சென்ற 20-12-2015 அன்று நானும் அருண்மொழியும் அஜிதனும் சைதன்யாவும் பேலூர் ஹளபீடு வழியாக ஒரு பயணம் மேற்கொண்டோம். பெங்களூர் சென்று சோம்நாத்பூர், தொட்டஹடஹள்ளி, பேலூர்,ஹளபீடு என ஒரு ஐந்துநாள். 25 ஆம் தேதி அருண்மொழியும் சைதன்யாவும் ரயிலில் நாகர்கோயில் சென்றனர். அங்கே அருண்மொழியின் அப்பாவும் அம்மாவும் வந்திருந்தனர். நானும் அஜிதனும் நள்ளிரவில் பஸ்ஸில் கிளம்பி கோவைசென்றோம்
நான்குமணிநேரம் பெங்களூரில் பஸ்காத்து நிற்கவேண்டியிருந்தது. ஆகவே ஒரு சினிமாவுக்குச்சென்றோம். பாஜிராவ் மஸ்தானி என்னும் படம். அபத்தமான படம் .ஆபாசமான வரைகலைக்காட்சி. பாகுபலி படத்தை பன்ஸாலியிடம் ஒரு ஐம்பதுமுறை பார்க்கச்சொல்லவேண்டும். சினிமாக்கலை தெரிந்தவர்கள் மஸ்தானியின் வரைகலைக் காட்சிகளை அமெச்சூர்தனத்தின் உச்சம் என்றே சொல்வார்கள்.இன்று அசையும்காட்சிகளையே எளிதாக வெட்டி ஒட்டமுடியும். இவர்கள் காட்சிகளை கணிப்பொறியில் உருவாக்கி ஒட்டியிருக்கிறார்கள். படையெடுப்புக்காட்சிகளில் ஒவ்வொன்றும் ஒவ்வொரு ஒளியில் ஒட்டப்பட்டுள்ளன
மஸ்தானி முஸ்லிம் அந்தப்புரப்பெண். சபையில் கிளப் டான்ஸ் மாதிரி ஆட்டி ஆட்டி ஆடுகிறார். அதைவிட கொடுமை ஆண்மைக்கும் போர்தந்திரத்திற்கும் புகழ்பெற்ற வரலாற்றுநாயகரான பாஜிராவ் லுங்கி டான்ஸ் குத்துப்பாட்டு நடனம் ஆடுவதுதான். சமீபத்தில் இப்படி ஒரு கேனப்படம் பார்த்ததில்லை, வாந்தி எடுக்கவைக்கும் அசட்டுத்தனம். இடைவேளையில் தப்பி ஓடிவிட்டோம்
காலையில் கோவை பேருந்துநிலையத்தில் நண்பர்கள் காத்திருந்தனர். ராஜஸ்தானி மகாலில் சென்றுகொண்டிருக்கும்போதே பேச்சு தொடங்கிவிட்டது. நிகழ்ச்சியின் உச்சகட்ட உற்சாகம். அதில் ஒரு மாற்று குறைவு என்பது தேவதச்சன் ஆவணப்படத்தின் இயக்குநரான சரவணனின் நெடுங்காலமாக உடல்நலம் குன்றியிருந்த தந்தை மறைந்ததுதான் . நான் ராஜஸ்தானி விடுதியிலேயே தங்கினேன்
காலையுணவு வந்தது. தேவதச்சன் வந்து ஓட்டலில் காத்திருந்தார். காலையில்பத்து மணிமுதல் நான் கொஞ்சநேரம் பேசிக்கொண்டிருந்தேன். தேவதச்சன் வந்ததும் அவருடனான ஒரு நீண்ட உரையாடல் தொடங்கியது. சுநீல்கிருஷ்ணனின் அறிமுக உரைக்குப்பின் அவரது கவிதைகளைப்பற்றிய விவாதம், கவிதை வாசிப்பு, கேள்விபதில் என. மூன்றுமணிநேரம்.
மதிய உணவு வழக்கம்போல கல்யாணக் கோலாகலத்துடன். மதிய அமர்வில் சிறுகதையாசிரியர் கெ.என்.செந்திலில் கதைகளைப்பற்றிய விவாதம். சுரேஷ் அறிமுகமாக பேசியபின் செந்தில் உரையாற்றினார். அதன்பின் அவருடனான கேள்விபதில் நிகழ்ந்தது. மூன்றுமணிநேரம் உற்சாகமான உரையாடல். செந்தில் அவரது இலக்கிய நம்பிக்கைகள் மற்றும் வடிவம் குறித்த எண்ணங்களை விரிவாகப்பகிர்ந்துகொண்டார்.
மாலை ஐந்துமணிக்கு ஜோ டி குரூஸ் வந்தார். நாஞ்சில்நாடனும் உடன் வந்தார். ஜோ டி குரூஸிடம் கேள்விபதில். அவரது நாவல்கள், மீனவர் அரசியல் என பலதளங்களுக்கு நீண்டு சென்ற ஆக்கபூர்வமான உரையாடல். எட்டு மணிவரை.
இரவுணவுக்குப்பின் வழக்கமான இசையரங்கம். சுரேஷ், ஆனந்த் இருவரும் பாடினர். பழைய புதிய பாடல்கள். கிட்டத்தட்ட கல்யாணவீட்டு இரவுகளைப்போல. நம் கல்யானக்கொண்டாட்டங்களை குடி அழித்துவிட்டது என்று தோன்றியது. இசையும் நகைச்சுவையும் சிரிப்புகளுமாக மீண்டும் மறக்கமுடியாத ஓர் இரவு