நவீன இலக்கியம், கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

இந்த கடிதத்தை தனிப்பட்ட முறையில் எழுதுகிறேன். நீங்கள் ஒரு கல்லூரியில் ஆற்றிய உரையைக் வாசிக்க நேர்ந்தது. பெரும் ஏமாற்றம் அடைந்தேன். சுவாரசியமான உரை. ஆனால் ஒரு கல்லூரியில் சுவாரசியமான உரைகளுக்கு என்னவேலை? நீங்கள் இன்றைய சிந்தனைகளை அல்லவா அங்கே முன்வைத்திருக்க வேண்டும்? நீங்கள் அதற்கு தகுதியானவர். நாமிருவரும் கடந்த இரு வருடங்களாக பேசிவருவதில் இருந்து நான் அதை நன்கறிவேன். பின் நவீனத்துவம், நவசரித்திரவாதம், வாசகஎதிர்வினைக்கோட்பாடு உரைமாற்றாடல் விமர்சனம் என இன்று நவீன இலக்கிய சிந்தனைகளை நீங்கள் சொல்லியிருக்க வேண்டும். நீங்கள் அவற்றைப்பற்றி எனக்கெழுதிய கடிதங்களையேகூட பேசியிருக்கலாம். நீங்களும் ஒரு பிரபல கேளிக்கையாளராக ஆக நினைக்கிறீர்களா?

அன்புடன்
ராம்

அன்புள்ள ராம்,

ஒரு அவையை உத்தேசித்தே நாம் பேச முடியும். தரமான பார்வையாளர்கள் சிலர் இருந்த அவைகளிலேயே கூட நான் குறள் குறித்தும் இந்தியசிந்தனை மரபைப்பற்றிய்ம் ஆழமான கட்டுரைகளை முன்வைத்திருக்கிறேன். அதுவழியாகவே நாம் அறிமுகமும் ஆனோம். ஆனால் நம் தமிழ் கல்லூரிகளின் தளம் இதுவல்ல. நீங்கள் அந்த அவையை பார்க்க வேஎண்டும். ஓர் அமெரிக்க பல்கலையில் அமர்ந்துகொண்டு நீங்கள் எதையும் சொல்லலாம்.இங்கே அந்த பெண்குழந்தைகள் ஒன்றுக்குமே அறிமுகமாகாதவர்கள்., வாழ்நாளில் ஒரு நூலைக்கூட வாசிக்காதவர்களே பெரும்பான்மை. முகங்களில் பேதமை வழிந்தது. பேராசிரிய முகங்களில் இன்னமும் பேதமை.

அங்கே செய்யமுடிந்தது சில கதைகளைச் சொல்லி இலக்கியத்தின் இன்றைய இரு போக்குகளை எளிமையாக அறிமுகம் செய்து சிலபெயர்களை குரிப்பிடுவது மட்டுமே. ஒரு பத்து பெண்கள் வாசித்தால்கூட நல்லது. ஆனால் அதுகூட சந்தேகமே. பேச்சு முடிந்ததுமே பேராசிரியைகள் கேட்ட கேள்விகளில் இருந்து அவர்களுக்கே ஒன்றும் புரியவில்லை என்று தெரிந்தது

நீங்கள் வசதியாக இருந்துகொண்டு பேசுகிறீர்கள். எவ்வ்வளவு வேன்டுமானாலும் பேசலாம்

ஜெ

அன்புள்ள ஜெ,

நான் வசதியாக இருக்கிறேன். ஆனால் நீங்கள்? நீங்களும் உங்கள் மகனை கொண்டுசென்று பெங்களூரில்தான் சேர்த்தீர்கள். தமிழ்நாட்டு கல்லூரியில் சேர்க்கவே மாட்டேன் என நீங்கள் அடம்பிடித்து எனக்கும் எழுதியிருந்தீர்கள் இல்லையா?

