3

[சில காரணங்களால் ஊர்புகுதலின் மூன்றாவது பகுதியை வெளியிடமுடியாமலாகியது. அந்த பகுதி எழுத்துரு சீர்கெட்டுவிட்டது. அதை இப்போதுதான் மீட்க முடிந்தது]

ஒரு நாளுக்குள் தன் கண்கள் பச்சைக்கு எத்தனை பழகிவிட்டன என்று அனும ரெட்டி எண்ணிக் கொண்டான். பச்சையின் ஆயிரம் நிறங்களாகவே நாஞ்சில்நாட்டில் மண் தென்படுகிறது. அடியிலைகளின் மாவுப்பச்சை, மேலிலைகளின் நரம்போடிய பளபளப்புடன் கடும்பச்சை, வெயில்பட்டுக் கன்றும்போது நீலம்கலந்த பச்சை, தண்டுகளின் புழுப்பச்சை, குருத்துகளின் கிளிப்பச்சை, தளிர்களின் செம்பச்சை, பழுத்திலைகளின் மஞ்சள்பச்சை… எத்தனை பச்சைகள். நிறங்களை யாராவது சொல்ல முடியுமா என்ன? சொல்லச் சொல்ல நிறங்கள் கூடிக்கூடி புதுநிறங்கள் பிறந்தபடியே இருக்கின்றன. காட்டில் ஒவ்வொரு நிறங்களுக்கும் ஒவ்வொரு வன தெய்வங்கள். அத்தெய்வங்கள் காதலித்து கூடி கூடி நிறங்களைப் பெற்றுக்கொண்டே இருக்கின்றன. காட்டில் எத்தனை லட்சம் பறவைகள். எத்தனை கோடி பூச்சிகள். அவற்றின் நிறங்கள் எத்தனை! பறவைகள் நிறம் மாறுகின்றன. ஒரே பறவைமீது ஒன்பது நிறங்கள். இதோ கிளையிலிருந்து அம்பாகப்பாய்ந்து சுழன்று வந்து மீண்டும் நாணலில் அமர்ந்து மேலும் கீழும் ஆடும் இந்த மீன்கொத்தியின் நிறமென்ன. நீலம், பட்டுநீலம். அல்லது பச்சைநீலம். அல்லது குவளைநீலம். அல்லது மயில் நீலம். ஒரு பறவையை வைத்து இன்னொரு பறவையின் நிறம். ஒரு மலரை வைத்து இன்னொரு மலரின் நிறம். காட்டில் பறவைகளை எண்ண முடியுமா, பூச்சிகளை எண்ண முடியுமா?நிறங்களை மட்டும் எப்படி எண்ண முடியும்?

நாஞ்சில்நாட்டை விட்டு விலகிச்சென்ற வண்டிப்பாதை இருபக்கமும் நெருங்கிய காடு நடுவே நிழல் செறிந்த இருளுக்குள் சென்றது. பேராலமரத்தடியில் மஞ்சணக்காப்பணிந்த குத்துத்தூண்வடிவில் காய்ந்த மாலைகள் சூடி கமுகுப்பூக்குலைச்சருகள் சார்த்தப்பட்டு கொடிகள் படர்ந்தேறி சருகுகள் காலடியில் குவிந்து இருளுக்குள் நின்ற வழிப்பூதத்தான் கோயிலில் இருந்து கணியாகுளம் போகும் சிறிய வண்டிப்பாதை பிரிந்து சென்று அடர்ந்த மரங்களுக்கு அப்பால் மறைந்தது. வலப்பக்கம் வேளிமலையின் நுனி மரங்களின் இடைவெளிக்கு அப்பால் பச்சை எழுச்சிபோல ஓங்கி உச்சியில் கூம்புப்பாறையுடன் முகில் சூடி நிற்க, அதன் மடம்புகளில் கசிந்திறங்கிய காட்டோடைகள் பச்சைமரக்கூட்டங்கள்காக மாறி இணைந்து கீழே வந்த இடத்தில் ஓடைகளாக மாறி புதர்களுக்குள் வெயில்பட்டாது குளிர்ந்த நீர் வளைவுகளில் சுழிக்க சருகுகள் சுமந்து இலைப்புதர்களுக்குள் கண்ணுக்குத்தெரியாமல் சலசலத்து சாலையைக் கடந்து சென்றன.

