மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2

எழுத்தாளர் சுஜாதா நவீனமொழியில் புறநாநூறு உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களுக்கு உரைஎழுதி வெளியிட்ட நூல்கள் அவரது வாசக ஈர்ப்பின் காரணமாக புகழ்பெற்றன. இளைஞர்கள் நடுவே அந்நூல்கள் சென்று சேர வழிவகுத்தன. ஆனால் தன்னுடைய அவசரம், மேலோட்டமான இலக்கிய நோக்கு காரணமாக பெரும் பிழைகளுடன் சுஜாதா அந்த உரைகளை அமைத்திருந்தார். பலபிழைகள் அடுத்தடுத்த பதிப்புகளில் களையப்பட்டாலும் அந்நூல்கள் இன்னும் ஏராளமான பிழைகளுடனும் போதாமைகளுடனும்தான் உள்ளன. குறிப்பாக கவிதையை அதன் கவித்துவத்தை தவிர்த்து சுருக்கி ஒரு செய்தியாக அளிக்கும் அவரது முறை மிகத் தவறான விளைவுகளை உருவாக்குகிறது.

சுஜாதாவின் உரைகள் வெளிவந்த காலகட்டத்தில் அவரை மிகக்கடுமையாக காய்ந்து எழுதிய தமிழறிஞர்களில் முக்கியமானவர் தொ.பரமசிவன். மனோன்மணியம் பல்கலை தமிழ்த்துறை தலைவராக இருந்து ஓய்வுபெற்ற இவரது ‘அழகர்கோயில்’ என்ற ஆராய்ச்சி நூல் முக்கியமானது. தன்னுடைய குடும்பத்துடன் நெருக்கமான தொடர்பு உள்ள ஆலயமான அழகர்கோயிலை தன் முனைவர் பட்ட ஆய்வுக்காக எடுத்துக்கொண்ட தொ.பரமசிவன் வழக்கமாக தமிழறிஞர்கள் செல்லாத திசை நோக்கிச் சென்றார். கோயில் உருவாக்கும் சாதியப்படிநிலைகளையும் கோயிலை புரந்து நிற்கும் சமூகச்சூழலையும் கருத்தில்கொண்டு ஆராய்ந்தார்.

இத்திசையில் தொ.பரமசிவனுக்கு முன்னோடி என்றால் கெ.கெ.பிள்ளைதான். அவரது ’சுசீந்திரம் கோயில்’ ஒரு பெரும் ஆய்வுநூல். கோயிலின் சிற்ப அமைப்புகள், ஐதீகங்கள். சமயச்சடங்குகள் மற்றும் நம்பிக்கைகளை அது மிக விரிவாக ஆராய்கிறது. அத்துடன் இணைத்து சுசீந்திரம் கோயிலைச் சூழ்ந்திருந்த நில உடைமை அமைப்பையும் கோயிலை நிர்வாகம்செய்த சமூகக் கட்டுமானங்களையும் கோயில் உருவாக்கிய சாதியப்படிநிலைகளையும் ஆராய்கிறது. ஆனால் அந்நூல் ஆங்கிலத்தில் வெளிவந்தது, இன்றுவரை தமிழில் வரவில்லை.

தொ.பரமசிவன் கெ.கெ.பிள்ளையின் நூலை விரிவாக ஆராய்ந்ததாகவோ முன்னுதாரணமாகக் கொண்டதாகவோ தெரியவில்லை. ஆகவே அவரது ஆய்வு சீரான முறைமை இல்லாமல் ஒருவகையான தன்னிச்சையான போக்குடன் செல்வதாக உள்ளது. இக்காரணத்தால் அதை ஆய்வாளர்கள் கவனிக்கவில்லை, இன்றும் அதன் நம்பகத்தன்மை வரலாற்றாசிரியர்கள் நடுவே ஏற்கப்படவில்லை. அதை வரலாற்றாய்வுசார்ந்தது என்பதை விட நாட்டாரியல்சார்ந்தது என்றே அவர்கள் நினைக்கிறார்கள்.

