இலக்கியத்தின் பயன் சார்ந்து…

ஜெ..

முனைவர் அனுராதாவுக்கான பதில் படித்தேன்.. இது தமிழ்ச் சமூகத்தைப் பிடித்திருக்கும் இன்னொரு மரபு வியாதி.. எளிதில் போகாது.. தொலைக் காட்சி பேச்சரங்குகளை, கண நேரம் கேட்டாலும் காதில் ரத்தம் வருகிறது..

எங்கள் குழந்தைகள் படிக்கும் பள்ளி “தி ஸ்கூலின்” முதல் நாள் நினைவுக்கு வருகிறது.. பெற்றோர்களாகிய நாங்கள் பள்ளியின் காலைக் கூட்டத்துக்கு அழைக்கப் பட்டிருந்தோம்.. பள்ளியின் முதல்வர் கௌதமா பேசிக்கொண்டிருந்தார்.. நடுவே ஒரு கருப்பு நாய் நிம்மதியாகத் தூங்கி கொண்டிருந்தது.. (குறட்டை விட்டதோ என்று கொஞ்சம் சந்தேகமாக இருந்தது).. ஒரு சிறு குட்டி பாப்பா எழுந்து “அண்ணா எப்போ முடியும்?” என்று கேட்க லேசான சிரிப்பலை எழுந்தது.. கௌதமா பொறுமையாக “விரைவில் முடிந்து விடும்.. நீ இப்படி பேசக் கூடாது” என்று சொல்லி தன் பேச்சைத் தொடர்ந்தார்.. எங்களூர் முனிசிபல் பள்ளியில் ஒரு குழந்தை பேசியிருந்தால்.. என்று நினைத்துப் பார்த்தேன்.. ஒரு கணம் உடல் நடுங்கியது.. அந்தக் காட்சியின் நினைவு என் கண்களில் எப்போதும் நீரை வரவழைத்து விடுகிறது..

இது போன்ற சீர் அமைக்கப் படாத கல்வியமைப்பில் இருக்கும் எங்கள் குழந்தைகளின் எதிர்காலம் பற்றிய பயம் இருந்தாலும், அவர்கள் சுதந்திரமான ஆளுமைகளாக கண் முன்னே வளர்ந்தெழுவது ஒரு பெரும் தரிசனம் என்றே தோன்றுகிறது..

ஆனால் இந்த உரையாடல் மிக முக்கியம்.. அவர் ஒரு தவறான மரபின் நிலைச் சக்தி.. உங்கள் பதிலால் சுருங்கிவிடாமல் மேலும் உரையாட வருவார் என்று நம்புகிறேன்..

பாலா

அன்புள்ள பாலா

இந்த வகையான விவாதங்களில் எனக்கு நம்பிக்கை இருந்த காலம் உண்டு. ஆனால் தொடர்ந்து கல்வி நிறுவனங்களுக்கு சென்றபின் இப்போது அந்த நம்பிக்கையை இழந்துவிட்டேன், இவர்களிடம் விவாதிப்பதும் இல்லை. ஏனென்றால் நாம் சொல்வது ஒரு புத்துலகை. கருத்துக்களின் சுதந்திரமான இயக்கம் இருக்கும் ஒரு தளத்தை. நூற்றுக்கணக்கான புதிய நூல்களை. நாம் சொல்வதில் இருந்து ஆர்வம் கொண்டு அவர்கள் அந்த நூல்களை நொக்கி வந்தால் மட்டுமே ஏதேனும் பார்வை மாற்றம் நிகழும்- ஆனால் இந்த இருபதாண்டுக்காலத்தில் ஒரே ஒரு கல்லூரி ஆசிரியர் கூட நான் சொன்ன ஒரே ஒரு நூலைக்கூட வாசித்துவிட்டு மேலே பேசியதில்லை. வாசிப்பதற்கே அவர்களுக்கு தெரிவதில்லை. அது எனக்கு பிரமிப்பாக இருந்தது.

