‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’ – 2

பகுதி ஒன்று : செந்தழல் வளையம் – 2

நாளவன்மைந்தா கேள், இட்ட அடிவட்டம் கருக, தொட்ட இலை நுனிகள் பொசுங்கிச் சுருள, காட்டை வகுந்து சென்று கொண்டிருந்த வெய்யோனைச் சூழ்ந்து பறந்தது கருவண்டு ஒன்று. தன் விழிகளைக் கண்டால் மதகரிகள் வெருண்டு பின்னடி எடுத்து வைத்து மத்தகம் குலுக்கி பிளிறி மீள்வதையே அவன் கண்டிருந்தான். அவனை அணுகியவை அனைத்தும் பொசுங்கின. அச்சமற்ற விழிகளை அவன் கண்டதே இல்லை.

அஞ்சாது தன்னைத் தொடர்ந்த அவ்வண்டைக் கண்டு ஐயமுற்று அவன் நோக்கினான். கைவீசி அதை அறைந்தான். இலையொன்றில் மோதி விழுந்து புழுதியில் புரண்டெழுந்து சிறகு உதறி அரைவட்டமடித்து எழுந்து மீண்டும் அவனைத் தொடர்ந்தது அது. அதன் யாழோசை அறுபட்டு பிறிதாகாத ஒற்றைச் சொல்லென அவனைச் சூழ்ந்தது.

தண்டகாரண்யத்தின் கொடுங்காட்டில் அவன் நடந்துகொண்டிருந்தான். வேட்டை முடித்து குகை திரும்பும் சிம்மத்தின் நாக்கென அவன் மழு கொழுங்குருதி சொட்டிக்கொண்டிருந்தது. தன்னைத் தொடரும் வண்டின் ஒலிகேட்டு நின்று இடக்கையால் நாணல் ஒன்றைப் பற்றி விழிதிருப்பும் விரைவில் அதைக் குத்தி எடுத்து தன் கண் முன் நீட்டி அதன் விழிகளை பார்த்தான். “எளிய உயிரல்ல நீ. சொல், யார்?” என்றான்.

இரு சிறு முன் கால்களைக் கூப்பி ஆயிரம் விழிகள் செறிந்து உருவான பெருவிழிகளை உருட்டி தொங்கும் கீழ்த்தாடையை அசைத்து ரீங்கரிக்கும் குரலில் அது சொன்னது “அனலோனே! இப்புவியில் இவ்வண்ணம் வாழ ஆணையிடப்பட்ட எனது பெயர் தம்சன். எனது ஊழ் உன்னுடன் பிணைக்கப்பட்டிருக்கிறது என்பதை இக்காட்டில் நீ நுழைந்தபோதே அறிந்தேன். உன்னை தொடர்கிறேன்.”

நீள்மூச்சுடன் தலை சரித்து “ஆம். நானுமறிவேன்” என்றான். “சொல் இங்கு இவ்வடிவில் ஏன் வந்தாய்?” தம்சன் “பார்க்கவனே! உன் குலத்து முதல் முனிவர் பிருகு ஏழு பிறவிகள் கொண்ட பிரஜாபதி என்பதை அறிந்திருப்பாய். முதல் பிறவியில் அவர் பிரம்மனின் தோலிலிருந்து பிறந்தார். ஆகவே சர்மன் என அழைக்கப்பட்டார். அவருக்கென பிருகு உலகம் என்று ஒன்றை பிரம்மன் படைத்தளித்தான். அங்கு வேதப் பேரிசை சூழ வளர்ந்து முழுமுதலை அணுகும் அறிவனைத்தையும் அடைந்து முதிர்ந்து இளைஞனானபோது அவருக்கென கியாதி எனும் இளநங்கையை படைத்தளித்தான் படைப்போன்.”