ராம்

அன்புள்ள ராம்,

ஒரு பேராசிரியரின் மாதச்சம்பளம் 75 ஆயிரம் ரூபாய். அவர் வருடத்தில் இரு நூல்களையாவது வாசிக்கவேன்டும் என நான் எதிர்பார்க்கிறேன். அந்த தகுதிகொண்ட பேராசிரியர்களே தமிழகத்தில் ஒரு இருபதுபேர் தேறமாட்டார்கள். தமிழக காவல்துறை தமிழக மருத்துவத்துறை ஆகியவற்றுக்கு இணையாக சீரழிந்து கிடப்பது கல்வித்துறை

நம் பேராசிரியர்கள் நம்முடைய குழந்தைகளை ஒரு மருந்துக்கும் பயப்படாத சூப்பர் பக்குகளாக ஆக்கிக்கொன்டிருக்கிறார்கள்.

ஜெ

அன்புள்ள ராம்

உங்களுடன் பேச ஒரு சரியான தருணம். என் இணையதளத்தில் அனுராதா அவர்களின் கடிதம் வாசித்தீர்களா? நான் எங்கிருந்து ஆரம்பிப்பது? உங்கள் இருபத்தேழுவருட அனுபவம் சொல்லட்டும்.
ஜெ

அன்புள்ள ஜெ

கடவுள் காப்பாற்றட்டும்)))

ராம்

அன்புள்ள ராம்

உங்கள் கடிதங்களை மொழியாககம் செய்து பிரசுரிக்கிறேன். கல்லூரி சம்பந்தமான தகவல்கள் வராது. தனிப்பட்ட தகவல்களும் இருக்காது

ஜெ

ஜெ,

செய்யுங்கள். எனக்கும் கொஞ்சம் வசைகளை பங்கிடலாமென நினைக்கிறீர்களா என்ன?

ராம்

00000

J,

இலக்கிய பயன் குறித்த கடிதங்களை வாசித்தேன்.கடந்த 30 வருடங்களாக சிறு பத்திரிக்கை மற்றும் நவீன இலக்கியங்களை தமிழிலும் ஆங்கிலத்திலும் படித்தவனும், பல பேராசியர்களோடு உரையாடியவன் என்ற முறையிலும் என் கருத்தை கடுமையாகவே ப‌திவு செய்கிறேன்.

தமிழ்நாட்டில் பள்ளி/கல்லூரி ஆசிரியர்கள் என்ற மூடர்களுக்கு கிஞ்சித்தும் நவீன இலக்கியங்களை பற்றிய அறிவே இல்லை.அதை தெரிந்து கொண்டு கற்ப்பிக்க ஆர்வமும் இல்லை. இவர்களுக்கு தெரிந்தெல்லாம் நுட்பமில்லதாத, எவ்வித தர்க்க அறிவுக்கு உட்படாத அகிலன்,கல்கி,மு.வ போன்றவர்களின் வெறும் அபத்த சொற்குவியல்கள்.இன்னொரு புறம் திராவிட அரசியலின் பங்களிப்பையும் மலைக்க வைக்கிறது. தோலில் துண்டு,கத்திரிக்கப்பட்ட மெல்லிய மீசை இஞ்சி முரப்பா குரலில் கடந்த 33 வருடங்களாக திருக்குறளை நீதிக்கண்ணோட்டத்தில் உரத்த குரலில் மேடையிலும் கல்லூரியிலும் கத்திக்கொண்டிருப்பது கண் கொள்ளா காட்சி. அதனால்தானோ பெரும்பாலான தமிழாசிரியர்கள் ஒரு குறிப்பிட்ட திராவிட கட்சியே சார்ந்து மேடைப்பேச்சான பட்டிமன்றத்தில் காலம் கழிக்கிறார்கள் என்று எண்ணத்தோன்றுகிறது. இக்காட்சியை நாம் எங்குமே பார்க்க முடியாத அவலம்.