வண்டி முன்னகர்ந்தபோது கணியாகுளத்துச் சாவடி ஆலமரத்தின் உச்சியையும் மண்ணாலான காவல்கோட்டைமீது அடர்ந்த முள்மரங்களின் உச்சிக்குமேல் சில வீடுகளின் பாகல்கொடிபடர்ந்த கரிய ஓலைக்கூரைகளையும் காண முடிந்தது. அங்கே நெடி கிடைத்த காவல்நாய்கள் சில உரத்த குரலில் குரைப்பொலி எழுப்ப ஆலமரக்கிளைகள் மீது கட்டிய ஏறுமாடத்தில் ஏறி நின்ற ஊர்க்காவலைன் தன் குடுக்கைமிழவை எடுத்து அதன் தோல்பரப்பில் அடையாளக் கொட்டு கொட்டினான். ஒரு நாயர் தன் தோளில் கிடந்த குடுக்கைமிழவில் பதில் அடையாளம் கொட்டியபோது அங்கிருந்து ” ஓஹோய்” என்ற விளி எழுந்தது. கண்டன் நாயர் ”ஓஹோயே” என்று பதில்விளி கொடுத்தான்.

கணியா குளம் தாண்டினால் வேளிமலை அடிவாரத்தில் மகாநீலி குடிகொள்ளும் கள்ளியங்காடு. கள்ளியங்காட்டு நீலியின் தட்டகம் தாண்டினால் ஐந்துபூதம் காக்கும் பஞ்சவன்காடு. பஞ்சவன் காடு தாண்டினால் ஆளூர். அதன் பின் ஏழுகன்னி கோயில்கொண்ட வீராணிக்காடு. அதற்கு அப்பால் ஊர்கள்தான். வலப்பக்கம் போனால் வில்லுகுறிவழியாக உதயகிரி. இடப்பக்கமாகச் சென்றால் இரணியநல்லூர். கள்ளியங்காடுதான் நாஞ்சில்நாட்டை வேணாட்டிலிருந்து பிரிக்கும் எல்லை என்பது வணிகர் கற்ற சாத்திரம். உச்சிப்பகலிலும் ஊளன் ஓலமிடும் கள்ளியங்காட்டை நினைத்தாலே வழிப்போக்கர்களுக்கு நெஞ்சில் சுரக்குளிர் நடுக்கும். அங்கே செத்தவர்களின் சதை தின்றே நரிகள் வாழ்வதாக அனும ரெட்டி கேட்டிருந்தான்.

வண்டிப்பாதையின் இருபக்கமும் பச்சைக் கோட்டைபோல இலைகள் செறிந்த இலைக்கள்ளிப்புதர்கள் வருவதைக் கவனித்தபின் சற்று நேரம் கழித்தே பறவை ஒலிகள் இல்லையென்பதை அனும ரெட்டி உணர்ந்தான். கள்ளிப்புதர்கள் நடுவே பலகுவைமாடங்களும் மடம்புகளும் கிளைகளும் கொண்ட சிறு செம்மண்கோட்டைகள் என எழுந்த பெரும் கறையான்புற்றுகள். ஆம்பல் போல வெண்பூக்கள் இதழ் விரிந்து பச்சை புல்லிவட்டம் பிரிந்து நிற்கும் முட்கள்ளிகள் ஒன்றுதொட்டு பிறிது கிளைத்துப் படர்ந்து தலைக்குமேல் எழுந்து அசைவிலாது அவர்களைக் கூர்ந்து நோக்குபவை போல் நின்றன. முட்களில் கிழிபட்டக் காற்று பாம்புபோல சீறிச்சென்றது. நாஞ்சில்நாட்டில் கால் வைத்த நிமிடம் முதல் கேட்டுக்கொண்டிருந்த நீரொலியும் காற்றொலியும் புள்ளொலியும் முற்றிலும் அடங்கி மௌனமாக சூழ்ந்திருந்த அந்தக்காடு ஒரு மாபெரும் பேய்த்தெய்வச் சன்னிதிபோல் இருந்தது. சாலையின் இருபக்கமும் அவ்வப்போது மண்டையோடுகள் மண்ணில் புதைந்து வெறித்த பற்களால் செம்மண் கவ்விக் கிடந்தன.

