அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு
நான் நலம். தாங்களும் நலமுடன் இருப்பீர்கள் என நம்புகிறேன். என் மனதில் உங்கள் உருவம் வளர்ந்து கொண்டே வருகிறது அல்லது நான் சிறுத்துக் கொண்டிருக்கிறேன் அல்லது இரண்டும். கீதைப் பேருரையின் முதல் இரண்டு பாகங்களான வரலாற்றுப் பின்புலத்தையும் தத்துவப் பின்புலத்தையும் தரவிறக்கிக் கேட்டதோடு இந்த நாள் முடிந்தது. கொற்றவை படித்தபோது ஏற்பட்ட அழுகையை வரவழைக்கும் மனவெழுச்சி ஏனோ இன்றும் ஏற்பட்டது.
பாரதியாரின் கீதை மொழிபெயர்ப்பை முன்னரே படித்திருக்கிறேன். ஆனால் உங்கள் உரை என் போதமையை எனக்கு உணர்த்தியதோடு கீதையுடன் எனக்கு ஏற்பட்டிருந்த நெருக்கத்தை என்னுடைய “முற்போக்கு ” நண்பர்களுக்கும் “தீவிர பக்த” நண்பர்களுக்கும் நிச்சயம் குழப்பமில்லாமல் என்னால் எடுத்து வைக்க முடியுமென்ற நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணன் குறித்து நீங்கள் அளிக்கும் சித்திரம் மிக அந்தரங்கமாக ஏற்கனவே என்னுள் இருந்துவந்ததை உணர்ந்தபோது மூச்சு திணறல் ஏற்பட்டது போல் இருந்தது.
அன்புடன்
சுரேஷ் பன்னீர்செல்வம்
***
அன்புள்ள சுரேஷ்
கீதையை நாம் அனைவருமே ஏதோ ஒருவகையில் அறிந்திருப்போம். ஆனால் அதை உரியவாயில்கள் வழியாக நுழைந்திருக்க மாட்டோம். நான் முன்னரே சொன்னதுபோல அது அனைவரும் நேரடியாக உள்ளே நுழையக்கூடிய மாளிகை அல்ல. அது ஒரு தத்துவநூல். உருவகநூல். ஆகவே இலக்கியம். என் உரைகள் அதை திறப்பதற்கான முயற்சிகல்
ஒரு தொடக்கம் நிகழ்ந்திருக்குமெனில் மகிழ்ச்சியே
ஜெ
***
அன்புள்ள ஜெயமோகன்,
வணக்கம்.
இந்த முறை ஒரு வாரம் முழுக்க உங்களின் எழுதுக்களுடனேயே இருக்க வேண்டும் என்பதற்காக ஒரு விடுமுறை. வெண்முகில் நகரமும் மீண்டும் நீலமும் வாசித்து விட்டு எழுதுகிறேன். துரியோதனனும் கர்ணனும் திருதிராஷ்டிரனும் மனம் முழுதும் வியாபித்திருக்க அரண்மனை முழுக்க மைந்தர்களாலும் அவர் தம் மனைவியராலும் மனம் நிறைந்திருக்கும் காந்தாரி மனக்கண் முன் விரிகிறார் கூடவே ஒரு பெரும் அச்சமும்.
வெண்முகில் நகரத்தின் இறுக்கத்துக்கு பெரும் மாற்றாய் அமைந்தது நீலம் மறு வாசிப்பு. அப்படியே என்னுள் இருக்கும் குழந்தைக் கண்ணனை மீட்டுக் கொண்டேன்.
ஒரு சில ஆண்டுகளுக்கு முன் உங்களின் கண்ணீரை பின் தொடர்தல் கட்டுரைத் தொகுப்பை வாசித்தது நினைவுக்கு வந்தது. இந்தியாவின் மாபெரும் நாவல் வரிசைகளை பற்றி அன்று தான் அறிமுகம் செய்து கொண்டேன் (அக்னி நதி, மண்ணும் மனிதரும்), அப்போது நான் இருந்த தில்லி தமிழ்ச் சங்கத்தில் தேடித்தேடி அந்த நாவல் வரிசைகளை வாசித்தேன் குறிப்பாக பெரும் போராட்டத்துக்குப்பின் ஆரோக்கிய நிகேதனம் சாகித்திய அகாடெமி வெளியீடாக சமீபத்தில் தான் கிடைத்தது.
