நதிக்கரையில்

ரியும் வெளியில் புகைந்தபடி வெளிறிக் கிடந்தது கங்கை. கரையோரத்துச் சதுப்புகளில் மண்டியிருந்த கோரைகள் காற்றுப்படாமல் அசைவற்று நிற்க, நீரின் சிற்றலைகள் கரை மண்ணை வருடும் ஒலிகளில் நதி தனக்குத்தானே மெல்லப் பேசிக்கொண்டிருந்தது. கரையோர மரநிழல்களில் பெரிய அண்டாக்களில் சூதர்கள் சமையல் செய்து கொண்டிருப்பதைச் சற்றுத் தள்ளிப் பாறை மீது அமர்ந்தவனாக பீமன் மேற்பார்வையிட்டுக் கொண்டிருந்தான்.

“மகாபலரே, உப்புப் பாருங்கள்” என்று ஒருவன் வந்து மர அகப்பையில் சித்ரான்னத்தை நீட்டினான்.

பீமன் நாசியை விடைத்து அந்த ஆவியை முகர்ந்தான்.”சரிதான். நீர்வள்ளிக்கிழங்கு சற்றுத் துவர்ப்பு கண்டிருக்கிறது.”

“என்ன செய்வது?”

“ஓரிரு துண்டுப் பழங்கள் போடு. அடேய் மச்சா, விறகை இழுத்துப் போடு அன்னம் புகைந்து விடப்போகிறது.”

சூதன் ஒருவன் தாழைப்பாயை விரித்துப் பழங்களைக் கழுவ ஆரம்பித்தான்.

பீமன் பெருமூச்சுடன் மீண்டும் நதியைப் பார்த்தான். இனம் புரியாத தவிப்புடன் மனம் தாவித் தாவிச் சென்றது. கோபத்துடன் கைகளை உரசிக் கொண்டு எழுந்தான். அடுப்புப் புகைக்கு அப்பால் பர்ணசாலைகள் நடுங்கின. அங்கிருந்து தருமனின் நெளியும் பிம்பம் வந்தது. பீமன் கோபத்தை திசை மாற்றுபவன் போல மண்ணை உதைத்தான்.

“மந்தா, எதுவரை ஆயிற்று சமையல்?”

“எட்டுவகை சித்ரான்னம். முடிந்து விட்டது. ருசி பார்க்கிறீர்களா?”

“எனக்குப் பசியில்லை” என்றபடி தருமன் பாறை மீது அமர்ந்தான். மருத மரத்தில் சாய்ந்து கைகட்டியபடி பீமன் தழலை உற்றுப்பார்த்தான்.

“மந்தா! பெரிய தந்தையார் உடல்நிலை கவலையூட்டுவதாக இருக்கிறது” என்றான் தருமன்.”எனக்கு ஒரு கணம் கூட நிம்மதியில்லை.”

“சூதன் என்ன சொன்னான்?”

“என்ன சொல்வான் தூக்கமில்லாததுதான் காரணம் என்கிறான். எப்படித் தூங்க முடியும்? புத்திர சோகத்தின் தழல்மீது அல்லவா அவர் படுத்திருக்கிறார்.”

“எல்லோருக்கும்தான் துக்கம்” என்றான் பீமன். “அவர் சற்று மிகைப்படுத்துகிறார். நமது குற்ற உணர்வைத் தொடர்ந்து தூண்டி விடுவதில்தான் அவருடைய அதிகாரம் இருக்கிறது இப்போது.”

“அநீதியாகப் பேசாதே மந்தா. பர்ணசாலைகளில் இரவும் பகலும் துக்கம் மூடிக்கிடப்பதை நீ பார்க்கவில்லையா? குந்தியோ, திரெளபதியோ, காந்தாரியோ அனைத்து மாதர் முகங்களும் ஒன்று போல இருக்கின்றன.”

பீமன் கோபம் எழுவதை உணர்ந்தான். அடக்க முயன்று முடியாமல் பெருமூச்சுடன் “நாம் ஏன் இங்கு இருக்க வேண்டும்?” என்றான்.”நமது நாடும் மக்களும் அங்கே காத்திருக்கிறார்கள். வனப்பிரஸ்தம் வந்தவர்கள் அதை அனுபவிக்கட்டுமே. அடேய் மூடா! பழங்களை வெந்நீரில் போட்டு தோல் களைந்தாயா? தோலை உன் தந்தையா தின்பான்? அண்ணா!  இவையெல்லாமே மூடத்தனம் என்று படுகிறது எனக்கு.”

“நம்மை விட யுயுத்சுவும், தெளமியரும் நன்கு ஆட்சி செய்திருக்கிறார்கள்.”

“அப்படியென்றால் நாட்டை அவர்களுக்குத் தந்து விடலாமே.”

தருமன் பெருமூச்சு விட்டான். “மந்தா நீ உணவிலும், பார்த்தன் பெண்களிலும், தம்பியர் சோதிடத்திலும், அஸ்வ சாஸ்திரத்திலும், நான் தர்ம நூல்களிலும் தேடுவது என்ன?”

“நான் எதையும் தேடவில்லை.”

“நாம் நம்மைத் தேடுகிறோம். களங்கமில்லாத மனமும் சுதந்திரமான எண்ணங்களும் கொண்ட பழைய பாண்டவர்களை.”

“எனக்கு அலங்காரச் சொற்கள் புரிவதில்லை. அதனால் என்னை எவரும் மன்னனாக எண்ணவில்லை.”

“மந்தா! உண்மையைச் சொல். காட்டில் பதினான்கு வருடம் கையில் கிடைத்ததைத் தின்று நீ வாழ்ந்தபோது இருந்த பசியும், ருசியும் இப்போது உள்ளதா?”

பீமன் முகம் சிவந்தது. சட்டென்று எழுந்து “மூடா! தீயை இழு என்றேனே,  கேட்டாயா? கருகல் வாடை வருகிறது பார்” என்று சீறியபடி கை ஓங்கி ஒரு அடி எடுத்து வைத்தான்.

சூதன் நடுங்கி அமர்ந்து விட்டான்.”அப்போதே இழுத்துவிட்டேன் பிரபு! அப்போதே இழுத்துவிட்டேன் பிரபு…”

பீமன் கைகளை உரசிக் கொண்டான். மத யானையின் தசைகள் போல அவன் தோள்கள் இறுகி விரிந்தன. கூண்டு மிருகம் போலச் சுற்றி வந்தான்.

“மந்தா, உன்னைச் சீண்டும் நோக்கம் எனக்கில்லை. சத்யூபரின் சீடர் வந்து தகவல் சொன்னார். பிதாமகர் கிருஷ்ண துவைபாயன மகாவியாசர் வருகிறாராம்.”

“எதற்கு?”

“நம்மைப் பார்க்க. வேறு எதற்கு?”

“எஞ்சியவர்களை கணக்கிடவா? வேறு வேலை இல்லை கிழவருக்கு.”

“பித்ரு நிந்தை பாபம் மந்தா”

பீமன் “இது சுயநிந்தை” என்று உருமினான்.