பல வெளிமாநில/வெளிநாட்டு பேராசிரியர்களோடு உரையாடிய போது நவீன இலக்கியத்திற்கும்/தத்துவத்திற்கும் தமிழ் சிறுபத்திரிக்கையின் பங்களிப்பு அளப்பரியது என்பதை உறுதியாக சொல்லலாம். தமிழில் நவீன இலக்கிய சிறுகதைகள்/கவிதைகள் உலகத்தர வாய்ந்தவை. புதுமைப்பித்தன்/மொளனி/ந.முத்துசாமி/சு.ரா/பிரமிள்/ஞானக்கூத்தன்/சி.மணி/தி.சா.வே/ஆத்மராம்/கலாப்பிரியா என்று சொல்லிக்கொண்டு போகலாம். இவ்வளவு ஏன், தமிழில் தற்சமயம் எழுதிக்கொண்டிருக்கும் ஜெயமோகன்/கோண்ங்கியையும் இம்மூடர்களுக்கு தெரியாது. தமிழில் வெளிவந்த மொழிப்பெயர்ப்புகளையும் சொல்லவேண்டும்.க.நா.சு தன் வாழ்நாளில் ஏறத்தாழ 75 இலக்கியத்தரமான ஆங்கில நாவல்களை மொழிபெயர்த்ததை இவர்களுக்கு தெரியுமா?. சி.சு.செல்லப்பா தன் சொந்த செலவில் கிழிந்த செருப்போடு கசங்கிய மஞ்சள் பையில் ‘எழுத்து’ பத்திரிக்கையை தூக்கிக்கொண்டு பல கல்லூரிகளில் நவீன இலக்கியத்தை அறிமுகப்படுத்தியதை இவர்கள் அறிவார்களா? இன்னும், கன்னடம் /ஹிந்தி/ பெங்காலி போன்ற பிராந்திய மொழிகளில் மிக சமீபத்தில்தான்( 5 வருடங்கள் முன்)போர்ஹே,பாவிக்,கால்வினோ என்ற அதிமுக்கிய நவீன உலக எழுத்தாளர்களை பற்றிய சீரிய விவாதம் நடந்தேரியது என்பது இவர்களுக்கு தெரியுமா?

ஆனால் தமிழில் இவர்களை பற்றி 80களிலே ஆழமான விவாதத்தளனை அமைத்து இவர்களின் பல சிறுகதைகள் இன்றளவலிலும் மொழிபெயர்ப்பு வந்துள்ளதை இவர்கள் அறிவார்களா? அனுராதா என்ற இந்த அம்மையார் உலுத்துப்போன டேவிட் காப்பர் ஃபீல்டின் கருத்தை இலக்கிய கோட்பாடாக முன் வைக்கிறார். அரதப்பழசான இந்த வெளக்கெண்ணெய் கோட்பாடல்லாம் தாண்டி 80களிலே தமிழவன்/நாகார்ஜூனன்/எம்.டி.ம்/பிரம்மராஜன்/சண்முகம்/நோயல்/பூர்ண சந்திரன் போன்றவர்கள் அமைப்பியல்/பின் நவீனத்துவம் வழியாக சங்கப்பாடல்களை ஆய்வு பூர்வமாக ஆராய்ந்தது இவர்களுக்கு தெரியுமா? ஏன் இம்மாதிரியான ஆய்வு முறை இன்னும் கல்லுரிகளில் எடுத்துக்செல்லப்படவில்லை? இஞ்சி முரப்பா குரல்கள் நடத்தும் தமிழ் மாநாட்டிலும் நவீன இலக்கியத்திற்கும்/கோட்பாட்டிற்கும் இடமில்லை.

