இலக்கியமெனும் கனவு

kamala

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஒவ்வொரு தொடக்கமும் சிறந்த முடிவு கிடைக்கும் என்ற ஏக்கத்துடனேயே தொடங்குகின்றன. அனைத்திற்கும் தான் எதிர்பார்க்கிற சிறந்த முடிவுகள் கிடைப்பதில்லை. என் 2015ம் ஆண்டு தொடக்கத்தில் எதிர்பார்க்காத ஒரு சிறந்த முடிவாக விஷ்ணுபுரம் விருது விழா கிடைத்துள்ளது. அவ்வகையில் என் 2015 – என் மனநூலில் என்றென்றும் எடுத்து பார்த்து ரசிக்கப்போகும் – ஒரு அழகிய முழுமை கொண்ட வாக்கியமானது இந்த விழா என்னும் முற்றுப்புள்ளியில்.

சில மின்னஞ்சல் தொடர்புகள் மூலம் ஜெயமோகன் அவர்களைத் தொடர்பு கொண்டிருந்தாலும், முதல் முறை அவரைக் காணப்போகிறோம் என்ற குறுகுறுப்புடன் மங்களூர் விரைவு வண்டியில் கோவை நோக்கி பயணித்தேன் டிசம்பர் 26 அன்று.  காலை 11 மணிக்கு ராஜஸ்தான் நிவாஸில் நுழைகையில், ஏற்கனவே கூட்டம் தொடங்கி இருந்தது.

நான் அவ்விடத்திற்கு புதிதானவன் இருந்தாலும், ஏற்கனவே பெரும்பாலான முகங்களைப் பார்த்த ஒரு எண்ணம் தோன்றியது. (வெண்முரசாளர் மொழியில் சொல்லவேண்டுமெனில் `தெரிந்தது போலவும், தெரியாதது போலவும் ஒரே நேரத்தில் உளமயக்கு ஏற்பட்டது`) ஒவ்வொரு முகமாக மீட்டெடுத்தேன் அவ்வப்போது. அவை ஜெயமோகன் அவர்களின் தளத்தில் வெவ்வேறு நிகழ்வுகளில் கண்ட முகங்கள். ரொம்ப தாமதமாகத்தான் ஓவியர் ஷண்முகவேலைக் கண்டுபிடிக்க முடிந்தது. வெகு அமைதியாக இருந்த அவர் இரண்டு நாட்களுக்குள் என்னுடன் உரையாடிவிட்டார்.

கூட்டத்தில் , என்னை யாராவது பயன்படுத்துங்களேன் என்ற ஏக்கத்தில் கிடந்த சில நாற்காலிகளுள் ஒன்றை எடுத்து தேவதச்சன் மற்றும் ஜெயமோகன் இருவர் முகமும் தெரியும்படி ஒரு கோணத்தில் அமர்ந்துகொண்டேன். எதிர்பார்த்தபடியே இலக்கியத்தின் `எதிர்பாராத கோணங்களில்` உரையாடல் சென்று கொண்டிருந்தது.

ஆசிரியர் மாணவர் போல மேடைகளில் போல அல்லாமல், வட்டமாக அமர்ந்து சமதளத்தில் பேசியதும், இந்த கலங்கரை விளக்கத்தை நோக்கி அனைவரும் நீச்சல் அடித்து வந்திருப்பதால் கிடைத்த ஒரே அலைநீளமும் உரையாடலை சிறந்த தளத்தில் நிறுத்தியது. ஜெயமோகன் அவர்கள் சற்றே வெளியேறுகையில், எதிர்பாராமல் தேவதச்சன் அவர்களுடன் ஒரு கவிதையைப் பற்றி பேசும் வாய்ப்பு கிடைத்தது.

