விழா பதிவுகள் 3

 

1
அன்பின் ஜெ எம்.,

மனம் நிரம்பித்தளும்பிக்கொண்டிருக்கிறது.

இன்னும் எப்படிச்சொல்வதென்று தெரியவில்லை.

ஒவ்வொரு முறை விருது சார்ந்த இலக்கியக்கூடல்களின்போதும்,முகாம் சந்திப்புக்களின்போதும் ஏற்படும் அதே மன நெகிழ்ச்சிதான்…

பலப்பல ஊர்கள்…நாடுகள் எனப் பல்வேறுதிசைகளிலிருந்து வரும் நம் நண்பர்கள், பல நாட்கள், ஏன் பல ஆண்டு இடைவெளிக்குப்பின் பார்த்தாலும் கூட ஏதோ முதல் நாள் மாலைதான் சந்தித்துப்பிரிந்தது போல் இயல்பாக உரையாட ஆரம்பித்து விடும் ஆனந்தம்,,,,புதிதாக வந்தவர்கள் கூட உடனே ஒட்டிப்பழகத் தொடங்கி விடும் நேசம்…..இது நம் குடும்பம்..இது நம் கூட்டம் என்று நெஞ்சு விம்மிதம் கொள்ளும் அற்புதக்கணங்கள் இவை.

1

படைப்பாளிகளுடனான உரையாடல்களின்போது ஒரு வார்த்தையைக்கூடத் தவற விட்டு விடக்கூடாது என்ற கூர்ந்த கவனத்துடன் இளைஞர்,நடு வயதினர்,மூத்த குடிமக்கள்..[இப்போது பதின்பருவத்தினரும் கூட] எனக்கூட்டம் முழுவதுமே ஏகாக்கிரகசிந்தையோடு கேட்கும் அழகு….பார்க்கத் திகட்டாதது…வேறெங்கும் காணக்கிடைக்காதது.

உங்கள் வாசகர்களாக மட்டுமே சுருக்கிக்கொள்ளாமல் இலக்கியப்பன்முகப்பார்வைகளை அறிமுகம் கொள்ளத்துடிக்கும் ஒரு மிகப்பெரிய இலக்கிய இயக்கத்தை -கல்விக்கூடங்கள் செய்ய வேண்டியதும்,செய்யத் தவறியதுமான ஒரு செயல்பாட்டை விஷ்ணுபுர இலக்கிய வட்டம் முன்னெடுத்து வருவதற்கு மூலமுதலான தங்களுக்கு என் நன்றியும் வந்தனமும்..

விஷ்ணுபுர நினைவுகளுடன்,,

எம் ஏ சுசீலா

எம் ஏ சுசீலாவின் வலைத்தளப்பதிவு

அ ன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

போன வருடமே விஷ்ணுபுரம் விருது விழாவிற்கு வர விருப்பம் இருந்தும், கடைசி நேரத்தில் பஸ், ரெயிலில் சீட்டு கிடைக்காததால் வாய்ப்பு நழுவ விட்டதால், இந்த முறை முதலிலேயே பதிவு செய்து வந்து விட்டேன்.. எல்லா அமர்வுகளிலும் வர இயலவில்லை.. செந்தில் குமார் உரையாடல், ஜோ டி க்ரூஸ் உரையாடல் இரண்டையும் மிகவும் ரசித்தேன்.. ஜோ டி க்ரூஸின் மனம் விட்ட பேச்சும், உரையாடலின் போது உங்கள் விளக்கங்களும் பிரமாதமாக இருந்தது.. 5, 6 மணி நேரம் போனதே தெரியவில்லை..
விழாவில் காட்டப்பட்ட ஆவணப்படத்தை பார்த்து, கோவில்பட்டியில் உருவான தேவதச்சனின் எழுத்தாளர்கள் நட்பு, அத்தகைய உலகத்தை எண்ணும் போது , சென்னை போன்ற நகரங்களில் , வளர்ந்த என்னை போன்றோருக்கு ஒரு ஏக்கம், பொறாமை கண்டிப்பாக வரும்!!! எழுத்தாளர் ஆகப்போவது இல்லை என்றாலும், இப்படிப்பட்ட சூழலுடன் தொடர்பு இருப்பதே ஒரு அதிருஷ்டம் தான்..!!

