ஷண்முகவேல்

1

 

ஜெ,

சிலநிமிடங்களுக்கு முன்புதான் வெய்யோன் பக்கத்தைத் திறந்தேன். வாசிக்கவில்லை. இன்ப அதிர்ச்சி என்பார்களே அதுதான். ஷண்முகவேல்! நான் தமிழகத்தில் வழிபடும் ஓவியக்கலைஞர் என்றால் அவர்தான். வெண்முரசுக்குமுன் அவர் யாரென்றே தெரியாது. வெண்முரசை கண்முன் நிறுத்தினார். அவர் வரைவதை நிறுத்தியபோதும்கூட அவரது கோடுகள் வண்ணங்கள் வழியாகவே நான் வெண்முரசை வாசித்துக் கொண்டிருந்தேன்.

என்ன ஒரு அபாரமான கற்பனை. என்ன ஒரு வண்ணக்கலவை. நினைக்க நினைக்க நெஞ்சு விம்முகிறது. அதுவும் தினம்தோறும். நீங்கள் எழுதுவதுகூட பெரியவிஷயமில்லை, அவர் வரைவதுதான் நம்பமுடியாத விஷயம் என்ற எண்ணம் வந்தது. அவர் வரையாமலானபோது பெரிய ஏமாற்றம் வந்தது. அதன்பின்னர் அது இயல்புதானே என்ற எண்ணம் மேலும் எழுந்தது. அவரால் அத்தனை வரையமுடியாது. அதுவே தொழில் என்று ஒருவர் அமர்ந்தால்கூட வரையமுடியாது.

ஆனால் அவர் மீண்டும் வரைவதை கண்டதும் ஆனந்த அழுகையே வந்துவிட்டது. மழுவுடன் நிற்கும் பரசுராமன் ஒரு கிளாஸிக் ஓவியம். ஜெ, இன்று என் வாழ்க்கையில் ஒரு மறக்கமுடியாத நன்னாள். ஷண்முகவேலின் கால்களைத் தொட்டு வணங்கவேண்டும் போலிருக்கிறது. என்னைவிடச் சின்னவர். நூறாண்டுவாழ்க என்று வாழ்த்துகிறேன்

சுவாமி

அன்புள்ள சுவாமி அவர்களுக்கு,

ஷண்முகவேல் தன் சொந்த விருப்பால் வரையவந்தவர், என்னால் அமர்த்தப்பட்டவர் அல்ல. நான் வெண்முரசு ஏன் எழுதுகிறேனோ அதனால்தான் அவரும் வரைந்தார். அவரும் என் நண்பர் ஏ வி மணிகண்டனும் சேர்ந்து ஓவியங்களை உருவாக்கினார்கள். ஆனால் நீங்கள் சொல்வதுபோல ஒரு அத்தியாயத்தை எழுத இரண்டுமணிநேரம் ஆகிறதென்றால் வரைய மூன்றும் நான்கும் மணிநேரம் ஆகிறது. அதாவது முழுநேர வேலை.

ஆனால் நான் ஊதியமென எதுவுமே அவருக்கு அளிக்கமுடியாத நிலை. அவர் ஒருவருடம் வரைந்த முந்நூறுக்கும் மேற்பட்ட ஓவியங்கள் முற்றிலும் இலவசமான உழைப்புதான். அது ஒருவகைச் சுரண்டலோ என பின்னர் எனக்கே தோன்ற ஆரம்பித்தது.

ஷண்முகவேல் காவியத்தலைவன் உட்பட சினிமாக்களுக்காக பின்னணி வரைகலையில் வேலைசெய்யத் தொடங்கினார். அவரது வாழ்க்கைக்கு அது தேவைப்பட்டது. மிகக்கடுமையான உழைப்பு அவரது உடல்நிலையை பாதித்தது. ஏதோ ஒரு இடத்தில் அவரது உடல்சமநிலையை அமைக்கும் செவிநரம்புகளில் சிக்கல் வந்தது. பலமாத காலம் வரையமுடியாமல் மருத்துவ சிகிழ்ச்சையில் இருந்தார். இப்போது மீண்டுவிட்டார்.

அதற்கு நம் குழுமநண்பர்களின் அன்பும் உதவியும் துணைநின்றன. அது அவரது ஓவியம் அவர்களில் உருவாக்கிய அகத்தூண்டலின் விளைவு. இப்போது மீண்டுவிட்டாலும் அவரால் நெடுநேரம் வரையமுடியாத நிலையே உள்ளது. அவர் வேறு இதழ்களுக்கும் வரையவேண்டியிருக்கிறது. வெண்முரசுக்காக தொடராக வரைய மீண்டும் அவர் முன்வந்தபோது மிகச்சங்கடமாகவே உணர்ந்தேன். அவரது கனவு வேறு. அது மதிக்கப்படவேண்டும். அவரது உழைப்பு கௌரவிக்கப்பட வேண்டும்.அதற்காக ஏதேனும் செய்யவேண்டியிர்க்கிறது.

