மரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்

சிலவருடங்களுக்கு முன்னர் சுஜாதா குறள் புறநாநூறு முதலிய பழந்தமிழ் இலக்கியங்களுக்கு பொருள்விளக்கம் எழுதி நூல்களை வெளியிட்டார். சுஜாதாவின் அந்த முயற்சியின் நோக்கம் நேர்மையானது என அவரிடம் பேசி நான் அறிந்திருக்கிறேன். உண்மையிலேயே பழந்தமிழில் ஆர்வமும் சிறுவயதுமுதல் பயிற்சியும் கொண்டவர் அவர். அவரது அந்த உரைகள் இளையதலைமுறைக்கு பழந்தமிழ் குறித்த அறிமுகத்தை அளித்தன என்றும் படுகிறது- எந்த அளவில் என்பது விவாதத்துக்குரியது. அதைப்பற்றிய மேலதிகப்பேச்சுக்கள் எவையும் வெளிவரவில்லை.

ஆனால் சுஜாதாவின் நூல்கள் அவருக்கே உரித்தான அலட்சியமான ,மேம்போக்கான நோக்குடன் அவசரமாக உருவாக்கப்பட்டவை. மிகையான தன்னம்பிக்கை அவரை வழிநடத்தியது. ஆகவே அவற்றில் பிழைகள் நிறைந்திருந்தன.

சுஜாதாவின் பிழைகள் மூன்று வகையானவை. ஒன்று, இலக்கியம் அல்லது கவிதை குறித்த அவரது புரிதல் உருவாக்கும் பிழை. ஒன்றை ரத்தினச்சுருக்கமாகச் சொன்னாலே அது கவிதை என அவர் நம்பினார். சுருக்கம் இலக்கியத்தின் உத்திகளில் ஒன்றே, இலக்கு அல்ல. வாசகனை கற்பனைசெய்ய வைக்க, அவன் அகத்தில் பிரதி பற்பல வடிவங்களை எடுக்கச்செய்யவே சுருக்கமாகச் சொல்வது என்ற உத்தி கடைப்பிடிக்கப்படுகிறது.

சுருக்கம் கவிதைக்கான நிபந்தனையும் அல்ல. இசைத்தன்மைக்காக வரிகளை விரியச்செய்யும் கவிதைகள் உண்டு. திரும்பத்திரும்பச் சொல்லும் கவிதைகள் உண்டு. பல்வேறு நுட்பமான அடைமொழிகள் வழியாக சொற்களை வேறுபல இடங்களுக்குக் கொண்டுசெல்ல முயலும் கவிதைகள் உண்டு. புதிய சொல்லிணைப்புகளை உருவாக்க சொற்களை அதிகரித்துக்காட்டும் கவிதைகள் உண்டு

ஏனென்றால் கவிதையின் இலக்கு என்பது தெரிவிப்பது அல்ல, கற்பனையை விரியச்செய்வதுதான். கவிதையின் சுருக்கம் என்ற இயல்பை தமிழில் மீண்டும் மீண்டும் வற்புறுத்திய முன்னோடியான க.நா.சு ஏன் அதைச் சொன்னார் என்றால் கவிதை வாசகனின் கற்பனையில் நிகழ்ந்தபின்னரும் கவிஞன் சொற்களைக்கொட்டிக்கொண்டிருக்கக் கூடாது என்பதற்காகவே. அவ்வாறு கவிதையை மேலே வளர்த்துச் சொன்னால் வாசகமனத்தில் உருவாகும் சித்திரங்களை கவிஞனே கிள்ளி விட நேருமென்றார் க.நா.சு. அந்த அடிப்படையிலேயே பல கவிதைகளை அவர் மானசீகமாகச் சுருக்கி வாசிக்க ஆரம்பித்தார்.