மூத்த பேராசிரியரான வேதசகாய குமார் என் மாயையை களைந்தவர். அவர்தான் சொன்னார், வாசிப்பவர்கள் ஏற்கனவே வாசித்து விட்டிருப்பார்கள். ஒருவர் முனைவர் பட்டம் வாங்கிய பின்னரும் இலக்கிய அடிப்படைகளையோ நவீன இலக்கியத்தில் பேசப்படும் விஷயங்களையோ தெரியாமல் இருப்பார் என்றால் நீங்கள் மேலே ஏதும் சொல்ல முடியாது. ஏனென்றால் உண்மையில் ஒரு சிறு துளி ஆர்வம் கொண்ட மாணவனுக்குக் கூட பல்கலை கழகச் சூழல் அபாரமான வாசிப்பனுபவத்தை அளிக்கிறது. அந்த அத்தனை வாய்ப்புகளாலும் சற்றும் தீண்டப் படாமல் வந்த ஒருவரா நம் விவாதத்தால் சீண்டப்படப் போகிறார்?

இந்த கடிதம் எதிர்வினை இரண்டையும் ஒரே காரணத்தால் தான் பிரசுரிக்கிறேன், என்ன நடந்துகொண்டிருக்கிறது இங்கே என நம் பொதுவாசகர்கள், குறிப்பாக மேலை நாட்டுக் கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் என் வாசகர்கள், அறியட்டுமே என்று

ஜெ

அன்பிற்கும் மதிப்பிற்கும் உரிய ஜெயமோகன் அவர்களுக்கு அனுராதா எழுதுவது. எதிர்பார்த்திருந்த பதிலே வந்தது. அதனால் வருத்தம் சிறிதுமில்லை. ஆனால் எதையும் உணர்ச்சி வசப்படாது அறிவு நிலையில் நின்று விமர்சிக்கும் தன்மையுடைய ஜெயமோகனிடமிருந்து இத்தனை உணர்ச்சி வசப்பட்ட பதில்தான் சற்று ஏமாற்றம் தருகிறது. ஆசிரியர்கள், ஆத்திசூடி கொன்றை வேந்தன் தாண்டி எவ்வளவு பயணித்தாலும் அதை ஏற்க விரும்பாத சிலரின் போக்கு தங்களிடமும்!! எல்லாக் கல்லூரி ஆசிரியர்களும் இப்படித்தான் இருப்பார்கள் என்று பொத்தாம் பொதுவாகச் சொல்வதெல்லாம். தயவுசெய்து தங்களிடமிருந்து வேண்டாம்.

கற்பிப்பது குறித்து . . . . . . .

அதீத தீமைகள் அதிபயங்கர அழிவையே தரும் என்று சொல்லும் இராமாயணமும் நம்பிக்கைத் துரோகம் நாசத்தையே விளைவிக்கும் என்று கூறும் சிலம்பும் எப்படி தவறான முன்னுதாரணம்?! சங்க இலக்கியம் கற்பிக்கப்படுவது அதிலுள்ள காமத்திற்காய், வன்முறைக்காய் அல்ல. அவற்றைவிட மானுடம் தழைக்கச் சொன்ன மகத்தான கருத்துக்களுக்காய். எங்களிடம் வரும் இளம் குருத்துக்களிடம், வாழ்வின் உக்கிரங்களைச் சொல்லும் இன்றைய நவீன எழுத்துக்களை எடுத்த எடுப்பில் காட்டி அச்சுறுத்த முடியாது. (நவீன எழுத்துக்கள் தமிழ் இலக்கியம் என்ற அகன்ற ஆலமரத்தில் ஒரு கிளைதான்). இலக்கியத்தைச் சுவைக்கச் செய்து, வாழ்வை ரசிக்க வைத்து அடுத்து இன்றைய இலக்கியப் போக்குகளை அறிமுகப்படுத்தலாம். பின் அவர்களுக்கு அந்தப் பாதையில் விருப்பமிருந்தால் நெடுந்தூரம் பயணிப்பர், தங்களைப் போல, சு.வேணுகோபாலான் போல. அதற்காக ஆசிரியர்களை ஏணிப்படி என்று சொல்லிவிட வேண்டாம். இன்று பலர் ~எஸ்கலேட்டர்|கள். ~அப் டேட்| செய்து கொள்ளாவிட்டால் இன்றைய புத்திசாலி மாணவர்கள் எங்களைத் தங்கள் மதிப்பிலிருந்து தூக்கி எறிந்து விடுவார்கள்.

