விழா 2015 – விஷ்ணுபுரம் விருது

1
இருபத்தேழாம் தேதி காலை ஐந்தரை மணிக்கே அனைவரும் எழத்தொடங்கிவிட்டனர். இரவு 12 மணி வரை தொடர்ச்சியாகப் பாடல். அதற்குமேலும் விழித்திருக்கவே விரும்பினர். நான் தான் கட்டாயப்படுத்தித் தூங்கச்செய்தேன். காலை எழுந்ததுமே கூட்டமாக ஒரு நடை சென்றோம். அருகிலிருந்த டீக்கடைவரை சென்று டீ குடித்து மீள்வது வரை இலக்கிய விவாதம்தான். கோவையின் டீக்கடைகளுக்கு எங்களை நன்றாகத்தெரியும்

ஏழுமணிக்குள் நண்பர்கள் டீ குடித்து விழா மனநிலைக்கு வந்திருந்தனர். ஆங்காங்கே கூட்டமாக நின்று பேசிச்சிரித்து கொண்டிருந்தவர்களைத் திரட்டித்தான் காலையுணவுக்குக் கொண்டுசெல்லவேண்டியிருந்தது. ஒன்பதுமணிக்கு தேவதச்சனுடனான இரண்டாவது அமர்வு தொடங்கியது. நண்பர்கள் அவர்களுக்குப்பிடித்த தேவதச்சன் கவிதை ஒன்றைச் சொல்லி அது ஏன் பிடித்தது என்பதற்கான காரணங்களையும் சொல்ல பிறர் விவாதித்தனர்.

 

1

கவிஞர் இசை, எழுத்தாளர்கள் லட்சுமி மணிவண்ணன், கெ.என்.செந்தில், எம்.கோபாலகிருஷ்ணன், விமர்சகர் க.மோகனரங்கன் போன்றவர்கள் விவாதத்தில் கலந்துகொண்டனர். கவிதை விவாதத்தின் பல புதிய சாத்தியங்கள் திறந்தன. தேவதச்சன் உணர்வுபூர்வமாகவும் நுணுக்கமாகவும் நிறைய பேசினார்

கூடவே இரு எல்லைகள் வெளிப்பட்ட தருணம் என்றும் தோன்றியது. ஒன்று, கவிதையை அதை எழுதுபவர்களின் மிகச்சிறிய சூழலுக்கு வெளியே ஆர்வமுள்ள வாசகர்களிடம் விவாதிப்பதற்கான மொழி என்பது இன்னும் அமையவில்லை. மீண்டும் பூடகமான மொழிக்கே சிறுபத்திரிகையாளர்கள் செல்கிறார்கள். இரண்டு, கவிதைக்கான பொதுவான கலைச்சொற்களை பெரும்பாலும் கவிஞர்கள் பயன்படுத்துவதில்லை. அவர்களுக்குரிய சில சொற்களைக் கையாள்கிறார்கள். ஆகவே இரு கவிஞர்கள் பேசிக்கொண்டால் ஒரே விஷயத்தை இரு சொற்களில் சொல்லி அவை ஒன்றே என்னும் தெளிவை அடையவே நெடுநேரமாகிறது.

1

அதன்பின் மிளிர்கல் நாவலின் ஆசிரியரும் ஒரு பொருளாதார அடியாளின் ஒப்புதல் வாக்குமூலம், எரியும்பனிக்காடு போன்ற நூல்களின் மொழிபெயர்ப்பாளருமான முருகவேள் பேசினார். அவரது நாவல்களைப்பற்றி சுரேஷ் ,விஜயராகவன், எம் கோபாலகிருஷ்ணன் ஆகியோர் கருத்துரைகளை முன்வைத்தனர். வாசகர்களின் கேள்விகளுக்கு முருகவேள் பதிலுரைத்தார்.

அந்த விவாதத்தில் உலகளாவிய தளத்தில் இருந்துகொண்டிருக்கும் ஒரு முரண்பாடு வலுவாகவே வெளியானது. வரலாறு என்பதே ஒரு புனைவு என்றும் எனவே நிகழ்வுகளை ஒரு தொடராகத் தொகுத்துக்கொள்ளாமையே அவற்றை உண்மையில் புரிந்துகொள்ள உதவுவது என்றும் புறவய வரலாறு என்பது இல்லை என்றும் லட்சுமி மணிவண்ணன் பேசினார்.