முன்னால் சென்ற நாயர் பெரிய கற்களைப் பொறுக்கி வழியில் எட்டடி முன்னே வீசிக்கொண்டே செல்ல கல்பட்ட இடங்களில் சருகுக்குள் இருந்து கன்னச்செதில் சிவக்க வால் விரைத்த மலைஓணான்களும் பாம்புவரியிட்ட முதுகுடன் வால்நெளித்தோடும் அரணைகளும் சரசரவென எழுந்தோடி கள்ளிகளில் ஏறிச் சென்றன. அவ்வப்போது சாட்டை நெளிவென சருகுகளை ஊடுருவியபடி பாம்புகள் ஓடி மறைந்தன. ஒருமுறை கீரி ஒன்று நாணல்பூபோன்ற வாலைத்தூக்கியபடி துள்ளிச்சென்றது. வண்டிக் கூண்டை முட்டி நீண்டும் சாலைக்கு குறுக்கே விழுந்தும் மறித்த கள்ளிக்கிளைகளை வாளால் வெட்டித்தள்ளியபடி இருவர் முன்சென்ற நாயரைத் தொடர்ந்தனர்.அதுவரை பாடிக் கொண்டுவந்த நாயர்ப்படையினர் தலைகுனிந்து தரையையே பார்த்து குந்தநுனிகளால் சருகுமெத்தையை தட்டியபடி நடந்தனர்.

அக்காட்டில் மரங்களே இல்லை, கள்ளிகளின் இனம் மட்டும் அவ்வப்போது மாறிக்கொண்டிருந்தது. நீலப்பச்சை படர்ந்த சதுரகள்ளிப்புதர்கள் தொடங்கி வேறு பச்சையே இல்லாமல் இடைவெளியிலாது சென்றன. கள்ளியொன்றில் கிழிந்து நின்ற சிவப்புச்சேலை நுனி ஒன்று காற்றில் பதறிக்கொண்டிருந்தது. பிறகு திருகுகள்ளிப்புதர்கள். பின் எளங்கள்ளி . மீண்டும் இலைக்கள்ளி . அசப்பில் திரும்ப சட்டென்று வலப்பக்கம் மிக அருகே தெரிந்த வேளிமலைச்சரிவை பார்த்து அனும ரெட்டி பிரமித்தான். பாறைகள் உருண்டு தலைமீதுவிழுமென மிக அருகே ஓங்கி நின்றன. நீரோடையின் இருபக்கமும் பிறுத்திப்புதர் வட்டமாக ஓலைநீட்டி நடுவே முள்மலர் காய்களுடன் அடர்ந்திருந்தது. மலையில் ஏற்றத்திலும் குற்றிச்செடிகளே காணபப்ட்டன. அங்கே மண்ணுக்கு ஆழமேயில்லை, உள்ளே மிக அருகே கரும்பாறைத்தளம் இருக்கிறது என்று பட்டது.அதனால்தான் மரங்கள் வளரவில்லை. அந்த எண்ணம் வந்ததுமே அதுவரை இருந்த பதற்றம் விலக அவன் புன்னகைசெய்தான்

சாலை வளைந்துசென்ற போது இடப்பக்கம் சதுரகள்ளிப்புதர் சூழ்ந்த சிறிய கல்மண்டபம் தெரிந்தது. கண்டன் நாயர் ”அம்மே கள்ளியங்காட்டமே…காக்கணே” என்று கைகூப்பி வணங்கி சென்றான். ஓரக்கண்ணால் கோயிலைப்பார்த்தபோது அங்கே ஓர் அசைவு தெரிவதுபோல் தோன்றி அனும ரெட்டிக்கு நெஞ்சு நின்று துடித்தது. அது அம்மைக்குச் சார்த்தியபின் கள்ளியில் சிக்கிக் கிடந்த செம்பட்டுகிழிசலின் அசைவே என்று மறுகணம் தெளிந்தபின்னரும் அவன் நெஞ்சு துடித்துக் கொண்டே இருந்தது. புறங்கழுத்தும் தோள்களும் வியர்த்து முதுகுஓடை வழியாக வழிவதை உணர்ந்தான்.

இலைக்கள்ளி சூழ்ந்த சாலைவளைவில் இருந்து குறுக்காக ஒர் ஒற்றையடிப்பாதை செல்லுமிடத்தில் ஒரு நாயர் வண்டிக்காளையின் மூக்கணாம் கயிற்றைப்பிடித்தான். காளை தலையை தூக்கி மறுகி முனகி நின்று கால் மாற்ற மறுகாளை மேலும் எட்டுவைத்து சுழல வண்டியும் சுழன்று நின்றது. ஒருவன் வண்டியோட்டி மாடனை ஓங்கி அறைந்து இழுத்து தரையில்போட்டு கைகளை முறுக்கி இழுத்துக்கொண்டு குத்துச்செடிகள்குள் சென்றான். அவன் பன்றிபோல ஒலியெழுப்பி திமிறிக்கொண்டே சென்றான்.

