையாக இருந்தது)

ஊட்டி கூட்டம் ஒருவகை ராணுவ பரேடு என்றால் இது ஒருவகை பள்ளிக்கூட வகுப்பு என்று இரண்டிற்கும் தலா ஒரு முறை வருகை புரிந்தவன் என்கிற வகையில் சொல்வேன்..

 

ee

கவிஞர் தேவதச்சன் அவர்களின் உடல்மொழி நான் என் பதின் பருவத்தில் கண்ட தஞ்சைவாழ் மக்களை நினைவுபடுத்தியது. கால்களை ஆட்டிக்கொண்டு குழந்தைகள் போல தலையை மேலும் கீழும் ஆட்டியபடி அந்த எண்ணம் அப்படியே வந்துடு்ச்சி அது!!! என்று அவர் பேசுவதை பார்த்துக்கொண்டே இருக்கலாம். தஞ்சைமாவட்டத்தில் என் சின்ன வயதில் இவரைப்போல பார்த்திருந்த என் சுற்றமும் நட்பும் நினைவிற்கு வந்தனர்.மணிகண்டனும், பாண்டி ரமேஷும் தேவதச்சனிடம் கேட்ட கேள்விகள் மிக நுட்பமாக இருந்தன.

பிரம்மராஜன் கவிதைகளுக்கும் தன் கவிதைக்குமான வித்யாசங்களையும், நாற்காலியை கவிழ்த்து போட்டு கவிதையின் அமைப்பு பற்றி விளக்கியபோதும் தேவதச்சன் அவர்கள் ஒரு தேர்ந்த ஆசிரியர் போல விளக்கினார். குறிப்பாக அது அப்படித்தான் நீங்கதான் விளங்கிக்கணும் என்கிற கர்வம் சார்ந்த உடல்மொழி எங்கும் இல்லை. கோடு விழுந்ந நெற்றியுடன் அவர் சிரிக்கும் போதும் தலையை ஆட்டி ரசிக்கும் போதும் அவரை மிக நெருக்கமாக உணர்ந்தேன். அது என்ன என்பதை யுவன் தன் மேடைப்பேச்சில் குறிப்பிட்டார். கவிஞர் தனக்குள் இருக்கும் குழந்தையை வளரவிடாமல் பார்த்துக்கொள்கிறார்.

 

DSCN0929

அத்துவான வெளியின் கவிதை, பதிவுகள் வழியாக மட்டுமே அறிந்திருந்தவர் இவர் என்பதை சொல்லும்போது மிக சங்கோஜமாக உணர்கிறேன். ஆனால் அந்த பத்திகளின் மூலமே இவர் ஒரு தனித்துவமான கவிஞர் என உணர்ந்து கொண்டேன். அவர் infinity பற்றியும் குழந்தை ஒரு மரபின் தொடர்ச்சி எனவும் விவரித்த விதம் மிகவும் தெளிவாக புரியவைக்கும் நோக்குடன் இருந்தது. ஒருவழியாக தட்டுத்தடுமாறி என் கவிதைமுகூர்த்தம் வாய்த்துவிட்டது என நினைக்கிறேன்.

கவிஞர் இசை அவர்கள் விவரித்த கையசைப்பு கவிதையாகும் இடம் அனைவரையும் கவர்ந்தது. ஷண்முகவேல் சென்னை வந்த போது அதை குறிப்பிட்டு சொல்லிக்கொண்டிருந்தார். திரு கே.என் செந்தில் அவர்களுடன் விவாதித்த போது சிறுவர் இலக்கியம் குறித்தான பேச்சில் பதினைந்து வயதிற்குள் போரும் அமைதியும் படிக்கலாம் என நீங்கள் சொன்னது என்னை ஆச்சரியபடுத்தியது. தேநீர் இடைவெளியில் ஒரு நண்பருடன் உரையாடியபோது அவரும் இது பற்றி பேசினார். எங்களுக்கு கிடைத்த சிறுவர் இதழ்கள் இன்றைய குழந்தைகளுக்கு கிடைப்பதில்லை என்பதுதான் உண்மை. நானும் பேசாமல் வெண்முரசை கொடுத்துவிடலாமென இருக்கிறேன்.

அடுத்தநாள் மாலையில் அரங்கில் தமிழினி வசந்தகுமார் அவர்களை ராஜமாணிக்கம் அண்ணா வழியாக அறிமுகப்படுத்திக்கொண்டேன். சிவாத்மா மற்றும் தங்கவேல் ஆகியோர் நேரடியாக அரங்கிற்கே வந்திருந்தார்கள். வெற்றிமாறனிடம் சிடி பெற்றுக்கொண்ட கடலூர் சீனு, குடுமியும், கருப்புச்சட்டையுமாக அவர் படங்களில் வரும் நாயகன் போலவே இருந்தார். எப்போதும் போல இந்த முறையும் அவர் அதிகம் பேசவில்லை (என்னுடன்)

 

33

திங்கள் காலை முதல் நடைமுறை வாழ்க்கைக்கு திரும்பினேன். இந்த இரண்டு நாட்கள் ராஜோபசாரமாக எங்களை கவனித்துக்கொண்ட ஒவ்வொரு கோவை நண்பர்கள் பலரும் அங்கிருந்த நிகழ்வுகளில் தொடர்ந்து பங்குபெற முடியவில்லை. அது சற்று வருத்தமாக இருந்தது.

துறைவன் நாவலை இப்போதுதான் படிக்க ஆரம்பித்திருக்கிறேன். இதுவரை சுவாரசியமாக இருக்கிறது. முடித்தவுடன் அது குறித்து எழுதுகிறேன்
இன்றைய ஜன்னல் இதழில் தேவதச்சன் மற்றும் ஆ.மாதவன் அவர்களின் பேட்டி வெளியாகியிருக்கிறது. ஆ.மாதவன் அவர்கள் தேர்ந்த எழுத்தாளர்களும் வாசகர்களும் இணைந்து வழங்கும் விஷ்ணுபுரம் விருது தனக்கு 2010 ல் கொடுக்கப்பட்டது என சொல்லியிருக்கிறார். எத்தகையதொரு நிகழ்வில் கலந்துகொண்டு வந்திருக்கிறேன் என மீண்டும் உணர்ந்து மகிழும் தருணம்

 

காளிப்பிரசாத்

 

முந்தைய கட்டுரைவிழா, சந்திப்பு, மீட்பு
அடுத்த கட்டுரைகோவையில் சங்கரர் பற்றிப் பேசுகிறேன்