ஒரு வாசகியாய் . . . . . . . . .

இலக்கியம் வாழ்வைப் புனைவோடு இணைத்துத் தருவதால் அது வாழ்வினும் விசாலமானது, வசீகரமானது என்பது தெரியும். அதனால்தான் வலுவாகச் சொல்லும் திறன்படைத்தோர் கொஞ்சம் பொறுப்புணர்வோடு எழுத வேண்டுமெனக் குறிப்பிட்டிருந்தேன். சொல்லும் விதத்தை மட்டுமே பெரிதும் மனதில் கொள்ளும் இன்றைய நவீன எழுத்தை விமர்சிக்கும் உரிமை எந்த வாசகருக்குமுண்டு. எழுதியபின் ஆசிரியர் விலகிவிட வேண்டும். வாசகர் எப்படி வேண்டுமானாலும் வாசிக்கலாம். இப்படித்தான் வாசிக்க வேண்டுமென யாரும் யாரையும் கட்டாயப் படுத்த முடியாது. அப்படி வாசிக்காவிட்டால் வாசிப்பே இல்லையென முடிவு கட்டிவிடக்கூடாது. எந்தப் படைப்பையும் எல்லோரும் ஒரே மாதிரிக் கொண்டாட வேண்டுமென்றோ, தூக்கி எறிய வேண்டுமென்றோ யாரையும் வற்புறுத்தவும் முடியாது. ரசனைகள் மாறும்.

ஓர் ஆசிரியராய் . . . . . . . . .

இன்றைய இளைஞர் குறித்து தாங்கள் உயர்வாகப் பேசியிருப்பது மகிழ்ச்சி. அன்றாடம் அவர்களுடனேயே வாழ்க்கை நடத்தும் எங்களுக்கும் அவரிடமுள்ள நல்லது தீயது பற்றித் தெரியும். அவர்கள் நன்றாக வாழவேண்டுமென மனதார விரும்புவர்களும் கூட. அதனால்தான் ஊடகங்கள் குறித்துக் கவலையோடும் அக்கறையோடும் விமர்சிக்கறேன்.

சமூகப் பிரக்ஞையோடு . . . . . . .

கல்வித்துறையிலும் நல்ல மாற்றங்கள் வந்து கொண்டே இருக்கின்றன.

நம் தாத்தாக்கள், அப்பாக்களிடமும் நல்லவை உண்டு.

இன்றைய இளைஞர்களிடமும் தீமைகள் உண்டு.

தாங்கள் சொன்ன சீன தரிசனத்தோடுதான் இதைக்கூறுகிறேன். ~~மொழி, நான் சொல்லும் கருத்து கடைசி மனிதனுக்கும் போய்ச்சேர்வதற்காகத்தான். அப்பொழுதுதான் நான் வெற்றி பெற்றதாக அர்த்தம். மாறாக என் ஆளுமையை வெளிப்படுத்திக் கொள்வதற்காக அல்ல||, என்ற டேவிட் காப்பர் பீல்டு குறிப்பிடும் இலக்கியக் கொள்கையோடு உடன்படுபவள் நான். ஆனால் இன்றைய நவீனத் தமிழ் எழுத்துக்கள் இதற்குப் பெரிதும் முரண் ஆனவை. அவற்றோடு எனக்கு அவ்வளவாக உடன்பாடு இல்லை என்பது வேறு. அவை குறித்து எனக்கு எதுவுமே தெரியாது என்பது வேறு.. பதில் சொல்வீர்கள் என்று நம்புகிறேன்.