ஆனால் அந்நூல் தொகுத்து முன்வைக்கும் தகவல்கள் முக்கியமானவை என்றே நான் எண்ணுகிறேன். அவற்றில் பல தொ.பரமசிவன் அவரது நேரடிக் களஆய்வு மூலம் திரட்டியவை. அழகர்கோயில் குறித்தும் பழமுதிர்ச்சோலை குறித்தும் நம் பொதுப்புத்தியில் உறைந்துள்ள பல சித்திரங்களை தொ.பரமசிவனின் நூல் மாற்றியமைக்கிறது .தொ.பரமசிவனின் அழகர்கோயில் ஓர் ஆய்வு ஒரு வகைமாதிரியை முன்வைத்த, தொடக்கமாக அமைந்த ஆய்வு என்றவகையில் முக்கியமானது, முன்னோடியானது.

அழகர்கோயிலின் வரலாறு மிகச்சிக்கலானது. அது மாலிருஞ்சோலையாக பெரும்புகழ்பெற்ற தொல்லாலயம். பின்னர் நாயக்கர் காலத்தில் அது அவர்களால் மறு அமைப்பு செய்யப்பட்டது. கோயிலைச் சார்ந்த சாதிய அடுக்குகளும் நாயக்கர் காலத்தில் மாற்றியமைக்கப்பட்டன. அந்த மரபுகளே இப்போதும் தொடர்கின்றன. ஒரு நில உடைமை அமைப்பு அரசதிகாரத்தால் மாற்றியமைக்கப்படுவதை ஆராய்வதற்கான மிகச்சிறந்த சமீபகால உதாரணம் அது. அந்நோக்கில் வரலாற்று முறைமையுடனும் முழுமைநோக்குடனும் செய்யப்பட்ட ஆய்வல்ல தொ.பரமசிவனுடையது. ஆனால் அது ஒரு முக்கியமான தொடக்கம், அப்போது அதைப்போல பிறிதொன்று தமிழில் இருக்கவில்லை.

தொ.பரமசிவன் புகழ்பெற்றது அவரது சிறு நூலான ’அறியப்படாத தமிழகம்’ என்பதன் வழியாக. அது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலையில் பேராசிரியராகச் சேர்ந்த ஆ.இரா.வெங்கடாசலபதி முயற்சியால் முன்னர் பாளையங்கோட்டையில் ஜெயாபிரசுரம் என்ற அறியப்படாத பிரசுரத்தால் வெளியிடப்பட்டு அறியப்படாதிருந்த இந்நூல் காலச்சுவடு பிரசுரம் வழியாக மறுபிரசுரமாகியது. காலச்சுவடு போன்ற கவனிக்கத்தக்க பிரசுரம் வழியாக வந்தமையாலேயே அவரது நூல் முக்கியம்பெற்றது. மேலும் வெங்கடாசலபதி எப்போதுமே ஆய்வுமுறைமையை கையாளும் முக்கியமான ஆய்வாளர்.

தொ.பரமசிவன் அந்த தொடக்கத்தில் இருந்து மேலே செல்லும் வழி தெரிந்தவர். தன்னை ஒரு திராவிட இயக்கச் சிந்தனையாளராக அவர் முன்வைத்துக்கொண்டார். மதம், அரசியல், பற்றியெல்லாம் கருத்துக்கள் சொல்ல ஆரம்பித்தார். ஒரு பார்ப்பன நிறுவனத்தால் முன்னிறுத்தப்பட்ட திராவிட சிந்தனையாளர்! ’பார்ப்பனரே பாராட்டுதல்’ என்பது திராவிட சிந்தனையாளருக்கு கிடைக்கும் உச்சகட்ட அங்கீகாரமல்லவா?

