கடிதங்கள்

அன்புள்ள நவீன்

ஊர்புகுதல் நான் எழுதிய அசோகவனம் நாவலின் தொடக்க அத்தியாயம். அதுவே ஒரு சிறுகதை. ஆனால் மூன்றாம் பகுதி அழிந்துவிட்டது. மலேசியாவில் இருந்தமையால் என்னால் அதை மறுபடியும் பிரசுரிக்க முடியவில்லை. நாளை வெளிவரும்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,
ஊர்புகுதலில் காட்சி வருணனைகள் அருமையாக உள்ளன. உரையாடல்கள் சில இடங்களில் வாய்விட்டு சிரிக்க வைத்தன. கதையின் முடிச்சிற்காக காத்திருக்கிறேன்.
நவீன்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு, வணக்கம்.

இரண்டாம் முறையாகத் தங்களை மலேசியாவில் சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி.
இம்முறை ஒரே நாளில் இருமுறை தங்களின் உரையைக் கேட்கும் வாய்ப்பு கிடைத்தது. சிறுகதைப் பட்டறையில் பலர் சொல்லத் தவறிய பல அடிப்படை நுணுக்கங்களைத் தாங்கள் தந்தது அனைவருக்கும் நிறைவாக இருந்தது.

மாலை வல்லினம் விழாவில் நாவல் குறித்தும் புதிய தகவல்களைப் பெற்றோம். ‘போரும் வாழ்வும்’ நாவலுக்குள் இத்தனைச் செய்திகளா என வியந்தோம். இந்த இரு நிகழ்வுகள் பற்றிய பதிவை என் வலைத்தளத்தில் பாருங்கள். மீண்டும் தங்களைச் சந்திக்கும் வாய்ப்புக்குக் காத்திருக்கிறேன். எத்தனையோ இலக்கிய உரைகள் கேட்டிருக்கிறேன். ஆனால், தங்களின் சிந்தனை என் நெஞ்சுக்கு நெருக்கமாக இருப்பதை உணர்கிறேன்.

அன்புடன்,

ந. பச்சைபாலன், மலேசியா
http://www.patchaibalan.blogspot.com

அன்புள்ள பச்சைபாலன்

நன்றி

மலேசிய தினங்கள் உற்சாகமானவையாக இருந்தன. சமீபத்தில் இந்த அளவு ஊக்கமாக நானும் பேசியதில்லை. கேட்கும் காதுகள் இருந்தன

ஜெ

மலேசியாவில் வல்லினம் ஏற்பாட்டில் நீங்கள் நாவல் பற்றி ஆற்றிய உரை மிக நன்று.

அதிலும் எழுத்தாளர்களுக்கு இருக்க வேண்டிய மூன்று தகுதிகள், இலக்கியத்திற்கான முக்கிய இலக்கணங்கள் என்பதும், அதை போரும் அமைதியும் என்ற நாவலின் மேற்கோள்களுடன் விளக்கியதும், ஒற்றைவரையில் அமைந்த வாழ்வின் பல உண்ணதமான தத்துவங்களை அந்த நாவலிலிருந்து மேற்கோள் காட்டியுதும். நீண்ட நாட்களுக்கு பிறகு அனுபவித்த சிறந்த உரை. அதை அப்படியே நினைவு கூர்ந்து உங்கள் வலையில் எழுதினால் (வரிக்கு வரிக்கு ஞாபகப்படுத்தி எழுதினால்) மிகச் சிறப்பாக இருக்கும். சிறந்த இலக்கியப் பதிவாகவும் இருக்கும்.

நன்றி

அகிலன்

அன்புள்ள அகிலன்

கடைசிநாள் விழாவில் பேச நான் சிற்றிதழ் இயக்கம் பற்றி ஒரு பேச்சு தயாரித்திருந்தேன். கடைசித்தருணத்தில் நாவல் பற்றி பேசப்போகிறேன் என ஏற்கனவே நாளிதழ்களில் அறிவித்திருப்பதாக நவீன் சொன்னார். ஆகவே தயாரிப்பில்லாமல் பேசினேன். எழுத்துவடிவம் கைவசம் இல்லை. அதுவரை 7 கூட்டங்கள் தொடர்ச்சியாக பேசியமையால் ஏற்பட்ட விசையால்தான் பேச்சு நன்றாக அமைந்தது. பொதுவாக எழுதாத பேச்சு நன்றாகவருவதில்லை எனக்கு

தட்டாச்சிட முயல்கிறேன்
ஜெ

முந்தைய கட்டுரைபரப்பிசையை விமரிசித்தல் குறித்து…
அடுத்த கட்டுரைநவீன இலக்கியம், கடிதங்கள்