பகுதி இரண்டு : தாழொலிக்கதவுகள் – 6
அஸ்தினபுரியின் அவையில் தன் செய்தியை அறிவிப்பதற்காக காத்திருந்தபோது உள்ளம் நிறைவின் அமைதிகொண்டிருப்பதை கர்ணன் உணர்ந்தான். தீர்க்கசியாமனின் புன்னகையின் கணம் அவன் அகம் முழுதடங்கி குளிர்ப்பரப்பாக ஆகிவிட்டிருந்தது. துரியோதனனின் அவைக்கு எப்போதும் அவன் அரசனுடனேயே வருவதுதான் வழக்கம். அவைகூடுவதற்கு முன்னரே அவன் அரசனின் மந்தண அறைக்கு சென்றுவிடுவான். அங்கே தம்பியருடன் உரையாடிக்கொண்டிருக்கும் அரசனுடன் அமர்ந்து அவை நிகழ்வுகளை தொகுத்துக்கொள்வான். அழைப்புவந்து துரியோதனன் கிளம்புகையில் “அங்கரே, என்னுடன் வருக” என்று அழைத்து தன்னுடன் கூட்டிச்செல்வான்.
துரியோதனனின் வலப்பக்கம் கர்ணனும் இடப்பக்கம் துச்சாதனனும் பின்னால் பிற தம்பியரும் வருவார்களென்பதை அவையும் அஸ்தினபுரியின் குடிகளும் நன்கறிந்திருந்தனர். வலப்பக்கம் என்றே அவனை அமைச்சில் சொல்லிக்கொண்டனர். எச்சொல்லுக்கு முன்னாலும் துரியோதனன் கர்ணனிடம் ஒரு நோக்கு கண்களால் கலந்துகொள்வதுண்டு. கர்ணனுக்கு அவனுடன் பேச விழிகளே போதுமென்றாகியிருந்தது.
அன்று அவன் அரசனின் மந்தண அறைக்கு செல்லவில்லை. பிந்திவிட்டது. அவைக்கு நேராகவே வந்துவிடுவதாக செய்தியனுப்பிவிட்டான். அவன் அவைக்கு வந்தபோது விதுரர் மட்டுமே இருந்தார். அவன் துரியோதனனுக்கு இடப்பக்கமாக சிற்றரசர்களுக்குரிய நிரையில் இடப்பட்ட அங்கநாட்டின் சூரியமுத்திரை பொறித்த தன் இருக்கையில் அமர்ந்துகொண்டதும் அவனுக்குப் பின்னால் அவனுடைய யானைச்சங்கிலி பொறிக்கப்பட்ட கொடியை அவைச்சேர்ப்பன் அமைத்தான். கிருபரும் துரோணரும் பேசிக்கொண்டு வந்தனர். சகுனி தலைகுனிந்து முன்னால் வர அவருக்குப் பின்னால் வந்த கணிகர் அவைக்குள் புகாமல் பக்கவாட்டில் விலகி அமைச்சு அறைக்குள் சென்றார்.
இறுதியாகத்தான் பீஷ்மர் வந்தார். நீண்டகால்களில் வெட்டுக்கிளி தாவுவதுபோல வந்து மரவுரி விரித்த தன் பீடத்தில் நிமிர்ந்து அமர்ந்து தாடியை நீவத்தொடங்கினார். அவருக்கு கிருபரும் துரோணரும் அளித்த முகமன்களுக்கும் வணக்கத்திற்கும் மட்டுமே செவியும் விழியும் அளித்தார். மகளிர் அவையில் பானுமதியும் மூத்த கௌரவரின் துணைவியரும் வந்து அமர்ந்தனர். பானுமதி அவன் விழிகளை நோக்கி என்ன என வினவ அவன் விழியசைவால் இல்லை என்றான். அவை நிறைந்துகொண்டிருந்தது. குடமுகட்டில் முழக்கம் குவிந்தது. வண்ணங்களின் ஒளியால் வெண்சுதைச் சுவர்கள் நெளியத்தொடங்கின.
முரசொலித்ததும் அவை அமைதிகொண்டது. மங்கல இசை எழுந்தது. பீஷ்மரும் கிருபரும் துரோணரும் அன்றி பிறர் எழுந்து வாழ்த்தொலி கூவ தம்பியர் சூழ துரியோதனன் அவைக்குள் நுழைந்தான். மஞ்சளரிசியும் மலரும் தூவி அவை அவனை வாழ்த்தியது. வைதிகர் கங்கைநீர் தெளித்து அவனை வரவேற்று அரியணையில் அமரச்செய்தனர். அவன் தலைக்குமேல் வெண்கொற்றக்குடை எழுந்தது. ஏவலர் பொற்தாலத்தில் கொண்டுவந்த மணிமுடியை வைதிகர்தலைவர் எடுத்து அவனுக்கு சூட்டினார். அமைச்சர் இருவர் எடுத்து அளித்த செங்கோலை வாங்கிக்கொண்டு அரியணையில் அமர்ந்தபோது பீஷ்மரும் துரோணரும் கிருபரும் அவனை கைதூக்கி வாழ்த்தினர்.