திருமதி அனுராதா அவர்களுக்கு,

ஒரு விவாதத்தை கோரும் கேள்விகளை எழுப்புவதற்கு ஓர் அடிப்படை வாசிப்பு தேவை. உங்கள் கேள்வியில் உங்கள் வாசிப்பின்மையை சாட்சியப்படுத்தும் வரிகள் மட்டுமே இருந்தன.அவற்றை நீங்கள் ஒரு வாசகியாக மாணவியாக நின்று கேட்கவில்லை, பேராசிரியையாக நின்று கேட்கிறீர்கள்.

இருபது வருடங்களுக்கு மேலாக கல்லூரிகளுக்குச் சென்றுகொண்டிருக்கிறேன், ஒரே ஒருமுறைகூட இக்கேள்வியைச் சந்திக்காமல் திரும்பியதில்லை. ஆம், நீங்க கேட்ட இதே கொன்றைவேந்தன் கேள்வி. ‘இந்தப் படைப்பால் இளைஞர் சமுதாயத்துக்குச் சொல்லும் சீரிய கருத்து என்ன?’

1993ல் ஒருமுறை ஒரு கல்லூரியில் ஒரு முதிர்ந்த பேராசிரியர் இதே கேள்வியைக் கேட்க பொறுமையாக பல உதாரணங்கள் மூலம் நான் விளக்கி முடித்த பின்னர் என்னிடம் கூட வந்த மூத்த ஆய்வாளர் சொன்னார் ‘இந்த மூத்த பேராசிரியர் ஆய்வுமாணவராக இருந்தபோது இதே கேள்வியை இக்கல்லூரிக்கு வந்த க.நாசுவிடம் கேட்டார். அவர் பல நூல்களை உதாரணம் காட்டி அதற்கு பதில் அளித்தார். அதே கேள்வியை சுந்தர ராமசாமியிடமும் கேட்டார். அந்த பதில்கள் எவையுமே அவருக்குள் சென்று சேராது, எந்த நூலை நீங்கள் சுட்டிக் காட்டினாலும் அவர் எதையும் படிக்கப் போவதில்லை’

ஆச்சரியமாக இருந்தது. ஆனால் இப்போது எனக்கே தெரியும். நம் கல்லூரி ஆசிரியர்களை ஒன்றுமே செய்யமுடியாது. அவர்கள் மூளைச்சோம்பலால், பொறுப்பின்மையால், அதன் விளைவான மூடத்தனத்தால் அந்த மூடத்தனம் மட்டுமே அளிக்கும் அபாரமான தன்னம்பிக்கையால் தேங்கி வீங்கிப்போனவர்கள். அவர்களை எந்த சக்தியாலும் மாற்ற முடியாது.

ஆகவே நான் கல்லூரிகளுக்குச் செல்வதை கூடுமானவரை தவிர்க்கிறேன், சுசீலா அவர்களின் , அறக்கட்டளையாக இல்லையேல் கண்டிப்பாக உங்கள் கல்லூரிப் பக்கமே வந்திருக்கமாட்டேன். அது மிகப்பெரிய நேர விரயம். நாலைந்து வருடங்கள் எந்தவகையான வாசிப்பும் இல்லாத பேராசிரியர்களால் மொண்ணையாக பயிற்றுவிக்கப் பட்டு மழுங்கிப் போயிருக்கும் மாணவர்களுக்கு நான் சொல்லும் நவீனக் கொள்கைகள், சமகால நூல்கள், கருத்தியக்கங்கள் எதுவுமே புரிவதில்லை. ஓர் அதிர்ச்சி மட்டுமே உருவாகும். அவற்றையும் பேராசிரியர்கள் உடனே கழுவி சுத்தம் செய்து விடுவார்கள்

மிக அபூர்வமாக சில மாணவர்கள் பேராசிரியர்களை மீறி சுயமாக நூல்களை தேடிப் பிடித்துப் படிக்கக்கூடும். மிக அபூர்வமாக வாசிக்கும் பேராசிரியர்களும் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் இயல்பாகவே கல்லூரிக்கு வெளியே வந்து வாசிப்பார்கள். அவர்களை கல்லூரிக்குச் சென்று சந்திக்கவேண்டியதில்லை.