வாசித்துக் கொண்டிருக்கும் போது ஒரு இடத்தில் ம்ருத்யு தேவியும் ப்ரஹ்மனும் உரையாடும் இடம் உடனே மனதுக்குள் ஒரு பொறி. விஷ்ணுபுரம் நினைவுக்கு வந்து விட்டது. யமன் உயிர்கள் சம நிலை இழக்கும் போது சினந்து நெருங்குகிற அந்த பகுதி மனதில் தோன்றி மறைந்தது. இப்படி யோசித்துப் பார்க்கிறேன் இந்த நாவல்கள் மற்றும் நாவலாசிரியர்களின் சாரம் தான் என் முன் வெண்முரசாக விரிகிறதா?
வெண்முரசை வாசிப்பதற்குத்தான் இவ்வளவு நாட்களாக மற்ற இலக்கிய வாசிப்புகளின் மூலம் என்னை நான் தயார் செய்து கொண்டிருந்தேனா?
நான் வாசித்தவை அத்தனை வெறும் பயிற்சி மட்டும் தானா? உங்களின் மற்ற வாசகர்களும் இந்தக் கேள்வியை தங்களை தாங்களே கேட்டுக் கொண்டிருக்கக் கூடும்?
இதைச் சார்ந்து சில கேள்விகள், இந்தக் கேள்வியை நான் சென்ற முறை விஷ்ணுபுரம் இலக்கிய கூட்டத்தில் உங்களிடமே கேட்டு இருக்கிறேன் இருந்தாலும் மறுமுறை.
நான் Financial Instruments (IAS 32) படித்ததுண்டு. அது என்னை வெகுவாக குழப்பி இருக்கிறது. ஆனால் வண்ணக் கடலில் ஒரு பகுதி, ஆந்திர வணிகர்களிடமிருந்து பெறப்படும் அரிசி எவ்வாறு கலிங்க நாணயமாகவும் பின்னர் பீதர்களின் செல்வமாகவும் உருமாற்றம் கொள்கிறது என்று சொல் மற்றும் பொருள் சேர்ந்து நடக்கும் இந்த வணிகம் குறித்த தரவுகளை எப்படி அடைந்தீர்கள்?
இதை கேட்பதற்கான காரணம், இந்த அளவுக்கு வணிகத்தை நுட்பமாக தொட்டு செல்லும் படைப்புகள் மிகவும் குறைவு. வணிகம் மட்டுமல்ல பல அறிவு துறைகளை மிகவும் சாதாரணமாக தொட்டும் விரித்தும் செல்கிறது வெண்முரசு. இது போன்ற அறிவு துறைகளில் அறிமுகம் இல்லாதவர்கள் இதை முழுமையாக பின்தொடர்வது கடினம் என்றே படுகிறது.
சில வேதப் பாடல்கள் வெண்முரசில் ஆங்காங்கே வருகிறது. அவற்றின் கவித்துவம் மயங்க வைக்கிறது.சமீபத்தில் அரவிந்தன் நீலகண்டனின் ஆழி பெரிது கட்டுரைத் தொகுப்பை வாசித்துக் கொண்டிருந்தேன் மனம் மீண்டும் வெண்முரசின் தவளை பாடல்களை எண்ணி விம்ம ஆரம்பித்து விட்டது.
நான் சொல்ல வருவது இது தான் வெண்முரசு என்கிற மூல நூலை கற்பதற்கான வழி நூல்கள் நம்மிடம் வெகு குறைவாக இருப்பதாகவே கருதுகிறேன்.
உதாரணமாக உங்களின் சில வாழ்க்கைகள் கட்டுரைத் தொகுப்பில் வெட்டம்மானி தொகுத்த ஒரு கலைக்களஞ்சியம் குறித்த கட்டுரை வாசித்துக் கொண்டிருந்தேன் அது உங்களின் வெண்முரசுக்கு உதவி இருக்கக் கூடும்? ஆனால் தமிழில் இப்படி பல அறிவுத்துறைகளை தொகுத்து நூலாக்கும் முயற்சிகள் குறைவோ என்றே தோன்றுகிறது. இந்த நிலையில் வெண்முரசை அறிந்து கொள்வதற்கு நீங்கள் ஏதேனும் நூல்களை சிபாரிசு செய்ய விரும்புகிறீர்களா? என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.