துரியோதனனின் விழிகள் வந்து கர்ணனை சந்தித்து மெல்லிய புன்னகையுடன் மீண்டன. நிமித்திகன் அறிவிப்புமேடையில் ஏறி நின்று அவன் குலவரிசையைக் கூறி வாழ்த்துரை அளித்து இறங்கியதும் சௌனகரின் இளையவரான முதன்மை அமைச்சர் கௌசிகர் எழுந்து அன்றைய அலுவல்களை அறிவித்தார். விதுரர் ஓலைகளை நோக்கி எடுத்தளிக்க குறிப்பிட்ட துறையைச் சேர்ந்த அமைச்சர்கள் எழுந்து அந்த ஓலைகளை வாசித்தனர். நீட்டில் நெறியும் முறியில் ஆணைகளும் நறுக்கில் செய்திகளும் பொறிக்கப்பட்டிருந்தன. அவையும் அரசரும் கேட்ட வினாக்களுக்கு அமைச்சர்கள் மறுமொழி சொன்னார்கள்.
கர்ணன் தன் கண்களை மட்டும் அவையில் நிறுத்தி அமர்ந்திருந்தான். அத்தனை சொல்லாடல்களும் உருகியிணைந்து ஒற்றைச்சொல்லாக மாறிவிட்டிருந்தன. அது அவனை ஒருவகையான ஊழ்கநிலைக்கு செலுத்தியது. அவன் கோதையின் கரையில் நாணல்கள் மண்டிய சதுப்பில் ஒரு புலிக்காக காத்திருந்தான். சற்று அப்பால் பரசுராமர் கண்மூடி அமர்ந்திருந்தார். நாணல்கள் காற்றில் என அசைந்தன. புலியின் வால் மேலெழுந்து தெரிந்தது. நினைவில் ஒரு சொல் எழுவதுபோல புலி எழுந்து வந்தது.
நாணலை வகுந்து புலி மிகமெல்ல காலெடுத்துவைத்து அணுகியது. புலிக்காலின் மந்தணம். புலிக்கண்களின் அறைகூவல். நாணல்காட்டின் ஒரு துண்டுபோலிருந்தது அது. அவன் அந்த விழிகளை நோக்கினான். மானுடவிழிகளை முழுமையாக மறுக்கும் வெறிப்பு. விழிகளுக்குள் நின்றிருக்கும் விழிகள். இரு நீல அகல்சுடர்கள்போல. புலி அவன் உள்ளத்தை உணர்ந்துகொண்டது. நாவால் மூக்கை நக்கியபடி திரும்பி அவனை கடந்துசென்றது. அதன் உடலில் நாணலிதழ்கள் அசைந்தன. அதன் தளர்ந்த தோல்பரப்பு இழுபட்டு நெளிந்தது. நினைவென அது அவன் விழிமுன் இருந்து மறைந்தது.
அவைச்செயல்பாடுகள் முடிந்துவிட்டன என்பதை ஒலிமாறுபாட்டிலிருந்து அவன் அறிந்துகொண்டான். பெருமூச்சுடன் மீண்டு உடலை எளிதாக்கி கால்களை நீட்டினான். அவனிடம் பரசுராமர் “நீ அப்புலியிடம் எதைக் கண்டாய்?” என்று கேட்டார். துரோணர் “நூல்களை நம்பி அரசாளமுடியாது வணிகரே. நூல்கள் சென்றகாலத்தையவை” என்றார். “சென்றகாலத்துச் செல்வம் மேலும் பொருளுடையது” என்றார் கலிங்க வணிகக் குழுவின் தலைவர். பரசுராமர் “புலி அனல்வடிவானது. அணையாது எரியும் தழல் அது” என்றார். துரியோதனன் “வணிகர்கள் நிலையான நெறிகளைக் கோருகிறர்கள். ஏனென்றால் அதை மீறும் வழிகளை அதன் பின்னரே வகுக்கமுடியும் அவர்களால்” என்றான். அவை நகைத்தது.
“இருளில் அவற்றின் விழிகளை பார். எரிதுளிகள். விழிகளிலிருந்து பற்றிக்கொண்டு தழலாடுகிறது புலி.” கர்ணன் பெருமூச்சுடன் கண்களை மூடி தன் கன்னங்களை கைகளால் உரசிக்கொண்டு முழுமையாக மீண்டான். “அங்கர் துயிலெழுந்துவிட்டார். நாம் அவைநிறைவுசெய்யும் நேரமாகிவிட்டதென்று பொருள்” என்று துரியோதனன் சொல்ல அவை நகைத்தது. கர்ணன் புன்னகைத்தான். விதுரர் “அவை முழுமை அடையட்டும்… இனி அமைச்சு அலுவல்கள் மட்டுமே. அரசாணை ஏதும் தேவையில்லை” என்றார்.