மற்றொரு அரிய கருத்தையும் முன்வைக்கிறார்.வாசகன் எப்படி வேண்டுமானுலும் அர்த்தத்தை கற்பித்துக்கொள்ளலாம் என்ற அசட்டு வாதத்தை முன் வைக்கிறார்.. அப்படியெனில் பல வேஷங்களில் சிவாஜி நடித்துள்ள நவாராத்திரி படத்தில் இந்திய தத்துவத்தின் ஆறு தரிசனத்தை பார்க்கமுடியுமா? இப்படித்தான் அறைகுறையாக படித்து கல்லுரிகளில் ஆய்வாக சமர்பித்து தன் பெயர்களுக்கு பின்னால் ஆங்கில எழுத்துகளை கூட்டுகிறார்கள்.பள்ளி/கல்லூரிகளில் இந்த அவலம் இப்படியென்றால், இன்னோரு விஷம் தமிழ்த்திரைப்படங்கள் வழியாக மெல்ல பரவி வருகிறது. எனக்கு தெரிந்த வரையில் சீரியஸாக நவீன இலக்கியத்தை படித்த தமிழ் டைரக்டர்கள் விரல்விட்டு எண்ணிவிடலாம். இவர்களின் சில படங்களையும் சில நேர்க்காணல்களையும் படிக்க நேரிட்டபோது ரத்தக்கொதிப்பே வந்தது.இவர்களெல்லாம் நவீன இலக்கியத்திற்கும்/தத்துவத்திற்கும் பங்களிக்கவேண்டும் என்று யார் அழுதது? அறைகுறையாக படித்துவிட்டு நேர்காணல்களில்/கலந்துரையாட‌ல்களில் உளருவதை நாம் பார்ப்பது நமது தலையெழுத்து. சமீபத்தில் ஒரு சினிமா டைரக்டர் என்னை சந்தித்தபோது கூறியது புதுமைப்பித்தனின் கபாடபுரம்,சிற்பியின் நகரம் கதைகள் தனக்கு புரியவில்லை என்றும் ஆனால் பொன்னகரம் நன்றாக புரிகிறது என்றார்.

இவர்களின் நுட்பமும் வாசிப்புத்திறனும் இந்த லட்சணத்தில் உள்ளது.தேர்வு எழுதுவதற்கு படிக்கிறார்கள்,சம்பாத்தியத்திற்காக வேலைகளில் உழைக்கிறார்கள்.ஆனால் இலக்கியம் தத்துவம் என்று வரும்போது படிப்பு என்ற உழைப்பை உதாசீத‌னப்படுத்தி எள்ளி நகையாடும் போக்கு தமிழுக்கே உள்ள சாபக்கேடு. ஒரு காலத்தில் வாசகன் எழுத்தாளனை தேடி படித்த காலம் போய், இடைநிலை இதழ்களும் இணைய தளங்களும் கை ஒங்கும் காலத்தில் எழுத்தாளன் வாசகனுக்காக எழுதுவது அவலமே. அதனால்தான் இணையதளத்தில் மேம்பாக்காக படிக்கும் வாசகனுக்கு பாலகுமாரனின் கிறுக்கல்களுக்கும் நவீன இலக்கிய எழுத்துக்கும் வித்தியாசம் தெரியவில்லை.எவ்வித சமரசத்திற்கும் இடங்கொடாமல் இவர்களை ஒதுக்கித்த்ள்ளவேண்டும். குறைந்த பட்சம் இவர்களுக்கு சில புத்தகங்களை பரிந்துரைத்து அப்புத்தகங்களை பற்றிய நேர்முக தேர்வு நடத்திதான் இவர்களோடு உரையாடவேண்டும் என்று தோன்றுகிறது.

