பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 8
அவைக்கூடத்திற்குள் கர்ணன் நுழைந்தபோது அவை கடல் அலை எழுவதுபோல எழுந்தது. எப்போது எழுவது என்று அவையினருக்கு தெரியாதாகையால் முன்வரிசை எழக்கண்டு பின்வரிசையினர் எழுந்தனர். முன்வரிசை அமரக்கண்டு பின்வரிசை அமர்ந்தபோது சென்ற அலை திரும்பிவந்தது. அஸ்தினபுரியின் அவை தடாகத்தில் நீர் எழுவதுபோல எழும். சீராக, அமைதியாக. வாழ்த்தொலிகள் கலைந்த பறவைக்கூட்டம் போல ஒலித்தன.
வைதிகர் வேதம் ஓதி கங்கைநீர் தெளித்து வாழ்த்த முதுவைதிகர் அவனை அழைத்துச்சென்று அரியணையில் அமரச்செய்தார். குலமூத்தோர் இருவர் தொட்டு எடுத்த மணிமுடியை அவன் சூடிக்கொண்டான். அமைச்சர் ஹரிதர் அளித்த செங்கோலை வலக்கையில் வாங்கிக்கொண்டான். அரியணைக்குமேல் வெண்குடை எழுந்தது. அவை அரிமலர் தூவி அவனை வாழ்த்தியது. அவையினர் அவனை வாழ்த்தி குரலெழுப்ப மங்கல இசை உடன் இழைந்தது.
அவைமுறைப்படி வைதிகர்களுக்கு மங்கலக்கொடை அளித்தபின் அவன் அவையை வணங்கி “இந்த மங்கல நாளில் இந்த அவையமர்ந்து நெறிபேணிய பெருமன்னரின் விண்ணுரைகள் இங்கே சூழ்வதாக! அறம் காக்கும் தெய்வங்கள் நமக்கு அருள்வதாக! நிலையழியாத சொற்கள் நம் நெஞ்சில் நிறைவதாக!” என்றான். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று அவை ஒத்துரை கூறியது. கர்ணன் உடலை எளிதாக்கி கால்களை நீட்ட அவன் செங்கோலை ஏவலன் பெற்றுக்கொண்டான்.
குடிப்பேரவை அமைந்த சில நாட்களுக்குள்ளேயே குடித்தலைவர்கள் அனைவரும் அரசவை எப்படி செயல்படும் என்று அறிந்துவிட்டனர். அவர்களின் குடியவைகள் எப்படி நிகழுமோ அதைப் போலத்தான். அதாவது அங்கு ஒன்றுமே நிகழவில்லை. ஹரிதர் முன்னரே எடுத்த முடிவுகளை வினாக்களாக மாற்றி அவைமுன் வைத்தார். அவையின் முன்நிரையில் அமர்ந்திருந்த சிலர் அவற்றை எவ்வகையிலும் புரிந்துகொள்ளாமல் சில வினாக்களை கேட்க மிகச் சிறந்த வினாக்கள் என்று அவற்றைப் பாராட்டி சுற்றிவளைத்துச்செல்லும் விளக்கமொன்றை அளித்தார். அவற்றுக்குமேல் சொல்லெடுக்க இயலாது அனைவரும் அமர்ந்திருக்கையில் அந்த அவை அவற்றை ஏற்றுக் கொண்டதாக ஹரிதர் அறிவித்தார். கர்ணன் கையசைத்ததும் அவற்றை திருமுக எழுத்தர்கள் ஓலைகளில் எழுதிக் கொண்டனர். அரசாணைகளாக அச்சொற்கள் அவை கலையும் முன்னரே வெளியிடப்பட்டன.
ஆணைகளின் எழுத்து வடிவங்கள் ஒவ்வொரு குடித்தலைவருக்கும் ஓரிரு நாட்களுக்குள் வந்து சேர்ந்தன. அவற்றை அவர்கள் தங்கள் குடிகளுக்கு அரசாணைகளாக கொண்டு சேர்த்தனர். முன்னரும் அப்படித்தான் அரசாணைகள் வந்து கொண்டிருந்தன. இப்போது தாங்களே அவ்வாணைகளை விடுத்ததாக அவர்களால் குடிகளிடம் சொல்லிக்கொள்ள முடிந்தது. ஓலைகளின் மறுவடிவங்களில் அக்குடித்தலைவர்களே அரசமுத்திரையுடன் கைச்சாத்திட்டனர். அந்த ஓலைகள் தொடக்கத்தில் அவர்களுக்கு பெரும் கிளர்ச்சியை அளித்தன. பின்னர் அவை இயல்பாக ஆயின. அவை மறுக்கப்படுகையில் அவர்கள் சினம்கொண்டெழுந்தனர்.