நாயர்கள் குந்தங்களுடன் வண்டியைச் சூழ்ந்துகொண்டதைக் கண்டு அனும ரெட்டி வண்டியிலிருந்து குதித்து தன் இடுப்பில் ஆடைக்குள் செருகியிருந்த குத்துக் கத்தியை எடுத்துக் கொண்டான்.

கண்டன் நாயர் சிரித்தப்டி ”அதெல்லாம் ஒண்ணும் வேண்ட ரெட்டி மக்களே , நாங்க என்ன கள்ளம்மாரா? கொள்ளையடிக்கவா போறம்? சும்மா நிண்ணு துள்ளாம அந்த மரக்கறிக்கத்திய உள்ள வையும்…. வே வலிய ரெட்டி, எறங்கி வாருமய்யா…” என்றான்.

நரசிம்மலு ரெட்டி மெல்ல இறங்கி நின்று வாயைதுடைத்தபடி நாயர்களைப் பார்த்தான். அவனுடைய தொங்கிய கீழ்த்தாடைச்சதையில் மட்டும் சிறு அசைவு. பாதி மூடிய கண்களில் எதுவும் தெரியவில்லை. ஆனால் உலர்ந்து பொரிந்த நாமம் ஆங்காங்கே வரிவரியாக வியர்வையில் ஊறியது.

சூழ்ந்த எல்லா கண்களிலும் ஒரு சிரிப்பு இருந்தது என்று அனும ரெட்டிக்கு தோன்றியது. என்ன செய்வார்கள், கொல்வதற்கு அஞ்சமாட்டார்கள். இந்தக் காட்டுக்குள் அப்படி எத்தனையோ பேர் செத்திருக்கலாம். கள்ளியங்காட்டுக்குள் அன்னியர் உள்ளே நுழையவே முடியாது என்பார்கள். அவன் நெஞ்சுக்குள் ஒரு இறுக்கம் கனத்தது. அவ்வளவுதனா? இவ்வளவு சாதாரணமாகவா? தெய்வங்கள், பூஜைகள், காணிக்கைகள்… ஒருசில கணங்களுக்குள் அனும ரெட்டி வாழ்க்கையின் சாராம்சமான அர்த்தமின்மையை உணர்ந்து சொல்லிழந்து வெறித்து நின்றுவிட்டான். மறுகணம் அவன் நினைவில் அம்மாவின் முகம் தெரிய விம்மல் ஒன்று நாபியிலிருந்து எழுந்துவந்தது. அதை அவன் விழுங்கியபோது தொண்டை இறுகி அடைத்து கண்களில் கண்ணீர் மல்கியது.

”நாங்க யாரும் உங்களுக்கு ஒரு தோஷமும் செய்யப்போறதில்ல ரெட்டிப்பிள்ளே…. எங்களுக்கு கூலி கட்டாது. பாத்தேருல்லா…. எப்பேர்பட்ட காடு. பாம்புகடிச்சு செத்தா பின்ன ஆரு பிணை? இல்ல, நீங்க சொல்லுங்க.ஒரு நியாயம் வேணுமில்லா” என்றான் கண்டன் நாயர்.

”படநாயருக்க சொல்லு பதருலநெல்லுண்ணு கேட்டிருக்கேன்” என்றார் நரசிம்மலு ரெட்டி ”இப்பதான் பாக்கேன். வே, நீங்க ஆயுதம் தொட்டு சத்தியம் செய்திருக்கிஹள்லா?”

”உள்ளதாக்கும். அதாக்கும் நாங்க இப்ப உங்கள கொல்லாம விட்டு பேசிட்டிருக்கிற காரியம். சத்தியத்துக்கு இப்ப என்ன கேடு? நாங்க கொன்னோமா, இல்ல கொள்ளயடிச்சோமா? ஒரு வியாபாரம்ணா கணக்கு பேசணுமே? அதில என்ன தப்பு? இல்ல, சொல்லும்வே…”

