விழா 2015- கிருஷ்ணன்

1

இது போன்ற கூடுகைகளின் முக்கிய பங்களிப்பே ஜெ தனது விழா உரையில் கூறியது போல “ஊசிகளைக் கூர் தீட்டிக் கொள்வது”.

 

 
ஒவ்வொரு முறையும் புதிய நோக்குகள், தகவல்கள் மற்றும் உணர்வு நிலைகளுடன் திரும்புவேன். சில ஆண்டுகள் தோய்வடைந்தாலும் கடந்த இரு ஆண்டுகளாக இவ்விழா ஒரு அறிவார்வலனுக்கு நல் விருந்து. தேவதச்சன் ஒரு ஆளுமையாக ஒரு பாத்திரமாக இந்த இரு நாட்களிலும் பரந்து விரிந்தார். அவர் ஒரு இசை ரசிகன் போல உரையாடல்களில் தலையை ஆட்டி ஆட்டி ரசிப்பது பார்பதற்கு வெகு சுவாரஸ்யம். கூட அந்தத் தாம்பூலம் தரித்தலும்.


காலம் ஒரு ஒழுக்கல்ல அது சம்பவங்களால் நிரப்பப் படுவது சம்பவங்கள் துண்டு துண்டானது ஆகவே காலமும் துண்டு துண்டானது எனக் கூறிக் கொண்டிருக்கையில் நான் நுழைந்தேன். நாமக்கல் நண்பர்களுடன் ஈரோட்டில் இருந்தே காரில் எங்கள் விழா துவங்கி விட்டது, பின் திரும்ப நான் ஈரோட்டில் இறங்கியபோது தான் அது முடிந்தது. காங்கோ மகேஷ் உணர்சிகரமான வெண் முரசு வாசகர் , வாசு IIT பட்டதாரி, வரதராஜன் ஒரு லாரி அதிபர் இவர்களின் நட்பு மிக இனியது . எனக்கு எனது ஈரோட்டு நண்பர்கள் வட்டத்தை நினைவூட்டியது.


வாசு வெண் முரசு வழியாக தீவிர இலக்கிய வாசிப்பிற்குள் வந்தவர் , குறிப்பாக இதன் மொழி அவரைக் கவர்ந்துள்ளது, சில புதுச் சொற்களை இதிலிருந்து அன்றாட உரையாடல்களில் கையாள்வது நாம் எண்ணியதை சொல்லி விட்டோம் என்கிற நிறைவைத் தருகிறது என்கிறார், பெரிதும் அதற்காகத் தான் படிக்கிறார். வராத ராஜன் இலகுவான மகிழ்ச்சியுடன் எப்போதும் இருப்பவர் , அறிவுத் தேடலில் ஆர்வமுடையவர். இவரைப் போன்றவர்களுக்கு இந்த இருண்டு நாட்கள் சொல்லில் அடங்கா திருப்தியை அளித்துள்ளது.

 


தேவதச்சன் இந்த இரு நாள் அமர்வுகளில் பேசியதில் மிகக் குறிப்பிடத் தக்கதாக நான் எண்ணுவது முடிவிலி குறித்த அவரின் அவதானிப்பு. ஒவ்வொரு குழந்தையும் ஒரு முடிவிலியின் முனையில் பிறக்கிறது ஆகவே நாம் முடிவிலியை சந்தித்துக் கொண்டே இருக்கிறோம். ஒரு குழந்தை ஒரு மானிட மரபுத் தொடரின் பகுதி ஆகவே அது தனித்த உயிரல்ல.
மேலும் ஒரு தனது பேத்தியை இழந்த கிழவி மயில் போலக் கிடக்கிறாள் எனக் கூறியது அத்தருணத்தின் கணத்தில் யாரையும் கவிஞராகுவது என்றார். இதைத் தொடர்ந்து மேலும் கூறப் பட்ட வெவ்வேறு சம்பவங்களில் சில சாதாரணர்கள் உகுத்த சில வாக்கியங்களை பதிவு செய்யும் பொறுப்பை சென்னை ஜோதி போன்ற இளம் வாசகர்களிடம் விட்டு விடுகிறேன்.


அடுதத்தது நான் முக்கியமாகக் கூற விரும்புவது , K .N . செந்திலின் அவதானிப்பு . ஒரு சம காலப் போக்கை சம காலத்திலேயே அவதானிப்பது அவ்வளவு சாதாரணம் அல்ல. தற்போதைய சமூகம் ஒரு கருணையற்ற சமூகமாக உள்ளது , அது எந்த மதிப்பீட்டையும் அதன் உள் விதை என்ன எனக் கீறிப் பார்க்கும், மானுட மேன்மை பற்றி மெய் சிலிர்ப்பதற்கு தற்காலத்தில் ஏதுமில்லை

 

 

மாறாக தஸ்தவெஸ்கி திடீரென ஒரு அன்பின் , மானுட மேன்மையின் பேரொளியை நம்முன் பாய்ச்சுவார் , குற்றமும் தண்டனையும் நாவலில் சோனியாவின் பாத்திரம் அத்தகையது என்றார். அப்போது தற்காலத்தைய எழுதாளர்களிடம் காணப்படும் spreading என்கிற தன்மையைக் குறித்து எதிர்மறையாக ஜெ குறிப்பிட்டார். அது தேவையற்ற விஸ்தாரம் மற்றும் தகவல் குவிப்பு பற்றியது.