ஓரிரு மாதங்களுக்குள்ளேயே மாதம் ஒரு முறை கூடும் சம்பாபுரியின் அரசப்பேரவை ஓசையேதுமின்றி பெரும்பாலும் அரைத்தூக்க நிலையிலேயே இருக்கத் தொடங்கியது. அவையில் எவர் எழுந்து பேசுவார் என்பதும் எவர் எவரை மறுப்பார் என்றும் அனைவருக்கும் தெரிந்திருந்தது. சிலர் என்ன சொற்களை சொல்வாரென்பதே அறிந்ததாக இருந்தது. அவர்களும் தவறாமல் அச்சொற்களைப் பேசி அவையை முன்னெடுத்தனர். அவர்கள் பதினேழு பேரில் நால்வருக்கே செம்மொழியும் அரசமுறைமைகளும் பொருளியல் ஆடல்களும் ஓரளவேனும் தெரிந்திருந்தன. மற்றவர்கள் வெறுமனே பேச மட்டுமே விழைவுள்ளவர்களாக இருந்தனர்.
ஆயினும் சூத்திரகுடித்தலைவர்கள் பெருவிருப்புடன் அவைக்கு வந்தனர். புத்தாடை அணிந்து புதிய தலைப்பாகைகளின் மேல் இறகுகளைச் சூடி தங்களுக்கென செய்து கொண்ட மூங்கில் பல்லக்குகளில் ஏறி குடிக்குறிகள் பொறிக்கப்பட்ட கொடிகள் பறக்க, குடிநிமித்திகன் ஒருவன் வரிசையறிவித்து வாழ்த்தொலி கூறி முன்னால் செல்ல, கொம்பும் முழவும் முழக்கி குடி வீரர் எழுவர் பின்னால் படைக்கலமேந்தி தொடர, சம்பாபுரிக்குள் நுழையும் மேழி குலத்தலைவரோ வண்டு குலத்தலைவரோ தாங்களும் அரசனென்றே உணர்ந்தனர்.
ஒரு வருடத்துக்குள் பொதுவெளிகளில் சூதன்மகன் என்று கர்ணனை இழித்துச் சொல்லும் வழக்கமில்லாது ஆயிற்று. சூதர்களும் சூத்திரர்களும் அவன் தங்களவன் என்னும் பொருளில் அச்சொல்லை எப்போதேனும் சொல்வதுண்டு. சிற்றவைகளுக்குள் எவரேனும் அதைச் சொன்னால் அங்குள்ள பிறிதொருவர் “சூதன் மகனாயினும் சம்பாபுரியின் அரசை வேரும் அடித்தூரும் உள்ளதாக மாற்ற அவனால் முடிந்துள்ளது. அஸ்தினபுரியின் படை ஆதரவு நமக்கிருக்கையில் மகதமே கூட நம் எல்லைகளை கடக்க அஞ்சும். மாமன்னர் லோமபாதரின் ஆட்சியில் கூட இத்தனை பாதுகாப்பாக நாம் இருந்ததில்லை” என்றனர்.
வணிகர்களின் செல்வமும் வைதிகர்கள் பெறும் கொடையும் பெருகப் பெருக ஷத்ரியர்கள் ஒற்றைத்தனிப் பரப்பாக தங்களுக்குள் கூடினர். அவர்களிலும் இளையோர் கர்ணனின் வில்வித்தையில் உளமழிந்திருந்தனர். செண்டுவெளியில் இளையோர் வில்திறனும் வேல்திறனும் காட்டி முடிக்கையில் தன் வில்லை எடுத்து நாணொலி எழுப்பி கர்ணன் அரங்குக்கு வரும்போது “அங்க நாட்டரசர் கர்ணன் வாழ்க! வெல்திறல் வில்வீரர் வாழ்க! வெங்கதிரோன் மைந்தன் வாழ்க!” என்ற வாழ்த்தொலி எழுந்து மாளிகை முகடுகளை அதிரச் செய்யும்.
மாமன்னர் லோமபாதர் அமர்ந்த சிறிய அரியணையில் தன் உடலை சற்று பக்கவாட்டில் சாய்க்காமல் கர்ணனால் அமரமுடியாது. வலது கைமேல் தாடையை ஊன்றி இடக்காலை நன்கு நீட்டி அமர்ந்து அவன் ஹரிதர் ஆணைகளை வாசித்துக் காட்டுவதை பார்த்துக் கொண்டிருந்தான். பொது அவையின் உள்ளம் இரு நாழிகைகளுக்கு மேல் சொல் வாங்காது என்பதை ஹரிதர் அறிந்திருந்தார். எனவே அவை கூடியதுமே கொந்தளிப்பூட்டும் சிறு செய்திகளை முதலில் அறிவிப்பார். அனைவரும் பேசி, குமுறி, அலைக்கழிந்து, களைத்து அமர்ந்த பின்னரே பெரிய செய்திகள் வரும். அப்போது முடிவெடுக்கப்படும் படைநகர்வும் பொருளாடலும் அவைக்கு எவ்வகையிலும் ஆர்வத்தை ஊட்டுவதில்லை. எனவே இறுதி ஏடுகளைப்புரட்டும் விரைவுடன் ஆணைகள் அவையால் அங்கீகரிக்கப்படும்.
