விழா 2015 கடிதங்கள் 4

 

1

 

ஜெ

 

நிறைவான தருணம் எல்லா நேரத்திலும் வந்துவிடுமா? வருடத்தின் கடைசியில் தன் கருத்தொத்த நண்பர்களின் ஒரு சந்திப்பில் அது நிகழுமென்றால் அது ஆனந்தத்தின் உச்சம் தான். ஒவ்வொரு ஆண்டும் நிகழும்போது ஒவ்வொருவருக்கும் ஒரு அனுபவமும் அது தரும் சுகம் அலாதியானதுதான். அதற்கு நேரம் ஒதுக்கி தன் உறைந்துபோன செல்களை புதுப்பித்து கொள்ள முயலும் இலக்கிய ஆளுமைகளை நினைத்து பெருமை கொள்கிறேன்.


ஞானக்கூத்தன் விழாப் பற்றி இப்போதுதான் படித்தது மாதிரி இருந்தது அதற்குள் ஒராண்டு முடிந்து அடுத்த ஆண்டும் வந்துவிட்டது. ஆறாவது ஆண்டாக தொடர்ந்து இந்த பணி நடந்து வருவதும் அதில் சளைக்காமல் கலந்து கொள்வது/நடத்துவதும் தமிழ் இலக்கிய உலகின் ஒரு முக்கிய தருணம். அனைவருக்கும் வாழ்த்துக்கள்.!!

 

கே.ஜே.அசோக் குமார்

 

 

ஜெ,

விழா புகைப்படங்களும், விழா குறித்த பதிவுகளும் மிகுந்த சந்தோஷம் தருகின்றன். மிகப் பெரிய ஒரு செயலை நடத்திக் கொண்டு இருக்கிறீர்கள். அது சிறப்போடு மேலும்  வளரும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.

அன்புடன்
நிர்மல்.

அன்புள்ள ஜெ

விஷ்ணுபுரம் கூட்டத்துக்கு வந்திருந்தேன். சந்திப்புகள் அபாரமான அனுபவங்களாக இருந்தன. தேவதச்சன் ‘நாலெட்ஜ் சிந்தனைக்கு எதிரானது.’ என்று சொன்னதைப்பற்றி நினைத்துக்கொண்டே இருந்தேன். அப்படியென்றால் கல்வி தேவையில்லையா என்று கேட்டேன். தேவை, ஆனால் அது மட்டும் நிறைந்துவிடக்கூடாது, கடந்துசெல்லவும் வேண்டும் என்று சொன்னார்
அரங்கிலே மிகச்சிறந்தது கடைசியாக பேசியதுதான். வரலாற்றுவாதம் பற்றிய விவாதம் ஒரு உச்சகட்டம். அப்படி மூன்றுதரப்புகள் மாறிமாறி கூர்மையாகப்பேசிக்கொள்ளும் ஒரு விவாதத்தை நம் கல்லூரிகள் எதிலுமே காணமுடியாது. நிறைவாக இருந்தது. கிக்கானி பள்ளி விழாவில் ஒலியமைப்பு சரியில்லை. ஆகவே எனக்கு பேச்சுக்கள் தெளிவாகப்புரியவில்லை. ஆனால் இரண்டுநாட்கள் நடந்த சர்ச்சைகளின் மனநிலை நீடித்ததனால் உற்சாகமாக இருந்தது
சக்திவேல்
ஜெ,
நலம்தானே? கிக்கானி பள்ளியில் சந்தித்தோம். புல்லின் தழல் புத்தகத்தில் கையெழுத்து வாங்கிக்கொண்டேன். நான் கரூரில் இருந்து விஷ்ணுபுரம் கருத்தரங்குக்கு வரமுடியவில்லை. ஆகவே விழாவுக்கு வந்தேன். முந்தைய விழாக்களில் எல்லாம் கலந்துகொண்டென். இந்த விழா கொஞ்சம் உற்சாகமாக இல்லாமல் இருந்தது போல தோன்றியது. அறிவிப்பும் அறிக்கைகளும் எல்லாம் மேலோட்டமாக ஆர்வமில்லாமல் சொல்லப்பட்டதுபோல இருந்தன. எல்லாரும் களைத்துப்போய் இருந்திருக்கலாம். நான் தேவதச்சனிடம் சில வார்த்தைகள் பேசினேன். சிறந்த அனுபவம் அது
முருகேஷ்
அன்புள்ள ஜெ சார்
ஒருநாள் விஷ்ணுபுரம் விவாதத்தில் கலந்துகொண்டேன். நான் கலந்துகொண்ட மிகச்சிறந்த இலக்கிய விவாதம் இதுவே, கவிதையை வாசிப்பதிலுள்ள மூன்று தளங்களைப்பற்றிச் சொன்னீர்கள். இன்னொசெண்ட் ரீடிங், காம்ப்ரிஹென்ஸிவ் ரீடிங், காண்டம்ப்லேட்டிவ் ரீடிங் ஆகிய மூன்றையும் பலமுறை யோசித்தேன். வண்ணத்துப்பூச்சி பற்றிய அவரது கவிதையை முன்வைத்து [சிறகுகள் இரு ஜன்னல்கள் மாதிரி இருப்பது] சொன்னபோது நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்று சட்டென்று புரிந்தது.
நாம் வாசிப்பது சரியாகத்தான் இருக்கிறதா என்ற சந்தேகம் எப்போதும் இருந்துகொண்டே இருக்கும். முதலில் நமக்கு தோன்றக்கூடிய எளிமையான குழந்தைத்தனமான வாசிப்பு மிக முக்கியமானது என்றும் கவிதையை அறிவுஜீவித்தனமாக கருத்துக்களைத் தேடி வாசிக்கவேண்டியதில்லை என்றும் தெரிந்துகொண்டது எனக்கு ஒரு பெரிய தொடக்கம்.சிந்தனைகளையோ அதற்கு அப்பாலுள்ளவற்றையோ பின்னர்தான் புரிந்துகொள்ளவேண்டும். கவிதையை வாசிக்கும்போது வரவேண்டியது ஒரு குழந்தைத்தனமான பரவசம்தான். அது வராவிட்டால் கவிதை தொடங்கவேயில்லை என்றுதான் பொருள். ஒரு பெரிய அரங்கு. அதில் கலந்துகொண்டது பெருமை
செந்தில்

 மேலும் படங்கள்

 

முந்தைய கட்டுரைவிழா 2015- கிருஷ்ணன்
அடுத்த கட்டுரைவிழா 2015 கடிதங்கள் 5