அக்னிஹோத்ரம் கடிதங்கள்

 

1

 

அன்புள்ள ஜெ ,

பல வருடங்களுக்கு முன்பு ஒரு சிவன் கோவிலில் பிரச்னை ஏற்பட்டது எல்லாரும் அறிந்ததே. அப்போது அக்னி ஹோத்ரம் தாத்தாச்சாரியர் வழக்கம் போல நக்கீரன் பத்திரிகையில்  சிவபெருமானைப் பற்றியும், அந்தக் கோவிலைப் பற்றியும் சில முகம் சுளிக்க வைக்கும் தகவல்களை எழுதியிருந்தார்.
 எனக்குத் தெரிந்த இரண்டு  நண்பர்கள், திரித்து எழுதியதையும், உண்மையான தத்துவ விளக்கங்களையும் அதற்கு ஆதாரமான புத்தங்களை எடுத்துகொண்டு அவர் விலாசத்துக்கே சென்றனர். அவரின் வயதான மகனை மட்டுமே அவர்களால் சந்திக்க முடிந்தது. அந்தப் பெரியவரோ “என் அப்பா எதுவும் எழுதறதெல்லாம் இல்ல. காது ரெண்டு வருஷமா கேக்கிறதில்ல. புத்தியும் தெளிவா இல்ல. அதுக்கு மேல கேக்காதேள்” என்ற அளவில் ஏதோ சொல்லியிருக்கிறார்.
நன்றி,
கார்கில் ஜெய்
555555555555555555555555555555555555555555555555555
அன்புள்ள ஜெமோ,
அக்னிஹோத்ரம் பற்றிய கட்டுரையை வாசித்தேன். நாங்கள் ஏழுபேர் சிலவருடம் முன்பு அவரைச் சந்திக்க அவரது வீட்டுக்குச் சென்றிருந்தோம். அவர் எழுதியவற்றில் உள்ள நூல்முரண்பாடுகளை மட்டுமே சுட்டிக்காட்டி அவருக்குக் கடிதம் எழுதியிருந்தோம். அவரிடமிருந்து பதில் இல்லை. ஆகவே நேரில்காணலாம் என நினைத்தோம். நேரில்சென்றோம். அவரது மகனைப் பார்த்தபின்னர்தான் அவர் எவ்வளவு வயதானவர் என்பதே எங்களுக்கு உறைத்தது. அவரது மகன் எங்களை அவரைப்பார்க்கவே விடவில்லை.
 அருகே உள்ள ஒரு வீட்டில் இருந்த அக்னிஹோத்ரத்தைச் சந்தித்தோம். சந்திப்பது என்ன பார்த்தோம். காய்கறி மாதிரி இருந்தார் மனுஷன். காது கேட்காது. சுத்தமாக எங்கே இருக்கிறோம் என்றே தெரியாது. முன்பின் தொடர்பான பேச்சு இல்லை. எதையும் சொல்லி கேட்டுவாங்க முடியாது. senility யின் உச்சநிலை.
 ஆனால் கண்டபடி வசைபாடிக்கொண்டிருந்தார். பெருமாளை சிவனை. வார்த்தைகள் சிலவற்றை அந்த வட்டாரத்தின் சிறந்த சொற்கள் என்று சொல்லமுடியும். இங்குள்ள நக்கீரன் வகையறா பத்திரிகைக் காலிகளால் உண்டுபண்ணப்பட்ட போலிக்கதாபாத்திரம் அவர். புத்தகம் அவர் பேரில் வேறு எவரோ எழுதியது. அப்பட்டமான ஒரு ஹேட்புக். நீங்கள் சொல்வதுபோலத்தான்
 இத்தனை விவாதம் நிகழ்ந்தும் இதை ஏன் எவருமே பொருட்படுத்துவதில்லை? ஏன் இந்துமத எதிர்ப்பாளர்கள்கூட இவரை பொருட்டாக எண்ணுவதில்லை? காரணம் எல்லாருக்கும் உண்மை தெரியும். ஒரு பெரியவர் அவரைச்சார்ந்தவர்களால் பயன்படுத்தப்பட்டார். அதை தோண்டிச்செல்வதில் பொருளில்லை.
இந்தவகையான மோசடிகள் வழியாகத்தான் செயல்பட்டாகவேண்டும் என்பது ஒரு அறிவிழந்த தன்மை. ஆனால் நக்கீரன் , திக வகையினரிடம் வேறு எதை எதிர்பார்க்கமுடியும்?
ஜெயக்குமார்
முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 6
அடுத்த கட்டுரைதேவதச்சன் கவிதைகள்: ஒரு தொகுப்பு