நீங்கள் கேட்ட கேள்விக்கு நான்கு தலைமுறையாக இலக்கிய ஆசிரியர்கள் விமர்சகர்கள் பதில் சொல்லியிருக்கிறார்கள். நானே நான்கு நூல்களில் பதில் எழுதியிருக்கிறேன். நவீன தமிழிலக்கிய அறிமுகம் என்ற ஒரு நூல் எழுதி அதில் இரு அத்தியாயங்களில் பதில் எழுதியிருக்கிறேன். ஏன் இந்த இணையதளத்திலேயே இலக்கியத்தின் பயன், அதை வாசிக்கும் முறை, அதன் அறவியல் குறித்து எப்படிப் பார்த்தாலும் இருபது கட்டுரைகள் இருக்கின்றன.

தமிழில் கடந்த ஐம்பதாண்டுகாலமாக வந்த இலக்கியத்தில் எளிய அறிமுகம் கொண்ட ஒருவர்கூட இந்த வினாவை இப்படி எழுப்ப மாட்டார்.தமிழில் கடந்த ஐம்பதாண்டுக் காலத்தில் அனுபவ வாதம் சார்ந்து மார்க்ஸியம் சார்ந்து இலக்கியக் கோட்பாட்டு விமர்சனங்கள் வந்துள்ளன. நவீன மொழியியல் சார்ந்து விவாதங்கள் வந்துள்ளன. இவற்றில் ஓரளவு அறிமுகமுள்ள ஒருவர் எழுப்பும் கேள்வி அல்ல நீங்கள் எழுப்பியது.

என்னுடைய கோபம், ஏன் கசப்பு அல்லது வெறுப்பு என்றே சொல்லலாம், ஏன் என உங்களுக்கு புரியப் போவதில்லை. இந்தியாவின் ஒரு திறன் மிக்க தொழிலாளர் வாங்குவதைப் போல ஐந்து மடங்கு ஊதியம் நம் பேராசிரியர்களுக்கு வழங்கப் படுகிறது. அந்த ஊதியத்தின் கால்பங்கு அவர்கள் நூல்களை வாங்கிப் படிப்பதற்கான மானியம்.

இந்தியாவில் எந்த ஊழியரும் எட்டு மணி நேரம் உழைக்கவேண்டும். பேராசிரியர்கள் ஐந்து மணி நேரம் வேலைச் செய்தால் போதும், பல்கலைமானியக் குழு கணிப்பின்படி அவர்கள் மிச்ச மூன்றுமணி நேரமும் வாசிக்க வேண்டும். ஆனால் ஒரு சாமானிய வாசகனின் அடிப்படைவாசிப்பு கூட இல்லாமல் வருடக் கணக்காக தாங்கள் கல்லூரியில் படித்த அதே பாட்டுகளை பாடிக் கொண்டு வாழ்கிறார்கள் நம் பேராசிரியர்கள்.

நமது கல்லூரி ஆசிரியர்களின் முகத்தில் வழியும் பாமரத்தனத்தைப் பார்க்கப் பார்க்க குமட்டல் எடுக்கிறது. இருபதாண்டுக் காலமாக எழுதி பேசியும் விவாதிக்கப் பட்டும்கூட கல்லூரி தமிழ்த்துறை தலைவர்கள் என் பெயரையே கேள்விப் படாததை காண்கிறேன். அவர்களுக்கு சுந்தர ராமசாமியையும், புதுமைப்பித்தனையும்கூட பாடத்திட்டத்தில் உள்ள நாலைந்து கதைகளுக்கு வெளியே அறிமுகமே இல்லை என்பதை காண்கிறேன். வெட்கமே இல்லாமல் ‘நான் அன்னாரது ஆக்கங்கள் எதையும் படித்ததில்லை’ என்று மேடையில் சொல்லும் அற்பஜீவிகள் அவர்கள்.