ஆணைகளை முடித்துவிட்டு ஹரிதர் கர்ணனை நோக்கி “இன்றைய அலுவல்கள் முடிந்தன அரசே” என்றார். கர்ணன் அரைத் துயிலில் இருந்த தன் அவையை நோக்கி புன்னகைத்து, மெல்லிய குரலில் “மலைப்பாறைக் கூட்டங்கள் நடுவே காற்று செல்வது போல் உள்ளது இவ்வுரையாடல் அமைச்சரே” என்றான். “ஆம். ஆனால் மலைப்பாறைகளைப் போல் காலத்தில் மாறாத சான்றுநிலைகள் பிறிதில்லை” என்றார். கர்ணன் உரக்க நகைத்து “ஆகவேதான் நமது தெய்வங்களை பாறைகளிலிருந்து செதுக்குகிறார்கள் போலும்” என்றான். ஹரிதர் நகைப்பு நிறைந்த விழிகளால் துயின்று கொண்டிருந்த அவையை நோக்கி “இன்னும் வெளிப்படாத தெய்வங்கள் உறங்கும் கற்பாறைகளுக்கு வணக்கம்” என்றார்.
கர்ணன் நகைத்த ஒலி கேட்டு அவையில் பலர் திரும்பி அவனை நோக்கினர். அது அரசு அலுவல்கள் முடிந்து அவன் உளம் அவிழ்வதை குறிப்பதாக எடுத்துக் கொண்டனர். ஒருவரை ஒருவர் பார்த்தபடி சால்வைகளையும் காலணிகளையும் தேடினர். ஹரிதர் நிமித்திகரை நோக்கி கைகாட்ட அவன் தன் கைக்கோலுடன் அறிவிப்பு மேடையை நோக்கி சென்றான். சால்வைகளை சுற்றிக் கொண்டும் தலைப்பாகைகளை சீரமைத்துக்கொண்டும் ஒருவரை ஒருவர் செய்கைகளால் அறிவிப்பு செய்து உரையாடிக் கொண்டும் அவையினர் கிளம்பும் நிலைக்கு வந்து இருக்கை விட்டு முன் சாய்ந்தபோது அரசியர் மாடத்திலிருந்து இளைய அரசி சுப்ரியையின் செவிலியாகிய சரபை எழுந்து கைகூப்பி உரத்த குரலில் “குடிப்பேரவைக்கு பட்டத்தரசியின் செய்தி ஒன்றை அறிவிக்க என்னை பணித்திருக்கிறார்கள்” என்றாள்.
சுப்ரியை அன்று அவைக்கு வரவில்லை என்பதையும் அவள் கோல்சுமந்து செவிலிதான் வந்திருக்கிறாள் என்பதையும் முன்னரே அறிந்திருந்த அவையினர் மெல்லிய ஆர்வத்துடன் திரும்பிப் பார்த்தனர். ஹரிதர் புருவங்கள் சுருங்க கர்ணனை விழிதிருப்பி பார்த்தார். தான் ஒன்றும் அறிந்ததில்லை என்று விழிகளால் மறுமொழியுரைத்தான் கர்ணன். ஹரிதர் “நன்று செவிலியன்னையே. அச்செய்தியை அரசரிடம் சிற்றவையில் தெரிவிக்கலாம். இப்போது அவை முடியப்போகிறது” என்றார். சரபை “இல்லை, பேரவையில் மட்டுமே செய்தியை அறிவிக்கவேண்டும். அதுவும் இன்றே அறிவிக்கவேண்டும் என்று பட்டத்தரசியின் ஆணை” என்றாள்.
முதியவளான சரபை சுப்ரியையுடன் கலிங்கத்திலிருந்தே வந்த செவிலி. அவள் பிற செவிலியர் போல சூதர்குலத்தை சார்ந்தவள் அல்ல. ஷத்ரிய குலத்துப் பெண். கலிங்கத்து அரசரின் இளைய மனைவி ஒருத்தியில் பிறந்தவள். அவளுடைய குரலும் அவையில் அவள் நின்ற முறையும் அவள் சூதச் செவிலி அல்ல என்று காட்டுவதாக இருந்தன. கலிங்கத்துச் செம்பொன்னூல் பணி செய்த செம்பட்டாடையை மார்புக்குக் குறுக்காக அணிந்திருந்தாள். கழுத்தில் மணியாரமும் காதில் குழைகளும் ஒளிர கையில் பட்டத்தரசியின் கோலையும் ஏந்தியிருந்தாள்.
ஹரிதர் “தங்கள் விழைவும் அரசியின் ஆணையும் எங்கள் வணக்கத்துக்குரியவை செவிலியன்னையே. ஆனால் அவை தொடங்கும் முன்பு அரசருக்கும் அமைச்சருக்கும் முறைப்படி அறிவிக்கப்படாத செய்திகளை பின்னர் அவையில் எழுந்து சொல்லும் வழக்கம் இங்கில்லை” என்றார். கர்ணன் அவையினரின் விழிகளை பார்த்தான். அந்தச் சொல்லாடலாலேயே அவர்கள் விழிப்புகொண்டு அனைவரும் செவிலி சொல்லப்போவது என்னவென்பதை மேலும் செவிகூரத் தலைப்பட்டிருந்தனர். அது புதிய வம்பு ஒன்றை அடையாளம் கண்டுகொண்ட ஆர்வம் என்று அவர்களின் முகங்கள் காட்டின. இனி அவையில் அதை சொல்லாமலிருந்தால் சொல்லப்படுவதைவிட கீழான செய்திகள் அவர்களிடமிருந்து முளைத்தெழுந்து பரவும்.
