ராஜாவும் இதழாளர்களும்

ilayaraaja
அன்புள்ள ஜெ அவர்களுக்கு,
சென்னை & கடலூர் இன்னமும் பேரிடரிலிருந்து சற்றும் வெளிவராத நிலையில், இதைப்பற்றி தங்களிடம் கேட்கக்கூடாதென தான் இருந்தேன். ஆனால், சிலர் வரம்பு மீறுவதாகப்படுவதால் இக்கடிதம்.சமீபத்தில், எதிராஜ் கல்லூரியில் ஒரு வெள்ள நிவாரண நிகழ்ச்சியில் கலந்துகொண்டு திரும்பிய இசைஞானி இளையராஜாவிடம், நடிகர் சிம்பு எழுதிய பீப் பாடல் பற்றி, ஒரு தொலைக்காட்சி நிருபர் வீண் கேள்வி எழுப்பினார். அதற்கு ராஜா மிகச்சரியாக எதிர்வினையாற்றினார்.அந்நிகழ்வின் முழு காணொளி – https://www.youtube.com/watch?v=v2d12l1e6z0அதே நிகழ்வின் பகுதி காணொளி – https://www.youtube.com/watch?v=E3_BtwlVGRU
நிருபரின் அசட்டைகள் போதாதென, ஊடகங்கள், சம்பந்தப்பட்ட நிகழ்வில் ராஜா பேசிய ஒரு பகுதியை மட்டும் கொண்ட முதல் காணொளியை விஷமத்துடன் பரப்பியது. அந்த பகுதி காணொளி மட்டுமே 2லட்சம் பார்வைகளைக்கடந்துவிட்டது. ஒட்டுமொத்தமாக மற்ற ஊடகங்கள் அதையே நகலெடுத்து தத்தம் யூட்யூப் அலைவரிசையில் பரப்பியதைச்சேர்த்தால் 1 மில்லியன் பார்வைகள் கூட தேறும். ஆனால் நிஜத்தில் ராஜா பேசிய முழு நிகழ்வைப்பார்த்தால், ராஜாவின் மேல் எந்தத்தவறும் இல்லையென பார்க்கும் அனைவருமே உணர்ந்துவிடுவார்கள் என எண்ணி, அந்த முழு வடிவத்தை பரப்பவில்லை.நிகழ்வின் முழு காணொளியை பதிவேற்றிய ஒரே ஊடகம், RedPix எனும் ஒரு வளரும் ஊடகம் மட்டுமே.
இந்த முழு காணொளியைக் கண்டோர் மிக சொற்பமே.இதைத்தொடர்ந்து ராஜாவின் மீது வசவு கூறி, வழக்கமான சிறு கும்பல், சமூகவலைத்தளங்களில் அவரைத் தொடந்து முறையற்று தாக்கி வருகிறது.

 

இசைஞானி அவர்கள், சுதந்திரத்திற்கு முன் பிறந்த, வயதில் மிக மூத்த கலைஞர். அவர் பொதுவாக தன் மகன்கள் கார்த்திக்ராஜா யுவன் துவங்கி, பொதுவாக தன்னைவிட சுமார் 20வயது கீழானவர்களை, அதாவது இளைஞர்களை, இளைய தலைமுறை நடிகர்களை, இசையமைப்பாளர்களை ஒருமையில் அழைத்துத்தான் பழக்கம். ஆக, வயதில் மிக மூத்தவர், இளைஞர்களை ஒருமையில் விளிப்பது எவ்வகையில் நாகரீகக்குறைவு?! மட்டுமின்றி, ராஜாவிடம் சற்றும் தேவையே இன்றி கேட்கப்பட்ட இக்கேள்விக்கு, ராஜா சொல்லியும் கேட்காமல் அந்த நிருபர் எதிர்வாதம் செய்ததால், ஒரு கட்டத்தில் வேறு வழியின்றி, “அறிவிருக்கா” என்று ஒரு அறிவினா எழுப்பியுள்ளார். இதுவும் மிகச்சரியே. அதற்குப்பின்பும் கூட அந்த நிருபர் நிறுத்தவில்லை.

ஆக, இளையராஜா போன்ற ஒரு ஈடற்ற கலைஞர் மீது கூட, அதுவும் இந்த வயதிலும், நிவாரணம்வழங்க வந்தவரின் பேச்சை திரித்து இப்படி மிகக்கீழான செயல்களை செய்யும் ஊடகங்கள், மற்றும் இதைச்சாக்காக வைத்து விளம்பர விரும்பிகள் கக்கும் முறையற்ற வன்மம், அது மட்டுமன்றி ஊடகவியல்,இதழியல் நேர்மை பற்றி எல்லாம் அடிக்கடி பேசும் சிலர் கூட இதை தங்கள் சொந்த வன்மத்துக்காக திரிப்பதாக எனக்கு தோன்றுகிறது.

 

நீங்கள் தமிழ்ச்சமூக பொதுத்தளத்தில் தீவிரமாக இயங்கிவரும் எழுத்தாளர் என்ற வகையில், இந்த நிகழ்வில் ஊடகத்தின் செயல்பாடு குறித்து தங்கள் கருத்தை அறிவது, எனக்கு மிக முக்கியமாகப்படுகிறது.

நன்றி,
ஸ்ரீதர் முருகன்.

அன்புள்ள ஸ்ரீதர்,
இந்த விஷயத்தில் ஒரு சாதாரண தளத்திற்கு மேல் கோபம் கொள்ளவோ எரிச்சல் கொள்ளவோ ஏதுமில்லை. இதழாளர்களில் இருவகை உண்டு. இதழாளர்களுக்குரிய பொறுப்பும் கௌரவமும் கொண்டவர்கள் ஒரு வட்டம். எந்தவிதமான அடிப்படைத்தகுதியும் இல்லாத, வெறும் வம்புகளில் வாழ்கிற, மிகமிகக்குறைவாக ஊதியம் பெறுகிற ஒரு கூட்டம். அவர்கள் முன்னெடுக்கும் வெறும் வம்புதான் இது. அந்தப்பையனின் இளிப்பைப்பார்க்க பரிதாபம்தான் வந்தது.வெறும்வாய்க்கு அவல்தேடும் இணைய வம்பாளர்கள். இதை அடுத்த வம்பு கிடைப்பது வரை வளர்ப்பார்கள். அவர்களின் நேர்மையும் தரமும் தெரிந்ததே. இளையராஜாவுடன் இணைத்து அவர்களின் பெயர்களை பேசுவது ராஜாவுக்கு அவமதிப்பு.என் நண்பரும் இதழாளருமான ரமேஷ் வைத்யா சொன்னதைத்தான் சொல்லவேண்டும். ‘பத்திரிகையாளருக்கு அறிவிருக்கா என்று கேட்டது அறியாமைதான்’ 

ஜெ

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 10
அடுத்த கட்டுரைகீதையும் வெண்முரசும்