கவிமனம் கனிந்த கணத்தில் பிறந்தவள் என்பதால் இதழிதழாக மலர்ந்த பிரம்மனின் உலகங்கள் அனைத்திலும் நிகரற்ற பேரழகு கொண்டிருந்தாள் கியாதி. அரக்கரும், கந்தர்வரும், தேவரும் அவளை காமுற்றனர். விண்ணளந்தோனும், கயிலை முடியமைந்தோனும் கூட அவளை காமுறக்கூடும் என பிருகு அஞ்சினார். எனவே தன் சொல்லால் அவள் வாழ மலர்த்தோட்டம் ஒன்றை சமைத்தார். அதற்குள் மலர்க்கொடிகளால் ஆன நறுமணக் குடிலொன்றை கட்டி அதில் அவளை குடிவைத்தார். பிறவிழிகளேதும் அவளை பார்க்கலாகாதென்று நெறியமைத்தார்.

‘என் விழைவே, என் தந்தையரின் கனவே, என் மைந்தரின் நினைவே’ என மும்முறை நுண்சொல் ஓதி அவளுக்கு அழகிய நிழலுரு ஒன்றை உருவாக்கினார். முனிவர் கூடிய அவைகளிலும், பெண்கள் அமரும் வேள்விகளிலும் தனக்குத் துணையென அந்நிழலையே அவர் அழைத்துச் சென்றார். அவள் அக்குடிலே உலகமென்று வாழ்ந்தாள். மருள்விழி மான்களும் துள்ளும் கன்றுகளும் கனிந்த பசுக்களும் மட்டுமே அவளை சூழ்ந்திருந்தன. அழகிய பறவைகளை மட்டும் அங்கு வரச்செய்தார். இன்னிசை வண்டுகளும் தேன்சிதறும் அஞ்சிறைத் தும்பிகளும் மட்டுமே அச்சோலைக்குள் நுழைந்தன. ஒவ்வொரு நாளும் வான்கங்கையின் ஒரு துளியை அந்த மலர்த்தோட்டத்தில் மழையென பெய்வித்தார்.

எரிவடிவோனே! எங்கும் பறக்கும் வல்லமை கொண்டது புகழ். சொல்லுரசி சொல் பற்றும் நெருப்பு அது. புகழெனும் பேர் கொண்டவளை எவர் ஒளித்து வைக்க முடியும்? மலர்த்தோட்டத்தில் மது தேடி வந்த தும்பிகளும் வண்டுகளும் அவளைக் கண்டு மயங்கி அவளைச் சூழ்ந்து யாழொலித்துப் பறந்தன. பின்பு மலர் தேடி தாங்கள் சென்ற தோட்டங்கள் அனைத்திலும் அவளைப்பற்றி பாடியலைந்தன. மலர்ப்பொடி போல் அவற்றின் சொற்களில் இருந்து உதிர்ந்து மலர்களில் கருவாகி மணமென காற்றிலேறி எங்கும் பரவியது அவள் புகழ்.

கயிலை மலையமர்ந்து ஊழ்கத்தில் இருந்த கங்கை கரந்த இறைவனின் கழுத்தில் அணிந்த எருக்கு மாலையில் கள் நிறைந்த மலரொன்றில் சென்றமர்ந்த வண்டு “கியாதியின் பேரழகுக்கு நிகர் இந்த மலர், அவள் குரலுக்கு நிகர் இந்த மது, அவள் எண்ணங்களுக்கு நிகர் இந்த மணம்” என்று பாடியது. புன்னகையுடன் விழிமலர்ந்த இறைவன் “கியாதி என்பவள் யார்?” என்றான். “பிருகுவின் தவக்காட்டில் அமைந்த சொல்மலர்வனத்தில் வாழும் பேரழகி. அழகில் உன் இடம் அமைந்த உமைக்கு நிகர்” என்றது வண்டு.