கர்ணன் திரும்பி “அவர்கள் சொல்லட்டும் அமைச்சரே” என்றான். “ஆனால்…” என்று அவர் சொல்லத் தொடங்க அவன் மெல்லிய குரலில் “இவ்வறிவிப்புக்குப் பின் சொல்லாமல் இருப்பதில் பொருளே இல்லை” என்றான். “ஆம்” என்றபின் உடல் தளர ஹரிதர் “முறைமை இல்லையென்றாலும் அரசரின் ஆணைப்படி தாங்கள் இச்செய்தியை அவைக்கு உரைக்கலாம்” என்றார். ஆனால் அவரது நெற்றியில் சுருக்கங்கள் படிந்துவிட்டன.
செவிலி முன்னால் வந்து அவையை நோக்கி மீண்டும் ஒருமுறை தலைவணங்கி “அவைக்கு வணக்கம். அரசருக்கும் அமைச்சர்குலத்திற்கும் வணக்கம். கலிங்கத்து இளவரசியும் அங்க நாட்டுப் பட்டத்தரசியுமான சுப்ரியைதேவியின் நற்செய்தியை அறிவிக்கிறேன். கலிங்கத்து அரசி கருவுற்றிருக்கிறார். அங்கநாட்டு மணிமுடிக்கும் கோலுக்கும் உரிய மன்னன் விண்விட்டு மண்ணில் பார்த்திவப் பரமாணுவாக உயிர் கொண்டிருக்கிறார். அவர் புகழ் வாழ்க! அவர் ஆளப்போகும் இம்மண்ணின் வளமும் வெற்றியும் சிறக்க!” என்றாள். “ஓம், அவ்வாறே ஆகுக!” என்று முதல் வைதிகர் வாழ்த்த வைதிகர் அனைவரும் தங்கள் கைகளில் இருந்த மலர்களையும் மஞ்சள் அரிசியையும் அவள் மேல் தூவி வாழ்த்தினர்.
அவள் சொன்ன செய்தியை சற்று பிந்தியே புரிந்துகொண்ட குலத்தலைவர்கள் அனைவரும் ஆடையொலியும் அணியொலியும் சூழ கலைந்து எழுந்து நின்று கைகளையும் கோல்களையும் தூக்கி “சம்பாபுரியின் இளவரசருக்கு வாழ்த்துக்கள்! லோமபாதரின் அரியணை நிறைக்கும் அங்கருக்கு வாழ்த்துக்கள்! சூதர் குலத்தின் கொழுந்துக்கு வாழ்த்துக்கள்!” என்று கூவினர். நெடுநேரம் அவையே அந்த வாழ்த்தொலியால் அதிர்ந்து கொண்டிருந்தது.
கர்ணன் உடல் தளர்ந்தவன் போல அரியணையில் அமர்ந்திருந்தான். ஹரிதர் அவனை திரும்பி பார்த்துவிட்டு “அரசே” என்றார். கர்ணன் அவரை பொருளற்ற விழிகளால் பார்த்தான். “அரசே” என்றார் மீண்டும். கர்ணன் கண்விழித்தெழுந்து இரு கைகளையும் கூப்பி “நேற்றே இச்செய்தி என்னை வந்தடைந்திருந்தது. மருத்துவர்கள் உறுதி சொன்னபிறகு அவைக்கு அறிவிக்கலாம் என்றிருந்தேன். மருத்துவர் அளித்த உறுதிக்குப்பின் இன்று முறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. கலிங்கமன்னரின் மகளும் சம்பாபுரியின் பட்டத்தரசியுமான என் இளைய துணைவி சுப்ரியை கருவுற்றிருக்கிறாள். அது மைந்தன் எனவும் அவன் கோல்கொண்டு இந்நகரை ஆள்வான் எனவும் நிமித்திகர் உரைத்திருக்கிறார்கள்” என்றான்.
அவை களிகொண்டெழுந்து கூச்சலிட்டு கைவீசுவதைக் கண்டபோது அத்தனை பேரும் உள்ளூற எதிர் நோக்கியிருந்த செய்தி அதுவென்று அறிந்தான். அவன் முதல்துணைவி விருஷாலி கருக்கொண்டு மூத்த மைந்தனை பெற்றால் என்னாவது என்ற ஐயம் அவர்களுக்கு இருந்திருக்கலாம். அது நீங்கிய விடுதலையை ஒவ்வொருவரும் தங்கள் தனிப்பட்ட வெற்றி என்றே கொண்டனர். வைசியரும் ஷத்ரியரும் வைதிகரும் கொண்டாடுவது இயல்பே என்று நினைத்தான் ஆனால் சூத்திர குலங்கள்கூட அதையே எதிர்நோக்கி இருந்தன என்று தெரிந்தது. அவர்களுக்கும் சூதப்பெண் ஒருத்தி பெற்ற மகன் அரியணை அமர்வதில் உடன்பாடில்லாமல் இருந்தது போலும். ஒருவேளை குதிரைச்சூதர் மட்டும் சோர்வடையக்கூடும். அதுவும் ஐயத்திற்குரியதே. தங்களுள் ஒருவன் அரசனாக ஆனதை ஏற்கமுடியாத ஆழம் அவர்களிடமிருக்கலாம்.