ஒவ்வொரு நாளும் ஒரு கனவு நிலையில் வெண்முரசு என்னை வைத்திருக்கிறது. சில ஆண்டுகளுக்கு முன்னர் தான் என் குல தெய்வம் மங்கொட்டு காவு அம்மன் என் அறிந்தேன், என்னுடைய லௌகீக மன்றாடல்களுக்கு நடுவே வெண்முரசுக்காக அவளிடம் வேண்டிக் கொள்ள நான் தவறுவதில்லை எளிய வாசகன் வேறு என்ன செய்து விட முடியும்?
விஷ்ணுபுரம் விழாவை எதிர்நோக்கி காத்திருக்கிறேன்.
அன்புடன்
சந்தோஷ்
***
அன்புள்ள சந்தோஷ்
நீங்கள் சொல்வதைப் புரிந்துகொள்கிறேன். வெண்முரசின் ஆழம் என்பது அது அளிக்கும் உருவகங்களின் உட்குறிப்புகளில், தத்துவார்த்தமான உட்குறிப்புகளில் உள்ளது. அவை நம் மரபில் உள்ளன. அவற்றை அறியாதவர்களுக்கும் மேலே ஒழுகிச்செல்லும் கதை மட்டுமே தெரியும்.
இலக்கியத்தின் நுட்பம் என்பது இடைவெளிகளை வாசகன் நிரப்பிக்கொள்ளும்போது நிகழ்வது. தமிழில் இன்றுவரை எழுதப்பட்ட எந்த ஒரு நவீனப்புனைவை விடவும், நவீனக் கவிதையைவிடவும் செறிவான மௌனங்கள் கொண்டது வெண்முரசு. ஆனால் வாசகன் தன் அறிதலைக் கொண்டே அந்த இடைவெளிகளை நிரப்பமுடியும்.நம் இலக்கிய வாசகர்களில் பெரும்பாலானவர்களுக்கு சமகால அரசியல், சமகால மானுட உறவுகள் சார்ந்து ஒரு புரிதல் மட்டுமே உள்ளது.
வெண்முரசை வாசிப்பதற்கான மூன்று அடிப்படைகள் அவர்களிடம் குறைவாக உள்ளன. ஒன்று அவர்களுக்கு நம் தொன்மப்பரப்பு அறிமுகமில்லை. அதனுடன் மனவிலக்கமும் உள்ளது. இரண்டு, அவர்களுக்கு உருவகங்களை பொருள்கொள்ளும் பயிற்சி இல்லை. மூன்று வெண்முரசு அளிக்கும் பல்வேறு நுண்தகவல்களை காட்சிகளாக ஆக்கி படிமங்களாக விரிக்குமளவுக்கு அறிதல் இல்லை. இக்குறையால் அவர்கள் பெரும்பாலும் தடுமாறவே செய்கிறார்கள்.
ஆனால் எந்த ஒரு நீள்படைப்பும் தன்னை வாசிப்பதற்கான பயிற்சியை அதுவே கொஞ்சம் கொஞ்சமாக அளிக்கும். வெண்முரசு இதற்குள் விரிவாகவே இந்தியத் தொன்மவெளியை அறிமுகம்செய்து அதன் இயங்குமுறையைக் காட்டிவிட்டது. இந்திய வாழ்க்கைச் சூழலை நிலக்காட்சியை வாசகன் காணும்படி செய்துவிட்டது.
எஞ்சுவது தத்துவமும் தொன்மங்களின் முழுமையான வலைப்பின்னலின் வடிவமும்தான். அதை ஓரளவு விவாதங்கள் மூலம், துணைநூல்கள் மூலம் வாசகன் அறியமுடியும். ஆனால் முழுமையாக அறிய இன்று வழியே இல்லை என்பதே உண்மை. என் சிறந்த வாசகர்கள் எதிர்காலத்தில்தான் என எண்ணிக்கொள்வதில் ஒரு சின்ன ஆணவநிறைவு )))
ஜெ
***