தப்பி ஓடும் ஆறு

Devadachan-1 (1)

 

ஜெ,

தேவதச்சனின் கவிதைகளைப்பற்றி பலர் பல கோணங்களில் எழுதிக்கொண்டே இருக்கிறார்கள். இந்த விருது அவரைப்போன்ற அடங்கிய தொனியிலே பேசும் ஒரு பெரிய கவிஞரை நுட்பமாக புரிந்துகொள்ள மிகவும் உதவியாக இருக்கிறது என்பதில் சந்தேகமில்லை

ஆனால் பெரும்பாலான புரிதல்களில் அவரது கவிதைகள் அரசியலற்றவை என்று சொல்லப்படுகிறது. சபரிநாதன் அவரது கவிதைகள் வரலாற்று நீக்கம் செய்யப்பட்டவை என்று சொல்கிறார். [அவரது கட்டுரை சமீபத்தில் தமிழில் எழுதப்பட்ட மிகமுக்கியமான கட்டுரைகளில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை]

ஆனால் தேவதச்சனின் கவியுலகிலேயே மிக வல்லமை கொண்ட அரசியல் கவிதைகளும் உள்ளன. அரசியல் என்னும்போது அது கோபமோ ஆங்காரமோ கொள்ளவேண்டும் என்றில்லை. மென்மையான குரலில் ஒலிக்கும் அரசியலும் இருக்கலாம். அது இன்னும் ஆழமாக ஊடுருவிச் செல்லவும்கூடும்

பன்னாட்டு நிறுவனங்களால் துரத்தப்படும் ஒரு ஆறு தாமிர வர்ணி. அழிந்துகொண்டிருக்கும் ஆறு அது. அதைப்பற்றிய அரிய கவிதைகளில் ஒன்று தேவதச்சன் எழுதிய இந்தக்கவிதை

ஆறு

தப்பித்து
ஓடிக்கொண்டிருக்கிறது, ஆறு
பன்னாட்டு நிறுவனங்களிடமிருந்து.
அதன் கரையோர நாணலில்
அமர்ந்திருக்கிறது
வயதான வண்ணத்துப்பூச்சி ஒன்று.
அது இன்னும் இறந்து போகவில்லை
நமது நீண்ட திரைகளின் பின்னால்
அலைந்து திரிந்து களைத்திருக்கிறது
அதன் கண்கள் இன்னும் நம்மைப்
பார்த்துக் கொண்டிருக்கின்றன
பசியோடும் பசியோடும்
யாருமற்ற வெறுமையோடும்.
அதைச்சுற்றி, கொண்டாடி கொண்டாடி
பிடிக்கவரும் குழந்தைகளும் இல்லை.
அதன் சிறகுகளில் ஒளிரும்
மஞ்சள் வெளிச்சம்
காற்றின் அலைக்கழிவை
அமைதியாய் கடக்கிறது
நீ
திரும்பிப் போனால், இப்போதும் அது
அங்கு
அமர்ந்திருப்பதைக்
காணலாம். உன்னால்
திரும்பிச் செல்ல முடிந்தால்

நீ திரும்பிச்செல்லமுடிந்தால் என்னும் வரி ஆழமான அதிர்வை உருவாக்கியது. நீ திரும்பிச்செல்லமுடிந்தால் அங்கே நதி இருக்கத்தான் செய்யும். ஆனால் செல்லமுடியாது என்று தோன்றியது. இறந்துகொண்டிருக்கும்  ஆற்றின் கரைநாணலில் அமர்ந்து மஞ்சள் ஒளி விரிய அமர்ந்திருக்கும் அந்த வயதான பட்டாம்பூச்சி மிக வன்மையான ஒரு படிமம்

செம்மணி அருணாச்சலம்

 

முந்தைய கட்டுரைவெறுப்பின் குரல்
அடுத்த கட்டுரைதேவதச்சன் ஆவணப்படம்