பால்அலைத் துமிகள் பறக்கும் பாம்பணை மேல் படுத்திருந்தவன் தோளில் கிடந்த பாரிஜாத மலர் தேடி வந்த மலர்த் தும்பியொன்று “இம்மலர் போல் என்றும் வாடாதது கியாதியின் அழகு. அழிவின்மை தன் மார்பில் சூடிய மலர் போல் மாண்புள்ளது பிறிதெது?” என்றது. அறிவிழி திறந்து “சொல், யாரவள்?” என்றான் மாயோன். “அவள் பெயர் கியாதி. பிருகுவனத்தில் வாழ்கிறாள்” என்றது தும்பி.

தன் தவப்பேருலகைச் சூழ்ந்திருந்த வானில் பரந்திருந்த ஒவ்வொரு விண்மீனையும் பிருகு அறிந்திருந்தார். ஒவ்வொரு நாள் இரவும் அவ்விண்மீன்கள் பெருகுவதைக் கண்டு ஐயுற்றார். ஊழ்கத்தில் அமர்ந்து உள்வெளி திறந்து அவை விண்ணமர்ந்த தேவர்களின் காமம் நிறைந்த கண்கள் என்று கண்டு கொண்டார். கிழக்கில் ஒரு செஞ்சுடர் போல் எரிந்த எரிவிண்மீன் சிவன் என்றும் மேற்கில் ஒரு நீலத்தழலாகி நின்ற விண்மீன் விஷ்ணு என்றும் உணர்ந்தார்.

கியாதியை அழைத்து “இங்கு நீ தனித்திருக்கிறாய். இந்த மலர்வனத்திற்கு என் தவவல்லமையால் ஏழு முறை வேலி கட்டியுள்ளேன். என்னைக் கொல்லாத எவரும் அதை கடக்க முடியாது. முனிவரைக் கொல்ல மும்மூர்த்திகளும் துணிவுற மாட்டார்கள். ஆனால் எந்த வேலிக்கும் ஒரு வாயிலேனும் இருந்தாக வேண்டும் என்று வகுத்த பிரம்மன் இப்புவியில் உள்ள அனைவரின் அச்சத்தையும் எள்ளி நகையாடுகிறான். நுழையவும் வெளியேறவும் வழியென ஒன்று இருப்பதனாலேயே வேலிகள் எவையும் முழுமையானவை அல்ல” என்றார்.

“இளையவளே, இவ்வாயிலைக் காப்பதற்கு ஒருவன் தேவை. என்னையும் உன்னையும் அறிந்தவன். எனையன்றி எவரையும் உள்ளே விட ஒப்பாதவன்” என்றார். ஐயத்துடன் “அதற்கு என்ன செய்வது? இங்கு நாமிருவரும் மட்டுமல்லவா இருக்கிறோம். நமது மைந்தர்கள் பிறக்கையில் அவர்களை இங்கு காவல் வைப்போம்” என்றாள் கியாதி. “இல்லை இளையவளே, மைந்தர் பிறந்தபின் நீ அன்னை என்றாவாய். அதன்பின் உன் உள்ளம் காதல் கொள்ளாது. முலைசுரந்தவள் நெஞ்சில் கருணையே நிறைத்திருக்கும். அப்போது கந்தர்வரும் தேவரும் தெய்வங்களும் உன்னை மைந்தரெனவே அணுக முடியும். உன் கருவறை உயிர் கொள்வதுவரைதான் இவ்வாயிலைக் காத்து நிற்கும் காவல் வேண்டும்” என்றார் பிருகு.

