நிலா எங்கே போகிறது?

1

 

ஜெ,

அதோ பார் வானம் என்ற பின் மேலே பார்க்கும் குழந்தையின் மனது போல, தேவதச்சனின் கவிதை கட்டுரைகள்

கவிதைகள் பெரும்பாலும் தின வாழ்வில் வரும் நிகழ்வுகளின் ஒரு உறைந்து கொண்ட காட்சிகளின் பார்வையுடன் தொடங்குகிறது. ( சிறுமி சைக்கிள் கவிதை / குளியலறையில் பல பொருட்கள் …) பின் அவரது கவிதை கோணம் சரியான வார்த்தைகளில் வந்து திரையை விலக்கி புதிதான கண் திறப்பு போல ஒன்றை காட்டி செல்கிறது – ஆழமான தத்துவ அலைகளுடன்.
“அடுத்த துணி எடுத்தேன். காதில் விழுந்தது நிசப்தம் போடுகிற குருவிகள் சப்தம்.”
“எல்லோர் கூடவும் போன நிலா பிறகு எங்கே போனதென்று
எல்லோருக்கும் தெரியவில்லை”
“” எண்ணங்கள் ஒன்றுக்கொன்று அருகாமையிலும் சில தொலைவிலும்.”
“வெட்ட வெளியில் ஆட்டிடையன் ஒருவன் மேய்த்துக் கொண்டிருக்கிறான்”
“வந்துவந்து போகிறது பத்திவாசனை…. தெருவில் கலைந்து கிடக்கும் இரும்புச் சேர்களில் காத்திருக்கிறது “
ஒரு கவிதையை படித்த பின் ஒரு சில நிமிடங்கள் மேலே படிக்காமல், அப்படியே நோக்கி கொண்டு இருந்தால், அது எடுத்து செல்லும் இடம் புதிதாக இருக்கிறது. அது நிகழ்த்தும் உணர்வும் விரிவும் சப்தமின்றி எண்ணங்களின்றி நடக்கின்றன … வித்தியாசமான உணர்வு நிலை கொண்டவை கவிதை படித்த பின் வரும் சில கணங்கள்
விஷ்ணுபுரம் விழாவில் அனைவரையும் சந்திக்க ஆவலுடன்,
லிங்கராஜ்
ஜெ
தேவதச்சனின் கவிதைகளை மிகுந்த ஆவலுடன் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவாரை வாசிப்பதற்கான ஒரு வாசலைத் திறந்திருக்கின்றன நீங்கள் வெளியிட்ட கட்டுரைகள்.

சிறுமி கூவுகிறாள்.

நான் போகிற இடம் எல்லாம் நிலா

கூடவே வருகிறதே.

சிறுவன் கத்தினான்.

இல்லை. நிலா என்கூட வருகிறது

இருவரும் சண்டை போட்டுக்கொண்டு திருப்பத்தில்

பிரிந்தனர்.

வீட்டிக்குள் நுழைந்து, உடன்

வெளியே வந்து எட்டிப் பார்க்கிறாள்.

நிலா இருக்கிறதா?

இருக்கிறதே

அவள் சின்ன அலையை போல சுருண்டாள்

அந்தச் சின்ன அலையில் கரையத் தொடங்கியது நிலவொளி

எல்லோர் கூடவும் போன நிலா பிறகு

எங்கே போனதென்று

எல்லோருக்கும் தெரியவில்லை

என்ற கவிதையை என் மகளுக்கு வாசித்துக்காட்டினேன். அவளுக்கு என்ன புரிகிறது என்று பார்ப்பதற்காக. அவளுக்கு புரியவில்லை, ஆனால் மகிழ்ச்சியாக இருந்தது. அந்தச்சிறுமி நானா என்றாள். நீயும்தான் என்று சொன்னேன்

எல்லார்கூடவும் போன நிலா எங்கே போகிறது என்று அவளிடம் கேட்டேன். தலை சரித்து சிந்தித்துவிட்டு அதன் அம்மா அப்பா கூட போய் நடுவாலே படுத்துக்கும் என்று சொன்னாள். சிரித்துக்கொண்டேன்