நிமித்திகன் அறிவிப்புமேடைமேல் ஏறி கொம்பை ஊதி அவை நிறைவை அறிவித்தான். அதன்பின்னர் பீஷ்மரோ துரோணரோ அளிக்கும் அன்றாட அறிவிப்புகள் இருக்கும் என்பதனால் அவை கலைந்த ஒலியுடன் அமர்ந்திருந்தது. கர்ணன் முற்றிலும் புதியவன் போல அவையை விழிசூழ்ந்தான். கங்கைக் கரையின் புதிய இரு துறைமேடைகளை அமைப்பதைப் பற்றிய விவாதம் அவையில் முடிந்து அதற்கான ஆணைகளை விதுரர் சொல்ல கனகர் எழுதிக்கொண்டார். சகுனி சற்றே உடல் சரித்து ஒற்றர்தலைவர் சத்யசேனரிடம் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருந்தார். துரியோதனன் தன்னருகே நின்ற துச்சாதனனிடம் உதடசைவாலேயே பேசிக் கொண்டிருந்தான்.
பீடம் அசையும் ஒலியுடன் எழுந்த கர்ணன் கைகளைத் தூக்கி “இப்பேரவைக்கு நான் ஒன்றை உரைக்க வேண்டியுள்ளது” என்றான். விதுரர் கனகரிடம் நிறுத்தும்படி கை காட்டிவிட்டு நிமிர்ந்து நோக்கினார். பீஷ்மரின் பழுத்த விழிகள் உணர்வு எதையும் காட்டவில்லை. துரோணர் கிருபரிடம் பேசிக்கொண்டிருந்த கையசைவு அந்தரத்தில் நிலைக்க நோக்கினார். கர்ணன் “முதன்மையான செய்தி அல்ல. எளிய நிகழ்வுதான்” என்றான். “என் மணநிகழ்வை இங்கு அறிவிக்கவிருக்கிறேன்.”
அப்போதும் பின்நிரைகளில் குடியவை கலைந்து ஓசையிட்டுக் கொண்டிருந்தது. துரியோதனன் அச்சொற்களை உள்வாங்காமல் வெறித்த விழிகளுடன் உமிழ்தொட்டியை அருகே கொண்டுவரும்படி அணுக்கரிடம் கைகாட்டினான். அரசியர் பகுதியில் பானுமதி சிறிய ஓலைத்துணுக்கில் சாயத்தூரிகையால் ஏதோ எழுதிக் கொண்டிருக்க சேடி ஒருத்தி குனிந்து அதை பார்த்துக்கொண்டிருந்தாள். பிற அரசியர் தங்கள் முகத்திரைகளை இழுத்துவிட்டு சொல்லாடிக் கொண்டிருந்தனர். களஞ்சியக்காப்பாளர் மனோதரரும் அரண்மனைச்செயலர் பூரணரும் எல்லைக்காவலர் தலைவர் கைடபரும் பேச்சை நிறுத்தி ஒருகணம் நோக்கிவிட்டு மேலும் பேசத்தொடங்கினர்.
விதுரர் எழுந்து கைகளை வீசி “அமைதி! அங்க நாட்டரசர் ஏதோ சொல்ல விழைகிறார்” என்றார். மீண்டும் ஒருமுறை அவர் கூவியபோதுதான் அவை அதை அறிந்தது. அமைச்சர் தன்னருகே இருந்த மணியை முழக்க அவை திரும்பி நோக்கியது. “அமைதி அமைதி” என்றார் விதுரர். பூரணர் எழுந்து “பேரமைச்சரின் ஆணை! அமைதி” என்று கூவினார். துரியோதனன் உமிழ்தொட்டியில் துப்பி அதை கொண்டுசெல்ல கைகாட்டிவிட்டு சற்று முன்சரிந்து செவிகூர்ந்தான். பீஷ்மர் மட்டும் விழிகள் முனைகொண்டிருக்க அசையாது அமர்ந்திருந்தார்.
அவை ஒலியடங்கியதும் கர்ணன் கைகூப்பியபடி “அரசே! அவையோரே! உங்களை வணங்குகிறேன். இந்த அவைக்கு என் மணநிகழ்வை நான் அறிவிக்க வேண்டியுள்ளது. எந்தையின் ஆணைப்படி என் குலத்தைச் சேர்ந்தவரும் அஸ்தினபுரியின் குதிரைக் கொட்டடிக் காப்பாளருமான சத்யசேனரின் மகளை முறைப்படி கைபற்றுவதாக உள்ளேன்” என்றான். அவையில் அமைதி நிலவியது. துரியோதனன் துச்சாதனனிடம் “இன்றே செல்லட்டும்” என்று மெல்லிய குரலில் சொன்னது அவை முழுக்க கேட்டது.
துரியோதனன் அந்தச் சொற்களை உணரவில்லை என்பதை அறிந்த விதுரர் “மணம் கொள்ளவா? அங்க நாட்டரசே, எவரை மணக்கவிருக்கிறீர்கள்?” என்றார். அவர் கேட்பதன் நோக்கத்தை உணர்ந்த கர்ணன் மேலும் அழுத்தமான குரலில் “என் குலத்தைச் சேர்ந்த சத்யசேனரின் மகளை. அவர் இங்கு குதிரைக் கொட்டடிக் காப்பாளராக இருக்கிறார். எந்தையின் தோழர். எந்தை அவருக்கு வாக்களித்ததின்படி சூதர்குல முறைப்படி இம்மணம் நிகழவிருக்கிறது” என்றான்.