கர்ணன் திரும்பி “அவைஎழுந்து நற்செய்தி அறிவித்த கலிங்கத்துச் செவிலி அன்னைக்கு அங்க மன்னனின் எளிய காணிக்கை” என்றபின் திரும்பி நோக்க மங்கலத்தாலமொன்றை நீட்டிய ஏவலனிடமிருந்து அதை வாங்கி அதில் தன் கணையாழியை உருவி வைத்து செவிலியிடம் நீட்டினான். அவைமுறைப்படி தலைவணங்கி அதைப் பெற்று “அரசருக்கு வணக்கம். அவைக்கு என் பணிவு. இச்செய்தி சொல்ல எனக்கு வாய்த்த நல்லூழை வணங்குகிறேன். அங்க நாட்டு முடியாளப் போகும் சக்ரவர்த்தி வருகையை நான் அறிவித்தேன் என்பதே என் குலத்திற்கு என்றும் பெருமையாக இருக்கட்டும்” என்றாள் செவிலி. “நன்று சூழ்க!” என்றான் கர்ணன்.
நிமித்திகன் அவை கலைவதை அறிவித்தபின்னரும் மேலும் ஏதேனும் நடக்கவேண்டும் என்பதைப்போல அவையினர் காத்து நின்றிருந்தனர். அவையினர் சிலர் வெளியேறுவதை கண்ணால் கண்டதும் தாங்களும் முந்திச்சென்று தங்களவர்களிடம் செய்தியறிவிக்கவேண்டும் என்று பதற்றம் கொண்டு முட்டிமோதினர். கூச்சலும் குழப்பமுமாக அவர்கள் வாயில்கள் முன் தேங்கினர். கர்ணன் மங்கல இசைச்சூதரும் சேடியரும் சிற்றமைச்சரும் சூழ அவை நீங்கினான்.
கர்ணனுக்குப் பின்னால் வந்த ஹரிதர் “தாங்கள் அறிந்ததல்ல என்று அறிவேன் அரசே. ஆனால் உணர்ந்திருக்கிறீர்களா?” என்றார். கர்ணன் திரும்பி நின்று “எதை?” என்றான். “இளைய அரசி கருவுற்றதை…” என்றார் ஹரிதர். கர்ணன் விழிகள் சற்று அசைய “என்னிடம் சொல்லவில்லை” என்றான். “எவ்வகையிலேனும் உணர்த்தியிருக்கிறார்களா?” என்றார் ஹரிதர் மேலும். அவர் சொல்லவருவதை உய்த்து “இல்லை” என்றான் கர்ணன். ஹரிதர் “ஏனெனில் நேற்று மாலை வரை அவர்களிடம் எந்த நோய்க்கூறும் இல்லை. இன்று உச்சிப்பொழுது வரை அவர்களை எந்த மருத்துவரும் சென்று பார்க்கவும் இல்லை. ஆனால் சென்ற ஒரு வாரமாகவே மூத்த அரசி நோயுற்று இருக்கிறார் என்று சொன்னார்கள். நானே அது கருவுறுதலாக இருக்கலாமென ஐயுற்றேன். நான் அனுப்பிய இரு மருத்துவச்சிகள் சென்று பார்த்தார்கள். இன்று காலை அவர்கள் அரசி கருவுற்றிருக்கும் செய்தியை உறுதிப்படுத்தியபின் என்னிடம் தெரிவித்தார்கள்” என்றார். கர்ணன் “ஆம், இன்று என்னிடம் அது சொல்லப்பட்டது” என்றான்.
“ஆகவே இன்று உச்சிப்பொழுதுக்குப்பின் இளைய அரசியின் இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது” என்றார் ஹரிதர். “மூத்த அரசியின் கருவுறுதல் அறிவிக்கப்படவில்லை என்று கண்டதும் முந்திக்கொண்டு இளையவர் கருவுற்றிருக்கிறார் என்று அரசவையில் அறிவித்ததினூடாக கலிங்கர் வென்றிருக்கிறார்கள். நம் அவையில் அதை அறிவித்ததன் வழியாக அது ஓர் உறுதிபடுத்தப்பட்ட பழைய செய்தி என்ற சித்திரத்தை நிலை நாட்டிவிட்டார்கள். உங்கள் ஒப்புதலையும் பெற்றுவிட்டனர்” என்றார் ஹரிதர். சோர்வுடன் “ஆம்” என்றான் கர்ணன்.
“இளைய அரசிக்கு தெரியும் இந்த அவை அதை எப்படி கொண்டாடுமென்று. இப்போது நாம் செய்வதற்கு ஒன்றுமில்லை” என்றபின் மாறிய விழிகளுடன் “இதை நான் என் கட்டற்ற கற்பனையால் சொல்லவில்லை அரசே. அரச குலத்தில் அவ்வாறு நிகழ்ந்ததற்கு பல கதைகள் உள்ளன” என்றார். “சொல்லுங்கள்” என்றான் கர்ணன். “மூத்த அரசியின் கருவை…” என்றபின் சொல்தேர்ந்து “நாம் அதை நன்கு பேண வேண்டியுள்ளது” என்றார். புரிந்து கொண்டு கர்ணன் “ஆம்” என்றான்.