பிருகு முனிவர் கியாதியின் வலது காதருகே ஆடிய சுருள் மயிரொன்றை தன் விரல்களால் தொட்டு எடுத்தார். வேதத்தின் படைப்புப் பாடலை பன்னிரு முறை ஓதி அதை மும்முறை ஊதினார். அம்மயிர்ச்சுருள் உயிர் கொண்டு உடல் பெருக்கி எழுந்து நான் எழுந்து வந்தேன். இருள் வடிவு கொண்ட என்னை அளர்க்கன் என்று அவர் அழைத்தார். “இங்கிருப்பாய் மைந்தா! நானன்றி எவரும் இவ்வாயில் கடக்க ஒப்பாதே. இவள் இவ்வாயில் விட்டு வெளியேறவிடாதே” என்று எனக்கு ஆணையிட்டார். நான் “அவ்வண்ணமே” என்று தலைவணங்கி அந்த மலர்வனத்தின் அழகிய பெருவாயிலில் நின்றிருந்த சால மரத்தின் நிழல்வடிவமாக மாறி அங்கே அமைந்தேன். துயில் நீத்து சித்தம் குவித்து அழியாக் காவலென அங்கிருந்தேன்.

நான் ஒருபோதும் முனிவரின் துணைவியை கண்டதில்லை என்றான் தம்சன். ஒவ்வொரு நாளும் பொழுதிணைவின் நீர்க்கொடைக்கெனவும் மூவெரிப் படையலுக்கெனவும் அவர் அகன்று செல்கையில் சிறகொளிரும் சிறு பூச்சிகளாக, ஒளிதுழாவும் புட்களாக, புயல்ஒலிக்கும் பெருஞ்சிறகு கொண்ட செம்பருந்துகளாக கந்தர்வர்களும் தேவர்களும் அரக்கர்களும் அவ்வாயிலை அணுகினர். நிழலிலிருந்து எட்டு கரங்களுடன் பேருருக்கொண்டு எழுந்து இடியோசை என குரல் எழுப்பி “அகல்க!” என ஆணையிட்டு அவர்களை செறுத்தேன். என் கைகளில் பிருகுவின் தவத்தின் அனல் படைக்கலங்களாக எழக்கண்டு அவர்கள் அஞ்சி விலகினர்.

வெண்முகில் யானை மேல் வைர மின்வாளுடன் வந்த இந்திரனுக்கு முன் நெஞ்சுவிரித்து நின்று “இங்கு என் நெஞ்சு பிளக்காது நீ உள்நுழைய முடியாது தேவர்க்கரசே” என்று அறைகூவினேன். என் கைகளில் எழுந்தன எட்டு மின்னற்கொடிகள். என் அசையா உறுதியை கடக்கவியலாது என்றெண்ணி அவர் திரும்பிச் சென்றார்.

அனல்சடைகள் இறகென விரிய செம்பருந்தென சிவனும் வந்தார். தாமரையிதழென பெருங்காதுகளை அசைத்து செவ்வாழைத் தண்டு போன்ற துதிக்கை வளைத்து மத்தகம் குலுக்கி பிளிறியபடி வெண்பளிங்கு யானையென வந்தார் விஷ்ணு. கைகூப்பி இருவர் முன் நின்று “கடந்து செல்க தெய்வங்களே! இல்லையேல் என்னை களப்பலி கொண்டு உள்நுழைக” என்றேன். முன்கால் கூருகிர்களை என் முன் நீட்டி அருளி மீண்டார் சிவன். துதிக்கையால் என் தலை தொட்டு வாழ்த்தி விலகினார் விஷ்ணு.

ஆனால் இந்திரன் என்மேல் வஞ்சம் கொண்டார். என்னை வெல்ல எண்ணி வழி தேடினார். விண்ணுலாவும் முனிவராகிய நாரதரை அழைத்து வணங்கி “செய்வதென்ன?” என்று உசாவினார். “பெருவிழைவுகொண்டவனை ஐயத்தால் வெல்க! பெருஞ்சினம் கொண்டவனை எளிமையால் வெல்க! காமம் கொண்டவனை அச்சுறுத்தி வெல்க! தேவர்க்கரசே, கடுந்தவத்தானை வெல்ல காமம் ஒன்றே வழி” என்றார் நாரதர். “கயிலைக் குளிர்மலை அமர்ந்தவனையே வென்றவன் காமன். இவனோ சிறு அரக்கன். இவனை வெல்வது படைக்கலம் கொண்டு அல்ல. மலர்க்கணை கொண்டு மட்டுமே இயல்வது. காமனிடம் சொல்” என்றார்.

