விழா – மணிமாறன்

ட்

இரு குரல்கள்

 

அனைவருக்குமென் வணக்கம்

 

கடந்த ஓரிரு வாரங்களாக தேவதச்சனின் சொற்களால் விண்ணில் பறந்தலைந்து கொண்டிருந்த மனது, விருது விழாவின் முந்தைய நாள் மாலையில் டி’ க்ருஸுடனான கலந்துரையாடலில் வெளிப்பட்ட அவரது செறிவான பேச்சால், கடலாழத்தில் மூழ்கி அலையத் துவங்கியது.     நேர்மையும், பாசாங்கற்ற ஆதங்கமும் கொண்ட ஆத்மார்த்தமான பேச்சது. நிலம் சார்ந்த புரிதலே சிறிதென்றிருக்கும் போது, இல்லாத நெய்தல் சார்ந்த புரிதலை என்னுள் விதைத்துச் சென்றது. மீனவர் பிரச்சினையை வெறும் செய்தியாகவும் இலங்கை கடற்படையின் தாக்குதல்களை வெறும் புள்ளி விபரமாகவும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த எனக்கு மீனவர்களின் மாறாத மனநிலையும், வாழ்க்கை முறைகளும், மீன்பிடி தொழிலின் பின்னுள்ள உழைப்பும், விதிமீறல்களும், அகில இந்திய அளவிலான சட்ட எதிர்ப்புக் குற்றச்செயல்களும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.   இவையனைத்திற்கும் மேலாக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்களை தந்தபடியே இருக்கும் கடலன்னையின் கருணை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. தூவெண்கடலலை கரும்பாறையில் மோதிச்சிதறும் ஒலியில் இன்றைய மீனவர்களின் வாழ்வியலை எதிரொலிக்கும் குரலாக இன்னமும் என் செவியில் அறைந்து கொண்டிருக்கிறது அவரது பேச்சு.  கேட்கும் யாவரின் செவியையும் மனதையும் தன்பால் ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் தன்மை கொண்டது.

 

எந்த ஊர் என்றவனே என்ற பாடல் ஏற்கனவே பலமுறை கேட்கப்பட்ட பாடலாக இருந்த போதும் இரவுணவுக்குப் பின்னான இசை வேளையில் நண்பர் ஆனந்தின் குரலில் கேட்ட பொழுது அலாதியாகப்பட்டது.  அத்தருணத்தில் அவருடன் ஏற்பட்ட நெருக்கம் சொல்லில் அடங்காதது.  காதலில் ஏற்பட்ட சோகம் என்பதையும் மீறி வாழ்க்கையின் வளர்ச்சி படிநிலைகளையும் உணர்ச்சி படிநிலைகளையும் விவரித்து ஒரு தத்துவப் பார்வையை முன்வைக்கும் அதியற்புத பாடல். அப்பாடலை காட்சி வடிவமாகவும் பார்த்துவிட்ட காரணத்தால் பி.பி.எஸ்ஸின் குரல் எஸ்.எஸ்.ஆரையே நினைவு படுத்துகிறது. நண்பர் ஆனந்தின் மெல்லமைதிப்படுத்தும் தனித்துவம் நிரம்பிய குரல் அதிலிருந்து முற்றிலும் மீட்டது. பலப்பாடல்கள் பாடப்பட்ட போதும் என் வரையில் அன்றிரவிற்கான சிறப்புக்கூறு இந்தப் பாடலே.

 

மிக்க அன்புடன்

மணிமாறன்.

முந்தைய கட்டுரைவிஷ்ணுபுரம்விழா -சுனில் கிருஷ்ணன்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 11