ஒரு சமூக-வரலாற்றுச் சிந்தனையாளராக முன்னிறுத்தப்படுவதற்கான அடிப்படை வாசிப்போ புரிதலோ உள்ளவரல்ல தொ.பரமசிவன். அவருக்கு நவீன சிந்தனைகளைப்பற்றியோ ஏன் அடிப்படைக்கலைச்சொற்களைப்பற்றியோ எந்த விதமான புரிதலும் இல்லை. ஆகவே அவருடன் ஒரு விவாதத்தை தொடங்க எந்த நவீனச்சிந்தனையாளனும் முன்வரவும் மாட்டான். முன்வரவும் இல்லை. அவர் நமது கல்லூரிகளில் நிரம்பியிருக்கும் வழக்கமான தமிழாசிரியர் மட்டுமே. அவரது பலம் என்பது அவர் செய்த ஆரம்பகால கள ஆய்வுமூலம் திரட்டிக்கொண்ட சில தகவல்கள், அவ்வளவுதான். முன்பு அவரது பல ஆரம்பகால நூல்களை நான் அப்படியே நம்பி ஏற்றுக்கொண்டிருக்கிறேன். அதற்கு அழகர்கோயில் ஆய்வு ஒரு காரணமாக அமைந்திருக்கிறது.

ஆனால் சிற்றிதழ்சார்ந்த நவீனச் சிந்தனைத்தளத்துக்குள் கொண்டு வந்து நிறுத்தும் அளவுக்கு தேறிய ஒரே திராவிடச் சிந்தனையாளர் அவர்தான். ஆகவே அவர் சட்டென்று பேருருவம் கொண்டார். இன்றும் இதழ்களில் அவரது பேட்டிகள் வெளிவந்தபடியே இருப்பதைக் காணலாம். பெரும் தமிழறிஞராகவும் ஆய்வாளராகவும் முன்னோடி சிந்தனையாளராகவும் இப்பேட்டிகள் அவரை காட்டுகின்றன. ஆனால் எழுதிய நூல்கள் எவை என நோக்கினால் அதிர்ச்சியே உருவாகும். ஒரு நல்ல வாசகன் அழகர்கோயில் பற்றிய அவரது முனைவர்பட்ட ஆய்வேட்டை அல்லாமல் எதையுமே பொருட்படுத்தமுடியாது.

சுஜாதாவின் பழந்தமிழிலக்கிய உரைகள் விமரிசிக்கப்பட்டபோது தொ.பரமசிவன் விமர்சனத்தின் எல்லைகளை மீறிச்சென்றார். அவரது எதிர்வினைகள் காலச்சுவடு இதழில் வெளிவந்தன. காலச்சுவடு அதை உயிர்மைக்கு எதிரான ஆயுதமாக கருதியது. தொ.பரமசிவனின் தாக்குதல்கள் சுஜாதாவின் சாதியை சார்ந்தவையாகவே இருந்தன. பழந்தமிழ் இலக்கியத்தை விளக்க சுஜாதாவுக்கு என்ன உரிமை, தமிழர்களின் சொத்துக்கள்மேல் அவர் எப்படி கைவைக்கலாம் என்ற பாணியில் அவர் எழுதினார்.

மொத்த சங்க இலக்கியமும் சாமிநாதய்யருக்கும், அனந்தராம அய்யருக்கும், பி டி சீனிவாச அய்யங்காருக்கும் கடமைப்பட்டிருக்கிறது என்பதெல்லாம் இத்தகைய
’அறிஞர்’களிடம் சொல்லி புரியவைக்கக்கூடிய விஷயங்கள் அல்ல. அந்த கட்டுரையையே அவர்கள் பார்ப்பன இதழில் எழுதுவதையும் வசதியாக மறந்துவிடுவார்கள்.

ஒருமேடையில் சுஜாதாவின் உரைகள் குறித்து என்னுடைய கருத்து கேட்கப்பட்டது. நான் கருத்துச் சொல்ல மறுத்தேன். தொ.பரமசிவன் முதலியோர் சுஜாதாமீது நடத்தும் தாக்குதல்களுக்கு உதவுவது போல அது ஆகிவிடும் என்றேன். இந்த அறச்சீற்றம் கொண்ட தாக்குதல் தொ.பரமசிவனால் ஏன் தொல்காப்பியப்பூங்காவின் எண்ணற்ற பொருட்பிழைகள் மேல் நிகழ்த்தப்படவில்லை என்றேன்.