தருமன் எழுந்தான்.”நான் நீராடச் செல்கிறேன். உடல் எரிகிறது. வருகிறாயா?”

“வருகிறேன்.” தண்ணீர் குளிர்விக்கும் என்று பட்டது பீமனுக்கு. இருவரும் நடந்தனர். பீமன் போகும் வழியில் இருந்த மருத மரத்தை ஓங்கி அடித்தான். அது அதிர்ந்து மலர்களும், சருகுகளும் கொட்டின.

“நாம் இங்கு வந்தது ஒரு வகையில் நல்லது. அங்கு அஸ்தினாபுரியில் அதிகாரமும் போகமும் நம்மைச் சூழ்ந்துள்ளன. நம் ஆன்மாவை அவை மூடிவிடக்கூடும். இங்குத் துயரம் அணிகளின்றி, உடைகளின்றி நம்முள் நிற்கிறது. நமது வெற்றியின் விலை என்னவென்று ஒவ்வொரு கணமும் கூறுகிறது.”

“அண்ணா! நாம் வேறு எதையாவது பேசுவோமே?”

“எதைப்பற்றிப் பேசினாலும் இந்த இடத்தில் மனம் வேறு எதைப்பற்றியும் எண்ணுவதில்லை மந்தா!. பேசாதபோது துக்கம் உள்ளிருந்து மார்பை அடைக்கிறது.”

கங்கை சிதையென எரிந்து கொண்டிருந்தது. நீர் மீது சரிந்து வளர்ந்த பெரிய சாலமரத்தின் வேர்களில் தருமன் அமர்ந்தான். பீமன் நீரில் இறங்கியதும், மக்கிய மரக்கட்டை போல, நீரில் அசைவன்றி மிதந்து கிடந்த முதலையொன்று உயிர் பெற்று முன்னகர்ந்தது. அதன் வாலையும், வாயையும் பற்றி பீமன் சுழற்றி எடுத்தான். இம்சையின் எழுச்சியில் உடல் அதிர்ந்தது. அதைச் சுழட்டி வேர் மீது ஓங்கி அறைந்து, வளைத்து ஒடித்தான். அவனது பருத்த கரங்களில் முதலை துடித்து, நெளிந்து அடங்கியது. அதன் அசைவுகளில், லயத்தில் அவன் மனமும் அடங்கியது. அதை நீரில் வீசினான். நீர் ஒளியுடன் விரிந்து, வாய்பெற்று முதலையை விழுங்கியது. அந்திரீயத்தைக் கழட்டி கரைமீது போட்டுவிட்டு, நீரில் தாவியிறங்கி மூழ்கினான்.

“இன்னும் ஒரேயொரு நீர்ப்பலி மந்தா!. இன்று மாலை அதுவும் முடிந்து விடும். நாளை மதியம் கிளம்பி விடலாம்.”

“நான் அப்படியே தெற்குத் திசை நோக்கிப் பயணம் செய்துவிட்டு வரலாம் என்றிருக்கிறேன்.”

“அர்ச்சுனன் நாகலோகம் போகப்போவதாகச் சொன்னான். நகுலன் காந்தாரத்துப் புரவி விழா ஒன்றுக்குப் போகிறான்.” தருமன் கசப்புடன் சிரித்தான். “நான் தான் எங்கும் போக முடியாது. பாரத வர்ஷத்தின் சக்கரவர்த்தியாயிற்றே”

பீமன் நீரில் மூழ்கினான். மீன்களின் பளபளப்பில் நீருக்குள் ஆயிரம் விழிகள் உருக்கொண்டன. பார்வைகள் அவனை மொய்க்க ஒரு கணத்தில் மூச்சு மார்பை இறுக்கியது. உதைத்து மேலே வந்தான். கரை நோக்கி வந்தான். நதி அச்சமூட்டியது.

“எதற்கு வருகிறார் வியாசர்?” என்றான் தருமன் உடைகளை மெல்லக் களைந்து விட்டு நீரில் இறங்கியபடி.

“ஏதாவது தர்மவிசாரம் இருக்கும், உங்களுக்கும் பொழுது போகும். முதியவருக்கு சித்ரான்னம் பிடிக்குமா இல்லை குரங்கு உணவு தானா?”

“மந்தா, உன் கசப்பு அதர்மத்தை நோக்கிப் போகிறது.”

“எனக்கும் சேர்த்து நீங்கள்தான் தர்மவிசாரம் செய்கிறீர்களே”

தருமன் பிறகு பேசவில்லை. நீராடி முடித்ததும் “வருகிறாயா?” என்றான்.

“எதற்கு?” என்றான் பீமன். “பெண்களின் கண்ணீர் முகங்களைப் பார்க்கவா? அதைவிட இங்கேயே ஏதாவது முதலை முகங்களைப் பார்க்கலாம். நான் உணவை அனுப்புகிறேன்.”

தருமன் குனிந்த தலையுடன் ஒற்றையடிப் பாதையில் செல்வதைப் பார்க்க ஒரு கணம் பரிதாபமும் மறுகணம் துவேஷமும் எழுந்தது.

சித்ரான்னங்கள் உலையிலிருந்து இறங்கிவிட்டிருந்தன. பீமன் தன் வயிற்றுக்குள் இச்சை ஓலமிட்டு எழுவதை உணர்ந்தான். சற்று நேரத்தில் அவன் உடலே அவ்விச்சையாக மாறியது. அவன் உடலின் மறுபகுதியே அந்த அன்னம் என்பது போல. அந்த அன்னத்துடன் தன் அன்னமய உடல் இணையும்போதே அது பூரணமடைய முடியும் என்பது போல். நியதியின் பெரும் தருணம் ஒன்றிற்கு முந்தைய தவிப்பு போல.

பர்ணசாலைகளின் நடுவே செம்மண்ணாலான பெரிய முற்றம் இருந்தது. அதில் பழுத்த இலைகள் பரப்பப் பட்டிருந்தன. நடுவில் வியாசர் அமர்ந்திருந்தார். நீண்ட வெண்ணிறத் தாடி காற்றில் அசைந்தாடிக்கொண்டிருந்தது. கண்கள் அரைவாசி மூடியிருந்தன. எதிரே பாஞ்சாலி அமர்ந்து மெல்லிய குரலில் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தாள். சதயூபர் மடிமீது பெரியதொரு சுவடிக்கட்டை விரித்து வைத்து கண்களை இடுக்கியபடிக் கூர்ந்து படித்துக்கொண்டிருந்தார். முற்றத்தில் பரவலாக அனைவரும் அமர்ந்திருப்பது போலிருந்தது. தருமன் கவனமின்றி இலையொன்றை கிழித்தபடி அமர்ந்திருந்தான். திருதராஷ்டிர மன்னர் பார்வையிழந்தவர்களுக்கேயுரிய முறையில் மோவாயை விசித்திரமாகத் திருப்பி ஒலிகளைக் கூர்ந்து கேட்டபடி அமர்ந்திருந்தார். சற்றுத்தள்ளி மடியில் காண்டிபத்துடன் அர்ச்சுனன். பெண்கள் கூட்டத்தின் நடுவே இறுக்கமான முகத்துடன் குந்தி. பதுமைபோல காந்தாரி. வெளிறி மெலிந்த உத்தரை. முற்றத்திற்கு வெளியே கூட்டம் கூட்டமாக அந்தப்புரத்தின் பிற பெண்கள்.