காமனுக்கு உகந்த தாமரை, அசோகம், மாம்பூ, முல்லை, குவளை எனும் கள்மலர்கள் ஏந்தி அவனை அணுகி வணங்கி தனக்கென இச்சிறு செயலை ஆற்றி அருளவேண்டுமென்று இந்திரன் கோரினார். “முக்கண்ணனை வென்ற உன்னால் இவ்வரக்கனை வெல்ல முடியாதென்று வீண்பழி நிகழலாகாதென்றே இதைக் கோரினேன்” என்றார். “அவ்வண்ணமே” என்று வாக்களித்து அவ்வைந்து மலர்களையும் தன் கணைகள் எனக் கொண்டு கரும்பு வில் ஏந்தி காமன் என் தவச்சோலைக்கு வந்தான்.

நிழல்வடிவாக மண்தோய்ந்து கிடந்த என்னைச் சூழ்ந்து ஒரு சிறு பொன் வண்டென பறந்தான். பின்பு அருகிருந்த பொன்னிறப் பூவரச மலர்க்குவைக்குள் புகுந்து தருணம் நோக்கி காத்திருந்தான். நாட்களும் நினைவுகளும் எண்ணங்களும் இன்றி அக்கணமே வாழ்வு என்று காவல் நின்ற எனக்கு அவன் ஒரு பொருட்டாக இல்லை. ஆனால் எல்லையின்மை என்பது பிரம்மத்திற்கு மட்டுமே உரித்தானதென்று காமன் அறிந்திருந்தான்.

ஒரு நாள் கசியப பிரஜாபதியின் தவச்சாலையில் நிகழ்ந்த பெருவேள்வி ஒன்றிற்கு தன் நிழலுருக்கொண்ட துணைவியை அழைத்துக் கொண்டு சென்றார் பிருகு முனிவர். பல நூறு முறை அவ்வண்ணம் அவர்கள் என்னை கடந்து சென்றதுண்டு என்றாலும் அந்நிழல் அவர் உடல் வீழ்த்துவதே என்றே எண்ணியிருந்தேன். அன்று காமனின் விருப்பறிந்த இந்திரன் விண்முகில்கள் மேல் மின்னல் ஒன்றை பற்ற வைத்தான். முனிவரின் நிழல் கிழக்கே சென்று விழுந்து அதிர்ந்தடங்க மேற்கே சரிந்து என்னருகே விழுந்து நெளிந்து மறைந்தது அழகிய பெண் நிழல் ஒன்று. நெஞ்சு அதிர்ந்து எழுந்து அதை நோக்கினேன். காமன் மலர்த்தேரின் தட்டில் ஏறிநின்று தன்மலர்க்கணைகளை என் ஐந்து புலன்கள் மேலும் ஏவினான்.

2

முனிவர் சென்று மறைந்தபின் அந்நிழலை நூறுமுறை தெளிவாக என்னுள்ளே கண்டேன். கணம் தோறும் வளர்ந்து அது பேரழகு கொண்டது. ஒவ்வொரு மயிர்க்காலையும் கண்டேன். ஒருகோடி அசைவுகளாக அதை பெருக்கினேன். இவ்வெழில்நிழல் எதன் மாற்றுரு என வியந்தது என் நெஞ்சம். தவிர் என்று என் ஆழம் தவித்தது. அத்தவிப்பே விழைவென எரிக்கு நெய்யாகியது. இளமுனிவனே, அழகென்பது பிரம்மம் மானுடருடன் விளையாடும் முறை.