தமிழினி ஜூலை 2010 இதழில் நாஞ்சில்நாடன் தொ.பரமசிவன் பற்றி ஒரு நீண்ட கட்டுரை எழுதியிருக்கிறார். [பதச்சோறு] மிகமென்மையாக, நகைச்சுவையுடனும் தன்னடக்கத்துடனும், தனிநபர் மரியாதைகளை பேணிக்கொண்டு எழுதப்பட்ட அக்கட்டுரை ஓர் இலக்கிய விவாதம் எப்படி நிகழ்த்தப்படவேண்டும் என்பதற்கான உதாரணம். அதைமட்டுமாவது தொ.பரமசிவம் நாஞ்சில்நாடனிடமிருந்து கற்றுக்கொள்ளலாம்.

நாஞ்சில்நாடன் புளி குறித்து சங்க இலக்கியம் என்ன சொல்கிறது என்று தேடியிருக்கிறார். புலவர் இரணியனிடம் தொடர்புகொண்டு விசாரித்தபோது அவர் ‘புளியமரம் கிடக்கட்டும், பேராசிரியர் தொ.பரமசிவன் சங்ககாலத்தில் தென்னைமரமே கிடையாது என்கிறாரே’ என்றிருக்கிறார். தொ.பரமசிவனின் புகழ்பெற்ற ’அறியப்படாத தமிழகம்’ நூலை எடுத்து புரட்டிப்பார்க்கும் நாஞ்சில் கல்கடித்ததாய் உணர்கிறார்

சங்க காலத்தில் தமிழ்நாட்டில் தென்னை இல்லை என்று தொ.பரமசிவன் ஆணித்தரமாகச் சொல்லியிருந்தார். ’தெங்கும் தேங்காயும்’ என்ற கட்டுரையில் ‘இத்தகைய சிறப்பு மிக்க இப்பயிர்பற்றிய குறிப்பு சங்க இலக்கியத்திலும் தொல்காப்பியத்திலும் ஒன்றுகூட இல்லை என்பது மிகுந்த வியப்புக்குரியது’ என்று சொல்கிறார் தொ.பரமசிவம்

நாஞ்சில்நாடன் 1987ல் வெளிவந்த கு.சீனிவாசன் எழுதிய ‘சங்க இலக்கிய தாவரங்கள்’ என்ற அரிய ஆவணநூலில் தேடுகிறார். ’தெங்கு தென்னை’ என்றபேரில் விரிவான தனி கட்டுரையே இருக்கிறது தெங்கு என்றபேரில் தென்னை நெடுங்காலமாகவே சங்க இலக்கியத்தில் பேசப்பட்டிருக்கிறது. ‘சங்கநூல்கள் தென்னைமரத்தை தெங்கு என்று கூறும். இதற்கு தாழை என்றும் பெயர் உண்டு. குறிஞ்சிப்பாட்டில் கபிலர் தாழையை கூறுவார்…’ என ஆரம்பித்துச் செல்லும் விரிவான கட்டுரை. ஏராளமான சங்க இலக்கிய மேற்கோள்கள்.

இங்கே என் சொந்த ஞானம். மலையாளத்திலும் தாழை என்று தென்னையைச் சொல்வதுண்டு. ஆனால் அது குட்டையான, தாழ்ந்த வகை தென்னைக்கு உரியபெயர்.

சங்க இலக்கியத்தின் தாவரங்களைப்பற்றி ஆராய்ந்தவர்கள் பல இடங்களில் மிக விரிவாக அதைப்பற்றிப் பேசியிருக்கிறார்கள். அந்த நூல்களில் ஒன்றைக்கூடவா தொ.பரமசிவம் பார்க்கவில்லை என நாஞ்சில்நாடன் துணுக்குறுகிறார். அதன்பின் மற்ற கட்டுரைகளுக்குச் செல்கிறார். அந்நூலில் அனேகமாக அத்தனை கட்டுரைகளுமே இதேபோல அப்பட்டமான தகவல்பிழைகளால் புரிதல் பிழைகளால் நிறைந்தவை என அக்கட்டுரை சொல்கிறது.