சினத்துடன் கைகளை ஓங்கி அரியணையின் கைப்பிடியில் அறைந்தபடி எழுந்த துரியோதனன் மேடையிலிருந்து இருபடிகள் இறங்கி “என்ன சொல்கிறாய்? மூடா! இந்த அவையில் சொல்லப்படும் சொற்கள் அனைத்தும் அழியாதவை என்று அறியாதவனா நீ?” என்றான். கர்ணன் “ஆம், அறிந்தே சொல்கிறேன். எந்தை கொடுத்த வாக்குக்கு நான் கடமைப்பட்டவன்” என்றான். “என்ன வாக்கு? உன் தந்தை குதிரைக் கொட்டடிக் காப்பாளர் மட்டுமே. நீ அங்க நாட்டுக்கு அரசன். நாளை உன் குருதியில் பிறக்கும் மைந்தன் அந்த அரியணையில் எதிர்ச்சொல் எழாது அமரவேண்டும்” என்றான் துரியோதனன்.
விதுரர் “தந்தைக்குக் கொடுத்த வாக்கு என்றால் அது தெய்வங்களின் ஆணையே” என்றார். துரோணர் “ஆனால் சூதன்மகள் எப்படி அரியணை அமரமுடியும்?” என்றார். “சூதன்மகன் நான் அமர முடியும் என்றால் அவளும் அமரமுடியும்” என்றான் கர்ணன். “முடியாது அங்க நாட்டரசே. வாள் கொண்டு நிலம் வென்றவன் அரியணை அமரலாம். அவன் கொல்லப்படாதவரை ஷத்ரியனே. ஷத்ரியனாகிய அவன் ஷத்ரிய குலத்தில் மட்டுமே மணம் புரிய முடியும்” என்றார் கிருபர்.
துரியோதனன் “என்ன பேச்சு இது? அப்படி ஒரு எதிர்ப்பு வருமென்றால் அதையும் வாளாலேயே எதிர்கொள்வோம். கர்ணா, உனக்கு அது விருப்பென்றால் அவ்வண்ணமே ஆகட்டும். நீ சூதர் மகளை மணந்து கொள். அவள் உன் பட்டத்தரசியாக முடிசூடி அங்க நாட்டு அரியணையில் அமரட்டும். எதிர்ச்சொல் எழும் எந்நாவும் கொய்து எரியப்படும் என்று என் படை கொண்டு நான் அறிவிக்கிறேன். பிறகென்ன?” என்றான்.
“இல்லை அரசே, நெறிகளின்படி அரசு அமைகிறது. மீறலுக்கும் அதற்குரிய நெறிகள் உள்ளன. வெறும் படைபலத்தால் எவ்வரசும் நிற்பதில்லை. அரியணையைத் தாங்கி நிற்பவை அக்குடிகளின் எண்ணங்களும் விழைவுகளும் மரபுகளும் நம்பிக்கைகளும்தான்” என்றார் துரோணர். “நல்லூழாக இன்று அவையில் பிதாமகர் அமர்ந்திருக்கிறார். அவர் சொல்லட்டும்” என்றார். அவையின் விழிகள் பீஷ்மரை நோக்கி திரும்பின.
கர்ணன் தன் மேல் பார்வையுணர்வை அடைந்து திரும்பி பானுமதியின் திகைத்த விழிகளையும் சற்றே திறந்த செவ்விதழ்களையும் நோக்கினான். துரியோதனன் பற்களைக் கடித்தபடி “கர்ணனை அங்க நாட்டு அரசனாக்கியபோது நான் பிதாமகரின் சொல் கேட்கவில்லை. என் உள்ளத்தின் சொல்லையே கேட்டேன். இன்றும் அதையே கேட்கவிருக்கிறேன்” என்றான். பீஷ்மர் அமர்ந்தபடியே கைதூக்கி “என் சொல்லை ஏற்பதும் மறுப்பதும் உன் விருப்பம் துரியோதனா. ஆனால் இங்கு குலநெறி ஏதுள்ளதோ அதைச் சொல்ல நான் உரிமை கொண்டவன்” என்றார். “குலநெறிப்படி அங்க நாட்டுக்கு கர்ணன் அரசனாகவில்லை” என்றான் துரியோதனன்.
“நீ அறிக, இப்புவியில் மானுடர் அனைவரும் நிகரே. ஆனால் முற்றிலும் நிகரானவர்கள் இணைந்து எந்த அமைப்பையும் உருவாக்க இயலாது. ஆகவேதான் ஒருவருக்கு மேல் பிறிதொருவர் என்று ஒர் இருபுற ஒப்புதலுக்கு மானுடர் வருகிறார்கள். அது இப்புவியில் அவர்கள் ஆடும் நாடகம் மட்டுமே. எந்த நாடகத்துக்கும் அதில் நடிப்பவர்களின் உளஒப்புதலே நெறிகளென அமைந்துள்ளது” என்றார் பீஷ்மர். அவரையறியாமல் எழுந்து நின்று கைதூக்கி குரல் ஓங்க பேசத்தொடங்கினார்.
