கீதை கடிதங்கள்

அன்புள்ள ஜெ,
வணக்கம். கிருஷ்ணர் கற்பனையல்ல, வரலாற்று நாயகனே என்று தொல்லியல், நாட்டார் வாய்மொழி வரலாறு, இலக்கியம், வானியல் மூலம் அறிவியல் பூர்வமாக இலண்டனில் பணியாற்றும் Dr. மணிஷ் பண்டிட் (Nuclear Medicine) என்பவர் ஆராய்ச்சி செய்து முடிவை ஒரு ஆவணப்படமாக எடுத்து வெளியிட்டுள்ளார்.
வானியல் ஆராய்ச்சிக்கு பயன்படுத்தப்படும் கணிப்பொறி மென்பொருளைப் பயன்படுத்தி, மஹாபாரதத்தில் குறிப்பிட்டுள்ள 140க்கும் மேற்பட்ட வானியல் சார்ந்த குறிப்புக்களைக் (முக்கியமாக உத்யோக பர்வம், பீஷ்ம பர்வம், பலராமனின் தீர்த்த யாத்திரை தொடங்கிய திதி, நட்சத்திரம்) கொண்டு Dr. நரஹர் ஆச்சார் (Department of Physics, University of Memphis,Tennessee) குருக்ஷேத்திர யுத்தம் ஆரம்பித்த நாள் கி.மு. 22 நவம்பர் 3067 என்றும் கிருஷ்ணர் பிறந்த வருடம் கி.மு. 3112 என்று கண்டு பிடித்ததை அடிப்படையாகக் கொண்டும், Dr. ராவின் புகழ்பெற்ற துவாரகை கடல் அகழ்வாராய்ச்சி முதலியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த ஆவணப் படத்தைத் தயாரித்திருக்கிறார்.
கிருஷ்ணரே நேரில் வந்து சத்தியம் செய்தாலும் இந்தப் போலி மதசார்பிண்மைவாதிகள், முற்போக்கு பகுத்தறிவாளர்கள், மார்க்சிய வரலாற்றாய்வாளர்கள் ஒத்துக்கொள்ள அடம்பிடிப்பார்களே!
நன்றி.
பிரகாஷ், தென்கரை.
மேலும் விவரங்களுக்கு,

படம்:
http://www.saraswatifilms.org/movies.php

பேட்டி:
http://www.dnaindia.com/india/report_krishna-existed-the-school-texts-are-wrong_1286054

http://www.indianweekender.co.nz/Pages/ArticleDetails/7/1421/Comments/wonderful

அன்புள்ள சங்கரன்

கிருஷ்ணன் வரலாற்றுநாயகனாகவே இருக்க முடியும் என்றே நான் நினைக்கிறேன். இந்த ஆய்வுகள் எந்த அளவுக்கு நம்பகமானவை என எனக்கு தெரியவில்லை. நான் அவற்றை புரிந்துகொள்ளும் கருவிகள் கொண்டவனல்ல.

கிருஷ்ணன் உண்மையான வரலாற்று மனிதர் என்பதற்கு அவரைப்பற்றிய கதைகளில் உள்ள தெளிவும் ஒருங்கிணைவுமே சான்று. அவர் கிறிஸ்துவுக்கு முன்னர் பல நூற்றாண்டுகளுக்கு முன் வாழ்ந்த யாதவ மன்னர். வேதாந்தி. மகாபாரதப்போரில் கலந்துகோன்டார். அவர் எழுதிய வேதாந்த நூல் கீதையின் மையம். அவர் மகாபாரதப்போருக்குப் பின்னர் பெரும் புகழ்பெற்று இறைவடிவமாக பார்க்கப்பட்டார். ஆகவே அவரது வேதாந்த நூல் உருமாற்றப்பட்டு கீதையாக மகாபாரதத்தில் பின்னர் இணைக்கப்பட்டது. அவரது உண்மையான வரலாறும் புராணங்களும் கலக்கப்பட்டு பின்னர் மாகாபாகவதம் உருவானது. அதுவே இன்றைய கிருஷ்ணனின் முகமாக உள்ளது. இதுவே என் எண்ணம்

கீதை குறித்த என் ஆரம்பகால கட்டுரைகளில் மிக விரிவாக இதைபேசியிருக்கிறேன்

ஜெ

அன்புள்ள ஜெயமோகன்,

பினாங்கில் ஆற்றிய ‘கீதையும், யோகமும்’ மிகத் தெளிவான, சரளமான, தர்க்கப் பூர்வமான, பொருத்தமான உதாரணங்களையும் கொண்ட உரை. ‘கீதை படிக்க வேண்டிய ஒன்றுதான் போலிருக்கிறது’ என்கிற எண்ணத்தைத் தூண்டியிருக்கிறீர்கள். அங்காடித் தெரு பாணியில் ‘ கள்ளக் கிருஷ்ணனோல்லியோ’ மட்டும்தான் அயலாய் ஒலிக்கிறது.

தமிழ் பிரக்ஞையில் சுமார் 60-70 வருடங்களாக தீண்டதகாதவைகளாகிப் போன (உ-ம் காந்தி) உத்தம விஷயங்களைப் பற்றி எழுதி, பேசி நற்பணி ஆற்றுகிறீர்கள். நன்றி. கீதைக் கட்டுரைகள் தொகுப்பாக ஒரு பெரும் நூலை உங்களிடமிருந்து எதிர் பார்க்கிறேன்.