பீமனின் வருகை அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தது. அது அவன் உடலசைவுகளில் சங்கடத்தைக் கலந்தது. அவன் வியாசரை “வணங்குகிறேன் பிதாமகரே” என்று தெண்டனிட்டான். “முழு ஆயுளுடன் இரு! புகழுடன் இரு! நிறை வாழ்வு உனக்கு அமையட்டும்” என்று வாழ்த்தினார். சதயூபரை வணங்கிவிட்டுப் பின்வரிசையில் போய் அமர்ந்து கொண்டான்.

பாஞ்சாலி கண்ணீரைத் துடைத்துவிட்டு சிவந்த விழிகளுடன் விலகித் தலைகுனிந்து அமர்ந்தாள். அவள் தோள்கள் விம்மல் கொண்டு அசைந்தன.

தருமன் திரும்பிப்பார்த்து “தம்பி, தாத்தா பெருங்காவியம் ஒன்று எழுதியிருக்கிறார்.”

“ஓகோ!” என்றான் பீமன்.

“குருஷேத்ர மகாயுத்தத்தை மையமாகக் கொண்டு குருவம்சத்தின் வரலாற்றையும் விருஷ்ணிகுலத்தின் வரலாற்றையும் விரிவாகச் சொல்கிற காவியம் இது” என்றான் தருமன்.

சங்கடமான அமைதி நிலவியது. காட்டுக்குள் காற்று ஒன்று ஊடுருவும் ஒலி கேட்டது.

“தந்தையே!” என்று கரடு தட்டிய குரலில் அழைத்தபடி முன்னால் சரிந்தான் திருதராஷ்டிரன். “எனக்குப் புரியவில்லை தந்தையே. என் மூடத்தனத்தை தாங்கள் மன்னிக்க வேண்டும். நான் கல்லாதவன். அகமும் இருண்டவன். இந்தப் பேரழிவின் கதையைத் தாங்கள் ஏன் எழுதவேண்டும்? உங்கள் உதிரத்தில் பிறந்த குழந்தைகள் காமக்குரோத மோகங்களினால் சண்டையிட்டு அழிந்ததை எழுதுவதில் உங்களுக்கு என்ன பெருமை?”

அத்தனைபேர் மனதிலும் எழுந்த வினா அது என்பதை, முகங்களில் தெரிந்த தீவிரம் மூலம், பீமன் அறிந்தான்.

வியாசர் பெருமூச்சு விட்டார். “இந்தக் கேள்வியைத்தான் நான் என்னிடம் கடந்த பத்துவருஷங்களாக மீண்டும் மீண்டும் கேட்டுக்கொண்டிருந்தேன். என் மனம் கொந்தளித்துக் கொண்டிருந்த காலம் அது. எங்கும் நிலைத்திருக்க முடியவில்லை. பாரத வர்ஷமெங்கும் அலைந்தேன். எங்கும் மக்கள் இந்தப் போரைப் பற்றியே பேசுவதைக் கண்டேன். சூதர்கள் பாடல் முழுக்க இப்போர் பரவி வளர்வதை அறிந்தேன். நாம் விரும்பினாலும் விரும்பாவிட்டாலும் இந்தப் போர் மானுட குலத்தின் ஞாபகத்தில் என்றென்றும் இருக்கத்தான் போகிறது. ஏன்? இந்தப் போர் ஒவ்வொரு மானுடர் மனத்திலும் நிகழும் போர் அல்லவா?” வியாசர் பெருமூச்சுடன் சிறிது நேரம் அமைதியாக இருந்தார்.

பிறகு தொடர்ந்தார். “வட தண்டகாருண்யத்தில் நான் ஆதிகவி வான்மீகியைச் சந்தித்து பாதம் பணிந்தேன். ஒரு மண்டலம் அவருடன் இருந்தேன். முதிர்ந்து பழுத்து உதிரும் தருவாயில் இருந்தார் அவர். என் இம்சைகளைக் கூறாமலேயே அறிந்து கொண்டார் போலும். ஒரு சைத்ர பெளர்ணமி நாளில் முன்னிரவில் என்னைப் பின் தொடரும்படி ஆணையிட்டு நடந்தார். நிலவின் ஒளியில் தியானத்தில் விரிந்த ரிஷிமனம் போல வழிந்த கங்கையின் கரையை அடைந்தோம். பாறையொன்றில் அமர்ந்து என்னை அமரச்சொன்னார். ஒரு பெரும் தராசு பற்றிக் கூறினார். நீதியும், அநீதியும், கருணையும், கொடூரமும், அழகும், கோரமும், ஆக்கமும், அழிவும் என அதற்கு இரு தட்டுகள். தராசுமுள் எப்போதும் சஞ்சலம் கொண்டது. கங்கையை சுட்டிக்காட்டியபடி ஆதிகவி கூறினார். ‘மகாகாவியம் என்பது கங்கை போல!. கங்கோத்ரியில் சிறு குடம் போன்ற ஊற்றிலிருந்து அது உற்பத்தியாகிறது. பல நூறு நதிகளும் ஓடைகளும் கலந்து பெரும் பிரவாகமாக மாறிக் கடலில் கலக்கிறது. முள் சமநிலை குலையும் ஒரு சலனத்தில் பிறக்கும் நதி அது. கடலைச் சேர்கையில் மீண்டும் முள் சமநிலை கொள்கிறது.’ என் மனம் ஒளிமயமாயிற்று. எழுந்து அவர் பாதங்களை வருடினேன். ‘உன் சொற்கள் ஒரு நாளும் அழியாமலிருக்கட்டும்’ என்று என்னை வாழ்த்தினார். தன் எழுத்தாணியை எனக்குத் தந்தார். கண்ணீருடன் அதைப் பெற்றுக்கொண்டேன். மறுநாள் அங்கிருந்து கிளம்பி உத்தரவனத்தை அடைந்து பர்ணசாலையொன்று எழுப்பினேன். இந்த பெருங்காவியத்தை இயற்ற ஆரம்பித்தேன். ஆறு வருடங்களில் இதை எழுதி முடித்தேன். என் வாழ்வின் நோக்கமே இது என்று தெளிவு அடைந்தேன். இது தர்ம அதர்மப் போரின் முடிவில்லாத கதை.”

வியாசர் சதயூபரைப் பார்த்தார். அவர் சுவடிகளைத் திரும்பக் கட்டுவதில் ஈடுபட்டிருந்தார். பறவைக்குரல்கள் உரக்க ஒலித்தன என்று தோன்றியது.