தேவதச்சனின் சிரிக்கும் கண்களை பார்த்தபோது என் மகளிடம்தான் அவருக்கு அதிகமாகச் சொல்வதற்கு இருக்கும் என்று தோன்றியது

முரளி ஆர்

 

அன்புள்ள ஜெ சார்

தேவதச்சனுக்கு விஷ்ணுபுரம் விருது அளிக்கப்படுவதற்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். நீங்கள் எழுதிய கட்டுரைகளும் திரு சபரிநாதன் அவர்களின் கட்டுரையும் அழகாக அவரது கவியுலகை புரியவைத்தன

அதைவிட யுவன் சந்திரசேகரின் நாவலில் இருந்து மழை ஏன் பெய்கிறது என்ற கேள்விக்கு தேவதச்சனைப்போன்ற ஒரு கதாபாத்திரம் பதில் சொல்வதாக எழுதியிருந்தீர்களே அது முக்கியமானதாக இருந்தது. தேவதச்சனை மிக நெருக்கமாக்கியது அது. அந்தப்பதிலை எந்தக்குழந்தைக்கும் சொல்லலாம். அதைத்தான் அவரது கவிதைகளும் சொல்கின்றன

ஜெயராம்

 

 
அன்புள்ள ஜெ,
முன்னொருதரம் ஞானக்கூத்தன் பற்றி ஒரு பதிவை எழுதியபோது அவரின் கவிதைகளைத்தாண்டி கவிதைகளுக்கு வெளியே அவரைப்பற்றி எந்த ஒரு சிறு தகவலும் எனக்கு தெரியாது. இருந்தும் பாரதியாரின் என்ற சித்தரின் தொடர்ச்சி அவர் என்பதை அவரின் கவிதைகளில் அவதானிக்க முடிந்தது. பாரதிக்கும் அவருக்குமான மானசீகமான நெருக்கத்தின் நேர்கோடு என்பது ஞானக்கூத்தனின் கவிதைகளை வாசிக்கும் எவரும் எளிதில் யூகித்து வரையக்கூடிய ஒன்றே. இதை அவருடன் நெருங்கிப்பழகிய கமலஹாசன் காணொளியில் குறிப்பிட்டது எனக்கு பெரும் ஆச்சரியமாக இருந்தது. தன்னைப்பற்றிய எத்தைனையோ விஷயங்களை தன்னை அறியாமலேயே தன் கவிதைகளில் விட்டுச்செல்கிறான் கவிஞன் என்ற பொதுவான எண்ணம் மேலும் வலுப்பட்டது,
இம்மனப்பதிவுக்கு தேவதச்சன் பெரும் விதிவிலக்கு என்று தோன்றுகிறது. அவரின் கவிதைகள் அனைத்தையும் ஒட்டுமொத்தமாக வைத்துப் பார்க்கையில் தேவதச்சனின் குரல் பற்றி ஒருவிதமான தெளிவின்மையே மிஞ்சுகிறது. காலத்தின் வரிசையில் அமைந்த ஒரே தொகுதியில் உள்ள கவிதைகள் கூட ஒரே மாதிரியானவை என்று சொல்ல முடிபவை அல்ல. தேவதேவன், மனுஷ்யபுத்திரன் ஆகிவர்களின் கவிதைகளில் அன்று முதல் இன்று வரையுள்ள ஆச்சரியமூட்டும் தொடர்ச்சியும் ஒருமையும் தேவதச்சனின் கவிதைகளில் காணக்கிடைப்பதிலை. அவரின் குரல் வெவ்வேறு தொனிகளை உடையது என்ற எண்ணமே ஏற்படுகிறது.

இதற்கான ஆராய்ச்சியும் முடிவுகளும் உங்களின் கட்டுரைகளில் உள்ளன. எந்தவொரு படைப்பை முழுக்க அறியவும் படைப்பாளியின் பின்புலம் பற்றிய அறிதல் தேவையானதுதான். தேவதச்சனைப்பொறுத்தவரை இது அத்யாவசியமானது என்று நினைக்கிறேன்.
-வேணு

 

முந்தைய கட்டுரைஅலை அறிந்தது…
அடுத்த கட்டுரைஅஞ்சலி : கௌரிஷங்கர்