ஆனால் சுஜாதா கவிதை என்பது ஒன்றை தெரிவிப்பதற்கான ஒரு வழிமுறை மட்டுமே என நினைத்ததாகத் தெரிகிறது. அதாவது தந்தி போல. விஷயத்தைச் சொல்ல தேவையான சொற்கள் மட்டுமே கவிதையில் இருந்தால்போதும் என்று நினைத்து மிச்ச சொற்களை எல்லாம் தந்தி அலுவலகத்தில் நின்று வெட்டுவது போல வெட்டி வீச ஆரம்பித்தார். அதன் வழியாக கவிதை என்ற நுண்ணிய கலை அடிவாங்கியது.

கவிதையில் என்ன ’சொல்ல’ப்பட்டிருக்கிறது என்பதை ‘அறிதல்’ தான் கவிதைவாசிப்பு என்ற செய்தியை அவர் தன் வாசகர்களுக்குச் சொன்னார். அது உண்மையில் கணிசமான கவிதைவாசகர்களை மரபுக்கவிதையில் இருந்து விலக்கியது என்று நான் கண்டிருக்கிறேன். கவிதையை கற்பனையில் விரித்து எடுப்பதற்கு நேர்மாறாக கவிதையை அவர்கள் மனதுக்குள் சுருக்க ஆரம்பித்தார்கள். சுஜாதாவின் குறள் உரையின் முக்கியமான குறையே இதுதான். ஏழு சொற்கள் கொண்ட குறளின் ‘கருத்தை’ நான்கு சொற்களில் சொல்ல முனைந்தார் சுஜாதா.

உதாரணமாக இந்த புறநாநூற்று கவிதை

அதண் எறிந்தன்ன நெடு வெண் களரின்
ஒருவன் ஆட்டும் புல்வாய் போல,
ஓடி உய்தலும் கூடும்மன்;
ஒக்கல் வாழ்க்கை தட்கும்மா காலே.

இதற்கு சுஜாதாவின் உரை–

தோல் நிறமுள்ள‌
சேற்று நிலத்தில்
துரத்தப்பட்ட மான் போல‌
தப்பி ஓடிவிடலாம் என்றால்
வாழ்க்கை தடுக்கிறது.

மேலே உள்ள கவிதையில் எறிந்தன்ன என்ற சொல் உள்ளது. திருப்பியதுபோல, புரட்டியது போல என்று அதற்கு பொருள். அதண் அன்ன என்று சொல்ல அக்கவிஞனுக்கு தெரியாமல் அது எழுதப்படவில்லை. உரித்த தோலை திருப்பியது போல என்ற வரி கண்ணில் ஒரு சித்திரத்தை உருவாக்குகிறது. திருப்பப்பட்ட தோலை பார்த்தவர்களுக்கு அது தெரியும். வெளிறிய நிறத்தில் கொழுப்பு படிந்திருக்கும் அதன் சித்திரத்தை அடைந்தால் சேற்றுநிலத்தின் கொழகொழப்பும் ஆவியெழும் வெம்மையும் நாற்றமும் நல்ல வாசகன் மனதில் வரக்கூடும். காட்டின் சேற்றுநிலத்துக்கு மிகச்சரியான உவமை அது.

பொதுவாக சங்ககாலக் கவிதைகளின் இயல்பே கண்ணுக்கும் காதுக்கும் நாசிக்கும் மிகச்சரியான உவமையை தேர்வுசெய்வதில் உள்ளது. இக்கவிதை அதற்கு உதாரணம். அந்த கட்செவிமூக்கு சார்ந்த கச்சிதம் என்பது ஒரு பழங்குடி இயல்பு. சங்கப்பாடல்களில் நாம் காணும் அழகே பழங்குடிமனம் கொண்ட கவிதைகள் மிகச்சிறந்த செவ்வியல் வடிவில் அமைந்திருக்கும் அற்புதம்தான்.

பிற்பாடு காவிய ஆசிரியர்கள் உருவாகி வந்தார்கள். அவர்கள் இத்தகைய உவமைகளை அளிப்பதில்லை. அவர்களின் உவமைகள் கருத்துத் தளத்தைச் சேர்ந்தவையாக இருக்கும். அதாவது உரித்து திருப்பப்பட்ட தோல் ஒரு குறியீடாக இருக்கும் சேற்றுநிலம் இன்னொரு குறியீடாக இருக்கும். இரு குறியீடுகளும் ஒப்பிடப்பட்டிருக்கும். இரு விஷயங்களும் ஓர் உச்சநிலையில் வர்ணிக்கப்பட்டு உவமிக்கப்பட்டிருக்கும். அது கற்பனாவாதத்தன்மை. சங்கக் கவிதைக்குரியது செவ்வியல்தன்மை. அது மிதமானது, நேரடியானது.