வியாசர் தனக்குள் உலவத்தொடங்கி விட்டிருந்தார் போலும். குரல் மங்கியது. “நான் கங்கோத்ரியின் முதல் ஊற்று. பெயரில்லாத பல்லாயிரம் சூதர்கள் மழையின் துளிகள். இந்தக்காவியம் தன் பாதையை தானே கண்டடைந்தபடி முன்னகர்கிறது. அதை ஒரு சமயம் வியப்புடனும், மறுசமயம் எக்களிப்புடனும், மறுசமயம் செயலற்ற வெறுமையுடனும் நான் பார்த்து நின்றேன். கங்கை மீது காற்று பரவும் போது தோன்றும் ஒரு மகத்தான கரம் சுவடிமீது எழுதிச்செல்வதாக. புரியாத மொழியாலான எழுத்துக்களின் அலைவரிசைகள். மறுகணம் தோன்றும் காவியம் கங்கைபோல என்றும் மாறாத அர்த்தத்துடன் ஆழத்துடன் அப்படியே ஓடிக்கொண்டிருக்கிறது. அதன் மீது காலத்தின் விரல்கள் புதுப்புதுக் கற்பனைகளைக் கணம்தோறும் எழுதிக் கொண்டிருக்கின்றன. ஆம் நீர்மேல் எழுத்து” வியாசர் சகஜமடைந்தார். “ஆனால் நீர் அறியும் தன் மீது எழுதப்பட்ட அனைத்தையும் நீரின் பெருவெளி அறியும் சொற்களின் பெருவெளியை. கடல்… ஆம், என்ன விபரீதமான மனப்பயணம். பலசமயம் சொற்கள் தொலைந்து போகின்றன. சொற்களில்லாத கணத்தை நான் அஞ்சுகிறேன். நான் கவிஞன்…”

வியாசன் மீண்டும் தன் மெளனத்திற்குத் திரும்பினான். எங்கும் அவனது மன உத்வேகம் பரவியதுபோல அம்மெளனமும் பரவியது.

தருமன் அந்த மெளனத்தால் பாதிக்கப்படாதவன் போலத் தோன்றினான். “பிதாமகரே தங்கள் காவியத்தில் தர்ம அதர்மப் பாகுபாட்டுக்கு என்ன ஆதாரத்தைக் கொண்டுள்ளீர்கள்?” என்றான்.

வியாசர் சற்று எரிச்சல் அடைந்தவர்போல “மானுட அனுபவத்தைத்தான்” என்றார்.

“என்ன தர்மமும் அதர்மமும்” என்று திடீரென்று திருதராஷ்டிரர் சீறினார். “வெல்பவன் தர்மவான்! தோற்பவன் அதர்மி! இதுதான் உலகநீதி இதுமட்டும்தான் வேண்டாம். பசப்பாதீர்கள் தந்தையே தாங்கள் இந்தக்காவியத்தை ஏன் எழுதினீர்கள் என்று அறியாத மூடனல்ல நான்.”

“ஏன்?” என்றார் சதயூபர் கோபத்துடன்.

“வேறு எதற்கு? உங்கள் பேரர்கள் மீது வந்த பெரும்பழியைத் துடைக்க. நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள் தந்தையே இது பாண்டவர் புகழ்பாடும் பரணி அல்லவா? அவர்கள் செயல்களையெல்லாம் தர்மத்தை நிலைநாட்டும் முயற்சிகளாகத்தானே நீங்கள் சித்தரித்துள்ளீர்கள்? வெற்றியின் பொருட்டு அவர்கள் செய்த அதர்மங்களைப் போர்தந்திரங்களாக சித்தரித்திருக்கிறீர்கள்தானே?”

“குழந்தை.”

“போதும். தருக்கங்களைக் கேட்டு என் காது புளித்துவிட்டது. தர்மங்களும் நியாயங்களும். என் குழந்தை தொடை உடைபட்டு ரத்தம் வடிய தரைமீது கிடந்தான். அவன் தலைமீது எட்டி உதைத்து… மணிமுடி சூடிய அவன் தலைமீது…”

பீமன் ஒரு கணம் குளிர்ந்துவிட்டான். தருமனின் கண்கள் அவனை சந்தித்து மீண்டன. அவற்றில் குற்றம் சாட்டும் பாவனை. பீமன் மனம் பொங்கியது.

“ஆம் தந்தையே. நான் தான் உமது மகனைக் கொன்றவன். அவன் தலையை உதைத்தவன். உம்மால் முடியுமெனில் என் காலை ஒடியும்.”

திருதராஷ்டிரன் தன் இரு கரங்களாலும் ஓங்கி அடித்தான். பேரொலி அனைவரையும் அதிர வைத்தது. கரிய பேருடலில் மாமிசப்பந்துகள் நெளிந்தன. வன்மம் கொண்ட வனமிருகம் ஒன்று உடலின் இருளுக்கு அப்பாலிருந்து உறுமியது.

பீமனை அந்தச் சவால் எழுச்சி கொள்ள வைத்தது. அவன் குகைச் சிம்மம் எழுந்து பிடரி சிலுப்பியது. “என் குலமகள் ஒற்றையாடையுடன் சபை நடுவே நின்றாள். அந்தப் பாவத்திற்கு பலியாக இன்னும் ஏழு ஜென்மங்களுக்கு அந்த அதமன் தலையைத் தரையில் உதைத்து உருட்டுவேன். என் தலையைக் கிரீடம் அணி செய்ய வேண்டியதில்லை. காலமுள்ளளவும் அந்தப் பழியே என் அணியாகுக” பீமன் கைகளை ஓங்கி அறைந்தான். “ஆம், குருவம்சத்தை அழித்தவன் நான் குலந்தகனாகிய பீமன் நான்” அவனுள் எக்களிப்பு பொங்கியது. துச்சாதனனின் பச்சைக் குருதி மணம் நாசியில், நாவில், ஆத்மாவின் மென்சரடில் பரவியது. தீமையில் பேரின்பத்தை வைத்த தேவன் எவன்? அவன் மைந்தன் நான்.

“உட்கார் குழந்தை” என்றார் வியாசர். “உன் மனம் எனக்குப் புரிகிறது.”

“உங்களுக்கு எவர் மனமும் புரிவது இல்லை. ரணகளத்துப் பிணங்களில் உங்கள் காவியத்துக்கு கதாபாத்திரங்கள் தேடுகிறீர்கள்” என்றான் அர்ச்சுனன். “தருமமாவது ஒன்றாவது. இங்கு நடந்தது ஒரு தற்கொலை அகந்தையாலும் பொறாமையாலும் ஒரு வம்சம் தன்னைத்தானே கொன்று கொண்டது. பிணத்துக்கு அணி செய்ய முயலவேண்டாம் பிதாமகரே.”

“குழந்தை, நீ சூதர்களின் பாடல்களைக் கேட்பதுண்டா?”

“அவர்களுக்கென்ன? ஒரு நாணயம் கிடைத்தால் சிகண்டியையே ஆண்மையின் சிகரமாக ஆக்கிவிடுவார்கள்.”

“வெற்றியை வழிபடுபவர்கள் சாமானியர்கள். வென்றவர்கள் செய்ததெல்லாம் தர்மம் என்பார்கள். தோற்றவர்கள் செய்ததெல்லாம் அதர்மம் என்பார்கள். வெற்றியை வழிபடுவது அகந்தையை வழிபடுவதுதான். அனைத்துப் பாவங்களுக்கும் முதற்காரணம் அகந்தை.”