“துரியோதனா, இங்கு கோட்டைக் காவல்மாடத்தில் வேலேந்தி காவல் நிற்பவனும் அரியணை அமர்ந்து பொற்கோப்பையில் யவனமது அருந்தும் நீயும் இணையான ஷத்ரியர்கள் என்றுணர்க! இந்நகரின் அழுக்குகளை சுமந்தகற்றும் இழிசினனோ இங்கு தருப்பை ஏந்தி பொற்குடத்தில் கங்கை நீருடன் நிற்கும் வேதியரோ மானுடர் என்ற வகையில் நிகரானவர்களே. அவன் அந்த வேடத்தையும் இவர் இந்த வேடத்தையும் ஏற்று இங்கு இந்த மாபெரும் நாடகத்தை அரங்கேற்றியுள்ளோம். அந்நாடகமே உன்னை அரசனாக்கியிருக்கிறது. என்னைப் பிதாமகனாக்கியுள்ளது. அதை கலைப்போமென்றால் அதன் பின் நீயும் நானும் மேலே வானும் கீழே மண்ணுமற்ற யோகியாக வேண்டும், அல்லது மறுவேளை உணவை எதிர்பாராத நாடோடியாக வேண்டும். அப்படி அல்லவென்றால் இதன் நெறிகளை ஏற்றேயாக வேண்டும்.”
“நானறிந்த நெறி ஒன்றே. என் உள்ளம் ஒரு போதும் ஒப்பாததை செய்து இங்கு அமர்ந்து எதையும் அடைய நான் விரும்பவில்லை” என்றான் துரியோதனன். “பிதாமகரே, நான் யோகியோ நாடோடியோ ஆக முடியாது போகலாம். ஆனால் வெறும் காட்டுமிராண்டியாக முடியும். அதற்கான ஆற்றல் என் நெஞ்சில் குடிகொள்கிறது. எனவே அச்சொல் என்னிடம் நிற்காது” என்றான். பீஷ்மர் முகம் சுளித்து “மன்னன் குருதியால் தேர்வானவனாக இருக்கவேண்டுமென முன்னோர் வகுத்தனர். ஏனென்றால் அது ஒன்றே தெய்வங்கள் வகுத்தது. பிற அனைத்தும் மானுடர் வகுத்தவை” என்றார்.
“அவை அறிக! தெய்வத்தால் தேர்வானவன் அரசன் எனில் மட்டுமே குடிகள் அவனை கேள்விக்கு அப்பாற்பட்டவன் என ஏற்பார்கள். மைந்தா, கேள்விக்கு அப்பாற்பட்ட தலைமையே போரிடும் குலங்களை ஒருங்கமைக்கும். பேரரசுகளை தொகுக்கும். ஓர் அரசில் தானும் அரசனே என அரசன் அன்றி ஒரே ஒருவன் நினைப்பான் என்றால்கூட அவ்வரசு நிலைகொள்ளாததே. ஆகவேதான் சூத்திரனோ வைசியனோ அரசனாகக்கூடாதென்றனர் முன்னோர். அறிக, நான்குவேதமும் பிரம்மஞானமும் கற்ற பிராமணனும் அரசனாகக் கூடாது. அரசாள விழையும் வைசியனும் சூத்திரனும் கொல்லப்படவேண்டும். வைதிகன் ஊர்விலக்கும் குலமறுப்பும் செய்யப்பட்டாகவேண்டும்…”
பீஷ்மரின் குரல் அவைக்கு மேல் எங்கிருந்தோ என ஒலித்தது. “குலநெறியே அரசனை உருவாக்குகிறது. அவன் மூத்த மைந்தனை அரசனாக்குகிறது. என்றும் அதை ஒட்டி ஒழுகியதனால்தான் நான் அரியணைப்போட்டியில் உன் தந்தையுடன் நின்றேன். உன்னை ஏற்றேன். நானறிவேன், என்குடியில் பிறந்த பேரறத்தான் தருமனே. அவனையே இங்குள்ள புழுவும் புள்ளும் அரசனாக விழையும். ஆனால் இது அஸ்தினபுரியில் எழும் வினா மட்டுமல்ல என்று எண்ணித் தெளிந்தேன். குலநெறியை மீறி நான் தருமனை ஆதரித்திருந்தேன் என்றால் பிதாமகனாக தவறான முன்செல்கையை காட்டியவனாக இருப்பேன். அது ஒன்றே என் உள்விழிமுன் தெரிந்தது.”