”செரி, உங்க கிட்ட பேசி புண்ணியமில்ல. என்ன வேணும் இப்பம்? அதைச் சொல்லுங்க…” நரசிம்மலு ரெட்டி எல்லா முகங்களையும் பார்த்தான். கண்டன் நாயரிடம் ” பின்ன ஒரு காரியமுண்டு. இதில உள்ள சரக்கை எடுக்கலாமுண்ணு பாத்தா அது நாய்க்கு தேங்கா கிட்டினதுமாதிரியாக்கும். உள்ளதெல்லாம் பட்டும் பாத்திரமும். இதை பணமாக்கணுமானா செட்டிப்பிள்ள இல்லாட்டி ரெட்டிப்பிள்ளைட்டதான் போகணும்…. அப்பவே பிடிச்சு கட்டி தம்பிமாருக்கு ஆளனுப்பிப்போடுவாங்க….அத சிந்திச்சு செய்தா உங்க தல தப்பும்”

”அத விடும்வே ரெட்டி. செட்டியும் ரெட்டியும் இல்லேண்ணா துலுக்கன்கிட்ட போறம். வாயில நாக்கிருந்தா வழியில சோறிருக்குவே…. பின்ன உம்ம சரக்க கொள்ளயிடப்போறம்ணு நாங்க சொல்லல்ல. நாங்க பகவதிக்குக் கெட்டுப்பட்ட பரிஷகளாக்கும். கூலிபேசணும், அவ்ளவுதான்”

”என்னவேணும் , அதைச் சொல்லும்வே ” என்றார் நரசிம்மலு ரெட்டி.

”நூறு பொன்பணம் எண்ணி வைக்கணும்…. இல்லாத பற்றாது…”

அனும ரெட்டி தன்னை மறந்து ”நூறு பொன்பணமா…வேய் ” என்று பாய்ந்துவிட்டான்

”என்னவே ரெட்டிக்குட்டி துள்ளுகேரு ? குண்டியில கேற்றிப்போடுவேன்… அம்மைப்பாலு வெளிய வரும்.. என்ன? ”என்றான் கண்டன் நாயர். அனும ரெட்டி அவனுடைய முகமாற்றம் கண்டு நடுங்கிவிட்டான் .” வே வலிய ரெட்டி சொல்லிவை…. இது குந்தமாக்கும். குடலுமாலையிட்டாக்கும் குந்தத்துக்கு நாங்க பலி குடுக்கது…”

”நூறு பொன்பணம்னா…எங்க வேவாரமே அதுக்குள்ளத்தான்… நாயரு கொஞ்சம் சிந்திக்கணும்”

”இது கம்போளமில்லவே ரெட்டி மயிராண்டி, கள்ளியங்காடாக்கும். இங்க பேச்சு இல்ல. வச்சா வச்ச வெல. என்ன?”

”எங்க கிட்ட இருந்தா குடுக்கதுக்கு என்ன?” என்றார் நரசிம்மலு ரெட்டி ”அம்ம சத்தியமா படியளக்க பெருமாள் மேல ஆணையா பணம் இல்ல”

”செரி, அப்பம் இதுவரைக்கும் வந்ததுக்குள்ள கூலி குடுத்து நம்மள பிரிச்சுவிடும்வே. மேலே போறது உம்ம பாடு”

”அதெப்டி…இந்தக் காட்டில…”

”நீ குடுத்த கூலிக்க கணக்கு இங்க தீருது . மேலே வரணுமானா நூறு பொன்பணம். இல்லேண்ணா கூலியக் குடுத்து கணக்கு தீரும்வே…”

”அதெப்டி இங்க கணக்கு தீந்தா பின்ன உங்க சோலிய இதுக்குமேல காட்டுவீங்களே” என்றார் நரசிம்மலு ரெட்டி. நாயர் புன்னகை செய்ய மற்றவர்களும் சிரித்தார்கள்.

நரசிம்மலு ரெட்டி குரலைத்தாழ்த்தினான் ” போறவழியானா கையில பணமிருக்கும். வாறவழியில சரக்குமட்டுமில்லா இருக்கு. என்ன செய்ய? கொஞ்சம் தயவு காட்டணும்….”

”பணமிருக்கா இல்லியாண்ணு நாங்க பாக்கோம்…” என்றபடி கண்டன் நாயர் முன்னால் வந்தான். நரசிம்மலு ரெட்டி வண்டி மறைவுக்கு விலகுவதற்குள் அவர் முகத்தைச் சேர்த்து ஓங்கி அறைந்தான். அவர் முகத்தைக் கையால் பொத்தியபடி அப்படியே குனிந்து விழப்போக ஓங்கி இடுப்பில் உதைத்துத் தள்ளினான்.