சேற்று நிலத்தின் விவரணையிலேயே ’வெண்’ களர் என்ற சொல் வந்துவிடுகிறது. வெண்நிறம் என்று சொன்னபின் எப்படி அதை தோல்நிறம் என்று பொருள் கொள்ள முடியும்? தோல்நிறம் என ஒரு நிறமுண்டா? உண்டு என்றால் அது பதப்படுத்தப்பட்ட தோலுக்குரிய தவிட்டுச்செந்நிறம் அல்லவா? அது எப்படி களர்நிலத்தின் நிறமாக ஆகும்?

கவிதையில் வேட்டைக்காரன் இருக்கிறான். இந்தச் சிறிய நாடகத்தின் முக்கியமான கதாபாத்திரம். ஆனால் மிகநுட்பமாக அவனை வேடன் என்னாமல் ‘ஒருவன்’ என்று சொல்கிறார் கவிஞர். அதுவே வாசகனின் கற்பனையை விரிவாக்க அவர் கொள்ளும் உத்தி. அவனை முழுமையாகவே இந்தஉரை தாண்டிச்சென்றுவிடுகிறது.

கவிஞர் வாழ்க்கை என்று சொல்லவில்லை, ஒக்கல் வாழ்க்கை என்கிறார். மிக அழகிய பொருள்மயக்கம் மூலம் பலதளங்களுக்கு நீளும் சொல்லாட்சி அது. ஒக்கல் என்றால் சுற்றம் என்றும் இடுப்பில் உள்ள என்றும் பொருள் கொள்ளலாம். சுற்றம்சூழும் வாழ்க்கை தடுக்கிறது என்றோ, இடுப்பில் கனக்கும் வாழ்க்கை தடுக்கிறது என்றோ பொருள் கொள்ளலாம்

பொருள்மயக்கம் என்பது கவிதையை அனுபவிக்கச் செய்ய கவிஞன் மேற்கொள்ளும் வழிமுறை. பண்டைப்பேரிலக்கியங்கள் முதல் இன்றைய கவிதைகள் வரை அது ஓர் இயல்பாக உள்ளது. பொருள்மயக்கங்களை நீவி நீட்டினால் மாபெரும் கவிதைகள்கூட அர்த்தமிழந்து தட்டையாக நிற்கும். சுஜாதா செய்யும் இந்தக் காரியம் கல்விநிலையங்களில் பேராசிரியர்கள் செய்து வருவதுதான்.

ஆக, இந்தக்கவிதையை இவ்வாறு ஓர் எளிய கருத்தாக சுருக்கி வாசகர்களுக்குக் கொடுக்கும்போது என்ன நிகழ்கிறது? வாசகன் கவிதையனுபவத்தை அடைவதில்லை. மாறாக ‘இம்புட்டுத்தானா? இதுக்குப்போயா?’ என்ற எண்ணத்தை அடைகிறான். அல்லது சங்கக்கவிதையை உப்பக்கம் கண்ட செருக்கை அடைகிறான். இரண்டுமே தவறான மனநிலைகள்.

இரண்டாவதாக சுஜாதாவின் அவசரம். அவருக்கு தமிழறிஞர்களுடன் உறவில்லை. தமிழிலக்கிய விவாதங்களில் அவர் இல்லை. அவர் ஓர் அந்தர உலகில் வாழ்ந்தவர். ஆகவே சுஜாதா பல சொற்களை இஷ்டத்துக்கு பொருள்கொண்டார். மிகச்சிறந்த உதாரணம் ‘கழுநீர்மலர் கண்கள்’ என்பதை ’கழிவுநீரில் மலர்ந்த மலர்கள் போன்ற கண்கள்’ என்று அவர் பொருள் கொண்டதுதான். அத்தகையதோர் பிழையை சங்க இலக்கியப்பாடல்களில் எவரும் நிகழ்த்தியதே இல்லை!