 

1
பள்ளியில் உருப்போட்ட, செய்யுள் வடிவ கவிதைகளும், அவற்றின் கூறுகளான அணிகள், எதுகை- மோனை மற்றும் இன்ன பிற பாகுபாடுகள் தான் கவிதைகளின் அத்தியாவசியமான தேவைகள் என்ற எண்ணம் எப்போதும் இருந்ததால், நவீன, புதுக்கவிதைகளுக்குள் செல்லவே முடிந்ததில்லை. பின் நாளில் இந்த கவிதைகளும் கவிதைகளாக ஒத்துக்கொள்ளப்பட்டவை தான் என்றறிந்த பின்னரும், அவை ஒரு நமக்கு புரியாத மொழி வெளிப்பாடு என்று ஒதுங்கியே இருந்து விட்டேன். என்றாலும் அவ்வப்போது “அட!!” என்று ஆச்சரியப்பட வைத்த கவிதைகளை படிக்கும் போது, நம் ரசனை சரிதானா? ஒரு வேளை இப்படி பட்ட வாசிப்பு தவறோ ? என்ற சந்தேகம் எப்போதும் உண்டு…

 

1
தேவதச்சனை பற்றிய உங்கள் கட்டுரைகளில், நவீன கவிதைகளின் சாரம்சம், தத்துவம், தனிமனித வாழ்க்கை தேடல், தரிசனம், மரபு கவிதைக்கும், நவீனக்கவிதைக்கும் உள்ள வேறுபாடு ஆகியவற்றை அருமையாக விளக்கி, தேவதச்சன் தன் கவிதைகளில் அதையெல்லாம் எப்படி வெளிப்படுத்துகிறார், அவரது கவிதைகளில் தெரியும் பரிணாமம், அதற்கான காரணங்களை, தேவதச்சனின் கல்வியில் இருந்தும், அவரது அனுபவங்களில் இருந்தும் மிக நேர்த்தியாக விளக்கியிருந்தீர்கள். ஆறு பகுதிகளாக வந்த கட்டுரை தொடரை படித்து விட்டு, தேவதச்சன் கவிதைகளை எதிர் கொள்ளும் போது, அவற்றின் அனுபவத்திற்க்குள் செல்ல முடிவதோடு மட்டும் அல்லாது, இது நாள் வரை நவீன கவிதை பற்றி கொண்டிருந்த பார்வை மாறி மனதில் ஏதும் சந்தேகம் இல்லாமல் கவிதைகளை அணுக முடிகிறது..

 

1
அடுத்த விழாவிற்க்கு, இன்னும் சரியாக ப்ளான் செய்து, எல்லா உரையாடல்களிலும் கலந்து கொள்ளுமாறு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் மீண்டும் மண் வந்து இறங்கினேன் :-) ..
அ மாதவனுக்கு, பூமணிக்கு என்று விஷ்ணுபுரம் விருது பெற்றோருக்கு சாஹித்திய விருது கிடைப்பது, இந்த விருதின் தரத்தையும், தேர்வு விதிகளின் உயர் விழுமியங்களையும் காட்டுகின்றன.. ஜோ டி க்ரூஸ் முந்தைய நாள் உரையாடலுக்கு வரவழைத்ததற்க்கு நன்றி கூறும் போது கூறியது போல், விஷ்ணுபுரம் வட்டம், மத, அரசியல் , சாதி ஆகிய பகுப்புக்களை தாண்டி ஒரு சிறந்த இலக்கிய கூட்டமாக முன்னோடி எழுத்தாளர்கள் கூறுவதை கேட்கையில் சந்தோஷமாக இருக்கிறது.

 

1
இந்த விழாவை மிக சிறப்பாக நடத்தி முடித்த நண்பர்களுக்கு வாழ்த்துக்களுடன், நாஞ்சில் நாடன் விழாவில் கூறியது போல், இந்த விருது, சாஹித்திய, ஆஸ்கர், நோபல் விருதுகள் அளவு மதிப்பு கூடவும் விஷ்ணுபுரம் இலக்கிய கூட்ட நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்..