தன் கத்தியை உருவியபடி அனும ரெட்டி ‘டேய்” என்று கத்திக்கொண்டு பாய முயன்றாலும் குரலெழாமல் சிலம்பி, அறுத்த ஆட்டின் சதைபோல கைகால்கள் துடித்தன. பின்னால் நின்ற நாயர் வாரிக்குந்தத்தால் அவன் தலையில் அடிக்க அவன் தலைக்குள் ஒரு வெடிப்பொலியும் கண்களின் ஒளிச்சிதறல்களும் எழ குப்புற மண்ணில் விழுந்தான். ஏழெட்டுபேர் அவனை மிதித்தார்கள். அவனுக்கு வலிதெரியவில்லை, அச்சம் மட்டுமே இருந்தது. புரண்டு எழுந்து அடியைத்தடுத்தபடி கைகூப்பி ” தம்புரானே தம்புரானே ”என்று கூவி அழுதான்.

அவர்கள் இருவரையும் தூக்கி காட்டுக்கொடிகளால் கைகால்களைக் கட்டி வண்டிச்சக்கரத்திலேயே கட்டிப்போட்ட பின் உடைகளை கோமணம் வரை அவிழ்த்து முரட்டுத்தனமாக உருவி எடுத்தார்கள். தன் உடைகளைக் களைந்தவனின் கைகள் உடலில் பட்டபோது அனும ரெட்டி கூசி உடல் துள்ளினான். பற்களால் கீழுதட்டைக் கடித்தபடி தன்னை குறுக்கிக் கொண்டான்.

கண்டன் நாயர் அவர்கள் மடிசீலையில் இருந்த நாணயக்கிழிகள் எல்லாவற்றையும் எழுத்துக்கொண்ட பின் உடையில் பல்வேறு இடங்களில் சிறுசிறுகிழிகளாக வைத்திருந்த நாணயங்களையும் தேடித்தேடி எடுத்தான். கைவிரல்களில் போட்டிருந்த மோதிரங்கள் கழுத்தில் தாயத்து கோத்து போட்டிருந்த கட்டிச்சங்கிலி இடுப்பில் கிடந்த தங்க அரைஞாண் என ஒவ்வொன்றாக பொறுமையாக அறுத்தும் உருவியும் எடுத்தான். அனும ரெட்டியின் காதில் கிடந்த கடுக்கன்களைக் எளிதாக கழட்ட முடிந்ததென்றாலும் நரசிம்மலு ரெட்டியின் கடுக்கன்களை காதுச்சதையுடன் சேர்த்து பிய்த்து எடுக்கவேண்டியிருந்தது. அவர் ”பெருமாளே பெருமாளே”என்று ஓலமிட்டபோது ஒரு நாயர் குந்தத்தால் அவர் வயிற்றில் குத்தினான்.

அனும ரெட்டி முதல் சிலகணங்கள் காடெல்லாம் கண்களாக அவன் நிர்வாணத்தைப்பார்க்கும் உணர்வை அடைந்து உடலைக் குறுகவைத்து அந்தரங்கத்தை மறைப்பவன் போல துவண்டான். நெளிந்தும் வளைந்தும் முயலும்தோறும் கைகளின் கட்டுகள் இறுகி வலியெழுந்து ஒரு தருணத்தில் ஒன்றும் நடக்காது என்ற உணர்வு சோர்வாக அவன் மீது படர்ந்து ”அம்மா” என்று விம்மியழுதபடி தளர்ந்தான். அவர்கள் கிழிகளை அவிழ்த்து நாணயங்களை ஒரு சீலையில்கொட்டுவதையும் அவர்களின் கண்களின் வெறிப்பையும் உடலின் பரபரப்பையும் பார்த்துக்கொண்டிருந்தபோது அவன் தான் வேடிக்கைபார்ப்பதையே விசித்திரமாக உணர்ந்தான். பின்னர் எல்லாமே வேடிக்கையாக மாறி அவன் அச்சம் அழிந்தது.

கண்டன் நாயர் ஒன்றுக்கு இருமுறை எண்ணியபின் ” டே பாருங்கடே, பின்ன வந்து நம்ம மடிசீலைய பிடிக்கப்பிடாது. நூத்துப்பதினாறு பொன் பணம் ,இருநூற்றி எண்பது வெள்ளிப்பணம். செம்புச்சல்லி நாநூற்றுச்சில்லற. பின்ன உருப்படி இம்பிடு….” நரசிம்மலு ரெட்டியிடம் திரும்பி ”கேட்டியாவே, ரெட்டிப்பிள்ள இதில நூறுபணம் கூலியாக்கும். கேட்டப்ப குடுத்திருந்தா மிச்சத்த விட்டிருப்போம். இப்பம் அதெல்லாம் பகவதி கணக்கிலல்லா போகுது…. என்ன செய்ய?” என்றான்.