`மொட்டை மாடியிலிருந்து

விருட்டென்று எழுந்து பறந்து செல்கிறது காகம்.
அது விட்டுச் சென்ற
என் வீட்டில்
குக்கர் சத்தம் கேட்டுக் கொண்டிருக்கிறது`

இந்தக் கவிதையில் எனக்கு கிடைத்த பொருளை நான் வியந்து அவரிடம் பேசி அதன் உண்மைப் பொருளை அவரிடம் பெற முற்பட்டேன். அப்போது, நான் ஜெயமோகன் அவர்கள் `ஒருபோதும் கவிதையின் பொருளை கவிஞரிடம் கேட்கக்கூடாது` என்று குறிப்பிட்டதையும், அதனால்தான் அவர் வெண்முரசு எழுத வெளியே சென்றிறுக்கும் தருவாயில் இதைக் கேட்பதாகவும் கூறியதைக் கேட்டு அனைவரும் ரசித்தது என்னை முழுதும் இலகுவாக்கி `இது நம் அரங்கம்` என்ற எண்ணம் கொள்ள வைத்தது.

அவரும் அதில் ஆழ்ந்து கவிதை எழுதியவர் தரும் பொருளைவிட, கவிதை வாசிப்பாளர்கள் தரும் பொருளை நோக்கியே கவிதைகள் உருவாவதாக ஒரு நுண்மையை பேசினார். தொடர்ந்து பேசுகையில் எழுந்து வந்து ஒரு நாற்காலியைக் கவிழ்த்துக் காட்டி ரூபம் – அரூபம் என்பதன் விவாதத்தை முடித்து வைத்தார்.

அவரது கவிதை ஒன்றில் `நில்லா` என்ற வார்த்தை நிலாவைக் குறிப்பிட்டு பதிவாகி இருந்தது. அதற்கும் ஒரு  சில பொருளை நண்பர்கள் ஏற்றிக் கூற முனைந்தபோது, தேவதச்சன் அவர்கள் எளிதாக, வழக்கம் போல இடவலமாக தலையை ஆட்டி, அவரது கரகரகுரலில், `இல்ல. அது பிரிண்டிங் மிஸ்டேக் ` என்று சொன்னது ஒரு அழகியல் உச்சம்.

எனக்கு இலக்கியம் போலவே சினிமாவின் மீதும் பிரியம் உண்டு. குப்ரிக் போன்ற ஒளியியல் மேதைகள் பயன்படுத்தும் மாண்டேஜ் நுணுக்கங்களை இவரது கவிதையில் நான் கவனித்து வியந்தேன். இதையே விருது விழாவில் வெற்றிமாறன் அவர்களும் ஜெ சொன்னதாக குறிப்பிட்டிருந்தார்.அழகிய மாண்டேஜ்க்கு உதாரணமாக கவிஞரின் `ரயில்` கவிதையைக் குறிப்பிடலாம். இந்த பார்வையில் இதை முழுக்க ரசிக்க முடிந்தவர்கள் பேறு பெற்றவர்கள்.

மற்றுமொரு வழக்கமான கேள்விக்கு வழக்கத்திற்கு மாற்றான பதில் ஒன்று கவிஞரிடமிருந்து பெறப்பட்டது. அந்த வழக்கமான கேள்வி, `நீங்கள் எந்த கவிதை மரபின் அல்லது கவிஞரின் தொடர்ச்சி?` என்பது; அந்த வழக்கத்திற்கு மாற்றான பதில், `காளமேக புலவர்` என்பது! கவி காளமேக புலவரின் சொற் புழக்கங்களோ, சிலேடைகளோ, வசைகளோ கவிஞரிடம் தொடர்ந்து வெளிப்படவில்லை எனினும், அவர் காளமேகப் புலவரிடமிருந்து வந்த அசாத்தியமான `ஜனநாயகப் பார்வை` தன்னை இழுத்ததாக குறிப்பிட்டார்.

இரண்டாம் நாள் ஞாயிறு காலையில் ஜெயமோகன் அவர்களுடன் சிரிப்பும், கேலியும், இலக்கியமுமாக ஒரு சிறு பாத யாத்திரை மேற்கொண்டு டீக்கடையை அடைந்தோம். சில ஃபோட்டோகளும் எடுத்துக்கொண்டோம். ஜெயமோகனின் அத்தகைய எளிமயினை எளிமையின் பிரம்மாண்டம் என்றே சொல்ல முடிகிறது.