திருதராஷ்டிரர் அலுப்புடன் “உபதேசங்களுக்கு எப்போதும் பஞ்சமில்லை” என்றான்.

*

வியாசர் அதைக் கேளாதவர்போல “எனது காவியம் வெற்றியைப் பாடுகிறது. அதற்குப்பின்னால் உள்ள தோல்விகளையும், சரிவுகளையும் சொல்கிறது. தோல்விக்குப் பின்னால் உள்ள மகத்துவங்களைப் பாடுகிறது. அன்புக்குள் வாழும் வெறுப்பையும் குரோதத்தின் ஊற்றுமுனையாகிய அன்பை, ஆக்கமும் அழிவும் கூடிமுயங்கும் வாழ்வை, என் காவியம் பாடுகிறது. மானுட வாழ்வு எனும், ஒரு போதும் புரிந்து கொள்ள முடியாத பிரவாகத்தைப் பற்றியே, நான் எழுதியுள்ளேன். அந்தப் பிரவாகத்தை மகாதர்மமே வழிநடத்துகிறது. அம்மகாதர்மத்தின் பிரதிபலிப்பு ஓவ்வொரு துளியிலும் தெரியக்கூடும். என் காவியம் காட்டுவது அதையே.!”

“இனி என்ன பயன் அதனால்?” என்றான் அர்ச்சுனன். “விதவைகளுக்கும், அனாதைப் பெற்றோர்களுக்கும் உங்கள் தர்மம் என்ன வழிகாட்டப்போகிறது?”

“முடிந்தது குருஷேத்ரப் போர். தர்மாதர்மப் போர் ஒருபோதும் முடிவுறுவதில்லை. நாம் கற்றதை நம் சந்ததியினருக்குப் பயன்படும்படி நாம் அளிக்க வேண்டாமா?”

அர்ச்சுனன் சிரித்தான். “பிதாமகரே! இந்த வயதிலும் தாங்கள் நம்பிக்கையுடன் இருப்பது வியப்புத் தருகிறது. நான் அறிந்த பாடம் ஒன்றேயொன்றுதான். மனிதவாழ்வு என்பது ஒரு பெரும் சரிவு. இழந்துகொண்டே இருப்பதுதான் வாழ்க்கை. அடையும் ஒவ்வொன்றிற்கும் நாம் ஆயிரம் மடங்கு விலை தருகிறோம். நாம் தரும் ஒவ்வொன்றுக்கும் இளமையில் ஆயிரம் பங்கு எடை. நாமோ இளமையைத் தந்து அனுபவங்களைப் பெற்றுக்கொள்கிறோம். இளமை வயது அணையத் தொடங்குகையில் தொலைதூரத்தில் கனவுவெளியென அது ஒளிபெற்று விரிந்து கிடக்கிறது. ஏக்கம் மிகுந்த கண்ணீருடன் இந்தக் கரையில் நின்றபடி நாம் புண்களையும், உதவாத நாணயங்களையும் எண்ணிக்கொண்டிருக்கிறோம்…” காண்டிவத்தை எடுத்துத் தோளில் மாட்டியபடி அவன் எழுந்தான். “ஆனால் இதை ஒரு வாலிபனுக்கு, எந்த முதியவரும் எக்காலத்திலும் சொல்லிப் புரியவைத்துவிட முடியாது. இந்த கங்கையைவிடப் பெரிய காவியம் எழுதினாலும்!.” வணங்கியபடி அவன் கிளம்பினான்.”நான் வருகிறேன் பிதாமகரே!.”

“தாத்தா காவியத்தை படித்துக்காட்டப் போகிறார் பார்த்தா!” என்றான் தருமன்.

“கண்ணனின் சிறு காவியமே என் தலைமீது இரும்புக்கிரீடம் போன்று கனக்கிறது” என்றான் அர்ச்சுனன். “சொற்களுள் விஷம் உள்ளது என்று என்னைவிடத் தெளிவாக அறிந்தவர் யார்?” அர்ச்சுனன் நடந்து மறைந்தான்.

மெல்லப் பீமனும் எழுந்தான்.

“மந்தா, நீ எங்கே போகிறாய்?”

“எனக்குப் பொதுவாகவே மானுட மொழி தெளிவாகப் புரிவதில்லை, அண்ணா. இங்கு நானிருந்து என்ன பயன்? நதிக்கரைக்குப்போனால் சமையலாவது நடக்கும்.”

“தந்தையே” என்று குந்தி தணிந்த, உறுதியான குரலில் கூறினாள். “தாங்கள் காவியத்தைப் படியுங்கள். என் குழந்தைகள் வழியாக தர்மம் ஆடிய விளையாட்டு என்னவென்று கூறுங்கள்…”

பீமன் கனமாக நடந்தான். திரும்பிப் பார்க்கும்போது குனிந்து அமர்ந்திருக்கும் பாஞ்சாலியின் கண்ணீர் மூக்கில் உருண்டுச் சொட்டுவதைக் கண்டான். அவளுடைய கன்றிப் போன முகம் அவன் வயிற்றைப் பிசைந்தது. மறுகணம் திசையற்றச் சினம் எங்கும் பரவியது. முகங்கள், முகங்களாக பிரக்ஞை பரவி விரிந்தது. துரியோதனன், கர்ணன், கடோத்கஜன் முகங்கள். முகங்களில் ததும்பும் அலைவெளி. அவற்றிலிருந்து விடுதலை இல்லை. எந்தக் காவிய வரியும் அவ்விடுதலையைத் தரப்போவதில்லை.

கங்கையின் கரையில் கூட்டம் கூட்டமாக நீர்ப்பலி நடந்துகொண்டிருந்தது. பீமன் கனத்த உடல் தரையில் அதிர்ந்து, பதிய நடந்தான். பறவைகள் கூடணையும் ஒலி, எல்லாத்திசைகளிலும் உரக்கக்கேட்டது. கங்கைக்கு அப்பால் பச்சை நிற வரம்பாகத் தெரிந்த மறுகரையின் மீது சூரியன் செந்நிறவட்டம் இறங்கிக் கொண்டிருந்தது. மேகங்களின் கங்கு அணையத் தொடங்கிவிட்டிருந்தது. நீரில் மந்திரங்கள் மிதந்தன. அலையலையாகச் சாந்தியடையாத ஆத்மாக்கள் தவித்தன. மலர்கள் அலைபாய்ந்து… அலைபாய்ந்து… அலைபாய்ந்து.. இத்தனை அனாதைக் குழந்தைகளா? கைவிடப்பட்ட பெற்றோரின் இந்த வெற்றுப் பார்வை இவ்வருடங்களில் காணும் திசையெங்கும் நிரம்பியிருக்கிறது. பதினாறு வருடங்கள் கழிந்துவிட்டன. இன்று எவரும் கதறி அழுவதில்லை. கண்ணீர்கூடக் குறைவுதான். பிரமையில் உறைந்த, மரத்த துக்கம். நீரற்ற குளங்களின் வெறுமை மண்டிய விழிகள். நினைவுகளின் அறுபட்ட சரடுகள் துடிக்கும் சொற்கள். அத்தனைபேர் கூடியிருந்தும், நதிக்கரை மெளனமாக இருந்தது. மெல்லிய ரீங்காரமாக எழுந்த மந்திர உச்சரிப்பு கங்கையின் அந்தரங்கப் பேச்சொலியுடன் கலந்தது.