புறவய வரலாறு எவர் எப்படி மறுத்தாலும் இருந்துகொண்டிருக்கிறது என்றும் நம் நோக்கின் மாறுபாடு அதன் இருப்பை மறுப்பதில்லை என்றும் மேலும் வரலாற்றுநோக்கே பயன்தருவது அதை மறுக்கும் நோக்குகள் செயல்தளத்தில் பயனற்றவை என்றும் முருகவேள் சொன்னார்

 

1

யுவன் சந்திரசேகர் வந்தார். அவரது மாமனார் இறந்தமையால் வருகை ஒருநாள் தாமதமாகியது. வருத்தத்திலும் அவர் கிளம்பி வந்தது நெகிழ்வூட்டியது. அவரது நாவல்கள், கதைகள் பற்றிய விவாதம் நிகழ்ந்தது. கதைக்குள் கதைக்குள் கதை என்னும் வடிவம் பற்றி விரிவான விவாதம் நிகழ்ந்தது. அவரது கதைகளில் வரும் மாறாத கதாபாத்திரங்களான கிருஷ்ணன் இஸ்மாயில் சுகவனம் ஆகியோரின் ஆளுமைகளைப்பற்றி கெ.என் செந்தில் பேசினார்.

அதிலும் ஒரு முக்கியமான முரண்பாடு எழுந்தது. ஆசிரியனை கதாபாத்திரங்களுக்குள் தேடிக்கண்டடைவது ஒரு நல்ல வாசிப்பல்ல ஆசிரியன் அளித்ததை மட்டுமே வாசிக்கவேண்டும் என்றார் யுவன். வாசகன் ஓர் ஒட்டுமொத்தமாக ஆசிரியனைவிடப் பெரியவன் என்றும் ஆசிரியனை சென்றடைவதே அவனுடைய சவால் என்றும் மணிவண்ணன் சொன்னார்.

 

1

மாலை ஐந்தரை மணிக்கு விழா தொடங்கியது. சில சிறிய சிக்கல்கள் இம்முறை இருந்தன. கிக்கானி பள்ளி அரங்கில் ஒரு போட்டித்தேர்வு நடந்தமையால் அரங்கை மாலை ஐந்து மணிக்கே அளித்தனர். அங்கே ஒலிவசதியையும் படக்காட்சி வசதியையும் முன்னரே சோதனைசெய்ய முடியவில்லை. அங்குள்ள மைக் வேலைசெய்யவில்லை.

அவசரமாக ஒர் ஒலிபெருக்கியை ஏற்பாடுசெய்தோம். மைக்கை கையில் வைத்துக்கொண்டு பேச்சாளர்கள் பேசவேண்டியிருந்தது. படக்காட்சிக்கு அங்குள்ள வசதிகள் மிகப்பழையவை. ஆகவே தேவதச்சன் ஆவணப்படத்தை காட்டுவது மிகத்தாமதமாகி நிகழ்ச்சியின் வரிசை குலைந்தது.

 

1

குறைகளை மீறி நிகழ்ச்சி சிறப்பாகவே நிகழ்ந்தது. செல்வேந்திரன் விழாவைத் தொகுத்தளித்தார். கிறிஸ்துமஸ் முடிந்த உணர்வின் நீட்சியாக ‘அன்பென்ற மழையிலே அகிலங்கள் நனையவே அதிரூபன் தோன்றினானே” என்ற பாடலை சுரேஷின் மகள் வானதி இறைவணக்கமாகப் பாட நிகழ்ச்சி தொடங்கியது.

விஷ்ணுபுரம் அமைப்பின் நண்பரான கிறிஸ்டோபர் எழுதிய ‘துறைவன்’ நாவலை ஜோ டி குரூஸ் வெளியிட்டார். நண்பர் எழுத்துப்பிரசுரம் வெ. அலெக்ஸ் பெற்றுக்கொண்டார். ஜோ அந்நாவலைப்பற்றி சிறியதோர் உரையை ஆற்றினார்

 

1

வெண்முரசுக்கு ஓவியங்கள் வரையும் ஷண்முகவேல் நிகழ்ச்சியில் கௌரவிக்கப்பட்டார். ராஜகோபாலன் அவருக்கு வாழ்த்துரை சொல்ல விஜயராகவன் பொன்னாடை போர்த்தி கௌரவித்தார். நண்பர் செந்தில் பரிசுத்தொகையை அளித்தார்.