கழுநீர் என்றால் தேங்கும் நீர் என்று பெயர். தேங்கும் நீரில் சில நீர்த்தாவரங்கள் வளரும். நீலம் என்றும் குவளை என்றும் சொல்லப்படும் அந்த கருநீல மலர்களை பெண்களின் கண்களுடன் ஒப்பிடுவது தொன்மையான கவிமரபு. சுஜாதா நினைத்தது போல சாக்கடையில் மலர்ந்த மலர்களாக தலைவியின் கண்களை தலைவன் சொல்ல வாய்ப்பில்லை – சங்ககாலத்தில் கள்ளுண்ணும் வழக்கம் இருந்தது என்றாலும்.

மூன்றாவதாக, சுஜாதா பழையகவிதைகளில் உள்ள அணிகளை வெறும் அலங்காரங்களாக கண்டார் என்பதில் உள்ளது முக்கியமான பிழை. அணிகள் சாதாரணமான கவிஞனின் கையில் வெறும் அலங்காரங்களே என்பதை யாரும் மறுக்க முடியாது. வாள்நுதல் என்றும் மலர்க்கண் என்றும் வேய்த்தோள் என்றும் ஒரு வாய்ப்பழக்கமாகவே மரபுக்கவிஞன் சொல்வதுண்டு என்பதும் பெரும்பாலான சமயங்களில் யாப்பின் தேவைக்காக அது சொல்லப்படுகிறது என்பதும் உண்மை

ஆனால் முக்கியமான கவிதையில் அணிகளும் அடைமொழிகளும் உவமைகளும் மிக ஆழமான பொருளுடன் கையாளப்பட்டிருக்கும். அவை தவறவிடப்பட்டால் உண்மையில் கவிதை சொல்லவந்ததே இல்லாமல் ஆகும்.

வயலைக்கொடியின் வாடிய மருங்கின்
உயவல் ஊர்தி பயலைப்பார்ப்பான்
எல்லி வந்து நில்லாது சென்று
சொல்லிய சொல்லோ சிலவே அதற்கே
ஏணியும் சீப்பும் மாற்றி
மாண்வினையானையும் மணிகளைந்தனவே

வயலைக்கொடிபோன்ற வாடிய இடையும், தள்ளாடி நடக்கும் நடையும் கொண்ட பசலைபடிந்த பார்ப்பனன் இரவில் வந்து நில்லாது சென்று சொல்லிய சொற்கள் சிலதான். அதைக்கேட்டதுமே மதிரிலில் சாய்க்கப்பட்டிருந்த ஏணிகளையும் அம்புத்தொகைகளான சீப்புகளையும் எடுத்தான். கொலைத்தொழிலுக்கு தயாராக நின்ற யானைகளும் தங்கள் முகபடாம்களை களைந்தன. இதுவே இப்பாடலின் பொருள்

சுஜாதா அவருக்கே உரிய முறையில் ‘நச்சென்று’ அர்த்தம் சொல்கிறார். ‘வயலைக்கொடிபோன்ற பார்ப்பனப்பயல் இரவில் வந்து சில சொற்களை சொன்னான். போர் நின்றது’ –கனகச்சிதம்!

சங்ககாலத்தில் தமிழகத்தில் பார்ப்பனர்களுக்கு இருந்த அபரிமிதமான மரியாதை சங்கப்பாடல்களில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுகிறது. எங்கெல்லாம் பார்ப்பனர்கள் சொல்லப்படுகிறார்களோ அங்கெல்லாம் நான்கு விஷயங்கள் சார்ந்த மரியாதைக்குறிப்புடன் சேர்த்துத்தான் அவர்கள் பேசப்படுவார்கள். ஒன்று அவர்கள் செய்யும் வேள்வி மற்றும் வேதநூல்கள். . இரண்டு அவர்களின் தவத்தால் மெலிந்த தோற்றம் மற்றும் நோன்புகள். மூன்று அவர்களுக்கு இருந்த சமூக மரியாதை, எங்கும் செல்வதற்கும் நெறிகளைச் சொல்வதற்கும் இருந்த உரிமை. நான்கு அவர்களின் பயணம்செய்யும் இயல்பு.