மேலும் நண்பர்கள் கடிதங்களில் தெரிவித்தவாறு, ஜோ டி குருஸ் அவர்களின் நேரடியான பேச்சு, மீனைச் சுடச்சுட, காரசாரமாக பகிர்ந்து தின்றது போல இருந்தது. யுவன் சந்திரசேகர் அவர்கள் நண்பர் போல பழகியதும், லஷ்மி மணிவண்ணன் அவர்கள் பக்கத்து வீட்டுக்காரர் போல பேசியதும், நாஞ்சில் அவர்களது எள்ளல் மொழியும் எழுத்தாளர் இப்படித்தான் இருப்பார்கள் என்ற மாய பிம்பத்தை உடைத்தது.

நான் முதல் முறை இங்கு கலந்து கொள்வதால் அரங்கசாமி, சுனீல், பிரசாத், கடலூர் சீனு, தனசேகர், ஷண்முகவேல் போன்ற சிலருடன் பேச நேரம் கிடைத்தது. நண்பர்களது கடிதங்களை இணையத்தில் பார்க்கையில் விழா முடிந்ததென குறிப்பிடுவதைக் கவனித்தேன். ஆனால், உண்மையில் இந்த இரண்டு நாட்கள் என் 2016 என்னும் விழாவின் தொடக்கம் மட்டுமே. விழா தொடங்கி இருக்கிறது எனக்கு!

அன்புடன்

`திருச்சியிலிருந்து` கமலக்கண்ணன்.

 

அன்புள்ள கமலக்கண்ணன்,

இந்த முறை நிறைய புதியவர்கள் வந்திருந்தனர். நான் அவர்களுடன் போதிய அளவு நேரம் செலவிடவில்லை என்னும் எண்ணம் என்னைத் தொடர்ந்தது. காரணம் வழக்கமான நண்பர்களுடன் இயல்பாக நேரம் சென்றது ஒன்று. இன்னொன்று விவாதங்கள் நெருக்கமாக நடந்தமை. அடுத்த சந்திப்புகளில் புதியவர்களுடன் மட்டுமான ஓர் உரையாடல் அரங்கை ஏற்படுசெய்யவேண்டும் என நினைக்கிறேன்.

தொடர்ந்து என் செயல்பாடுகள் புதியவர்களை மையமாக்கியே இருந்து வந்துள்ளன. அதுவே என் விசை. பலசமயம் நட்பு காரணமாக இதை மறந்துவிடுகிறேன். வெறும் நட்பு மட்டுமே கொண்டவர்களை நான் பொதுவாக ஊக்குவிப்பதில்லை. நான் கொண்டுள்ள செயலூக்கம், என் இலட்சியவாதம் ஆகியவற்றை எவ்வகையிலேனும் பகிர்ந்துகொள்ளாதவர்கள் என்னுடையவர்கள் அல்ல என்றே உணர்வேன். ஆகவே அந்தக்கனவுடன் வருபவர்களை நோக்கி மிகுந்த தாகத்திடன் திறந்திருக்கிறேன்

இலக்கியம், ஆன்மீகம் இரண்டும் ஒருவகை கனவுகள். அக்கனவுக்குள் இருந்து எளிதில் வெளியே விழுந்துவிடலாம். ஒருமுறை வெளியேறினால் மீண்டும் உள்ளே நுழைய முடியாது. தொடர்ச்சியாக அக்கனவை நண்பர்கள் இழப்பதைக் கண்டுகொண்டிருக்கிறேன். அது உருவாக்கிய சோர்வில் உங்கள் கடிதம் பெரிய ஊக்கமாக வந்து சேர்ந்தது. நன்றி

நாம் மீண்டும் சந்திக்கவேண்டும்.

அன்புடன்

ஜெ

 

முந்தைய கட்டுரைபின்தொடரும் நிழலின்குரல்- வாசிப்பு
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 15