“தாங்கள் இளைய அரசியிடம் பேசிப் பாருங்கள்” என்றபின் தலைவணங்கி ஹரிதர் திரும்பிச் சென்றார். அவரைச் சூழ்ந்து சென்ற சிற்றமைச்சர்களிடம் மெல்லிய குரலில் ஆணைகளை பிறப்பித்தார். கர்ணன் கைகளை பின்னுக்குக் கட்டி தலைகுனிந்து நடக்க சிவதர் அவனை தொடர்ந்தார். அவர்கள் இருவரும் பேச விழைவதை உணர்ந்து மங்கலச் சேடியர் முன்னால் செல்ல இசைச்சூதர் பின்னால் நகர்ந்தனர்.
சிவதர் “ஹரிதர் ஐயுற்றது உண்மை” என்றார். “இளைய அரசி கருவுற்றிருப்பதற்கு வாய்ப்பே இல்லை” என்றார். கர்ணன் “ஆனால் குழந்தை பிறக்க வேண்டுமல்லவா?” என்றான். “அதற்கு நூறு வழிகள் உள்ளன” என்றார் சிவதர். “இரண்டு மூன்று வாரங்கள் பிந்திகூட அரசி கருவுறலாம். குழந்தை பெறுவதிலும் பல மருத்துவ முறைகள் உள்ளன. ஓரிரு வாரங்கள் முன்னரே குழந்தையை பிறக்கச் செய்ய முடியும். ஒரு வேளை பல மாதங்கள் பிந்தி குழந்தை பிறந்தால்கூட கருவில் நெடுநாள் இருந்தார் என்று ஒரு கதை உருவாக்க முடியும். வெற்றிகொள் பெருவீரர்கள் கருவில் நீணாள் வாழ்ந்தவர்கள் என்று பல புராணங்கள் உரைக்கின்றன. அஸ்தினபுரியின் அரசர் கூட பதினாறு மாதம் மதங்க கர்ப்பமாக இருந்தார் என்பது சூதர்கள் கதை.”
கர்ணன் புன்னகை செய்தான். சிவதர் “இங்கு ஒவ்வொருவரும் ஒரு பேரரசர் பிறக்கப்போகிறார் என்ற ஏக்கம் கொண்டிருப்பதை அவர்கள் அறிந்துவிட்டார்கள். ஆகவே சூதர்கள் எந்தக் கதை சொன்னாலும் அதுவே நிலைநிற்கும்” என்றார். கர்ணன் “என்ன இது? எனக்கு ஒன்றுமே புரியவில்லை சிவதரே” என்றான். சிவதர் “நடந்தவை இரண்டு நிகழ்வுகள். இளையவரின் அரசியல்சூழ்ச்சியின் வெற்றி. அதைவிட மூத்தவரின் அரசியல் மூடத்தனம்” என்றார்.
கர்ணன் “என்ன சொல்கிறீர்கள்?” என்றான். சிவதர் “ஒருவர் கருவுறாமலே கருவுற்றேன் என்று அறிவிக்கிறார். ஒருவர் கருவுற்றதை தனக்குத்தானே பொத்தி வைத்து போர்வையை இழுத்து மூடி சுருண்டு படுத்திருக்கிறார். விந்தைதான்” என்றார். புன்னகையுடன் கர்ணன் “நீரளவே ஆகுமாம் நீராம்பல் என்கிறீர்கள் அல்லவா?” என்றான். “ஆம். ஆனால் அது குலத்திற்கல்ல மனிதர்களுக்கு” என்றார் சிவதர்.
இடைநாழியைக் கடந்து தன் தனியறைக்குள் வந்ததும் கர்ணன் கைகளைத்தூக்கி உடல் நெளித்து சோம்பல் முறித்தான். “இன்று கொற்றவைப் பூசனை உண்டல்லவா?” என்றான். “ஆம். ஆனால் அதற்கு இளைய அரசி வரமுடியாது. அவர் கருவுற்றிருக்கிறார் என்று அவையில் அறிவித்துவிட்டதனால் மருத்துவச்சிகளின் அருகிலேயே இருந்தாக வேண்டியுள்ளது” என்று சிவதர் அவன் சால்வையை களைந்தபடி சொன்னார். “ஆம்” என்றபின் கர்ணன் “நான் சற்று ஓய்வெடுக்க வேண்டியுள்ளது” என்றான்.
அவன் சொல்லப்போவதை உடனே உய்த்துணர்ந்த சிவதர் “தாங்கள் இப்போது மதுவருந்தினால் எழுந்து நீராடி கொற்றவை பூசனைக்கு செல்ல இயலாது” என்றார். “ஆம். ஆனால்…” என்று சொல்ல சிவதர் “இன்று முழுக்க மதுவருந்தி நாளை கழித்திருக்கிறீர்கள். அரியணையிலேயே இருமுறை தூங்கினீர்கள்” என்றார். சிரித்தபடி “அரியணையில் அமர்ந்து உறங்குவது பாரதவர்ஷமெங்கும் ஷத்ரியர்களின் இயல்பல்லவா?” என்றான் கர்ணன். “ஆனால் அது சிற்றரசர்களுக்கு. துயில் அரசர்களிடம் வெவ்வேறு வகையில் செயல்படுகிறது. இரவெல்லாம் களியாடியதனால் பேரரசர்கள் அரியணையில் துயில்கிறார்கள். பேரரசுகளை எண்ணி அஞ்சி துயில் நீத்ததால் சிற்றரசர்கள் அரியணையில் துயில்கிறார்கள்” என்றார் சிவதர்.