“மைந்தா, இதுவே என் இறுதிச்சொல். குலநெறியின் கட்டு அவிழுமெனில் பாரதவர்ஷம் சிதறியழியும். இன்றே இது வேதிப்பொருள் கலந்த குடுவைபோல கொதித்துக்கொண்டிருக்கிறது. இது எப்படி முடியும் என என் உள்ளம் துயிலற்று ஏங்குகிறது. பெரும் குலப்பூசலின் விளிம்பில் நின்றிருக்கிறது இப்பெருநிலம். போரிடத் தெரியும் என்பதனாலேயே நான் போரை அறிவேன். போர் எழுந்தால் நெறிகள் அழியும். பெண்டிர் இல்லம் இழப்பர். வயல்கள் தரிசாகும். நீர்நிலைகள் அழுக்காகும். பசியொன்றே போரின் விளைவு என்று அறிக!” அவரது மூச்சு எழுந்து ஒலித்தது. “என் வாழ்நாளெல்லாம் நான் இயற்றும் தவம் ஒன்றே, போரை தவிர்த்தல்.”
தளர்ந்து இடையில் கைவைத்து முதியவர் நின்றார். பின்னர் தனக்கென தலையை ஆட்டியபடி சொன்னார் “இப்போதுதான் குடிப்போர் ஒன்றைத் தவிர்த்து இந்நாட்டை இரண்டென பிளந்திருக்கிறோம். இன்னுமொரு பூசலை எவ்வகையிலும் நான் ஏற்கமாட்டேன்.” பின்பு திரும்பி அவையை நோக்கி “இது என் சொல். குலநெறிப்படி தன் வாள் வலியால் நிலம் வென்ற இவன் அரசனாகலாம். இவன் மணக்கும் சூதப்பெண் அரசியாக முடியாது” என்றார்.
“இந்த அவை பிதாமகரின் சொல்லை ஏற்கிறதா?” என்றான் துரியோதனன். அவை அமைதியாக இருந்தது. “சொல்லுங்கள் ஏற்கிறதா?” என்றான். துரோணர் “நான் பிதாமகரின் சொல்லுக்கு அப்பால் எண்ணுவதில்லை” என்றார். கிருபர் “ஆம், நான் ஏற்கிறேன்” என்றார். அவை கலைந்த ஒலியுடன் அசைவின்றி இருந்தது. முதன்மை அமைச்சர் கௌசிகர் கைதூக்கி ஏதோ சொல்வதற்குள் விதுரர் எழுந்து “அவை ஏற்பதோ மறுப்பதோ இங்கு வினாவல்ல. நாம் அங்க நாட்டு அரசரிடமே கேட்போம் அவர் என்ன எண்ணுகிறார் என்று” என்றார். கர்ணன் திரும்பி விதுரரின் விழிகளை பார்த்தான். அதிலிருந்த மன்றாட்டை புரிந்து கொண்டதும் அவன் தோள்கள் தளர்ந்தன.
“அரசே, நானும் பிதாமகரின் சொற்களையே ஏற்கிறேன்” என்றான். “என்ன சொல்கிறாய்? மூடா!” என்றபடி கீழிறங்கி கர்ணனை நோக்கி வந்த துரியோதனன் “என்ன சொல்கிறாய் என்று எண்ணித்தான் அவைக்கு எழுந்தாயா?” என்று கூவினான். “ஆம், என் துணைவியின் கருவில் பிறப்பவன் அரசாள வேண்டியதில்லை. அதுவும் என் தந்தையின் ஆணை என்றே கொள்கிறேன்” என்றான். திகைத்து விதுரரை நோக்கியபின் “இல்லை…” என்று துரியோதனன் பேச எழுவதற்குள் பானுமதி எழுந்து “அவையில் பெண்குரல் ஒலிப்பதற்கு பொறுத்தருளவேண்டும்” என்றாள்.
அவள் குரலை அதுவரை எதிர்நோக்கியிருந்தவன் போல முகம் தளர்ந்து தோள்கள் இயல்பு கொள்ள துரியோதனன் அவளை நோக்கி திரும்பினான். பானுமதி கைகூப்பி “என் சொல் இங்கு முன்வைக்கப்படவேண்டும் என தோன்றியது. ஏனென்றால் அங்க நாட்டரசர் மேல் முழுவுரிமை கொண்டவள் நான். அவர் தங்கை” என்றாள். “சொல்லுங்கள் அரசி” என்றார் விதுரர். “இதில் என்ன குழப்பம் உள்ளது? அவர் நெஞ்சமர்ந்த திருமகளாக சத்யசேனை அமரட்டும். அவர் இடப்பக்கம் அமரும் மண்மகளாக ஒரு ஷத்ரியப் பெண்ணை அவர் மணக்கட்டும்” என்றாள்.
அவை சென்று முட்டிய இக்கட்டிலிருந்து மீள்வதற்கான வழி என்று அனைவரும் அக்கணமே அதை உணர்ந்தனர். “ஆம், அதுவே சிறந்த வழி” என்றது அவை. குடித்தலைவர் சங்கரர் எழுந்து “உகந்த வழி… இதுவே சிறந்தது. நாங்கள் ஏற்கிறோம்” என்றார். துரோணர் “ஆனால் இன்று வரை ஷத்ரியர்கள் எவரும் அவருக்கு மணமகளை அளிக்க ஒப்பவில்லை” என்றார். “ஒப்பமாட்டார்கள் என்று தெரியும். கேட்கவில்லை என்று நாளை அவர்கள் சொல்லலாகாது என்பதற்காகவே ஓலைகள் அனுப்பப்பட்டன” என்றாள் பானுமதி. “பெண் கொள்ளல் மட்டுமல்ல பெண்கவர்தலும் ஷத்ரியர்களுக்குரியதே. உகந்த அரசன் மகளை அவர் கவர்ந்து வரட்டும். முடிசூட்டி அரியணையில் இடம் அமர்த்தட்டும். அவள் வயிற்றில் பிறந்த மைந்தர் அங்க நாட்டை ஆளட்டும். என்ன தடை அதில்?” என்றாள்.
