அன்புள்ள ஜெ
தேவதச்சனின் கவிதைகளை ஒட்டுமொத்தமாகத் தொகுத்து இப்போதுதான் வாசித்துக்கொண்டிருக்கிறேன். அவரது கவிதைகளை வாசிப்பதற்கான பயிற்சி என்று நீங்கள் பிரசுரித்த அத்தனை கட்டுரைகளையும் சொல்லலாம். சுனில் கிருஷ்ணன், வேணுதயாநிதி, கார்த்திக் எழுதிய கட்டுரைகள் அவற்றை ரசிப்பதற்கான அடிப்படைகளை அளித்தன. சபரிநாதன் மண்குதிரை மற்றும் நீங்கள் எழுதிய கட்டுரைகள் ஆழமான பின்னணிப்புரிதலை கொடுத்தன
தேவதச்சனின் கவிதைகள் மதியவேளையில் ஒரு சமவெளியில் நடப்பது போன்ற உணர்வுகளை அளிக்கின்றன என்று சபரிநாதன் சொல்லும் வரியும் சரிகை ஆடையை அவிழ்த்துவீசிவிட்டு குதிக்கும் சின்னக்குட்டியின் துள்ளல் கொண்ட கவிதைகள் என நீங்கள் சொல்லும் வரியும் அவரது கவிதைகளை அணுக்கமாகப்புரிந்துகொள்ள முக்கியமாக உதவுபவை. அந்த இருவரிகளையும் சேர்த்துவைத்து தேவதச்சனை மிகவும் ஆழமாகப்புரிந்துகொள்ளமுடிகிறது
சங்கரநாராயணன்
ஜெ
தேவதச்சனின் கவிதைகளை தொடர்ந்து வாசித்துக்கொண்டிருக்கிறேன். ஒருபக்கம் அவரது கவிதைகள் மறுபக்கம் அவற்றைப்பற்றிய வாசிப்புகள். பின்னர் வெளிவந்த நீளமான கட்டுரைகளைப்போலவே ஆரம்பத்தில் வெளிவந்த சுருக்கமான அனுபவக்குறிப்புகளும் மிகவும் ஆழமான புரிதலை உருவாக்கின. கவிதைகளைப்புரிந்துகொள்ள ஒரு சின்னத் தொடக்கம் தேவைப்படுகிறது. அதை எவராவது சொன்னதும் எல்லா கவிதைகளும் திறந்துகொள்கின்றன
அத்துவான வெளி என்று நீங்கள் சொன்னதும்தான் அது மௌனியின் சொல் என்று நினைவுக்கு வந்தது. அத்து அலைதல் என்ற வார்த்தை என் மனசில் அதனுடன் சென்று சேர்ந்துகொண்டது. ’நமக்குள்ளிருக்கும் ஞாபகச் சுமைகொண்ட ஒரு நானும் அனுபவத்தின் நினைவைக்கொண்ட ஒரு நானும் சந்திக்கும் புள்ளி’ யில் தேவதச்சனின் கவிதைகள் நின்றுகொண்டிருக்கின்றன என்னும் மண்குதிரையின் அவதானிப்பு எனக்கு ஒரு பெரிய திறப்பைக்கொடுத்தது
இந்த விருதை ஒட்டி இத்தனை ஆழமான ஒரு விவாதம் இணையதளத்தில் நடந்தது வரவேற்புக்குரியது. கட்டுரையாசிரியர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள்
எஸ். குமாரவேல்
***
அன்புள்ள ஜெ
எல்லாக்கட்டுரைகளுமே தேவதச்சனை நோக்கிச் செல்ல உதவின. எனக்கு ஒரு மனப்படிமம் வந்தது. [நானும் சின்னச்சின்னக் கவிதைகள் எழுதுவேன். உங்களுக்கு அவற்றை அனுப்பியிருக்கிறேன். நீங்கள் ஒன்றுமே சொல்லவில்லை] கோயில்பட்டி வட்டாரத்துப் பொட்டல்களில் ஒரே ஊருக்குப்போக பல ஒற்றையடிப்பாதைகள் செல்லும். அவை ஒன்றை ஒன்று வெட்டிக்கொண்டு செல்வதும் உண்டு. அதைப்போல இருந்தன இக்கட்டுரைகள்.
