ஆ.மாதவன் விஷ்ணுபுரம் விருது 2010- நினைவுகள்

வெறும் ஐந்தாண்டுகள்தான் ஆகின்றன. நினைவுகளில் அவை எங்கோ உள்ளன. காரணம் சென்ற ஐந்தாண்டுகளாக தொடர்ச்சியாகச் செய்துவரும் பணிகள். பரந்துபட்ட தளங்களில் அல்ல, இலக்கியம் என்னும் ஒரே புள்ளியில் குவிந்து செயல்பட்டிருக்கிறோம். வருடம் ஒரு இலக்கியப்பெருவிழா கோவையில். விஷ்ணுபுரம்விருதுவிழா இன்று தமிழகத்தின் மிகப்பெரிய இலக்கிய கொண்டாட்டம்.

வருடத்திற்கு ஒரு இலக்கியக்கூடல், ஊட்டியில். தமிழகத்தில் இன்று நிகழும் மிகப்பெரிய கூட்டங்களில் ஒன்று. சற்றும் தொய்வுறாமல். இருபதாண்டுகளாக நிகழ்கிறது குருநித்யா இலக்கியச் சந்திப்பு. இதைத்தவிர பாராட்டுவிழாக்கள், வாழ்த்துக்கூட்டங்கள். பல்வேறு பயணங்கள், சிறிய சந்திப்புகள். அவை எவையும் எனக்காக அல்ல, என் படைப்புகளுக்காகவும் அல்ல. நான் மதிக்கும் படைப்பாளிகளுக்காக. நான் முன்வைக்கும் விழுமியங்களுக்காக.

2007இல் இந்த இணையதளம் ஆரம்பிக்கப்பட்டது. ஆனந்தவிகடன் உருவாக்கிய சர்ச்சையால் மிகவிரைவிலேயே ஒரு பெரிய ஊடகமாக ஆகியது. தமிழில் வேறெந்த எழுத்தாளருக்கும் அமையாத தீவிரமான இலக்கியவாசகர்கள் அமைந்தனர். அமைப்புரீதியாக அவர்களைத் திரட்டியது 2009இல் . அடுத்த வருடமே விஷ்ணுபுரம் விருது அறிவிக்கப்பட்ட்டது .

இன்று அம்முகங்களைப்பார்க்கையில் நெஞ்சு விரிகிறது. ஒரு மாறாநட்புக்குழுமமாக இன்றும் நீடிக்கிறோம். மிக எளிய செயல்பாடுகள் என்றே செய்யப்படுகையில் அவை தோன்றின.பெரும்பாலும் சொந்த உற்சாகத்துக்காக ஒருங்கிணைக்கப்பட்டவை அவை. விவாதம் அல்ல உரையாடலே நிகழவேண்டும் என்பதிலும் தனிப்பட்ட முறையில் எந்த தாக்குதலும் நிகழக்கூடாது என்பதிலும் உறுதியாக இருந்தோம். அந்த நட்புச்சூழலின் இனிமையே எங்களை இதுவரை கொண்டு வந்திருக்கிறது.

திரும்பிநோக்குகையில் அனைத்தும் வரலாறாக மாறிக்கொண்டிருப்பதுபோலத் தோன்றுகிறது. 2010ல் முதல் விஷ்ணுபுரம் விழா பலவகையான பதற்றங்களுடன் ஆரம்பிக்கப்பட்டது. எங்களில் எவருக்கும் பெரிய அனுபவம் இல்லை. பிஎஸ்ஜி அரங்கு முன்பதிவுசெய்யப்பட்டதும்தான் கொஞ்சம் நம்பிக்கையே வந்தது. விழா சாதாரணமான இலக்கியக்கூட்டமாக ஆகிவிடக்கூடாதென்பதில் உறுதியாக இருந்தேன். ஏனென்றால் விழாவின் நோக்கம், மறக்கப்பட்ட மறைக்கப்பட்ட மூத்த படைப்பாளியைக் கௌரவிப்பது. அவர் ஊடக ஒளிக்கு கொண்டுவரப்படவேண்டும். அவர் தான் கௌரவிக்கப்பட்டதாகவும் உணரவேண்டும்.