தமிழகத்தில் இன்று கல்வியே இரண்டாகப் பிரிந்து விட்டது. பணம் உடையவர்கள் பணம் செலவு செய்து தரமான கல்லூரிகளில் பிள்ளைகளைச் சேர்த்து தரமான கல்வியை அளித்து சர்வதேசப் போட்டி கோலோச்சும் நவீன உலகத்துக்கு தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள். பணமற்றவர்கள் எந்தவித தார்மீக உணர்வும் இல்லாத மொண்ணைக் கல்லூரி ஆசிரியர்களிடம் தங்கள் பிள்ளைகளை அனுப்புகிறார்கள்.

ஏன் நானே என் மகனை இந்த தமிழகப் பேராசிரியர்களிடமிருந்து காப்பாற்றி பெரும் செலவு செய்து வெளியூருக்கு தரமான கல்லூரிகளுக்கு அனுப்பியிருக்கிறேன். தமிழ்நாட்டுக் கல்லூரிகளுக்குச் சென்று அங்கே வந்து அமர்ந்திருக்கும் பிள்ளைகளைப் பார்க்கையில் ஒருவகையான அடி வயிற்று ஆவேசம் ஏற்படுகிறது. நல்ல கல்விக்கு அவர்களுக்கு உரிமை இருக்கிறது. வரிகொடுக்கும் குடிமக்களின் பிள்ளைகள் அவர்கள். அவர்களின் வரிப்பணத்தில் இருந்து பெரும் சம்பளம் பெறும் இந்த ஆசிரியர்களால் ஏமாற்றப்பட்டு அமர்ந்திருக்கிறார்கள்.

என் ஆத்திரத்தை உங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என்பதை நான் எதிர்பார்த்தேன். எனக்கு ஏமாற்றமே இல்லை. நான் சொல்வதை புரிந்து கொள்ள கொஞ்சமாவது வாசிப்பு வேண்டும். இந்த அரை நூற்றாண்டில் தமிழிலும், உலக இலக்கியச் சூழலிலும் என்ன பேசப் பட்டிருக்கிறது என அறிய கொஞ்சமாவது முயன்றிருக்க வேண்டும்.

ஒன்றை மட்டும் சொல்கிறேன், உங்கள் கொன்றைவேந்தனை கேட்பதற்காக அந்த பிள்ளைகள் அங்கே வந்து அமர்ந்திருக்கவில்லை. அதற்காக உங்களுக்கு என் வரிப்பணத்தால் இந்த அரசு சம்பளம் அளிக்கவும் இல்லை. முதலில் இலக்கியம் வாசியுங்கள். சர்வ தேசத்தரமான ஒரு கல்வியைப்பெற அந்த மாணவர்களுக்கு உரிமை உள்ளது. அதைக்கூட உங்களிடம் யாரும் எதிர்பார்க்கவில்லை. குறைந்தது கேரளத்திலும், கர்நாடகத்திலும் உள்ள மொழிப் பேராசிரியர்களின் குறைந்த பட்ச வாசிப்பையாவது அடைய முடியுமா என்று பாருங்கள். உங்களுக்கு இளைய தலைமுறை மேல் கொஞ்சமாவது ஆர்வமிருந்தால் நீங்கள் செய்ய வேண்டியது அதுதான்.

கடந்த அரைநூற்றாண்டாக இதையே மூன்றுதலைமுறையாக இலக்கியவாதிகள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். உங்கள் வர்க்கத்தின் காதில் அது விழுந்ததில்லை, உங்களாலும் புரிந்து கொள்ளப் படப் போவதில்லை. அது தமிழ்ச் சாதியின் விதி

அதுவரை என்னால் முடிந்தது இதுவே, என் ஆழமான கசப்பை வெறுப்பை பதிவு செய்கிறேன்

ஜெ

முந்தைய கட்டுரைசிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்
அடுத்த கட்டுரைநவீன இலக்கியம்- கடிதங்கள்