அன்புடன்
வெண்ணி


அனைவருக்குமென் வணக்கம்

கடந்த ஓரிரு வாரங்களாக தேவதச்சனின் சொற்களால் விண்ணில் பறந்தலைந்து கொண்டிருந்த மனது, விருது விழாவின் முந்தைய நாள் மாலையில் டி’ க்ருஸுடனான கலந்துரையாடலில் வெளிப்பட்ட அவரது செறிவான பேச்சால், கடலாழத்தில் மூழ்கி அலையத் துவங்கியது. நேர்மையும், பாசாங்கற்ற ஆதங்கமும் கொண்ட ஆத்மார்த்தமான பேச்சது.

நிலம் சார்ந்த புரிதலே சிறிதென்றிருக்கும் போது, இல்லாத நெய்தல் சார்ந்த புரிதலை என்னுள் விதைத்துச் சென்றது. மீனவர் பிரச்சினையை வெறும் செய்தியாகவும் இலங்கை கடற்படையின் தாக்குதல்களை வெறும் புள்ளி விபரமாகவும் தெரிந்து வைத்துக் கொண்டிருந்த எனக்கு மீனவர்களின் மாறாத மனநிலையும், வாழ்க்கை முறைகளும், மீன்பிடி தொழிலின் பின்னுள்ள உழைப்பும், விதிமீறல்களும், அகில இந்திய அளவிலான சட்ட எதிர்ப்புக் குற்றச்செயல்களும் அதிர்ச்சிக்குள்ளாக்கின.

1

இவையனைத்திற்கும் மேலாக மீனவர்களின் வாழ்வாதாரமான மீன்களை தந்தபடியே இருக்கும் கடலன்னையின் கருணை ஆச்சரியத்திற்குள்ளாக்கியது. தூவெண்கடலலை கரும்பாறையில் மோதிச்சிதறும் ஒலியில் இன்றைய மீனவர்களின் வாழ்வியலை எதிரொலிக்கும் குரலாக இன்னமும் என் செவியில் அறைந்து கொண்டிருக்கிறது அவரது பேச்சு. கேட்கும் யாவரின் செவியையும் மனதையும் தன்பால் ஒட்டுமொத்தமாக ஈர்க்கும் தன்மை கொண்டது.

 

1
எந்த ஊர் என்றவனே என்ற பாடல் ஏற்கனவே பலமுறை கேட்கப்பட்ட பாடலாக இருந்த போதும் இரவுணவுக்குப் பின்னான இசை வேளையில் நண்பர் ஆனந்தின் குரலில் கேட்ட பொழுது அலாதியாகப்பட்டது. அத்தருணத்தில் அவருடன் ஏற்பட்ட நெருக்கம் சொல்லில் அடங்காதது. காதலில் ஏற்பட்ட சோகம் என்பதையும் மீறி வாழ்க்கையின் வளர்ச்சி படிநிலைகளையும் உணர்ச்சி படிநிலைகளையும் விவரித்து ஒரு தத்துவப் பார்வையை முன்வைக்கும் அதியற்புத பாடல்.

1

 

அப்பாடலை காட்சி வடிவமாகவும் பார்த்துவிட்ட காரணத்தால் பி.பி.எஸ்ஸின் குரல் எஸ்.எஸ்.ஆரையே நினைவு படுத்துகிறது. நண்பர் ஆனந்தின் மெல்லமைதிப்படுத்தும் தனித்துவம் நிரம்பிய குரல் அதிலிருந்து முற்றிலும் மீட்டது. பலப்பாடல்கள் பாடப்பட்ட போதும் என் வரையில் அன்றிரவிற்கான சிறப்புக்கூறு இந்தப் பாடலே.
மிக்க அன்புடன
மணிமாறன்.

 

விஷ்ணுபுரம் விழா புகைப்படங்கள் – 2015

மேலும் படங்கள்

 

முந்தைய கட்டுரைவிழா- கடிதங்கள் 2
அடுத்த கட்டுரைவிழா 2015 – விஷ்ணுபுரம் விருது