நரசிம்மலு ரெட்டி”எல்லாத்துக்கும் மேலே ஒரு கணக்கு உண்டு நாயரே” என்றான்.

”இங்க பாரு ரெட்டிப்பிள்ள நாங்க கள்ளனும் மோஷ்டாவும் ஒண்ணும் இல்ல. நல்ல மூத்த தறவாட்டு நாயம்மாராக்கும். எங்களுக்கு எங்க ரீதிகள் சிலது உண்டு. நாங்க இப்ப உம்ம கிட்ட திருடினோமா? சொல்லும்வே…திருடினோமா?”

”இல்ல” என்று நரசிம்மலு ரெட்டி முனகினார்.

”ஆ, அப்டி சொல்லு…. இது கூலி. எங்க கூலிய நாங்க எடுக்கோம்….டே அவுத்துவிடுடே… துணிய உடுக்கட்டு…எம்பிடு நேரம்தான் செண்டைக்கோலும் கிலுக்குமணியுமாட்டு நிப்பான்?நாய் நரி கடிச்சா சுசீந்திரம் பங்கிக்கும் குங்கிக்கும் ஆரு பதில் சொல்லுகது?”

கட்டுகள் அவிழ்ந்து துணிகள் மேலே வந்து விழுந்ததும் அப்படியே அள்ளிக்கொண்டு ஓடி புதர்மறைவில் நின்று அணிந்துகொண்டதும் அனும ரெட்டி ஆறுதலாக உணர்ந்தான். பெருமூச்சுடன் உடலை நிமிர்த்திக் கொண்டு புன்னகைசெய்தான் . அதுவரை இழிவான ஒரு மிருகம் மாதிரி இருந்து மீண்டும் மனிதனாக ஆகிவிட்டதுபோல் உணர்ந்தான்.

”அப்ப வண்டியிலே ஏறுங்க ரெட்டியாரே….நேரமாச்சுல்ல்லா? வேகம் போனாத்தானே ஸ்தலமெத்தலாம்”என்றான் கண்டன் நாயர். மீண்டும் வண்டியில் ஏறி அமர்ந்தபோது அனும ரெட்டி தன் தலையில் அடிபட்ட இடத்தில் வலி தொட்டுத் தொட்டுத் தெறித்த போதிலும் கூட உற்சாகமாக உணர்ந்தான். ஊர் திரும்பியதும் இதை எப்படியெல்லாம் சொல்ல முடியும் என்று அப்போதே அவன் மனம் சொற்களைக் கோக்க ஆரம்பித்தது. சாவடிக் கல்திண்ணையில் அவனைச் சுற்றி அப்படி ஒரு கூட்டம். ஒருவன் வெற்றிலைத்தட்டை அவனுக்காக நீக்கி வைக்கிறான். எல்லாரும் ஆவலாக அவனையே பார்க்கிரார்கள். கதைகேட்பவன் சொல்பவனாக ஆகிவிட்டிருக்கிறான். அவன் அரசமரத்து வேரில் நன்றாகச் சாய்ந்துகொண்டு கதையைச் சொல்கிறான்.

ஒன்றும் நடக்காதது போல மூத்த நாயர் பாட்டை தொடர்ந்தார்.

”பரசுராமன் தன் மழுவெறிஞ்ஞல்லோ
பண்டொரு பூமியெ வீண்டெடுத்து
சேரனும் வீரனும் வாழுந்ந மண்ணல்லோ
கேரளம் எந்நோரு பேராயீ ”

கள்ளிக்காடு தாண்டியதும் பஞ்சவன்காட்டின் ஓங்கிய மரக்கூட்டங்கள் இருபக்கமும் நெரிபட்டு தெரிய ஆரம்பித்தன. காட்டுக்குள் உச்சிக்கதிர்கள் கண்ணாடிப்பட்டு இழைகள் போல இறங்கி சருகுமெத்தையிலும் உள்ளங்கை விரித்த இலைகளிலும் வெள்ளிவட்டங்களாக விழுந்து கிடப்பதையும் காற்றில் அவ்வட்டங்களும் கற்றைகளும் அசையும்போது காடே நிழலாட்டமாக மாறுவதையும் கண்டான். சற்றுமுன் நடந்தவையெல்லாம் வெகுதொலைவில் நடந்ததுபோல் மாறி உள்ளே எங்கோ சுருங்கிச்செல்ல அவனை காடு முழுக்கவே இழுத்துக் கொண்டது. பாதையை முறித்துக் கடந்த நீரோடைகளில் வண்டி இறங்கும்போது அவன் திடுக்கிட்டு விழித்து மரங்களின் தலைக்குமேல் எழுந்து யானைமத்தகம்போல வெயிலில் குளித்து நின்ற வேளிமலையின் சிகரமொன்றைக் கண்டு வியப்புடன் கண்விரிய நோக்கி மீண்டும் மெல்லமெல்ல கனவில் ஆழ்ந்தான்.