அவளை நோக்காமல் “இரு இல்லமகள்களும் உளம் ஒத்துச் செல்ல வேண்டும்” என்றார் பீஷ்மர். “தங்கள் இடங்கள் தெளிவுற வரையறை செய்யப்பட்டிருக்குமென்றால் பெண்களுக்கு இடரென ஏதுமில்லை. அவையீரே, அவருக்கு இரு ஆணைகளை பிறப்பித்துள்ளது ஊழ். ஒன்று தந்தையின் ஆணை. பிறிதொன்று அங்க மண்ணின் ஆணை. இரண்டையும் அவர் நிறைவேற்றட்டும். தன் தந்தைக்கு ஒரு மைந்தனையும் நாட்டுக்கு ஒரு மைந்தனையும் பெறட்டும்” என்றாள் பானுமதி.
“ஆம், அதுவே உகந்த வழி. இந்த அவையில் அதுவே எனது ஆணையும் கூட” என்றான் துரியோதனன். கைதூக்கி புன்னகையுடன் “எப்போதுமென அரசியின் சொல்லே இங்கு இறுதிச் சொல்லாக அமையட்டும்” என்றார் விதுரர். கர்ணன் திரும்பி பானுமதியின் முகத்தைப் பார்த்தான். அவள் விழிகளில் இருந்த சிரிப்பின் ஒளி அத்தனை தொலைவில் இருந்தே தெளிவுறத் தெரிந்தது. பெருமூச்சுடன் தலை வணங்கி “அவையை வணங்குகிறேன்” என்றான்.
விதுரர் அமைச்சரை நோக்க அவர் நிமித்திகனை கைசுட்டி அழைத்து ஆணையிட்டார். நிமித்திகன் அறிவிப்பு மேடையிலேறி கையிலிருந்த கொம்பை முழக்கி “இந்த அவை இங்கு இச்சொற்களுடன் நிறைவடைகிறது” என்றான். “ஆம், அவ்வாறே ஆகுக!” என்று ஒரே குரலில் ஒலித்தது அஸ்தினபுரியின் பேரவை.
அவை விட்டு நீங்குகையில் விதுரர் அவனுக்குப் பின்னால் விரைந்து வந்தார். அவனது நீண்ட காலடிகளை எட்டிப்பிடிக்க அவர் ஓடுவது ஓசையில் தெரிந்தது. அதன் அணுகுதலைக் கேட்டு அவன் நின்றான். அருகே வந்து மெல்ல மூச்சிரைத்தபடி “உங்களுடன் பேச விழைந்தேன், அங்க நாட்டரசே” என்றார். “சொல்லுங்கள்” என்றான் கர்ணன். “இது எந்த உணர்வெழுச்சியினாலும் எடுத்த முடிவல்ல என்று எண்ணுகிறேன்” என்ற விதுரர் அவனை நோக்காது இடைநாழிக்கு அப்பால் தெரிந்த தேர் முற்றத்தை பார்த்தபடி சொன்னார் “தந்தைக்கு அளித்த வாக்கென்று நீங்கள் அவையில் சொன்னது உண்மை. ஆனால் அது மட்டுமல்ல…”
கர்ணன் “இனி அதை விவாதித்து என்ன பயன்?” என்றான். “இல்லை. அதில் ஒன்றை சொல்லியாக வேண்டும்” என்றார் விதுரர். “தன் உறுதியின்மையாலோ தன்னைச் சார்ந்தவர்களின் உணர்வுகளுக்காகவோ அரசன் முடிவுகளை எடுக்கலாகாது. அரசனின் முடிவுகள் அனைத்தும் ஆற்றலிலிருந்தும் அச்சமின்மையிலிருந்தும் அசையாத உள்ளத்திலிருந்தும் வந்தாக வேண்டும்.”
“ஆனால்…” என்று கர்ணன் பேசத் தொடங்கவும் “நான் அறிவேன். தாங்கள் அச்சத்தாலோ பெருவிழைவாலோ காமத்தாலோ அலைவுறுபவர் அல்ல. ஆனால் இவை அனைத்தாலும் அலைவுறுபவர்களைவிட அறத்தால் அலைவுறுபவர்களே மேலும் துயர் கொள்கிறார்கள். நிலையின்மையை பரப்புகிறார்கள். பேரறத்தான் நிலையற்றவன். அவன் மாளிகைகளின் மேல் வைத்த காற்றுமானியைப்போல. அவனது திசையை விண்ணுலாவும் காற்றுகள் முடிவெடுக்கின்றன” என்றார் விதுரர். கர்ணன் தலையசைத்தான்.