கவிஞனின் வேலை என்பது முற்றிலும் தெரியாத ஒன்றை சொல்வதல்ல, ஏற்கனவே தெரிந்த ஆனால் அவர்கள் சொல்லத்துணிந்திராத ஒன்றை சொல்வது என்று கவிஞர் ராபர்ட் புரோஸ்ட் சொல்வதை வேணுதயாநிதி குறிப்பிடுவது மிகமுக்கியமானது. இலக்கியமேகூட அப்படித்தான். அவரது அருமையான கட்டுரை அந்த மையத்தைச் சுற்றி சிறப்பாக அமைக்கப்பட்டிருந்தது. தேவதச்சனை அணுகுவதற்கான ஒரு எளிமையான நுட்பமான பார்வையாக அது இருந்தது.
சிவக்குமார்
**
அன்புள்ள ஜெ
மனிதர்கள் இயல்புகளை அணிந்து கொள்பவர்கள் என்பது பொது சிந்தனை. ஆனால் மாறாக தேவதச்சனின் கவிதையில் இயல்புகள் மனிதனை அணிந்து கொள்கின்றன- என்று சுனில் கிருஷ்ணன் தேவதச்சனைப்பற்றிய் எழுதிய வரி மிக ஆழமான பாதிப்பை உருவாக்கியது
அந்த வரிக்கு மிகச்சிறந்த உதாரணம் ஜெல்லிமீனே என்ற கவிதை.
சரவணன்
அன்புள்ள ஜெ,
இந்த கட்டுரை தொடரை முழுக்க வாசித்து முடித்தேன். அபாரம். தேவதச்சன் எனும் ஆளுமை, அவருடைய கவியுலகம் என இரண்டு சரடுகளும் முயங்கி ஒரு முழுமை சித்திரத்தை அளிக்கின்றன. ‘ஜெல்லி மீன்’ “முட்டை” கவிதைகளை நான் முற்றிலும் வேறொரு தளத்தில் பொருள் கொண்டிருந்தேன். மிக முக்கியமாக ஒன்றை முட்டி மோதி கண்டடைந்ததை சொல்லிவிட்டு உதறி செல்லும் குழந்தையின் ஆட்டம் தேவதச்சனின் கவியுலகம் எனும் உங்கள் நோக்கு முன்னர் திறக்காத பல கவிதைகளை திறக்கின்றன. ஜெல்லி மீன் கவிதையை குரூரத்தின் உச்சம் என எண்ணினேன். முட்டை கவிதையில் கூட ஒருவித சுரண்டலின் மீதான கோபம் வெளிப்படுவதாக எண்ணிக்கொண்டேன். ஆனால் எல்லாவற்றையும் விளையாட்டாக அணுகும் குழந்தை எதையாவது காழ்ப்புடன் நோக்கிவிட முடியுமா?
உருவகத்தை பற்றி தேவதச்சன் சொன்னதாக வரும் தும்பி சுமந்து செல்லும் கல் அபாரமான சித்திரத்தை அளிக்கிறது. மொத்தமாகவே இந்த கட்டுரை வரிசையில் நீங்கள் கையாண்டிருக்கும் metaphors அபாரம்.
ஏன் பிழை வாசிப்புகள் ஏற்படுகிறது என யோசித்து கொண்டிருந்தேன்..தேவதச்சனின் ஆளுமையை கவிதையில் இருந்து பிரித்து பார்க்க இயலவில்லை என தோன்றியது. அவரை அறியாமல் அவர் கவிதையை முழுதுணர முடியாதோ? ஆனால் அப்படி சொல்வதற்கில்லை. கால கடந்து எழுத்தாளர்களை நாம் வாசித்து கொண்டிருக்கிறோம். ஜெ அவருடைய கட்டுரையில் இது குறித்து யுவனுடன் விவாதித்ததாக சொல்கிறார். ஒரு கவிஞனை முழுதுணர அவனுடைய எல்லா தொகுப்புக்களையும் வாசிக்க வேண்டும்.தேவதச்சனின் கவிதைகளை புரிந்துகொள்ள ஜெ செய்துள்ள கால பகுப்பு முக்கியமானதாக படுகிறது. ஒளி மங்கியதாக புலப்பட்ட கவிதைகள் சடாரென்று துலக்கம் பெறுகின்றன.
சுநீல் கிருஷ்ணன்