ஆளூர் உலகமுழுதுடையாள் ஏரிவந்தது. அது முழுக்க ஆம்பலாலும் குவளையாலும் மூடி பெரும்புல்வெளி போல கிடந்தது. கரிய தண்டுகளுடன் கொத்துகொத்தாகப் பூத்து பலகணியில் கைவைத்து சாய்ந்து தெருவைப்பார்க்கும் பெண்கள்போல் ஏரிக்குள் சரிந்து நின்ற ஆற்றுநொச்சிக் கிளைகளெங்கும் வாகைநெற்று போன்ற அலகுகளும் முறம்போன்ற பெரிய வெண்சிறகுகளும் கொண்ட செங்கால்நாரைகளும் நீளமான தூவலை தலையிலேந்திய கொக்குபோன்ற சிறிய பூந்தலைநாரைகளும் அமர்ந்து உக் உக் உக் என்று ஒலித்துக் கொண்டும் ஏரியின் பச்சைப்பரப்பின் மீது சிறகுகளை விரித்து வெண்மேகத்துண்டுகள் போல மெல்ல சுழன்றுபறந்துகொண்டும் இருந்தன.

ஏரிக்கரைக்கு அப்பால் சென்றதும் கண்டன் நாயர் நின்றான். ”அப்போ இதுக்குமேல ஆளூர் வருது. அங்கபோயி ஒரு அடியாளனைக் கூட்டிட்டு வீராணிக்காடு தாண்டினா நேரா எரணியல். எல்லாம் நல்லபடியா வரும். இனி ஒரு அபாயமும் இல்ல” என்றான். ”ஆளூருக்குள்ள நாங்க வர முடியாது.அங்க உள்ளவனுக வேற மாதிரிப்பட்ட ஆளுகளாக்கும். ஒரு மட்டுமரியாத இல்லாத கூட்டம்…. குடும்பத்தில் பெறந்தவனுக எடபழகக் கொள்ளாது ”என்றான் .வண்டியில் இருமுறை தட்டிய பின்னர் ” அப்போ காணாம்…. ஒந்நும் மனசில வச்சுக்கிடவேண்டாம். நாங்க எடுத்தது எங்க கூலியாகும். சோலிண்ணாக்க அதுக்கு ஒரு கூலீண்ணு உண்டுல்லா? ”

நரசிம்மலு ரெட்டி ”செரி”என்று தலையை அசைத்தான்.

”கைச்செலவுக்கு பணம் வேணுமில்லா ரெட்டியாரே… இந்தாரும்வே…” அவன் பத்து வெள்ளிப்பணத்தை நரசிம்மலு ரெட்டி கையில் கொடுத்தான்.

அவர்கள் திரும்பிச்செல்வதை வெற்றுப்பார்வையுடன் நரசிம்மலு ரெட்டி பார்த்திருந்தார். திரும்பி வண்டிக்காரனிடம் ”வண்டிய எடுலே மாடா ” என்றார். வண்டி குலுங்கி நகர்ந்தபோது அனும ரெட்டிக்கு தோன்றியது அண்ணனிடம் இன்னும் பணம் இருக்கிறது என்று. எங்கே? சுத்தம்செய்த ஆட்டுக்குடலில் நாணயங்களைப் போட்டு நன்றாகக் கட்டி குதத்துக்குள் செருகிக்கொள்ளும் வழக்கம் ரெட்டிகளிடம் உண்டு என்று கேட்டிருக்கிறான். அவனுக்கு அப்போது அது உறுதியாகத் தெரிந்தது. அதனால்தான் அண்ணா நடப்பதேயில்லை. உட்கார்வதுகூட குறைவு. அனும ரெட்டி அண்ணாவின் அறுந்த காதுகளில் ரத்தம் உறைந்து கருமை கோண்டிருப்பதை பார்த்து பெருமூச்சு விட்டான்.

[எழுதிவரும் அசோகவனம் நாவலின் முதல் அத்தியாயம் இது.]