பார்ப்பனனைப்பற்றி இக்கவிதையில் உள்ள முக்கியமான விவரணைகள் நான்கு. அவன் வயலைக்கொடி போல மெலிந்தவன் . தள்ளாடி நடப்பவன் . இரவில் வந்து நில்லாது செல்பவன் பசலை படிந்தவன். அவனைப்பற்றி சங்கப்பாடல்கள் சொல்லும் சித்திரமே இதிலும் உள்ளது. பசலை என்ற சொல்லே பயலை என்று ஆகியிருக்கிறது. முறைப்படி பார்ப்பனர்கள் ஒருவேளை மட்டுமே உணவுண்பவர்கள். ஆகவே மெலிந்து பசலை படிந்த உடல்கொண்டவர்கள். அது அவர்களுக்கு ஒரு தகுதி. பார்ப்பனர்களின் பசலை உடல் மேலும் பல சங்கப்பாடல்களில் சுட்டப்படுகிறது.

‘எல்லிவந்து நில்லாது சென்று’ என்பது முக்கியமான குறிப்பு. இங்கே பார்ப்பனனுக்கு இருக்கும் சமூக இடம். அவன் சாதாரணமாக வருகிறான். போர் அறிவித்துவிட்ட அரசனின் அரண்மனையில் அல்லது பாடிவீட்டில் எங்கும் தடுக்கப்படாமல் நேராகச் சென்று அவனைப்பார்த்து பேசுகிறான். அதுவும் மிகச்சில சொற்கள்.

சுஜாதா மெல்ல வந்து நில்லாது சென்ற அவனது சித்திரத்தை அப்படியே வெட்டிவிடுகிறார். அதுகூட பரவாயில்லை, பயலைப்பார்ப்பான் என்பதை பார்ப்பனப்பயல் என்று ஆக்கிவிடுகிறார். பொதுவாக இந்த சந்தர்ப்பங்களில் முதிய பார்ப்பனர்களே தூதர்களாகவும் நீதிசொல்பவர்களாகவும் இருப்பார்கள். இங்கும் வயலைக்கொடி போன்ற வாடிய உடலும் பசலையும் ,அவன் மெல்ல வரும் சித்திரமும் அதையே சொல்கிறது. ஆனால் போரைத்தடுக்க சின்னப்பையனை அனுப்புகிறார்கள் என்கிறார் சுஜாதா

கடைசியாக, நாம் காண்பது ஒரு அற்புதமான திரைக்கதைத் தருணம். யானைகள் கவசங்களை களைந்தன, கோட்டைமேல் சாற்றிய ஏணிகளும் சீப்புகளும் எடுக்கப்பட்டன என்ற இரு வரிகளும் இரு ‘ஷாட்’கள். இரு காட்சிகள் வழியாக ஒரு திருப்புமுனைத்தருணம் சொல்லப்படுகிறது. அது போர் நின்றது என்ற செய்தி மட்டும் அல்ல. அது காட்சிச்சித்திரம். நல்லவேளை சுஜாதா சினிமா எடிட்டர் ஆகவில்லை, பாலசந்தர் படங்களில் கடைசி செய்திகார்டை மட்டும் வைத்துவிட்டு மொத்த படத்தையும் வெட்டியிருப்பார்

தமிழிலக்கியமரபு என்பது விளையாட்டுக்குரியதல்ல. அது ஒரு மாபெரும் அறிவுப்புலம். எந்த ஒரு அறிவுப்புலத்தையும் அதற்கான கவனத்தையும் உழைப்பையும் கொடுத்து கற்றுக்கொள்வதும் விவாதிப்பதும் அவசியம்.

[மேலும்]

முந்தைய கட்டுரைநவீன இலக்கியம்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஷாஜி கட்டுரை