“மேலே நான் சொல்வதற்கு ஒன்றுமில்லை. குதிரைக்கு ஐந்தடியும் அரசனுக்கு எட்டடியும் பார்வை போதும் என்கின்றன நூல்கள். தன் குலஅறத்திலிருந்து கோல்அறம் வரைக்கும் எடுத்து வைக்கும் எட்டடி. அத்தொலைவுக்கு அப்பால் நின்றிருக்கும் பேரறம் அவனுக்கொரு பொருட்டல்ல. அதை ஞானியரும் யோகியரும் அறியட்டும். இந்த நிலையின்மை இனிமேலும் தொடர்ந்தால் அதன் விளைவு அங்க நாட்டுக்கே தீமையாகும்” என்றபின் விதுரர் அவன் தோளைத் தொட்டு “இத்துயருடன் நீங்கள் அரியணை அமர இயலாது அரசே” என்றார்.
கர்ணன் “அதை நானும் அறிவேன் அமைச்சரே” என்றான். விதுரர் “பெருங்கருணையால் நோயுற்றிருக்கிறீர்கள் நீங்கள். ஊழ் உங்களை வீழ்த்தியிருக்கலாம். அதன் மறுகையில் உள்ளதென்ன என்று நாமறியோம். விண்ணளவு தூக்குவதற்காக இவ்வீழ்ச்சியை அது நிகழ்த்தியிருக்கலாம். நீங்கள் உதிர்ந்த மரத்தின் முறிகாம்பு பாலூறிக் கொண்டிருக்கலாம்…” என்றபடி “இதற்கப்பால் ஒரு சொல்லும் எடுக்கலாகாது என்றே என் உதடுகளுக்கு சொல்லிக் கொள்கிறேன்” என்றார்.
கர்ணன் அவர் விழிகளை ஒருகணம் நோக்கிவிட்டு திரும்பிக் கொண்டான். “நன்று. என் சொற்கள் உங்களுடன் இருக்கட்டும்” என்றபின் விதுரர் திரும்பினார். தலைவணங்கி “என் மேல் அன்புகொண்டு சொன்ன சொற்களுக்காக கடன்பட்டிருக்கிறேன் அமைச்சரே” என்றான். விதுரர் இரண்டடி எடுத்து வைத்து திரும்பியபின் “அங்க நாட்டரசே, இச்செய்தியை இந்திரப்பிரஸ்தத்துக்கும் முறைப்படி அறிவித்துவிடுங்கள்” என்றார். கர்ணன் உடல் தசைகள் அனைத்தும் இறுக நின்று “ஆம்” என்றான். அவர் இடைநாழியை ஒட்டிய அமைச்சு அறைக்குள் சென்று மறையும் காலடி ஓசை கேட்டு இடைநாழியில் நின்றிருந்தான்.
சிவதர் வந்து வாயிலை தட்டும் வரை கர்ணன் சாளரக்கட்டையில் தலை சாய்த்து துயின்று கொண்டிருந்தான். நான்காம் முறை அவர் கதவைத்தட்டிய ஒலி கேட்டபோது விழித்துக் கொண்டு எழுந்து கண்களைத் துடைத்து “யார்?” என்றான். சிவதர் “நான்தான். அவை கூடியுள்ளது” என்றார். கர்ணன் அங்கு எப்படி வந்தோம் என்று சில கணங்கள் திகைத்தபின் நினைவு கூர்ந்து “ஆம், நெடுநேரமாயிற்று” என்று எழுந்தான். “மீண்டும் ஒரு முறை யவன மது அருந்தினேன் துயின்றுவிட்டேன்.”
“தாங்கள் முகம் கழுவி இன்னீர் அருந்தி அவை புகுவதற்கே இனி நேரமிருக்கும்” என்றார் சிவதர். “ஆம். நான் முழுதணிக் கோலத்தில் இருக்கிறேன். இப்படியே அவை புக முடியும்” என்றபடி சால்வையை எடுத்து தன் தோளில் சுற்றியபின் நடந்தான். சிவதர் அவன் கண்களைப் பார்த்ததும் திரும்பி அப்பால் சுவரோடு ஒட்டி நின்றிருந்த முதிய செவிலியை நோக்கி “அரசியாரிடம் சொல்லுங்கள் அரசர் கிளம்பிச் செல்கிறார் என்று” என்றார். அவள் விழிகளை தாழ்த்தினாள்.
சிவதர் முன்னால் சென்ற கர்ணனை விரைந்த அடிகளுடன் சென்றடைந்து உடன் நடந்தார். கர்ணன் தலை குனிந்து கைகளை பின்னுக்குக் கட்டி இடைநாழியில் குறடுகள் ஒலிக்க நடந்தான். அவன் தலையை அறைவது போல் எழுந்தெழுந்து வந்து கொண்டிருந்தன சம்பாபுரியின் தொல் மாளிகையின் உத்தரக்கட்டைகள்.