யானைக்கும் அடி சறுக்கும் என்கிறார்கள். அடி சறுக்கிக்கொண்டேயா இருக்கும் என நாஞ்சில் வியப்புறுகிறார். அதே நூலில் ‘தமிழர் உடைகள்’ என்ற கட்டுரையில் தொ.பரமசிவனின் வரி ‘சிலப்பதிகாரத்துக்கு முன்னர் பெண்கள் மார்புக் கச்சு அணிந்தமைக்கான சான்று ஏதும் இல்லை’ கிபி ஒன்பதாம் நூற்றாண்டிலேயே பெண்கள் முலைக்கச்சு அணிய ஆரம்பித்தனர் என்கிறார் தொ.பரமசிவம். வம்பு என்றும் கச்சு என்றும் பெயரால் முலைக்கச்சை மீண்டும் மீண்டும் சங்கப்பாடல்களில் சொல்லப்பட்டிருப்பதை ஏராளமான ஆதாரங்களைக் காட்டி விளக்கிச் செல்கிறார் நாஞ்சில்நாடன்.

‘பொதுவாக கள ஆய்வுகளில் நம்பகத்தன்மை என்பது நாற்பதுமுதல் எண்பது சதமானம் வரை என்பார்கள். ஆய்வாளரைப்பொருத்து நம்பகத்தன்மை மாறுபடும். பல ஆய்வுக்கட்டுரைகளை வாசிக்கும்போது சொந்தப்பார்வையான வர்க்கச்சாய்வு இனச்சாய்வு மதச்சாய்வு கொள்கைச்சாய்வு என்பன துருத்தி நிற்கக் கானலாம்.’ என்று சொல்லும் நாஞ்சில்நாடன் தொ.பரமசிவனின் கள ஆய்வுகளை நோக்கிச் செல்கிறார். அங்கே பிழைகளின் விளையாட்டே மிகுந்திருக்கிறது.

பெரும்பாலான மேலோட்டமான ஆய்வாளர்கள் சொற்களை எந்த முறைமையும் இல்லாமல் வரலாற்றுநோக்கும் இல்லாமல் மனம்போனபோக்கில் இணைத்தும் பிரித்தும் பொருள்கொள்வது தமிழில் வழக்கம். தொ.பரமசிவனும்தான். சம்பளம் என்ற சொல் சம்பா+ அளம் என்று பிரியும் என்றும் சம்பா என்றால் நெல், அளம் என்றால் உப்பு என்றும் நெல்லும் உப்பும் கூலியாக கொடுக்கப்பட்டது என்றும் தொ.பரமசிவன் ஆய்ந்துரைக்கிறார்

இப்படி ஒரு ஆய்வை முன்வைக்க தமிழின் ஏதாவது ஓர் இலக்கியத்தில் இருந்து, கல்வெட்டில் இருந்து,நாட்டாரியலில் இருந்து ஆதாரம் அளிக்கிராரா என்றால் அதை அவரிடம் நாம் கேட்க முடியாது. அளம் என்றால் அது உப்பு விளையும் களம். சம்பா என்றால் ஒரு குறிப்பிட்ட நெல்வகை. அது ஒரு குறிப்பிட்ட பருவத்தை குறிக்கும் சொல்லும்கூட. எப்படி இப்படி ஒரு சொல்லிணைவு உருவானது?

‘பொய்களை விட அரைகுறை உண்மைகள் ஆபத்தானவை.’ என்று சொல்லும் நாஞ்சில் ‘ அறிஞர் தொ பவின் நூலில் அரைகுறை உண்மைகள் நிரம்பிவழிகின்றன’ என்கிறார். அந்நூலில் உள்ள அனேகமாக அத்தனை கட்டுரைகளையும் தகவல்பிழை மலிந்தவை என எடுத்துக்காட்டுகிறார். ‘சிறுதெய்வங்களின் உணவு’ என்ற கட்டுரையில் ’பிராமணர் சைவவேளாளர் தவிர்த்து எல்லா தமிழ்ச்சாதியார் குடும்பங்களிலும் ஏதேனும் ஒரு சிறுதெய்வவழிபாட்டில் தொடர்பு உடையவையே. எனவே சிறுதெய்வ வழிபாட்டுக்குரிய மக்கள் அனைவரும் புலான் உண்ணும் சாதியினரே.’ என்று ஆணித்தரமாகச் சொல்கிறார்