தமிழகத்தில் ஊடகங்கள் கவனிக்கும் விழா என்றால் அது மிகமுக்கியமானவர்கள் பங்கு கொள்ளும் நிகழ்ச்சி மட்டுமே. முக்கியமானவர்களில் இலக்கியம் மீதான ஆர்வமும் நாங்கள் செய்வதன் முக்கியத்தை உணரும் நுண்ணுணர்வும் கொண்டவர்கள் வேண்டும். மணிரத்னம் முதலில் நினைவுக்கு வந்தார். நான் அழைத்ததுமே என் கோரிக்கையைப்புரிந்துகொண்டார். வருகிறேன் என்று ஒப்புக்கொண்டதுமே ஆ.மாதவனின் கதைத்தொகுதியை வாங்கி அவருக்கே உரியமுறையில் முதல்கதைமுதல் வாசித்து முடித்தார். சொந்தச்செலவில் வந்து சொந்தச்செலவில் தங்கினார். நாங்கள் அளித்த எளிய தயிர்சாதம் புளிசாதத்தை உண்டு எங்களுடன் அமர்ந்து உரையாடினார்.

விழாவன்று அனைவரும் கூட ஒரு வாடகைக்குடியிருப்பை ஒருநாளுக்கு எடுத்திருந்தோம். அங்கே மலையாள எழுத்தாளரும் என் பிரியத்திற்குரிய இக்கா [அண்ணா]வுமான புனத்தில் குஞ்ஞப்துல்லா வந்திருந்தார். நாஞ்சில்நாடன் இருந்தார்.அந்த நாள் முழுக்கமுழுக்க சிரிப்பில் நிறைந்திருந்தது. ஆ.மாதவனின் முகம் மலர்ந்திருந்தது. அன்றுபோல அவர் சிரித்து நான் எப்போதுமே பார்த்ததில்லை.

வெறும் விருதுவிழா அல்ல என்று அத்தனை நண்பர்களிடமும் சொல்லியிருந்தோம். அனைவரும் ஆ.மாதவன் படைப்புகளை வாசித்துவரவேண்டும் என்னும் கட்டாயத்தை உணர்த்தியிருந்தோம். அத்தனை இளம் வாசகர்களைப்பார்த்து ஆ.மாதவன் மெய்சிலிர்த்தார்.அவர்களுடன் உரையாடி மாளவில்லை அவருக்கு.

அடுத்த தலைமுறையை அடைவதுதான் ஓர் எழுத்தாளன் விழையும் உண்மையான அங்கீகாரம். அது அவருக்கு அன்று கிடைத்தது. இத்தனை இளைஞர்கள் வாசிக்கிறார்கள் என்பதை நினைத்தே பார்த்திருக்கவில்லை என்றார். விழாமுழுக்க நெகிழ்ச்சி நிலையில் இருந்தார். ஊர் திரும்பியபின் என்னை அழைத்து தன் மனநிறைவை நெகிழ்ந்த குரலில் சொன்னார்.

அந்த விழா ஒரு தொடக்கம்.. என் ஊடகநண்பர்கள் அனைவருக்கும் தனிப்பட்ட முறையில் கோரிக்கைவிடுத்திருந்தமையால் ஆ.மாதவனை அவர்கள் பேட்டிகள் எடுத்தனர். செய்திகள் வெளியிட்டனர். அனைத்துவகையிலும் அது ஓர் இலக்கியப் பெருநிகழ்வாக அமைந்தது. அதன்பின் நிகழ்ந்த அனைத்து விழாக்களுக்கும் அதுவே முன்னுதாரணமாக மாறியது.

இன்று நினைக்கையில் இயல்பாக ஒரு பெரிய விஷயத்தைத் தொடங்கிவைத்துவிட்டோம் என்ற பெருமிதம் விஷ்ணுபுரம் நண்பர்கள் அனைவரிடமும் உள்ளது. ஒவ்வொருவரும் பழைய படங்களில் ஒருவரை ஒருவர் நோக்கி குதூகலம் கொள்கிறோம். இந்நாள் ஆ.மாதவனுக்கு மட்டும் இனியதல்ல, எங்களுக்கும்தான்

ஜெ

1

மேலும் படங்கள் 2010

முந்தைய கட்டுரைஆ. மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது
அடுத்த கட்டுரைவெறுப்பும் கனிவும்