சொல்லப்போனால் அவர் வரையவேண்டாம், உடல்நிலையை பேணிக்கொண்டால்போதும் என்ற எண்ணமே இருக்கிறது. அது ஒரு மகன் இடத்தில் அவர் இருப்பதால் தோன்றுவது. பொதுவாகவே அஜிதனைப் பார்த்தபின் சின்னப்பையன்கள் எதன்பொருட்டும் வருத்திக்கொள்வதை விரும்பாதவன் ஆகிவிட்டேன். சவரம் செய்யாமல் ஒரு பையனைப்பார்த்தாலே மனம் பதறுகிறது. ஆனால் ஒரு ரசிகனாக அந்த ஓவியங்களுக்காக ஒவ்வொருநாள் நள்ளிரவில் நானும் காத்திருக்கிறேன்

ஜெ

1

இனிய ஜெயம்,

இன்ப அதிர்ச்சி . நேற்றுதான் ஒரு நண்பர் வசம் அம்பை செல்லும் படகை மாநாகமாகி துரத்தும் கங்கையின் ஓவியத்தை காட்டி பேசிக் கொண்டிருந்தேன். தனிப்பட்ட முறையில் ஒரு வாசகராக பிறர் யாருக்கும் சேகரமாகாத தனித்துவமான முறையில் வெண்முரசு நண்பர் ஓவியர் ஷண்முகவேல் அகத்தில் கலைச் சேகரம் ஆகிக் கொண்டிருப்பதன் வெளிப்பாடே அவரது ஓவியங்கள். ஒரு எல்லையில் அவர் மேல் எனக்கு எழும் பொறாமையை எதைக் கொண்டும் மாற்றி வைத்துவிட முடியாது.

அவர் ஓவியங்களில் உருவாக்கி உலவவிட்ட அரவங்களை மட்டுமே தனியாக நோக்கினால் அது மட்டுமே தனி ஒரு உலகமாக விரிகிறது. அது போக இயற்கை, நகரங்கள், குழந்தை, தாய்மை,தந்தைமை என ஒரு தொட்டு மீட்டிய ஒவ்வொன்றிலும் பல நாள் இரவுகளில் உறங்காமால் கிடந்தது திளைத்திருக்கிறேன்.

தனித்துவமானவை அவரது ஓவியங்களில் துலங்கி வரும் கொலை ஆயுதங்கள். வில், வேல்,குத்துவாள், கதாயுதம் என ஒவ்வொன்றும் அவற்றின் தனித்தன்மையும் அடிப்படை குருரமும் விவரிக்கவே இயலா அமானுஷ்யமும் கொண்டு கூர்மையான குளிர் உலோகம் ஒன்றின் தொடுகை போல ஒரு உணர்வை அளிப்பவை. அதிலும் இன்றைய வெய்யோன் நாவலின் முதல் அத்யாத்துக்கான முதல் ஓவியம் இணையற்றது.

“சூரியனின் மைந்தா, இவ்வுலகாளும் விரிகதிர்வேந்தனுக்குரிய தீயூழ் என்னவென்றறிவாயா? அவன் தொட்டதெல்லாம் எதிரியாகி பின்நிழல் கொள்கின்றன. நிழல் கரந்த பொருட்கள் அனைத்தும் அவன் முகம் நோக்கி ஒளி கொள்ளும் விந்தைதான் என்ன? இங்குள அனைத்தையும் ஆக்குபவன் அவனென்றால் இந்நிழல்களையும் ஆக்குபவன் அவனல்லவா?”

நாவலின் இந்த வரிகளை முற்றிலும் புதிய எல்லையில் நிறுத்தி புதிய கோணத்தில் இருண்மைகொண்டு விரிகிறது இன்றைய பரசுராமர் ஓவியம். பரசுராமனின் பின்னால் அஸ்தமன சூரியன் விரிகதிர் வேந்தனின் தீயூழ், அவனது பின் நிழல் அவன் முன் விஸ்வரூபமாக நிற்கிறது . அந்த எதிரி முன் பரிதியின் ஒளி கூர் முனையில் பட்டுத் தெறிக்கும் மழுவுடன் நிற்கிறான் பரசுராமன். [அந்த சூரியனை உதயமாகக் கொண்டால் முற்றிலும் வேறு உவகை பிறக்கிறது]. குறிப்பாக எழுத்தால் தொட இயலாத ,தூரியிகையால் மட்டுமே தொட முடிந்த ஒன்று இன்றைய ஓவியத்தில் துலங்கி வந்திருக்கிறது. வியாசனின் பாரதம், வெண் முரசை மாட்டி வைக்கும் முளைக்குச்சி மட்டுமே. இது உங்கள் ராஜாங்கம். அது போல இன்றைய அத்யாத்தில் உங்கள் சொற்களில் உலவும் பரசுராமன், ஷண்முகவேல் அவரது பரசுராமனை மாட்டி வைக்கும் முளைக்குச்சி மட்டுமே. இந்த பரசுராமன் அவரது ராஜாங்கம்.

அது போக சகுனியின் தாயம், கர்ணனின் கவசம் போன்ற வணிக வார இதழ் தொடர்களில் ஷண்முகவேல் உருவாக்கிய பாணி பின்பற்றப்பட்டது அவரது கலை ஆளுமையின் தாக்கம்.
நண்பர்கள் ஷண்முகவேல் மணிகண்டன் கூட்டணிக்கு என்றும் என் வாழ்த்துக்கள்.

 

 

ஷண்முகவேல் ஓவியங்கள் இணையப்பக்கம்

 

ஷண்முகவேல் ஓவியங்கள் இணையதளம்

முந்தைய கட்டுரைசமவெளியில் நடத்தல்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2