அந்த பிழைக்கணிப்பை விரிவான நேரடி ஆதாரங்கள் மூலம் மறுக்கிறார் நாஞ்சில்நாடன். சித்தூர் தென்மரை மகராஜன் போன்ற ஊனுண்ணும் தெய்வங்கள் பிராமணார்களுக்கு குலதெய்வங்களாக உள்ளன. தெந்தமிழகத்தின் முக்கியமான குலதெய்வமான சாஸ்தா ஊனுண்ணா தெய்வம். அது பல ஊனுண்ணும் சாதிகளுக்கு குலதெய்வம்.

மூலநூல்களை வாசிக்காமை தொ.பரமசிவனின் முக்கியமான குறைபாடு. அதிகமும் மனச்சித்திரங்கள், ஆங்காங்கே கேள்விப்பட்ட தகவல்கள் மூலம் ஆகியது அவரது தமிழறிவு. ஆனால் அறியாமை ஒருவகையில் மன்னிக்கத்தக்கதே. சங்ககாலம் போன்ற புகைபடிந்த இறந்தகாலத்தைப்பற்றிய ஆய்வுகளில் பிழை நிகழ வாய்ப்பதிகம். ஆனால் அதைவிட பெரிய காரணமாக உள்ளது அவரது பார்வைக்கோணம். அவர் திராவிட இயக்க மேடைப்பேச்சாளர்களிடம் இருந்து பெற்ற மிக எளிமையான ஒரு சமூகசித்திரத்தை கொண்டு உறுதியான முன்முடிவுகளை உருவாக்கி வைத்துக்கொண்டு ஆராய்ச்சிகளுக்குச் செல்கிறார்.

தொ.பரமசிவனின் நூல்கள் அனைத்துமே இத்தகைய முன்முடிவுகள் மற்றும் அவற்றுக்கு ஆதாரமான சாதிக்காழ்ப்பு சார்ந்தவை. வெறுப்பின் மொழியில் அல்லாமல் அவரால் எதையுமே பேசமுடிவதில்லை. சாதிக்காழ்ப்புக்கு முற்போக்கு முகம் இருக்கும் ஒரே அறிவுத்தளம் என்றால் அது திராவிட இயக்கச் சிந்தனைதான். ஆகவே அவர் முற்போக்காளரும் கூட. முற்போக்குச் சிந்தனை இருந்தால் அடிப்படைத்தகவல்கள்கூட தெரியாமல் எந்த விஷயம் குறித்தும் பேசலாமே

இத்தகைய முன்முடிவுகள் மூலம் செய்யப்படும் ஆய்வுகள்தான் ஒப்புநோக்க அபாயகரமானவை. தொ.பரமசிவன் ஓரு கல்வியாளர் என்பதை நாம் மறக்கலாகாது. சங்ககாலத்தில் தென்னை இல்லை போன்ற கூற்றுகள் ஆபத்தற்றவை. ஆனால் பிராமணர்களுக்கும் சைவ வேளாளார்களுக்கும் குலதெய்வ வழிபாடு இல்லை, குலதெய்வங்கள் எல்லாமே ஊன் பலி கொள்பவை, உயர்சாதிக்கும் தாழ்ந்த சாதிக்கும் ஒரே குலதெய்வம் இருக்காது போன்ற அபத்தமான முடிவுகள் அப்படி அல்ல. அவற்றுக்குப்பின்னால் அறியாமை மட்டும் அல்ல உள்நோக்கமும் உள்ளது. அவை பிற ஆய்வுகளில் மேற்கோளாகும். காலப்போக்கில் ஆய்வேடுகளில் நிரந்தரமாகச் சுழன்று வரும் உண்மையாக உருவம் பெறும். அப்படி ஏராளமான தவறான விஷயங்கள் நம் ஆய்வுச்சூழலில் இன்றும் செலவாணியில் உள்ளன.