“மந்தா! என்ன தாண்டிச் செல்கிறாய்?”

பீமன் பெருமூச்சுடன் நின்றான். படித்துறையில் திருதராஷ்டிரன், தருமன், வியாசன், செளனகர் என்று கூட்டம். தருமன் உற்சாகமாக இருப்பதாகப் பட்டது. வைதீகச் சடங்குகளின்போது அவனுக்கு வரும் இயல்பான உற்சாகம். நான் மிருகமில்லை. கோழையான எளிய மானுடன். இல்லையேல் இக்கணம் உதிரவெறியுடன் உன்னைக் கிழித்து…

“மந்தா! சீக்கிரம் நீராடு” என்றான் தருமன்.”உனக்காகவே காத்திருக்கிறோம். இன்று இறுதிநாள். நீர்ப்பலி. இதுகூட நினைவில்லையா என்ன?”

பீமன் நதியிலிறங்கி நீராடினான். வெற்று உடல்மீது நீர்த்துளிகள் வழிய உடையை இறுக்கியபடி எழுந்துவந்தான். செளனகர், “பாண்டவர் அனைவரும் வந்தாயிற்றா?” என்றார்.

“ஆம் ஆச்சாரியரே, மந்தனுக்கு ஒருமுறை விளக்கிவிடுங்கள்.”

ஸெளனகர் “சரி” என்றார். பிறகு பீமனிடம் “இன்றோடு போர் முடிந்து பதினாறு வருடங்கள் முடிகின்றன. இறந்து போனவர்களுக்காக மூவகை சிரார்த்தங்களைச் செய்யவேண்டுமென்பது விதி. ஏகோத்திஷ்டம், பார்வணம், சபிண்டனம். வருடம் தோறும் செய்யவேண்டிய பித்ருகடன் ஏகோத்திஷ்டம். ஃபுவர்லோகத்தில் ஆத்மா பிரவேசிக்கும் பொருட்டு வாரிசுகள் செய்யவேண்டியது பார்வணம். அம்மூதாதையரின் ஆத்மாக்களை காலப்பெருவெளியுடன் மீதியின்றி கலக்கும் பொருட்டு ஆற்ற வேண்டியது சபிண்டனம். இங்கு சபிண்டன சிரார்த்தம் இன்றோடு முடியப்போகிறது. எள்ளும் நீரும் மலரும் இறைத்து, பூரண மந்திர உச்சாடனத்துடன் இதை முடித்தபிறகு பாண்டவர்கள் எவரும் எந்த வடிவத்திலும் எஞ்சுவதில்லை. பிரம்மத்துடன் ஐக்கியமாகிவிடுவார்கள். நதி கடலுடன் கலப்பதுபோல. பிறகு பித்ருக்களினாலான மகாகாலத்திற்குச் செய்யும் பொதுவான சிரார்த்தமே போதுமானது. விதிப்படி அவர்களைப் பிரித்து எண்ணுவதும்கூடப் பெரும் பாபமாகும்.”

ஸெளனகர் தர்ப்பையை எடுத்தார். மந்திர உச்சாடனத்துடன் மலரை அள்ளினார். சற்றுத்தள்ளி பிண்டம் வைக்கக் குவிக்கப்பட்ட ஆறிய சாதம் இருந்தது. சடங்குகள் தொடங்கின.

பிதாமகரே என்று பாஞ்சாலியின் குரல் வீறிட்டது. அனைவரும் திடுக்கிட்டனர். அவிழ்ந்த முடியும் கலைந்த உடையுமாக அவள் ஓடிவந்து நதிமேட்டில் நின்றாள்.”பிதாமகரே வேண்டாம். பூர்ணப்பிண்டம் வேண்டாம்.”

“ஏனம்மா” என்றார் வியாசர்.

“என் குழந்தைகள், அவர்களை நான் பார்க்கவேண்டும். நான் இறந்தபிறகாவது அவர்களைப் பார்க்கவேண்டும்.” கதறியபடி. அவள் தரையில் சரிந்தாள். மார்பில், வெறியுடன் ஓங்கி, அறைந்துகொண்டு கதறியழுதாள். “என் குழந்தைகளை இந்தப் பாழும் மார்பில் மீண்டும் ஒரு முறையாவது அணைத்துக் கொள்ள வேண்டும். என் செல்வங்களின் பொன்னுடல் தீயில் எரிந்தது. என் தேவர்களே, உங்களுக்கு வலித்ததா என்று கேட்க வேண்டும். அவர்கள் எனக்காகக் காத்திருக்கட்டும் பிதாமகரே.”

“என்ன மூடத்தனம் இது, திரெளபதி?”

“ஆம் நான் மூடப்பெண்தான். வெறும் மூடம். வெறும் ஜடம்.” திரெளபதி வெறியுடன் தலையை அறைந்தபடி ஊளையிட்டு அழ ஆரம்பித்தாள். என்ன மூர்க்கத்தனம்! பீமனின் வயிறு நடுங்கியது. அச்சத்தில் உடல் செயலற்றுவிட்டது.

விரிந்த தலையுடன் பெண்கள் நாலாபக்கமிருந்தும் ஓடிவந்தனர். அவர்கள் அலறினார்கள். “வேண்டாம் பிதாமகரே. பூர்ணப்பிண்டம் வேண்டாம்.”

வியாசர் படியேறி நெடிய உடலை நிமிர்த்து நின்றார். “என்ன சொல்கிறீர்கள் என்று தெரிந்துதான் சொல்கிறீர்களா?”

“ஒரு முதிய பெண் ஓடிவந்து வியாசரின் காலில் விழுந்தாள். காதுகளும் மார்புகளும் நீண்டு தொங்கின. வெண்ணிறத் தலைமயிர் விரிந்து, சுருக்கம் பரவிய வெற்று முதுகில் ஈரமாக ஒட்டியிருந்தது.

“மகாஞானியே ஒன்பது பிள்ளைகளையும் பதினேழு பேரர்களையும் பறிகொடுத்த பெரும்பாவி நான். பதினாறு வருடமாகிறது நான் தூங்கி. என் குழந்தைகள் வந்துவிடுவார்கள் என்று நம்பினேன். ஏதோ ஒரு அற்புதம் நடக்கும் என்று எண்ணியிருந்தேன். உத்தமரே என் வாழ்க்கையை வீணடித்துவிடாதீர்கள். என்னை கைவிட்டுவிடாதீர்கள்.”

