வெண்முரசும் புத்தாண்டும்

 

6

 அன்புடன் ஆசிரியருக்கு

புத்தாண்டு வாழ்த்துக்கள். சென்ற வருட முடிவில் இப்படி யாருக்கேனும் புத்தாண்டு வாழ்த்து சொல்வேன் என நானே எதிர்பார்த்திருக்கவில்லை. சென்ற வருட டிசம்பர் மாதத்தில் நற்றிணை பதிப்பகம் வெளியிட்ட வெண்முரசின் முதல் நூலான முதற்கனலினை திருத்துறைப்பூண்டி கிருஷ்ணா புத்தக நிலையத்தில் வாங்கினேன். உங்களைப் பற்றி கொஞ்சம் கேள்விப்பட்டிருந்தாலும் உங்களை நான் வாசித்தது கிடையாது. ஆனால் வெண்முரசினுள் நுழைந்த பின்தான் நான் எதையுமே உருப்படியாக வாசித்ததில்லை என்பது எனக்குத் தெரிந்தது. சமூகம் குறித்து திரைப்படங்களும் வணிக இதழ்களும் தொலைக்காட்சி செய்திகளும் விவாதங்களும் எனக்குள் ஏற்படுத்தியிருந்த கொந்தளிப்பும் அவநம்பிக்கையும் கலந்த எளிமையான ஒரு சித்திரத்தை முதற்கனல் உடைத்தது.


எப்படியென சொல்ல இந்த நாள் முழுக்க எழுத வேண்டிவரும். சிறு வயதில் மின்சாரம் இல்லாத சிமெண்ட் பூசப்படாத எங்கள் சிறு வீட்டின் இருளில் விளக்கு வெளிச்சத்தில் என் அப்பாவின் பாட்டி முத்தம்மா கதை சொல்வாள். முதற்கனல் மீண்டும் மீண்டும் அவள் நினைவை எழுப்பியது. ஆனால் உங்கள் எழுத்தில் வந்த தொன்மங்கள் முத்தம்மா இறந்த பிறகு எனக்குள் விதைக்கப்பட்டிருந்த திராவிட கருத்துகளையும் எளிமையான உணர்ச்சியை தூண்டக் கூடிய கம்யூனிஸ கருத்துகளையும் பிடுங்கி எறிந்தன. என் பார்வையின் குறுகிய தன்மை என்னை அச்சம் கொள்ள வைத்தது. ஒரு நாளைக்கு பத்து பகுதிகள் படித்தும் கட்டுப்படுத்தி விலகுவேனே தவிர வெண்முரசு எனக்கு ஒரு நாளும் சோர்வளித்ததில்லை. இந்திரநீலத்தில் இணைந்து கொண்ட பிறகு எனக்கு வெகு நேரம் வீண் பொழுது கழிப்பது போல் இருந்தது .

உங்கள் வலைத்தளத்தின் ஒவ்வொரு பதிவும் ஒரு திறப்பினை அளித்தது. அது இன்னொன்றை நோக்கி என்னை தள்ளியது. நிச்சயம் அப்படி என்னதான் இருக்கிறது மகாபாரதத்தில் என்ற நினைப்பில் முதற்கனலினை தொட்ட சுரேஷ் இன்றில்லை. நான் உங்களுக்கு வாழ்த்துக்கள் என்று மட்டும் சொல்லி முடிக்கவே நினைத்தேன். நீண்டு விட்டது. வெண்முரசு எனக்களித்த அதிர்ச்சியையும் பரவசத்தையும் விளக்க தனியே வெகுநேரம் எழுத வேண்டும். கொற்றவையும் விஷ்ணுபுரமும் வெண்முரசின் வழியே நுழைந்ததால் மேலும் அணுக்கமாகி விட்டன.

மீண்டும் புத்தாண்டு வாழ்த்துக்கள்
அன்புடன்
சுரேஷ்

அன்புள்ள சுரேஷ்

ஒரு கலங்கியமனநிலையில் இந்தப்புத்தாண்டு. மகாபாரதத்தில் தீர்க்கதமஸின் கதை வருகிறது. அதன் மறு ஆக்கம் வெய்யோனில். அது மேலும் தொன்மையான கதை. வேதகாலத்தைச் சேர்ந்தது. தூய Id மட்டுமேயான தந்தை என்று அதைச் சொல்லலாம். அந்த உருவகம் மிகமிகத் தொன்மையானது என்பது மிகவும் தொந்தரவு செய்தது. மனிதன் அவன் தந்தையின் காமத்தின் விளைவு என்னும்போது அடிப்படையாக அமைவது கிறித்தவம் சொல்லும் ஆதிபாவம் போன்ற ஒன்றா என எண்ணிக்கொண்டேன். அவரது விழியின்மை, அவரது பெயர் எல்லாமே இப்போது நோக்குகையில் குறியீடுகள். ஆனால் அது இலக்கியம் உருவாவதற்கு முந்தைய காலகட்டத்தைச் சேர்ந்த அப்பட்டமான ஒரு கதை மட்டுமே

புத்தாண்டில் புதிய நண்பர்களின் கடிதங்கள் பெரும் நிறைவை அளிக்கின்றன.

 ஜெ

முந்தைய கட்டுரைபுதியவர்களின் வருகை -கடிதங்கள்
அடுத்த கட்டுரைவன லீலை