ஜெ
கொஞ்சநாளைக்கு முன்னால் ஒருமுறை நான் செஞ்சி வழியாக வந்துகொண்டிருந்தபோது மலைக்குமேல் இருந்த மிகப்பெரிய பாறையைப்பார்த்தேன். உள்ளங்கையில் ஒரு சின்னக்கல்லை தூக்கி வைத்திருப்பதுபோலத் தோன்றியது. அப்போது தோன்றியது கூழாங்கற்கள் எல்லாமே குட்டி மலைகள் அல்லவா என்று. சிறிய பூச்சிகளுக்கு அவை மலைகள்தான்.
அப்போது ஒரு கவிதை எழுதினேன்
கோடிக்கணக்கான மலைகளால்
ஆனது இந்தப்பூமி
பெரியமலைகள் மேலும் பெரியமலைகள்
மலைகளுக்கு மேல்
மலைகளுக்கு நடுவே
மலைகளுக்கு அடியில்
வாழ்கிறோம்.
மலைகள் அறிவதில்லை நம்மை
அல்லது அவை அவ்வாறு காட்டிக்கொள்வதில்லை
மலை ஒன்றை அசைத்துச் சரிக்கிறது
சிற்றெறும்பு ஒன்று
மலைமேல் பறந்துசெல்கிறது
வெண்கொக்கு ஒன்று
மலையைத் தியானிக்கிறது
புல்வெளியில் அமர்ந்திருக்கும்
உருவற்ற மலை ஒன்று
தேவதச்சனின் கவிதைகளையும் அவரைப்பற்றிய கட்டுரைகளையும் வாசித்துக்கொண்டிருந்தேன்.அப்போது இந்தக்கவிதைஎன்னை திடுக்கிடச்செய்தது. நான் அடைந்த அதே அனுபவம் அதிலும் பதிவாகியிருந்தது
கல் எறிதல்
ஆளாளுக்கு கல் எடுத்து
எறிந்தனர். என் கையிலும்
ஒன்றைத் திணித்தனர்
உள்ளங்கையை விரித்து
மலைத்தொடர் வடிவத்தில்
இருந்த கல்லைப் பார்த்தேன்
உற்று நோக்கினேன்
உற்று நோக்கிக் கொண்டிருந்தேன். ஓசையற்று
மலைத்தொடர் மறைந்தது
வெறுங்கையை வேகமாக
வீசினேன்.
விடைபெறும் முகமாகவும்
என்னையும்
தூக்கிச் செல்லேன் என்று
இறைஞ்சும் விதமாகவும்.
உள்ளங்கையை விரித்து மலைத்தொடர் வடிவத்தில் இருந்த கல்லைப் பார்த்தேன் என்ற வரியை பலமுறை வாசித்துக்கொண்டிருந்தேன். உண்மையில் சின்னக்குழந்தைகளின் இயல்பு இது. பெரிதை சிறிதாகவும் சிறிதை பெரிதாகவும் அவை பார்க்கும். சைதன்யா டாங்கர் லாரியை ஓ எவ்ளோ பெரிய மாத்திரை என்று சொன்னதை நீங்கள் எழுதியிருக்கிறீர்கள்
இந்தப்பூமியை ஒரு சின்னக்கூழாங்கல்லாக ஆக்கிவிடுகிறது கவிதை
ஜெகதீஷ்