நீ விரும்புவது….

d d 10

நாலைந்தாண்டுகளுக்கு முன்னமே தேவதச்சனின் கடைசி டினோசர் மற்றும் ஹேம்ஸ் என்னும் காற்று தொகுப்பை வெறும் சொல்லலங்காரத்துக்காகவே வாங்கி ரோபோ ரஜினி போல் படித்து முடித்து அவ்வணிகள் யாவும் எனக்கானவை அல்ல என கடந்து வந்து விட்டதை இப்போது நினைத்தால் மிகுந்த குற்றவுணர்ச்சிக்கு ஆளாகிறேன்.

ஜெவின் அத்துவானவெளியின் கவிதை பகுதிகளை சற்று தாமதமாகத்தான் வாசித்தேன். அதிலும் கடைசி இரண்டு பகுதிகளையும் காய்ச்சலுற்று நேற்று மருத்துவரைப் பார்க்க காத்திருந்த நேரத்தில். வாசித்ததும் அத்துவானவெளியால் சூழப்பட்ட சிற்றிருப்பாகிப் போனேன்.

வீடு வந்து சேர்ந்ததும் நோய்மையையும் மீறி மீண்டும் கடைசி டினோசரை கையில் எடுத்தேன். யதேச்சையாக ஒரு பக்கத்தை திறந்ததில் இக்கவிதை.

குனிந்து எடுத்தேன்

வேப்பம்பூ என்னும்

பிரம்மாண்டமான கோட்டையை

வேறு எந்த நெடியும் உள்ளே புகமுடியாத வீடு அது.

வாசனை என்னும்

சுரங்கத்தின் வெளிவழி நோக்கி

ராட்சசக் கழுகொன்று, என்னை

கவ்விக்கொண்டு பறக்கிறது

கோட்டைக்குள் பார்க்கவென்று

எல்லாம் தெளிவாக தெரிகின்றன

காதலின் நடமாட்டம் ஒன்றைத் தவிர.

லேசான சிரிப்போடு முன்பெப்போதோ நான் குனிந்து எடுத்த வேப்பம்பூக் கோட்டைகளைப் பற்றி நினைத்துக் கொண்டிருந்தேன்.

இன்றைக்கு இது ஒன்றே போதுமென எண்ணி நூலை மூடி விட்டு படுக்க எத்தனிக்கையில் கைகள் மீண்டுமொருமுறை ஒரு பக்கத்தை திறந்தது.

எத்தனை தடவை என்ற தலைப்பு. இதுவரை நான் வாசித்ததைப் பற்றி யோசித்து வைத்த குறிப்புகளை எல்லாம் நான் பல முறை தேடியதை நினைவுபடுத்தியது. இப்போதுதான் தெரிகிறது அவைகள் ஒரு ஆளற்ற கருப்பு நிசியில் தரையை ஒட்டி தாழப் பறந்து கொண்டிருப்பதாக… ஓடிப்பிடித்து விளையாடியபடி ஓடிப்பிடிக்காமல் விளையாடியபடி.

அடுத்தபடியாக எனதனுபவத்திற்கு அப்பாற்பட்ட சிற்சில கவிதைகளும் ஏற்கனவே விவாதிக்கப்பட்ட கவிதைகளும் திறந்து கொண்டன. நடுவில் நீ விரும்புவது உன் உடல் முழுதும் ஆகுக எனும் வரமருளினார். கீதை வரி போலத் தோன்றியது.

இப்படியாக இருபதாமுறை திறப்பில்;

உயிர் பிரிவதற்கும்,

துயரத்தில் சாய்வதற்கும்,

இருட்டு பயம் நிச்சயமின்மை திகைப்பு இவற்றின் பள்ளத்தாக்கில் உருள்வதற்கும்

எப்போதும் ஒரு நிமிஷம்தான் உள்ளது.

இவ்வொரு நிமிஷத்தில்

அண்டசராசரம் ஆடி

ஒரு நிமிஷம் வளர்ந்து விடுகிறது.

எனது மொத்த பிரபஞ்சத்தையும் உலுக்கியெடுத்து வளர்ந்து நிற்கப் போகும் அவ்வொரு நிமிஷத்தை எண்ணியபடியே கண்துஞ்சத் தொடங்கினேன்.

இறுதியாக ஒரு டினோசரை எப்படி நெருங்குவது என்ற கேள்விக்கு அது நம்மை நெருங்கச் செய்வதுதான் என்ற வரியில் கண் தழுவிய தூக்கத்தில் எனது நேற்றைய இரவு விழித்துக் கொண்டது.

மணிமாறன்

 

அன்புள்ள ஜெ

தேவதச்சனின் கவிதைகளுடன் இருக்கிறேன். இப்படி ஒருமாத காலமாக  நான் எந்தக்கவிதைகளுடனும் வாழ்ந்ததில்லை. இது இயல்பாக நடப்பதும் இல்லை. இதற்கு ஒரு தூண்டுதல் அல்லது சூழல் தேவையாகிறது. இந்தவிருதும் இதை ஒட்டி வந்த கட்டுரைகளும்தான் இதற்குக்காரணம். தொடர்ந்து இக்கவிதைகளுக்குள் என்னை ஆழமாக அமரவைத்திருக்கின்றன இவை

பரிசு

என் கையில் இருந்த பரிசை
பிரிக்கவில்லை. பிரித்தால்
மகிழ்ச்சி அவிழ்ந்துவிடும் போல் இருக்கிறது
என் அருகில் இருந்தவன் அவசரமாய்
அவன் பரிசைப் பார்த்தான். பிரிக்காமல்
மகிழ்ச்சியை எப்படி இரட்டிப்பாக்க முடியும்
பரிசு அளித்தவனோடு
விருந்துண்ண அமர்ந்தோம்
உணவுகள் நடுவே
கண்ணாடி டம்ளரில்
ஒரு சொட்டு
தண்ணீரில்
மூழ்கியிருந்தன
ஆயிரம் சொட்டுகள்

என்னும் கவிதையை இன்றும் நேற்றுமாக வாசிக்கிறேன். ஒரு சொட்டு தண்ணீரில் மூழ்கியிருந்தன ஆயிரம் சொட்டுக்கள் என்று உணர இத்தனை தூரம் வரவேண்டியிருக்கிறது

சங்கர்

முந்தைய கட்டுரைதேவதச்சன் பார்வைகள்
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 5