அன்புடன்,

வ.ஸ்ரீநிவாசன்.

http://vasrinivasan.blogspot.com/

வணக்கம் ஜெ சார்

வாழ்வியல் பிரச்சனையின் போது பகவத்கீதையை தொடுவதும் விடுவதுமாக தொடர்ந்துகொண்டிருப்பேன். நடைமுறை வாழ்க்கையில் பகவத் கீதை ஏதாவது ஒரு வகையில் எனக்கு உதவுகிறதா என சோதனை செய்துகொண்டிருப்பேன். தற்போது நான் படித்துக்கொண்டிருப்பது பாரதியாரின் பகவத் கீதை உரையை. அதில் யோகம் பற்றி பாரதியார் கூறுகையில்

“தொழிலுக்கு தன்னைத் தகுதியுடையவனாகச் செய்து கொள்வதே யோகம்”

யோகமாவது சமத்துவம். ‘ஸமத்வம் யோக உச்யதே’ அதாவது பிறிதொரு பொருளைக் கவனிக்குமிடத்து அப்போது மனத்தில் எவ்விதமான சஞ்சலமேனும் சலிப்பேனும் பயமேனும் இன்றி, அதை ஆழ்த்து, மனம் முழுவதையும் அதனுடன் லயப்படுத்திக் கவனிப்பதாகிய பயிற்சி.

நீ ஒரு பொருளுடன் உறவாடும்போது, உன் மனம் முழுவதும் அப்பொருளின் வடிவாக மாறிவிடவேண்டும். அப்போதுதான் அந்தப் பொருளை நீ நன்றாக அறிந்தவனாவாய்.

யோகஸ்த: குரு கர்மாணி’ என்று கடவுள் சொல்லுகிறார். யோகத்தில் நின்று தொழில்களைச் செய்.

இந்த இடத்தில் ஒரு சந்தேகம்:

தினமும் நான் இரண்டு சக்கர வாகணத்தில் பணிக்கு செல்கிறேன். அடிக்கடி டயர் பஞ்சர் ஆகிவிடுகிறது. ச்சே என்னடா இது, இதோடு பெரிய தொல்லையாக இருக்கிறதே என்று சலித்துக்கொள்வேன். இந்த பிரச்சனையை கீதையில் உட்படுத்தும்போது, இந்த செயலில் வரும் தொந்தரவுகளையும், சுகங்களையும் சமமாக எடுத்துக்கொண்டு தொடர்ந்து பிரச்சனையை சந்தித்துக்கொண்டே இருப்பதுதான் சரி என்று சொல்லப்படுகிறதா! அல்லது பாரதி சொல்வதுபோல வண்டி ஓட்டுவதற்கு என்னை தகுதி உடையவனாக மாற்றி, பிரச்சனையை கண்டுகொண்டு சரிசெய்ய சொல்லப்படுகிறதா!

எந்த விளக்கம் சரியானது

அத்யாயம் 2, சுலாகம் 48

நன்றி

பூபதி

உங்கள்: கடிதம்
மிக விரிவாக நான் இதற்கு பதில் எழுதியிருக்கிறேன். என் முந்தைய கீதை உரைகளில்
கீதையின் செய்தியை எளிய அன்றாட அலுவல்கள் முதல் பிரம்மரகசியம் வரை விரிவாக்கிக்கொள்ளலாம் என்றே நான் நினைக்கிறேன். சமீபத்தில் ஒரு மலேசிய தமிழ் வணிகரிடம் பேசும்போது சொன்னேன். அமெரிக்காவில் ஒரு வங்கி சரிந்தால் உங்கள் வணிகத்திட்டங்கள் அனைத்தும் காலாவதியாகும் அல்லவா? ஆமாம் என்றார். சூரியனில் ஒரு கொப்புளம் வெடித்து ஃபின்லாஃத்லே எரிமலை எழுந்தால் ஐரோப்பிய பொருளியல் நிலைகுலைந்து அதன் மூலம் உங்கள் திட்டங்கள் சரியலாம் அல்லவா? ஆமாம் என்றார். ஆக உங்கள் செயல்களின் பயன்கள் அலகிலா வெளியின் பல்லாயிரம் கோடி செயல்களுடன் சம்பந்தப்பட்டுள்ளன. உங்கள் கட்டுப்பாட்டில் அவை இல்லை’ ‘ஆமாம்’ என்றார்

அதை நம்பி சும்மா இருப்பது விதிவாதம். அதற்கு எதிரானது கீதை சொல்லும் கர்ம யோகம். அதை அந்த முடிவின்மைக்கே விட்டுவிட்டு உங்களுக்கு எது முடியுமோ எது கடமையோ எது செய்யக்கூடியதோ எதை உள்ளுணர்வு ஆணையிடுகிறதோ எது அறமோ அதை முழுமூச்சுடன் செய்வதே யோகம்

பாரதி சொல்லும் வரி அதுதான். உங்கள் செயல்களை மேலும் மேலும் சிறப்புறச் செய்வது. செய்து என்ன ஆகப்போகிறது என்ற சலிப்பில் இருந்து விடுபடுவது

ஜெ

முந்தைய கட்டுரைமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள் 2
அடுத்த கட்டுரைஉயிர்மைகூட்டம் ஒரு கடிதம்