“எங்கள் குழந்தைகளை நாங்கள் பார்க்கவேண்டும் உத்தமரே” என்று குரல்கள் வீரிட்டன. அழுகைகளும் புலம்பல்களும் நான்கு திசைகளிலிருந்தும் வந்து பெருகின. துக்கம் அலையலையாகக் காற்றை நிரப்புவதுபோல. வானம் இருண்டுவிட்டிருந்தது. கங்கையின் மறுவிளிம்பில் மெல்லிய வெளிச்சம் மீதமிருந்தது. அது நீர்ப்பரப்பில் நெளிந்து தளதளத்தது.

“நான் என்ன செய்யமுடியும்? நான் வெறும் கவிஞன் தாயே” என்றார் வியாசர் தளர்ந்த குரலில்.

“பிதாமகரே நீர் அறிவீர். எங்கள் குழந்தைகள் எங்கே?” ஒரு பெண் கூவினாள்.

“அவர்கள் வீர சுவர்க்கத்தில் இருக்கிறார்கள். வீரர்களுக்குரிய போகங்களுடன், வீரர்களுக்குரிய மகத்துவங்களுடன்.”

“நீங்கள் எப்படிக் கண்டீர்கள்?”

“நான் கவிஞன். சொற்களைப் பரு வடிவு விட்டு தியான வடிவம் கொள்ளவைக்கும் வரம் பெற்றவன். தியான வடிவாக அனைத்துலகங்களையும் தொட்டு விரியும் என் பிரக்ஞை. என்னை நம்புங்கள்.”

“பிதாமகரே” என்று ஒரு கிழவி ஆங்காரமாக வீறிட்டாள். “எங்கள் குழந்தைகளை எங்களுக்குக் காட்டுங்கள். நீங்கள் கூறுவது உண்மையென்றால் காட்டுங்கள் தர்மத்தின் மீது ஆணை”

“காட்டுங்கள்! காட்டுங்கள்!” என்று ஓலமிட்டது அந்த நதிக்கரை.

“ஒரு கணம் பிதாமகரே கனிவு காட்டுங்கள் ஒரு கணம்.” ஒரு பெண் கதறியழுதாள்.

நிலா மேற்கே நெளிந்து வந்தது. கங்கையின் நீர்ப்பரப்பு மீது அது பிரதிபலித்தது. கரையிலிருந்து ஒளியாலான நடைபாதை ஒன்று நிலவை நோக்கி நீண்டது. வியாசர் நிலவை நோக்கியபடி ஒளிவிடும் கண்களுடன் நின்றார். குரல்கள் மன்றாடின. கூவி அழுதன. ஒளி பெற்ற வான் கீழ் துயரத்தின் அதிதேவன் என காவிய கர்த்தன் நின்றான்.

கங்கையில் ஒரு மீன் துள்ளி விழுந்தது. அலைகள் ஒளி வளையங்களாகப் பரவின. வியாசர் கரங்களைத் தூக்கினார். “சரி காட்டுகிறேன். அவர்களைப் பார்ப்பது உங்களுக்கு மன அமைதி தருமா? தங்கள் புகழுலகில் அவர்கள் ஒளியுடன் இருப்பதைக் கண்டால் உங்கள் தீ அணையுமா?”

“ஒரு கணம் என் குழந்தையைப் பார்த்தால் போதும் பிதாமகரே வேறு எதுவும் வேண்டாம்.” மார்பில் ஓங்கி அறைந்தபடி ஒரு பெண் கதறினாள்.

வியாசர் கங்கையை நோக்கி திரும்பினார். அழுத்தமான குரலில் அவர் கூறிய மந்திரம் பீமனுக்குக் கேட்டது. “கங்கையே நீ என் மூதாதை. என் சித்தம் உன் பிரவாகம். என் தவம் மெய்யானது எனில் நீ என் காவியமாகி விரிக ஓம் அவ்வாறே ஆகுக”

பீமனின் மனம் படபடத்தது. கங்கையைப் பார்த்தான். கங்கைமீது நிலவின் ஒளி விரிவடையத் தொடங்கியது. மெல்ல ஒளி அதிகரித்தபடியே வந்தது. ஒளிபெற்ற படிக வெளியாக அது ஆயிற்று. நீரின் பொன்னிற ஆழம் தெரிந்தது. அங்கு வெகு தூரத்தில் நிலா ஒன்று சுடர்ந்தது. பளிங்கு மாளிகைகள் நிரம்பிய பெரும் நகரம் ஒன்று கனவு போலத் தெரிந்தது. அது அஸ்தினாபுரம் என்பதை பீமன் வியப்புடன் அறிந்தான். தெருக்களில் பொற் பல்லக்குகள் நகர்ந்தன. புரவிகள் வெண்ணிற மேகங்கள் போல ஓடின. அங்கிருந்து பொன்னொளி சுடரும் பாதை ஒன்று கிளம்பி மேலே வந்தது. அதன் வழியாக மெதுவாக நடந்து ஒருவன் வந்தான். ஒளி சிதறும் வைரமுடியும், மணிக்குண்டலங்களும் பொற்கலசமும் அணிந்திருந்தான். கையில் பொற்கதாயுதம். அது துரியோதனன் என்பதை பீமன் மார்பை அடைத்த வியப்புடன் அறிந்தான். துரியோதனனின் முகம் பொலிவு நிரம்பியதாக இருந்தது. கண்களில் இன்பம் சுடர அவன் நீர் மீது எழுந்து நின்றான். திருதராஷ்டிரர் உரத்தகுரலில் “மகனே துரியோதனா” என்று வீரிட்டார். மதயானையின் பிளிறல் போலிருந்தது அது. அவருக்கு எப்படித் தெரிகிறது அந்தக் காட்சி? இதெல்லாம் மனப் பிரமைதானா?  கவசகுண்டலங்கள், செஞ்சூரியக்கதிர்கள் என ஒளிவிட கர்ணன் வந்து நின்றான். துச்சாதனன் புன்னகை தவழும் இனிய முகத்துடன் எழுந்தான். சகுனியும், பீஷ்மரும் வந்தனர். சாரி,சாரியாக வந்தபடியே இருந்தனர். தன் கண்கள் அந்தக் கூட்டத்தில் ஓர் உருவத்தை பதைபதைப்புடன் தேடுவதை பீமன் உணர்ந்தான். சட்டென்று புலன்கள் குளிர்ந்தன. கையில் பாசாயுதத்துடன் உயர்ந்த கரிய உடலை மெல்ல ஆட்டியவனாக யானைக்குட்டி போல கடோத்கஜன் நடந்து வந்தான். அப்படியே பாய்ந்து அவனைக் கட்டிக்கொள்ளவேண்டும் போலிருந்தது. அவனுடைய கரும்பாறை போன்ற தோள்களை இறுகத் தழுவி அவன் மயிரடர்ந்த சிரத்தை மார்போடு இறுக்கி… அப்போதுதான் தன் மார்பில் தெறிக்கும் இந்த வெற்றிடம் உடையும். என் வனமூர்க்கம் முளைத்தெழுந்தவன் இவன். பீமனைவிட பீமனான என் மகன். கடோத்கஜன். கடோத்கஜன். இமைத்தால் கூட அந்தக் காட்சி நழுவிவிடும் என்று பயந்தவன் போல அவனையே பார்த்தான். அவனுடையில் ஓர் உறுப்பைப் பார்க்கும்போது பிற உறுப்புகளைப் பார்ப்பதை இழந்துவிடுவோம் என்று பட்டதால் பதற்றமடைந்து பரபரத்தது மனம். பார்வை மீள மீளத் தவித்து அவன் உடலை வருட வருட குடிக்கத் தொலையாத பெரும்தாகம் என எரியும் தவிப்பு. அத்தவிப்பு அவன் பெயர் மந்திரமாக உள்ளூர இடைவிடாது ஓடியது. அவன் உடலின் தொடுகைக்கு தன் உடல் பரபரத்தது. தொடுகையில் அல்லவா என் மகனை என் ஆத்மா அறிய முடியும். இதோ எல்லாம் முடிந்துவிடும். இந்தப் பிரமை கடோத்கஜன் என் மகன்… திடீரென்று பாஞ்சாலி “மகனே” என்று கூவியபடி நீரை நோக்கி ஓடினாள். பீமன் அனிச்சையாக அவள் புஜங்களைத் தாவிப் பற்றிக் கொண்டான். எங்கும் வீரிட்ட அலறல்கள் வெடித்துப் பரவின. பெண்களும் முதியவர்களும் கூட்டம் கூட்டமாக நீரை நோக்கி ஓடினர்.