இந்த பட்டியலில் வெகுஜன‌சினிமா சம்பந்தபட்டவர்கள்,ஆசிரியர்கள் மற்றும் ஒன்றும் படிக்காமல் வலைப்பூவில் மேயும் வாசகர்களும் அடங்கும்.சினிமாவில் இருப்பவர்கள் எந்த உழைப்பையும் செலுத்தாமால்(படிக்காமல்) ஜெயமோகன்,ராமகிருஷ்ணன் போன்றவர்களின் உழைப்பை தங்களுக்கு சாதகமாக்கிக்கொள்வது ஆரோக்கியமான போக்கு அல்ல.இவ்விஷயத்தில் ஜெயமோகன்,ராமகிருஷ்ணன் செயல்பாடுகள் வருத்தமளிப்பவை. இக்கடிதம் நான் வலியுறுத்துவது நவீன இலக்கியமும்/தத்துவமும் வாசகனின் உழைப்பை கோரும்.உழைப்பின் வழியாக இப்பிரதிகளின் உட்கிடைக்குள் பயணமாகும் வாசகன் ஒரு புதிய உலகையும் அனுபவத்தையும் கண்டடைகிறான். புதிய உலகையும் அனுபவ‌த்தையும் தனக்கான பிரத்தேகயமான மொழியில் மீண்டும் படைத்து ஒரு அந்தரங்க உரையாடலை தனக்குள் நிகழ்த்துகிறான்.இந்த அந்தரங்க உரையாடல்தான் கலாச்சாரம்/பண்பாடு/வரலாறு/அரசியலின் பல பரிமாணங்களை வாசகனுக்கு காண்பிக்கிறது. எந்த காலத்திலும் வெகுஜன போக்குகள் இந்த பரிமாணங்களையும் வெளிக்கொணராது மட்டுமல்லாமல் எவ்வித மாற்றங்களையும் தனக்குள்ளும் தனக்கு வெளியும் அனுமதிக்காத கெட்டித்தட்டிப்போன துருவேறிய தளம். ஆனால் இதற்கு மாற்றாக‌ பல பரிமாணங்களையும் பல மாற்றங்களையும் உள்வாங்கி கற்பனைத்திறனுக்கும் சிருஷ்டிக்கும் இணங்ககூடிய அடித்தளமாக இருப்பது நவீன இலக்கியமும் தத்துவமே என்பதை உணர வேண்டும்.

அன்புடன்
எஸ்.வி.டி

அன்புள்ள எஸ்.வி.டி

உங்கள் கடிதம்.

மேலைக்கோட்பாடுகளை இப்போதும் விடாமல் வாசித்துக்கொண்டிருக்கிரேன். இலக்கியத்தில் இத்தனை கோட்பாடுகள் தேவையா என்ற மலைப்பு ஏற்படுகிறது. ஆனால் இலக்கியம் பிற அனைத்து அறிவுத்துறைகளில் இருந்தும் ஞானத்தை உள்வாங்கியாகவேண்டிய கட்டாயம் உடைய துறை. பிற அறிவியல் துறைகள் இன்று பிரம்மாண்டமாக கொப்பளித்தெழும்போது இலக்கியம் வற்றை கொடிவீசிப்பற்றி வளர்ந்தே ஆகவேண்டியிருக்கிறது. வேறு வழி இல்லை

இந்நிலைக்கு நேர் எதிராக எதுவுமே தெரியாமல் பொருட்படுத்தாமல் சோம்பிக்கிடக்கின்றன தமிழக கல்வி நிறுவனங்கள். அங்கே பயிலும் மானவர்களுக்கு இன்றும் ஆனா ஆவன்னாதான் கொன்றைவேந்தன் தான்

நடுவே சிற்றிதழ் சார்ந்து சில முனைகளில் மேலைச்சிந்தனையை பிந்தொடரும் முயற்சிகள் நிகழ்கின்றன. தனிப்பட்ட முறையில். தனி ஆர்வத்தால். எந்த வகையான அமைப்பு பலத்தையும் பின்னணியாகக் கொள்ளாமல். கலைச்சொல்லாக்கம் மொழியாக்கம் விவாதம் எல்லாம் நிகழ்கின்றன. அந்த தளத்தை நோக்கித்தான் பல்கலைக்கழகிகள் இந்த அற ஒழுக்க பிரசங்கங்களைச் செய்து வருகிறார்கள்

என்ன செய்வது

ஜெ

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைமலேசியா ஒரு கடிதம்