அஞ்சலி : கௌரிஷங்கர்

1

 

கடைசியாக கௌரிஷங்கரைப் பார்த்தது தேவதச்சனிடம் விஷ்ணுபுரம் விருதை அவருக்கு அளிக்கவிருப்பதாகச் சொல்வதற்காகச் சென்றபோதுதான். தேவதச்சனின் வீட்டுக்கு அருகேதான் குடியிருந்தார். இறுதியாக நாகர்கோயிலில் உதவி மாவட்ட ஆட்சியராக பணியாற்றினார். அப்போது சிலமுறை சந்தித்திருக்கிறேன்

 

முழுமையாக மாறியிருந்தார். நெற்றியில் குங்குமம் விபூதி. லேசான தாடி .ஓய்வுபெற்ற அரசதிகாரிகளுக்குரிய கொஞ்சம் நிமிர்வும் கொஞ்சம் அலட்சியமும் கலந்த பேச்சு. அவருக்கே உரிய அலட்சியமான இலக்கிய அபிப்பிராயங்கள். உற்சாகமாக நெடுநேரம் பேசிக்கொண்டிருந்தோம். தேவதச்சனைப்பற்றிய ஆவணப்படத்திலும் நடித்திருந்தார்

 

நான் தேவதச்சனை 1986ல் முதல்முறையாக கோயில்பட்டியில் சென்று பார்த்தபோதுதான் கௌரிஷங்கரைப் பார்த்தேன். பெல்பாட்டம் பாண்ட். ஆட்டுக்காது காலர்கொண்ட சட்டை. பட்டைக்கண்ணாடி. தலைகீழ் ப வடிவ மீசை. அதே அலட்சியப்பேச்சு. அன்று தமிழ்க்கவிதையுலகின் ஊழல்களைப்பற்றி உரக்கப்பேசினார். குமாஸ்தாவாக இருந்தவர் பதவி உயர்வுபெற்று தாசில்தார் ஆகியிருந்தார். தேவதச்சனை கடுமையாகத் தாக்கிப்பேசினார். தத்துவத்த உருட்டி வச்சா அது கவிதையா என்றார். தேவதச்சன் மகிழ்ந்து தலையாட்டிச் சிரித்தார்

 

இதயநோய் இருந்திருக்கிறது. அதற்கு மருத்துவச்சிகிழ்ச்சை எடுத்துக்கொள்ள மறுத்திருக்கிறார். நோய் இல்லை என்ற பாவனையில் உற்சாகமாக இருந்திருக்கிறார். இறப்பு அணுகிவிட்டது. செல்வேந்திரன் அவரது இறப்பை அழைத்துச்சொன்னபோது அந்த சிரிப்புதான் நினைவில் நின்றது. ஒருவகையில் அவர் செய்தது சரி என்றே படுகிறது. கடைசிக்காலத்தில் நோய்களுக்கு சிகிழ்ச்சை செய்கிறேன் என்று அதுவரை கஷ்டப்பட்டு சம்பாதித்ததை எல்லாம் டாக்டர்களுக்குக் கொடுத்துவிட்டு பிள்ளைகளுக்கு கடனையும் சேர்த்துவிட்டுச் செல்வதில் பொருள் இல்லை. என் கொள்கையும் அதுவே.

 

அதிகம் எழுதியவர் அல்ல. ஒரு கவிதைத்தொகுதியே வந்திருக்கிறது. மழைவரும்வரை. கோயில்பட்டி கவிதை மரபுக்குச் சம்பந்தமில்லாதபடி அது வானம்பாடி பாணியிலான உருக்கமான காதல்கவிதைகள். ஒரு சிறுகதைத் தொகுதி முந்நூறு யானைகள். வண்ணதாசன் பாணிக்கதைகள். வம்சி பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. தமிழிசையில் ஆர்வம் கொண்டவர். காருக்குறிச்சி அருணாச்சலம் பற்றி ஓர் ஆவணப்படம் எடுத்திருக்கிறார். திரைத்துறையில் இறங்கவேண்டும் என ஆர்வமிருந்தது. அதில் பல ஏமாற்றங்கள். நான் திரைத்துறையில் அடைந்த ‘வெற்றி’ பற்றி ஆர்வமாகப் பேசிக்கொண்டிருந்தார்

 

நண்பருக்கு அஞ்சலி

முந்தைய கட்டுரைநிலா எங்கே போகிறது?
அடுத்த கட்டுரைதேவதச்சன் ஆங்கிலத்தில்