சென்ற முறை சு வேணுகோபால் என்றால் இம்முறை ஒரு படி மேலாக ஜோ டி குருசின் அமர்வு . இது எல்லோரையும் முற்றிலுமாக கட்டிப் போட்டுவிட்டது. அவர் தனது படைப்புகளை விடவும் அவர் சார்ந்த சமூகத்தை நமக்கு அறிமுகப் படுத்துவதை விரும்பினார். அவரின் இரு நாவல்களின் மூலம் ஏற்பட்ட எதிர்ப்புகளை தனது உறவுகள் பயன்படுத்திக் கொண்டு தனது சொத்துக்களை அபகரித்துக் கொண்டதும், எதிர்ப்புகளை தூபம் போட்டு வளர்த்ததும் ஒரு நாவலில் இடம் பெறும் சம்பவம். அவரது அஞ்சாமை அவரது ஆளுமை.

அவர் குறிப்பிட்ட wedge bank மிக மிக புதிய செய்தி. அதாவது குமரிக்கு கீழே முழுக்க முழுக்க நமது எல்லைக்கு உட்பட்டு ஒரு மீன் வளச் சுரங்கம் உள்ளது , அங்கு இலங்கை மீனவர்கள் அத்து மீறி மீன் பிடிக்கிறார்கள், பற்பல கோடிகளை லஞ்சமாகப் பெற்றுக் கொண்டு பிற வெளி நாடுகளுக்கு இந்த அனுமதியை இந்திய அரசியல்வாதிகள் கொடுக்கிறார்கள். இது வெளிபட்டால் 2g யை சிறு ஊழலாகிவிடும்.

 

 

மேலும் வியாபர மீன்பிடி முதலாளிகளின் கீழ் பணியாற்றும் நமது மீனவர்களின் எல்லை மீறல்கள் மற்றும் அத்து மீறல், இலங்கை மீனவர்களின் தரப்பு நியாயம் மற்றும் நமது மோட்டார் மீன்பிடி (mechanized fishing) அநீதி ஆகியவற்றையும் பதிவு செய்தார். கீழே இணையத்தில் நான் தேடி எடுத்த ஒரு குறிப்பு.

 

Wedge Bank

Wedge bank is a fertile fishing found where rich marine biological diversity occurs. Wedge bank may also be defined as a place of marine environment, where there is a rich availability of fish food organisms. The water depth of this region is low. The physical features of the water like under-water current, tides and waves will have less impact on the fishes and animals of this region. Fishes select this region for feeding and breeding purposes. Throughout the maritime countries of the world there are about twenty such wedge banks. Of these one is situated near Kanyakumari on the coastline of Kanyakumari District on the eastward as well as on the westward region for about 34 nautical miles20 . Here representatives of fish species of the three seas occur.

(http://shodhganga.inflibnet.ac.in/bitstream/10603/15709/10/10_chapter%204.pdf)

இடையே வந்த லட்சுமி மணிவண்ணன் அமர்வுகளுக்கு ஒரு தொய்வு.   Anti -thought என ஒன்று உண்டு என்றால் அவர் பேசுவதைக் கேட்டால் போதும். வரலாற்றுவாதம் என்பது முன் நிகழ்ந்தவற்றை குறித்துக் கொண்டு எதிர்காலத்தை கணிப்பது , வரலாற்றிற்கு ஒரு திசையும் நோக்கும் உள்ளது.

பின்நவீனத்துவ சிந்தனை என்பது வரலாறு ஒரு புனைவே எனக் கூறுவது இது சொல்லுபவரின் தேர்வுக்குத் தக நிறத்தை மாற்றிக் காட்டும் ஆகவே வரலாறு என்பது ஒரு பல் கதையாடல்.
புது வரலாற்று வாதம் என்பது அப்படியென்றால் நாமும் ஒரு புனைவை உருவாக்கி வரலாற்றில் சேர்த்து அதை சுரண்டலுக்கும் ஆதிக்கத்திற்கும் எதிராக பயன்படுத்துவோம் என்பது.
இதில் பின் நவீனத்துவ சிந்தனையை லட்சுமி மணிவண்ணன் பிரதிநிதித்துவப்படுத்துகிறார் என ஜெ கூறினார். மிக முக்கியமான உரையாடல் அது.


இசையின் வருகையும் , யுவனின் வருகையும் நிகழ்ச்சியை சுவாரஸ்யமக்கியது. இசையின் பேச்சில் contemplative poetry என்கிற வகைமை குறித்து பேசப் பட்டது. யுவன் தனது பேச்சில் தேவதச்சன் தன்னை ஒரு மாற்று குறைவாகவே நடத்துகிறாரோ என்கிற மனக்குறை இருந்ததாகவும் ஒரு மாலை நடையில் அவரிடம் அதைக் கூறிய போது இரு கைகளையும் விரித்து என்னிடம் ஏதேனும் ஒளிந்துள்ளதா எனப்பார் எனக் கூறியது ஒரு குரு சிஷ்ய உறவில் மட்டுமே வாய்க்கும் நெகிழத் தக்க அனுபவம்.


நான் நுழையும் போது தேவதச்சனிடம் ஜெ கேட்டது , நீங்கள் முற்றிலும் வேறொருவராக மாறி என்றேனும் கவிதை எழுதியதுண்டா என்பது. Tranströmer ரிடம் அதிக கண்டதாகவும் சொன்னார். அதற்கு இல்லை என பதிலளித்தார். அதற்கு தடையாக இருப்பது எது என ஜெ கேட்டார், இனிமேல் தான் அதைப் பற்றி யோசிக்க வேண்டும் என தேவதச்சன் கூறினார். அவருக்கும் சிலதூண்டல்களை இந்த இருநாட்கள் வழங்கியது நமது வெற்றி.
அதைத் தக்கவைத்துக் கொள்ளல் எதிர் காலத்தில் நமக்கு காத்திருக்கும் ஒரு போராட்டம்.

 
கிருஷ்ணன்.

 

படங்கள்

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 12
அடுத்த கட்டுரைவிழா 2015 கடிதங்கள் 4