காலப்போக்கில் என்ன நிகழும் என்றால் தொ.பரமசிவன் உருவாக்கும் பொய்கள் ஒரு தரப்பாகவும் அதற்கு எதிரான ஆதாரபூர்வமான தகவல்கள் இன்னொரு தரப்பாகவும் சொல்லப்படும். இரண்டுமே ஆய்வுகளில் இடம்பெறும். இந்த ஆய்வுகளை அடிப்படையாகக் கொண்டுதான் மேல்நாட்டு ஆய்வாளர்கள் தங்கள் ஆய்வுகளை நிகழ்த்துகிறார்கள். வருடத்துக்கு ஐம்பது ஆய்வுக்கட்டுரைகளேனும் இவ்வாறு தமிழ்வாழ்க்கை சார்ந்து வெளிவருகின்றன. அவையே உலக அளவில் மட்டுமல்லாமல் இந்திய அளவிலும்கூட தமிழ்வாழ்க்கைக்கான ஆய்வுண்மைகளாக முன்னிறுத்தப்படுகின்றன.

இந்த ஆய்வுகளை நிகழ்த்தும் வெளிநாட்டு ஆய்வுமாணவர்கள் நேராக இங்கே நம் பல்கலைகளில் உள்ள முன்முடிவுகள் நிறைந்த கல்வியாளர்களின் கைகளில்தான் வந்து விழுகிறார்கள். மேலும் அந்த ஆய்வுமாணவர்களுக்கேகூட இந்தியா பற்றியும், இந்துமரபு மற்றும் சாதியமைப்பு பற்றியும் ஒருவகை முன்முடிவுகள் உள்ளன. அவற்றுக்கு இசைந்த தகவல்களையே அவர்கள் நாடுகிறார்கள். அவற்றையே அவர்களின் ஆய்வுவழிகாட்டிகளும் விரும்புகிறார்கள். ஆக நம்மைப்பற்றிய அப்பட்டமான பொய்களை நாமே வரலாறாக ஆக்கி நம் தலைமேல் சூடிக்கொள்ள நெரும். நாம் விரும்பினாலும் அழிக்க முடியாது.

2009 ல் பெர்க்லி பல்கலையில் ஜார்ஜ் எல் ஹார்ட்டை சந்திந்த்தபோது அவரது மேஜைமேல் தமிழகம் பற்றிய இரு ஆய்வுக்கட்டுரைத்தொகுதிகள் இருந்தன. மேல்நாட்டு ஆய்வுமாணவர்கள் எழுதியவை. பாண்டிச்சேரி எம். கண்ணன் என்ற ஆய்வு உதவியாளரால் வழிநடத்தப்பட்ட ஆய்வுகள் அவை. தமிழுக்கும் சம்ஸ்கிருதத்துக்குமான உறவைப்பற்றியவை. மிக மேலோட்டமான ஆய்வுகள். நம் பல்கலைகழக ஆசிரியர்களின் அனைத்து காழ்ப்புகளையும் வரலாற்றுண்மைகளாக கொண்டுசெல்லும் நூல்கள். சாதாரணமாக புரட்டும்போதே என் கண்ணில் தகவல் பிழைகள் அறைந்தன. அவற்றைச் சொன்னேன். ஜார்ஜ் எல் ஹார்ட் புன்னகை புரிந்ததுடன் சரி.

ஊருக்குவந்து நான் மதிக்கும் ஆய்வாளர்களிடம் சொன்னேன். அ.கா.பெருமாள் உலகப்புகழ்பெற்ற ஆய்வாளரான ஸ்டுவர்ட் பிளாக்பர்ன் சுசீந்திரம் தாணுமாலயன் கோயில் மூலவர் என்பது சிவன் [ஸ்தாணு] திருமால் [மால்] மற்றும் அய்யனார் [அயன்] ஆகிய மூன்று தெய்வங்களின் கலவை என்று எழுதியிருப்பதைச் சொன்னார். உலகம் முழுக்க அது மேற்கோள் காட்டப்படும். வேறுவழியே இல்லை, சுசீந்திரம் மூலவரைத்தான் மாற்ற வேண்டும். அயனை பிரம்மன் அல்ல என்று வெள்ளைக்காரனே சொல்லிவிட்டானே.