காமத்தை வெல்ல முனைவது போல அதை வளர்க்கும் வழி ஒன்றில்லை. ஒவ்வொரு எண்ணத்தால் அவளை அந்நிழலை செதுக்கினேன். ஒவ்வொரு சொல்லையும் அதற்கு அணியாக்கினேன். என் உள்ளம் அறிந்தது, அவள் உள்ளே இருக்கிறாள் என்று. ஆயிரம் முறை எண்ணித் தயங்கி, பல்லாயிரம் முறை அஞ்சித் தவித்து, இறுதியில் என் விழைவால் செலுத்தப்பட்டு முனிவர் எனக்கு வகுத்த எல்லையைக் கடந்து காலடி எடுத்து வைத்தேன். முதற்காலடி அளித்த பதற்றத்தின் பேரின்பத்தை இன்றும் உணர்ந்து என் உடல் திளைக்கிறது.

எல்லை கடப்பது எதுவானாலும் அது விடுதலையே. விடுதலைக்கு நிகரான பேரின்பம் என்று எதுவும் இம்மண்ணிலும் அவ்விண்ணிலும் இல்லை என்று அறிக! முப்புரி நூலென காட்டை வகுந்து வளைந்து சென்ற சிறு மண் பாதையில் நடந்தேன். அப்பால் கொடிச்சுருளெங்கும் மலர் பூத்து தானே ஒரு பெரிய மலரென ஆகி குளிர் தடாகத்தின் கரையில் நின்ற தவக்குடிலை கண்டேன்.

என் எட்டு தோள்களும் விம்மிப்பெருகின. கண்கள் சிவந்து கனல் உமிழத்தொடங்கின. இவ்வொரு கணம் நானறியும் காமத்திற்கென ஈரேழு உலகங்களையும் அழிப்பேன் என எழுந்தது ஆணவம். கால்நின்ற மண்ணை, ஈன்றெடுத்த தந்தையை, இவை அனைத்தையும் படைத்த பேரறத்தை மீறுவேன். பிரம்மத்தை எதிர்கொண்டு பேருருப் பெற்று நிற்பேன். காமத்தால் நிமிரும் ஆண்மகன் அறியும் அகம் ஒன்றுண்டு. அங்கே அவனே இறைவன்.

மண்ணதிர காலெடுத்து வைத்து அம்மலர்க்குடிலுக்குள் நுழைந்தேன். அங்கு அசைவற்றுக் கிடந்த சிறுசுனையின் கரையில் பொன்னிறப்பறவையின் இறகு ஒன்று உதிர்ந்து கிடந்தது போல அவள் அமர்ந்திருந்தாள். ஒரு கை ஊன்றி தோள் சரித்து இடை வளைத்து மறுகையால் மேற்பரப்பில் ஏதோ எழுதிக் கொண்டிருந்தாள். கட்டுக்குழல் சரிந்து வலத்தோளை மூடியிருந்தது. கண்கள் சரிந்திருந்தன. மேலுதடு வியர்த்திருந்தது. முலையணிந்த முத்தாரம் விலகி வளைந்தமைய அதன் நிழல் விழுந்த இடம் பனித்திருந்தது.

நீலப் பளிங்கெனத் திகழ்ந்த நீர்ப்பரப்பு அவள் விரல்வரைந்த எழுத்துக்களை அழியாமல் வைத்திருந்தது. அவை என்ன என்றறிய ஆவல் கொண்டு மேலும் காலடி வைத்தணுகினேன். எழுதி எழுதிச் சென்ற அவள் சுட்டு விரல் நின்றது. என் விழித்தொடுகையை உணர்ந்து அவள் திரும்பி அண்ணாந்து நோக்கினாள். மறுகணமே உள்ளங்கையால் அறைந்து நீர்ப்பரப்பை கலைத்து அலைகள் எழுப்பி அவ்வெழுத்துக்களை அழித்துவிட்டு ஆடை ஒதுக்கி சினந்து எழுந்து மூச்சு சீற “யார் நீ?” என்றாள்.