தேவதச்சனும் அவரது மனைவியும் பொன்னாடையும் மலர்ச்செண்டும் அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டனர். லெனின் ராஜேந்திரன் உடல்நலக்குறைவால் வரமுடியாத நிலையில் நாஞ்சில்நாடன் விருதை அளித்து வாழ்த்துரையாற்றினார். இயக்குநர் வெற்றிமாறன் தேவதச்சனைப்பற்றிய ஆவணப்படமான ‘நிசப்தத்தின் சப்தம்’ குறுந்தகடை வெளியிட்டார். கடலூர் சீனு பெற்றுக்கொண்டார்.நண்பர் சரவணன் அதை எடுத்திருந்தார். அவரது தந்தை முந்தையநாள் மறைந்துவிட்டமையால் அவர் வரமுடியவில்லை.

1

தேவதச்சன் பற்றிய விமர்சனநூலான ‘அத்துவானவெளியின் கவிதை’[சொல்புதிது பிரசுரம்] யுவன் சந்திரசேகரால் வெளியிடப்பட்டது. நண்பர் விஜய் சூரியன் பெற்றுக்கொண்டார். அதன்பின்னர் ஆவணப்படம் திரையிடப்பட்டது.

விஷ்ணுபுரம் அமைப்பின் செயலர் அரங்கசாமி அமைப்பின் பங்களிப்பைப்பற்றியும் செயல்பாடுகளைப்பற்றியும் பேசினார். தேவதச்சனை வாழ்த்தி நாஞ்சில்நாடன், வெற்றிமாறன் ஆகியோர் சுருக்கமாகப்பேசினர். யுவன் சந்திரசேகரும், லட்சுமி மணிவண்ணனும் விரிவாகப் பேசினர்.

1

தேவதச்சனின் உரையாடலில் உள்ள நுட்பங்களை யுவன் சுவாரசியமாகப் பகிர்ந்துகொண்டார். அவரது நகைக்கடைக்கு முன் காத்திருக்கையில் ‘வெயிட்பண்ணாம காத்திருங்க’ என்று அவர் சொன்னதையும் அது முதலில் ஒரு துணுக்குறலை அளித்ததையும் அதன்பின் அடுத்த கணம் என்பதை மறந்து அக்காட்சியில் லயித்து காத்திருப்பதைக் கற்றதாகவும் அவர் சொன்னபோது அரங்கு கைதட்டியது

லட்சுமி மணிவண்ணன் தேவதச்சனின் தரிசனத்தையும் நுணுக்கமான பார்வையையும் விளக்கினார். அவரைச் சந்தித்து மீளும்போது தன் உடலுக்குள் ஓர் உறுப்பு நிலைமாற்றம் அடைந்திருப்பதைப்போல ஓரு மாற்றத்தை உணரமுடியும் என்றார். அதன்பின் நான் கவிதை என்பது பண்பாட்டின் நடுவில் ஒரு குழந்தையை, ஒரு பழங்குடியை நிலைநிறுத்தும் செயலே என்று பேசினேன்.

 

1

வெ.சுரேஷ் நன்றிகூற விழா நிறைவுற்றது. நண்பர்களுடன் ராஜஸ்தானி பவனுக்குத் திரும்பிவந்தோம். அங்கே உணவுண்டபின் ஒவ்வொருவராக பிரிந்துசெல்ல விடைகொடுத்தோம். எஞ்சியவர்களுடன் அங்கே தங்கி மீண்டும் விடியவிடியப் பேசிக்கொண்டிருந்தோம். மறுநாள் காலையில் எழுந்து டீ குடிக்க நடந்துசெல்லும்போது ஆழமான சோர்வு வந்து மூடியது. பிறிதொரு மறக்கமுடியாத விழா முடிவுக்கு வந்தது அப்போதுதான் நெஞ்சை வந்தடைந்தது.

 

0Nd90_N3g_KJm7RACdERogT22EVMOxlyzJCq-jpeGpU

புகைப்படங்கள்

 

மேலும் படங்கள்…

முந்தைய கட்டுரைவிழா பதிவுகள் 3
அடுத்த கட்டுரைஇந்திரநீலம் நாவல் செம்பதிப்பு முன்பதிவு