தொ.பரமசிவனின் நூல் வெளிவந்து 20 ஆண்டுகள் ஆகப்போகின்றன. இன்றுவரை இந்த பிழைகள் ஏன் கண்டுபிடிக்கப்படவில்லை? அந்நூல் வெளிவந்தபோதே நான் அதில் கண்ட சில சிறு பிழைகளைப்பற்றி மூத்த ஆய்வாளரிடம் கேட்டேன் ‘பதிலுக்குச் சாதியச் சொல்லி திட்ட ஆரம்பிப்பாக…எதுக்கு நமக்கு?’ என்றார். நாஞ்சில்நாடனுக்கு அந்த பதில்தான் காத்திருக்கிறது.

இன்னொரு ஆய்வாளரிடம் இப்போது நாஞ்சில் எழுதிய கட்டுரை பற்றி கேட்டேன். ‘எல்லாம் அப்பவே தெரிஞ்சு பேசி ஓய்ஞ்ச விஷயம்தானே? . அவருக்கு பெரிசா ஒண்ணும் தெரியாது. கோபமா பேசி சமாளிப்பாரு…அவ்ளவுதான்’ என்றார். ‘ அப்டீன்னா ஏன் அதைப்பத்தி யாரும் ஒண்ணுமே எழுதலை?’ என்றேன் ‘அவரு யூனிவர்சிட்டியிலே இல்ல இருந்தாரு?’ என்றார்.

நாஞ்சில் செய்திருப்பது ஒரு முக்கியமான பணி. நம் கல்வியாளார்களின் இத்தகைய தமிழாய்வை இன்று வரை எழுத்தாளர்களும் சுதந்திரமாக எழுதும் இலக்கிய, வரலாற்று ஆய்வாளர்களும் கவனித்து எதிர்வினை ஆற்றுவதில்லை. இப்படியே விட்டால் இந்தப்போக்கு ஒரு அசைக்கமுடியாத விஷமரமாக மாறி நம் பண்பாட்டில் நின்று கொண்டிருக்கும் விஷயமறிந்த கல்வியாளர்கள் அமைப்புக்கும் அதிகாரத்துக்கும் அஞ்சி மௌனம் காக்கிறார்கள். ஆகவே இன்று இதையும் எழுத்தாளனேசெய்தாகவேண்டிய நிலை வந்துள்ளது.

பின்குறிப்பு

நாஞ்சில்நாடனின் இக்கட்டுரையை வாசித்த பின்னர் ஏற்பட்ட ஒரு வேகத்தில் எழுதப்பட்ட கட்டுரை இது. பிரசுரமான பின் மீண்டும் வாசிக்கையில் சட்டென்று மனம் வருத்தம் கொண்டது. இன்றும் எனக்கு பெரும் திறப்புகளை அளித்த நூலாகவே அழகர்கோயில் உள்ளது. பிற்காலத்தில் ஒரு குறிப்பிட்ட தீவிர அரசியல் நிலைபாடு, அதன் காழ்ப்பு காரணமாக தொ.பரமசிவன் அவர்கள் கொண்ட திரிபுகளும் அவற்றைக்கொண்டு அவர் எழுதிய வெறுப்பு நிறைந்த நூல்களும் அவரை என்னிடமிருந்து விலக்கின. அவரை நம்பி வாசித்த காலத்தில் பிடித்திருந்த இந்நூல்களில் இருக்கும் இப்பிழைகள் இன்று அவர் மீதான எண்ணங்களை மறுபரிசீலனைசெய்யவும் செய்கின்றன. ஆயினும் நான் அவரிடமிருந்து பல கற்றுக்கொண்டிருக்கிறேன். ஆகவே இக்கட்டுரையில் ஒரு குருநிந்தனை தொனி வந்துவிட்டதா என்னும் வருத்தம் இந்த தனித்த இரவில் மேலிடுகிறது. அந்த தளத்தில் இந்த தீவிர விமர்சனத்துக்காக தொ.பரமசிவம் அவர்களிடம் மன்னிப்புகோருகிறேன்.

முந்தைய கட்டுரைஉயிர்மை நிகழ்ச்சி
அடுத்த கட்டுரைகீதை கடிதங்கள்