வெள்ளம் முடிந்தபின்னர் பதிப்பகத்துறையில் உள்ள நண்பர்களிடம் பேசினேன். எவருக்கெல்லாம் இழப்பு இருக்கும் என்று கேட்டேன். கிழக்கு பதிப்பகத்திற்கு இழப்பு உண்டு, ஆனால் காப்பீடு செய்திருந்தனர். தமிழினிக்கு இழப்பு இல்லை. தரைத்தளத்தில் அலுவலகம், கிடங்கு இருக்கவில்லை. சில பெரிய பதிப்பாளர்களுக்கு இழப்பு உண்டு, ஆனால் சில லட்சம் இழப்பு என்பது அவர்களால் தாளக்கூடியதுதான். மேலும் அவர்கள் வெறும் வணிகர்கள். வணிகநூல்களை வெளியிடுபவர்கள். ஆகவே அது வணிகவிவகாரம் மட்டுமே
உண்மையான அர்ப்பணிப்புடன் அறிவார்ந்த நூல்களை வெளியிட்டு காப்பீடு செய்யாமையால் இழப்புகளைச் சந்தித்தது சேகர் பதிப்பகம் என்றார்கள். முக்கியமான நூல்களை அவர்கள் வெளியிட்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ்ப்பண்பாட்டாய்வின் முக்கியமான முன்னோடியான பி.எ.சாமியின் நூல்கள். தமிழாய்வுநூல்களே அதிகம். [எனக்கு ஒவ்வாத தமிழறிஞர் நூல்களே அதிகம் என்பது வேறுவிஷயம்] அவை சாக்கடை நீரில் அழிந்து பதிப்பாளரையும் அழிவுக்குக் கொண்டுசென்றன
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கான உதவிகள் பல உள்ளன. தமிழ்ப்பண்பாட்டு நடவடிக்கைக்காக பதிப்பகம் நடத்திய ஒருவர் நஷ்டமடையாமல் காக்கவேண்டியது தமிழ் மேல் அக்கறை கொண்டிருக்கும் அனைவருடைய கடமையாகும். குறிப்பாக வெளிநாட்டுவாழ் தமிழர்களும் அமைப்புகளும். சேகர் பதிப்பகத்தின் எஞ்சிய நூல்களை வாங்குவது அதற்குரிய சிறந்த வழியாக அமையும்
ஆனால் பதிப்பாளருக்கு உதவவேண்டும் என்றால் அதை நேரடியாக அவரிடமிருந்தே முழுவிலைகொடுத்தே வாங்கவேண்டும். விற்பனைத்தளங்கள், விற்பனைக்கடைகள் வழியாக வாங்கினால் 40 சதவீத பணம் அவர்களுக்கே சென்றுவிடும். பதிப்பாளருக்கு மிகமெல்லிய லாபம் மட்டுமே எஞ்சும்.
நல்லது நடக்கட்டும்.
சேகர் பதிப்பகம் நூல்களின் பட்டியல்
சேகர் பதிப்பகம் நூல்களின் பட்டியல் 2
தொடர்பு எண் : | 914465383000 |
முகவரி : | 66, பெரியார் தெரு |
எம்.ஜி.ஆர் நகர் | |
சென்னை – 600078 | |
இந்தியா |