எட்டு கைகளையும் விரித்து “உன்மேல் காமுற்றேன் என்பதன்றி சொல்ல ஏதுமில்லாதோன். என்னை கொள்க! இல்லையேல் இங்கேயே இறப்பேன்” என்றேன். “விலகு, நீ இந்த மலர்ச்சோலையின் காவலன் அல்லவா? என் கூந்தல் இழையிலிருந்து பிறந்த நீ என் மைந்தன்…” என்றாள். “கடலிலிருந்து பிறந்த நதிகள் மீண்டும் வந்தணைகின்றன. நானும் பெருகித் திரும்பியுள்ளேன்” என்றேன்.

“விலகு! என் தவச்சொல்லால் இக்கணமே உன்னை பொசுக்குவேன்” என்றாள். “எனில், அவ்வண்ணமே ஆகட்டும்” என்று மேலும் இரு அடி வைத்து அவளை அள்ளப்போனேன். மூன்று பின்னடி வைத்து நின்று நெஞ்சு பற்றி கண்களில் நீருடன் “உன்னை அழிக்க என்னால் இயலாது. நீ என் மைந்தன். நான் சொல்வதை கேள்! விலகு!” என்றாள். “இனி விலகுவதற்கு இடமில்லை. எஞ்சுதல் என்று என்னில் ஏதுமில்லை” என்றேன். அவள் மேலும் விலக அங்கிருந்த அர்ஜுன மரத்தின் அடிமரத்தில் முதுகு ஒட்டி விதிர்த்து நின்றாள். நான் மேலும் முன்செல்ல நிலைதடுமாறி மல்லாந்து விழுந்தாள்.

குனிந்து அவள் இடத்தொடையை என் சுட்டுவிரலால் தொட்டேன். மெழுகை துளைத்துச் செல்லும் காய்ச்சிய இரும்பென அவ்விரல் அவள் தசையைத் துளைக்க தாளாவலியுடன் அலறி அவள் உடல் சுருங்கினாள். அதிரும் கைகால்களுடன் வீறிட்டாள். அப்போதுதான் அத்தவக்காடு விட்டு வெளியே சென்றிருந்த முனிவர் அவ்வலறலை கேட்டார். மறுகணமே திரும்பி அங்கு தோன்றினார். சினம் எரிந்த விழிகளுடன் என்னை நோக்கி “என்ன செய்யத் துணிந்தாய்? இழிமகனே! எத்தகைய பெரும் பாவத்தை ஏற்க முனைந்தாய்?” என்றார்.

“யானொன்றறியேன். வெறும் உடல் நான். விண்ணக விசைகளால் இயக்கப்பட்டேன்” என்றேன். “இனி ஒரு கணமும் நீ இருக்கலாகாது” என்று சொல்லி குனிந்து அத்தடாகத்தின் நீரை தொடப்போனவர், அதன் அலைகளில் அழியாது எஞ்சிய ஓர் எழுத்தின் நுனி வளைவை கண்டார். “யார் எழுதியது இது?” என்றார். மறுகணமே உய்த்துணர்ந்து திரும்பி “இவள் எழுதியதை நீ கண்டாயா?” என்று என்னிடம் கேட்டார். “ஆம்” என்றேன். “அதை திரும்ப இந்நீரில் எழுது” என்றார்.

“என்னை தீச்சொல்லிடுங்கள் எந்தையே. நான் அதை செய்யமாட்டேன்” என்றேன். “நீ என் மைந்தன். என் ஆணைக்கு கட்டுப்பட்டவன். எழுது!” என்று அவர் கைநீட்டி ஆணையிட்டார். “எந்த மைந்தனும் அதை எழுதமாட்டான்” என்றேன். “மைந்தனென நீ நடந்து கொள்ளவில்லை, பழி சூழ்ந்தவனே” என்றார் முனிவர். “மைந்தனென்றே நடந்து கொண்டேன். அன்னை முலைஅருந்தாத மகவு நான்” என்றேன். “கீழ்மகனே! சொல்லெண்ணிப் பேசு. இல்லையேல் தீச்சொல்லிட்டு உன்னை தீரா நரகுக்கு அனுப்புவேன். சொல்! இந்நீர்ப்பரப்பில் இவள் எழுதியிருந்தது என்ன?” என்றார். “அத்தீச்சொல்லையே விரும்புகிறேன்” என்றேன்.