“நில்லுங்கள் நில்லுங்கள்” என்று வியாசர் கூவினார்.

கூட்டம் கூட்டமாக பெண்கள் நீரில் விழுந்தனர். கங்கை நீர், ஆயிரம் வாய் பிளந்து, அவர்களை விழுங்கியது.

“அர்ச்சுனா நிறுத்து அவர்களை. அர்ச்சுனா” என்றார் வியாசர். உடல் பரிதவிக்க முன்னும் பின்னும் ஓடியபடிக் கதறினார். கையில் காண்டிவத்துடன் கண்ணீர் வழிய அர்ச்சுனன் நின்றான்.

“அர்ச்சுனா…”

“அவர்கள் போகட்டும் பிதாமகரே அவர்களுக்கு இனிமேலாவது நிம்மதி கிடைக்கட்டும்.”

“இது என்ன அபத்தம் நில்லுங்கள் நில்லுங்கள் போகாதீர்கள்.” வியாசர் பித்தர் போலக் கூவினார். பாஞ்சாலி திமிறினாள். வெறி கொண்ட குதிரை போல பாய முயன்றாள். பீமன் கை ஒரு நொடி தளர்ந்தது. பிடியை உதறிவிட்டுக் கங்கையை நோக்கி ஓடி கடோத்கஜனை அடைய மனம் தாவியது. மறுகணம் காட்சி அணைந்தது.

“என் குழந்தைகளே என் செல்வங்களே” என்று கதறியபடி திரெளபதி தளர்ந்து விழுந்தாள்.

“அர்ச்சுனா என்ன காரியம் செய்தாய்? அவர்கள் உன் குடிமக்கள். அவர்களைக் காப்பது உன் கடமை.”

“இல்லை பிதாமகரே! அவர்கள் எமனின் குடிமக்கள். தங்கள் மைந்தர்களுடனும் கணவர்களுடனும் அவர்கள் சென்று சேரட்டும். பிதாமகரே! அபிமன்யுவையும் அரவானையும் பார்த்தபோது ஒரு கணம் என் கால்கள் தவித்தன. ஏன் நான் ஓடவில்லை? உயிராசையா? ஆம். எளிய பாமரமக்களுக்கு இருக்கும் உணர்ச்சிகள் கூட இல்லாதவன் நான். அற்பன். உயிரை நேசிக்கும் கோழை.”

“பார்த்தா! உனக்குத் தெரியாது” என்றபடி வியாசர் படிக்கட்டில் தளர்ந்து அமர்ந்தார். தலையைக் கைகளால் அறைந்தார். “நான் மூடன்! நான் மூடன்!. பெரும் பிழை செய்துவிட்டேன்.” வியாசர் மெல்லிய விசும்பல்களுடன் அழ ஆரம்பித்தார். இரையுண்ட பாம்பு போல கங்கை அமைதியாக விரிந்து கிடந்தது.

“தந்தையே!” என்றார் திருதராஷ்டிரர். “அவர்கள் அங்கு தங்கள் குழந்தைகளுடன் வாழ்வதை விட மேலானதா இங்கு நடமாடும் பிணங்களாக வாழ்வது? என்னை யாராவது பிடித்து அங்கு இட்டுச் சென்றிருக்கலாகாதா?”

குந்தி மண்ணில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அவள் எண்ணுவது கர்ணனை என்ற எண்ணம் கசப்பாக பீமன் மனதில் எழுந்து நிரம்பியது.

“எப்படிச் சொல்வேன் குழந்தைகளே? நீங்கள் பார்த்தது என் காவியத்தின் ஓர் உருவெளித்தோற்றம். கங்கை என் காவியமாக ஆயிற்று. காவியம் ஒரு பிரதிபலிப்பு மட்டுமே.”

அர்ச்சுனன் அச்சத்துடன் “அப்படியானால் இவர்கள்?” என்றான்.

வியாசர் மெல்ல அடங்கினார். கண்களில் கண்ணீர் முத்துக்கள் ஒளிவிட்டன. பெருமூச்சுடன் கங்கையையே பார்த்தார். “காவியத்தில் நாம் பார்ப்பது வானைப் பிரதிபலிக்கும் மேற்பரப்புகளை மட்டுமே. ஆழத்தில் இருண்ட பிரம்மாண்டங்கள் விரிந்து கிடக்கின்றன. அங்கு சதகோடி மானுடர் உறைகின்றனர். அவர்களுடைய கூறப்படாத துக்கங்கள் பகிரப்படாத கனவுகள். அங்கு எந்த ஒளியும் சென்று சேர்வதில்லை. காலத்தின் விரல்நுனி அங்குத் துயில்பவர்களை ஒரு போதும் தீண்டப் போவதில்லை. காவிய ஆழம் ஓர் உவமையின் மின்மினிகூட வழிதவறிச் செல்லமுடியாத பேரிருள்…”

பீமன் மனம் நடுங்கி உறைந்தது. கங்கையைப் பார்க்கமுடியவில்லை. கரியவாள் போல அது கிடந்தது. அதன் ஆழ்த்தில் நிழல் நிழலாக கரைந்திறங்குவது என்ன? பீமன் தன்னுள் தேங்கிய வெறுமையை எல்லாம் பெருமூச்சாக மாற்றி வெளித்தள்ள முயன்றான். மார்பு காலியாகவேயில்லை. திரும்பிக் காட்டை நோக்கி நடந்தான். இருளில் திமிறிப் புணர்ந்த மரங்கள் காற்றில் உருமும் காடு. அங்கு நிழல்கள் ததும்பின. பெயரற்ற அடையாளமற்ற தவிப்பு மட்டுமேயான நிழல்கள்.

கதைசொல்லி- மார்ச் மே 99

முந்தைய கட்டுரைகடிதங்கள்
அடுத்த கட்டுரைஒழிமுறி கோவாவில்