உரக்க நகைத்தபடி “நாம் இருவகையிலும் சேர்வோம். ஆகவே அரியணையில் துயில முற்றுரிமை உள்ளது” என்றபடி கர்ணன் பீடத்தில் அமர்ந்து கால்களை நீட்டிக் கொண்டான். “தாங்கள் இளைய அரசியை சென்று பார்க்க வேண்டும்” என்றார் சிவதர். “ஆம்” என்றான் கர்ணன். “அவர் உண்மையிலேயே கருவுற்றிருக்கிறாரா என்று பாருங்கள்” என்றார் சிவதர். “அதை எப்படி அறிவது? அவள் சொல்வதல்லவா அது?” என்றான். பின்பு ஐயத்துடன் “வேண்டுமென்றால் அந்த மருத்துவச்சியையும் செவிலியையும் வரவழைத்து உசாவலாம்” என இழுத்தான்.
சிவதர் கையசைத்து “அது இயல்வதல்ல. சம்பாபுரிக்குள் இருந்தாலும் கலிங்க அரசியின் மாளிகை கலிங்கத்தின் ஆட்சியிலேயே உள்ளது. அங்குள்ள காவலரும் மருத்துவரும் செவிலியரும் சேடியரும் அனைவருமே கலிங்க நாட்டவர். நமது சொல் அங்கு ஆள்வதில்லை” என்றார். சினத்துடன் “நமது வாள் அங்கு ஆளும். வரச் சொல்லும் அவர்களை” என்றான் கர்ணன். “உயிர் துறப்பது அவர்களுக்கு எளிது. நமக்கு பழி சேரும்” என்றார் சிவதர். கர்ணன் சினத்துடன் கையை வீசினான்.
“சென்று அவரை பாருங்கள். கருவுற்றிருக்கும் பெண்கள் சற்று குருதி வெளிறி இருப்பார்கள்” என்றார் சிவதர். “நான் கருவுற்ற எவரையும் பார்த்ததில்லையே” என்றான் கர்ணன். சிவதர் “ஆம், அதை முதிய ஆண்களோ பெண்களோதான் உணர முடியும். ஆனால் அரசியிடம் உரையாடுகையில் தங்கள் விழிகளுக்கு அவர் விழிகள் ஒன்றை தெளிவுறச்சொல்லும், அவர் பொய்யுரைக்கிறாரா மெய் கொண்டிருக்கிறாரா என்று” என்றார் சிவதர். “ஆம். அதை என்னால் அறிய முடியும். ஆனால் அறிந்து என்ன செய்வது?” என்றான் கர்ணன். “ஆம். நாம் இனி ஒன்றும் செய்ய முடியாது.” “ஏன் நம்மால் மூத்தவளும் கருவுற்றிருக்கும் செய்தியை அவையில் அறிவிக்க முடியவில்லை?” என்றான் கர்ணன்.
“அறிவித்திருக்க முடியாது” என்றார் சிவதர். “ஏனென்றால் அவை கொந்தளித்துக் கொண்டிருந்தது. கூச்சலும் சிரிப்புமாக அவர்கள் முன்னரே கலையத்தொடங்கிவிட்டிருந்தனர். நன்கு திட்டமிட்டே அவை முடியும்போது அனைவரும் கலையும் தருவாயில் எழுந்து செவிலி அதை சொல்ல வேண்டுமென்று இளைய அரசியார் ஆணையிட்டு அனுப்பியிருக்கிறார்கள்.”
கர்ணன் பெருமூச்சுடன், “முள் முனையில் மூன்று குளம் என்றொரு பாடல் உண்டு. உண்மைதான்” என்றான். சிவதர் “முள் முனை என்பது காலத்தின் ஒரு கணம். இத்தகைய தருணங்களில் நாம் செய்வதற்கு ஒன்றே உள்ளது. விரையும் காலத்தை பற்றிக்கொண்டு நாமும் அத்தருணத்தை கடந்து செல்வது. எப்படி இருப்பினும் நாளை விடியும். நாளை மறுநாள் மீண்டும் விடியும். அதற்குள் இவை அனைத்திற்கும் ஒரு விடையை காலமும் சூழலுமே உருவாக்கிவிடும். பொறுத்திருப்போம்” என்றார்.