தடாகப்பரப்பில் எஞ்சிய அவ்வெழுத்தை தன் கைகளால் அள்ளி வேதமந்திரம் சொல்லி தலைக்குமேல் தூக்கி என் மேல் வீசி “சிறுவண்டென ஆகு. இக்கணத்தை மீண்டும் வாழ். இங்கு நிகழ்ந்ததனைத்தையும் எப்போது நீ முழுதறிகிறாயோ அப்போது இங்கு மீள். ஆம் அவ்வாறே ஆகுக!” என்றார். “ஆம், தந்தையே இதுவும் உங்கள் அருளே” என்று சொல்லி அவர் காலடியை பணிந்தேன். திரும்பி என் அன்னையின் உடலில் எழுந்த புண்ணை நோக்கிவிட்டு வண்டுருக் கொண்டேன்.

“பார்க்கவ வழித்தோன்றலே, தம்சன் எனும் கருவண்டாகி இப்புவிக்கு வந்தேன். என் அன்னையைத் தொட்ட அச்சுட்டுவிரல் கூரிய கொடுக்குமுனை என மாறியது. என் ஊழ் உதிரும் கணம் நோக்கி இத்தனை நாள் இங்கு காத்திருந்தேன். நீ இங்கு வந்தாய்” என்றது தம்சன்.

கசந்த புன்னகையுடன் மழுப்படை முனிவன் “பிருகு குலத்தில் ஒரே கதையை மீள மீள நிகழ்த்துகிறது ஊழ். புலோமையை, ரேணுகையை என பகடையை சலிக்காது உருட்டிக்கொண்டே இருக்கிறது” என்றான். “நாம் இருவரும் இணைந்து அறியும் ஒன்று நம்மை அணுகும். அதுவரை என்னுடன் இரு” என்று ஆணையிட்டான்.

இருகைகளையும் சுழற்றி வணங்கி பின்னகர்ந்தான் சூதன். விறலி எழுந்து சலங்கை அணிந்த கால்களை தூக்கிவைத்து நடையிட்டு அரங்கு மையத்திற்கு வந்தாள். இடையில் கைவைத்து நின்று மெல்ல உடல் உலைத்து ஆடினாள். “அழகென அணியென ஆழத்துக் கரவென அறியாச்சொல்லென ஆண்களிடம் ஆடுபவளே! ஆற்றலே! அன்னயே! அழிவற்றவளே! அடிபணிகிறோம். காத்தருள்க!” என்று முதுசூதர் பாட அவள் மெல்லிய அசைவுகளுடன் காற்றுவிளையாடும் கொடியென நின்றாடினாள்.

அவள் கைவிரல்கள் குவிந்தும் மலர்ந்தும் சுட்டியும் நீட்டியும் கேளாச்சொற்களை எழுப்பின. அப்பாடலில் பிறந்து முழுத்து பித்துற்று பேதுற்று தெளிந்து உணர்ந்து அழிந்து மீண்டும் எழுந்தது புடவி. துடியோசை காற்றாக முழவோசை இடியாக சங்கோசை கடலாக அவளைச் சூழ்ந்தது. அஞ்சலும் அருளலும் காட்டி அவள் நிலைக்க அவள் காலடியை குனிந்து வணங்கி எழுந்து முன்வந்து நின்றான் சூதன். அவையை வணங்கி “கேள், எரிசுடர் மைந்தா. இது உன் கதை” என்று தொடர்ந்தான்.

வெண்முரசு அனைத்து விவாதங்களும்

வெண்முரசு சென்னை விவாதக்கூடல் கட்டுரைகள்

முந்தைய கட்டுரைஷண்முகவேல்
அடுத்த கட்டுரைஅலை அறிந்தது…