“சிவதரே, என் கண் முன்னே என் மைந்தர் மணிமுடிக்கென போரிடுவதை காண வேண்டுமா என்ன? இப்பிறப்பில் எனக்குக் காத்திருக்கும் இறுதி இழிவு அதுதானா?” என்றான் கர்ணன். சிவதர் “அவ்வண்ணமெனில் யார் என்ன செய்ய முடியும்? அங்கே அஸ்தினபுரியில் பீஷ்மர் இருக்கிறார். அவர் காலடியிலேயே அவரது தந்தையின் நாடு இரண்டாகப் பிளந்தது” என்றார். கர்ணன் “ஆம். இன்று அவையிலும் இருமுறை அவர் நினைவு வந்தது. எவ்வகையிலோ அவர் என்னைப்போல் இருக்கிறார். எங்களுக்குள் பொதுவாக ஏதோ உள்ளது” என்றான்.
“அதை அவர் அறிவார் போலும். ஆகவேதான் அவர் உங்களை இழிவுபடுத்துகிறார்” என்றார் சிவதர். “என்னை அவர் இழிவுபடுத்துவதில்லை” என்றான் கர்ணன். சிவதர் “அவையில் உங்களை சிறுமை செய்யும் சொற்களை எப்போதும் அவரே முதலில் சொல்கிறார் என்று அறியாத எவரும் இல்லை. சூதர் பாடல்களில் அது வந்துவிட்டது” என்றார். “ஆம். ஆனால் அவையில் பிற குரல் ஒன்று எழுவதற்கு முன்னே தான் அச்சொற்களை சொல்ல வேண்டுமென்று அவர் எண்ணுவதுபோல் தோன்றும். அவர் சொல்லெடுத்ததுமே சினத்துடன் எழுந்து சுயோதனன் அதை மறுத்து பெருஞ்சொல் உரைத்தபின் அவையில் எவரும் என்னை அவ்வண்ணம் எண்ணக்கூட துணியமாட்டார்கள்” என்றான்.
சிவதர் “அவர் உள்ளூர உங்களுடன் நெருங்கியிருக்கிறார். எவ்வகையிலோ உங்களை விட்டு விலக்கி தன்னை நிறுத்த விழைகிறார்” என்றார். கர்ணன் “இல்லை. நான் விரியக்கூடாதென்று நினைக்கிறார். என் இடத்தை மேலும் குறுக்க எண்ணுகிறார். ஏனெனில் நான் யாரென அவருக்குத் தெரியும்” என்றான். நீள்மூச்சுடன் “அவர் அனைத்தையும் பொத்திப்பாதுகாக்க எண்ணும் முதுமகன்” என்றான்.
கூரிய வாள்நுனியை கடந்து செல்வது போல அத்தருணத்தை சிவதர் கடந்து சென்று “அரசே, இன்று சிறிய இளவரசியிடம் பேசும்போது இந்த ஐயங்களையும் வினாக்களையும் அவர்முன் வைக்க வேண்டியதில்லை. கருவுற்ற மனைவியை காணப்போகும் கணவனாகவே இருங்கள். உவகையையும் நெகிழ்வையுமே வெளிப்படுத்துங்கள்” என்றார். “ஆம். அதைத்தான் செய்ய வேண்டும்” என்றான் கர்ணன். “அவள் கருவுறவில்லை என்றாலும் கருவுற்றதாக எண்ணிக் கொள்வது எனக்கு உவகை அளிக்கிறது.”
“அச்சொல்லாடல் நடுவே மூத்த அரசியும் கருவுற்றிருப்பதையும் இரு கருவுறுதலும் ஒரே சமயம் நிகழ்ந்தது மூதாதையரின் நல்லூழ் என்று நீங்கள் எண்ணுவதையும் குறிப்பிடுங்கள்” என்றார் சிவதர். “இதெல்லாம் எதற்கு?” என்றான் கர்ணன். “அரசர்கள் முடிவுறா நாடகத்தின் நடிகர்கள். எனவே அரசரைச் சூழ்ந்துள்ள அனைவரும் அந்நாடகத்தின் நடிகர்களே” என்றார் சிவதர். “அவளுக்கு என்னதான் வேண்டும்?” என்றான் கர்ணன். “சம்பாபுரியின் மணிமுடி. வேறென்ன?” என்றார் சிவதர். “மூத்தவளுக்கும் அதுவே. ஏன் சிவதரே, என்னை விழையும் எவரும் இங்கில்லையா?” என்றான்.
சிவதர் புன்னகையுடன் அவ்வினாவை கடந்து சென்று “இன்று நீங்கள் நூறு வினாக்களை எதிர்கொண்டுவிட்டீர்கள். அவ்வினாக்கள் ஒவ்வொன்றையும் ஒன்றுடன் ஒன்று மோதவிட்டு பிறிதோரிடத்தில் இருந்து வேடிக்கை பாருங்கள்” என்றார். “அதற்கு உகந்தவழி யவன மது அருந்துவதே” என்றான் கர்ணன். சிரித்தபடி “கொற்றவை பூசனை முடிந்து வந்தபிறகு மதுவாடலாம். இன்றிரவு மதுவின்றி உங்களால் உறங்கமுடியும் என்று நானும் எண்ணவில்லை. இளைய அரசிக்கு நான் செய்தி அனுப்பிவைக்கிறேன்” என்று சொல்லி தலைவணங்கி வெளியேறினார் சிவதர்.
வெண்முரசு அனைத்து விவாதங்களும்
மகாபாரத அரசியல் பின்னணி வாசிப்புக்காக