கீதை கடிதங்கள் -8

1

 

அன்புள்ள  ஜெயமோகன் அவர்களுக்கு

நான்  நலம்.  தாங்களும்  நலமுடன்  இருப்பீர்கள்  என  நம்புகிறேன்.  என் மனதில்  உங்கள்  உருவம்  வளர்ந்து  கொண்டே  வருகிறது அல்லது  நான்  சிறுத்துக்  கொண்டிருக்கிறேன் அல்லது  இரண்டும். கீதைப் பேருரையின் முதல் இரண்டு  பாகங்களான வரலாற்றுப்  பின்புலத்தையும் தத்துவப் பின்புலத்யையும் தரவிறக்கிக்  கேட்டதோடு இந்த  நாள்  முடிந்தது. கொற்றவை  படித்தபோது ஏற்பட்ட  அழுகையை வரவழைக்கும் மனவெழுச்சி ஏனோ இன்றும்  ஏற்பட்டது.

பாரதியாரின்  கீதை மொழிபெயர்ப்பை முன்னரே  படித்திருக்கிறேன்.  ஆனால்  உங்கள்  உரை  என்  போதாமையை எனக்கு  உணர்த்தியதோடு கீதையுடன்  எனக்கு  ஏற்பட்டிருந்த நெருக்கத்தை என்னுடைய  “முற்போக்கு ” நண்பர்களுக்கும் “தீவிர  பக்த” நண்பர்களுக்கும்  நிச்சயம்  குழப்பமில்லாமல் என்னால்  எடுத்து  வைக்க முடியுமென்ற நம்பிக்கையை  ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணன்  குறித்து  நீங்கள்  அளிக்கும்  சித்திரம்  மிக  அந்தரங்கமாக  ஏற்கனவே  என்னுள்  இருந்துவந்ததை உணர்ந்தபோது மூச்சுத் திணறல்  ஏற்பட்டது  போல் இருந்தது.

அன்புடன்
சுரேஷ்  பன்னீர்செல்வம்

அன்புள்ள ஜெ

தங்கள் கீதையுரையை பலமுறை கேட்டேன். கீதை பற்றிய கட்டுரைகளில் சொல்லப்பட்ட பலவிஷயங்கள் இதிலும் இருந்தன. யோகமீமாம்சை பற்றியெல்லாம் கட்டுரையில் மிகத்தெளிவாகவே இருந்தது. இருந்தாலும் ஏன் இந்தப்பேச்சு இத்தனை கவர்கிறது என்றால் இதிலுள்ள நேரடியான உணர்ச்சிகள்தான். நீங்கள் எங்களை நோக்கிப்பேசுகிறீர்கள். உங்கள் குரலின் உணர்ச்சிகரமான ஒலி மனதைத் தொடுகிறது. பேச்சு மூளைக்குப்பதில் நேரடியாக இதயம் நோக்கிச்செல்கிறது என நினைக்கிறேன்.

சங்கர்

அன்புள்ள ஜெ

கீதைப்பேருரைகளை இப்போதுதான் கேட்டுமுடித்தேன். சிருஷ்டிகீதத்தைக் கேட்டபோது ஒரு பெரிய எழுச்சி ஏற்பட்டு அழுதுவிட்டேன். துக்கமில்லாத அழுகை போல மகத்தான உணர்ச்சி வேறு இல்லை என்று உணர்ந்தேன். எவ்வளவு மகத்தான உயரங்களுக்கெல்லாம் என் முன்னோரான ரிஷிகளின் நெஞ்சம் சென்றிருக்கிறது என்று அறிந்தபோது பாரதியைப்போல

முந்தையர் ஆயிரம் ஆண்டுகள் வாழ்ந்து
முடிந்ததும் இந்நாடே – அவர்
சிந்தையில் ஆயிரம் எண்ணம் வளர்ந்து
சிறந்ததும் இந்நாடே

என்று பாடவேண்டும் என்று தோன்றியது

பாலசுப்ரமணியன்

 

அன்பின் ஜெ எம்.,

சங்கரரின் கீதை உரை பற்றி நீங்கள் சொன்னது போல உங்கள் கீதைப்பேருரைகள் நான்குமே – ,இந்தக்கால கட்ட அறிவின் உச்சத்தில் நின்று மிக உயர்ந்த அறிவுத் தளத்தில்-கீதையைப்புற வயமாக அணுகிய போக்கு , தரத்தில் சற்றும் சமரசம் செய்து கொள்ளாமல் வழங்கப்படும் அல்லது வழங்கப்பட வேண்டியதான உயர்கல்விப்புலத்தின் உயர் ரக ஆய்வுக்கட்டுரைகள் [ pure academic presentation ] போல இருந்தன என்பது, நான் சொல்லாமலே எல்லோருக்கும் தெரிந்த உண்மைதான். ஆனாலும் நான் தனித்துச்சொல்வதன் ஆதங்கத்தை முதல்வரியின் தொனியே காட்டியிருக்கும்.ஆம்….தமிழகக் கல்விப்புலங்களில் இப்படிப்பட்ட கட்டுரைகள் அளிக்கப்பட்டு ….இத்தனை உயர்ந்த தளத்திலான முன் தயாரிப்போடும் அர்ப்பணிப்போடும்கூடிய அறக்கட்டளைச்சொற்பொழிவுகள் வழங்கப்பட்டு எத்தனை மாமாங்கம் ஆகி விட்டது? [என் மாணவப்பருவத்தில் பேரா சீனிவாசராகவன் , வ சுப மாணிக்கம் , அ ச ஞா , தமிழ்க்கடல் ராய சொ போன்றோர் அவர்கள் கால அறிவின் ஆழத்தில் நீர்த்துப்போகாமல் சொற்பொழிவாற்றி நான் பயன் பெற்றதுண்டு]

உண்மையில் உங்கள் உரைகளைக்கேட்டுக்கொண்டிருந்த ஒவ்வொரு நிமிடமும் இப்படிப்பட்ட ஒரு ஆசிரியர் இன்றைய சூழலில் கல்விப்புலங்களில் வாய்க்காமல் இருக்கிறர்களே,அந்த வாய்ப்பு மாணவர்களுக்கு அருகிப்போய்விட்ட ஒன்றாக இருக்கிறதே என்ற ஆதங்கமே ஒரு மெய்யான கல்வியாளராக என்னை அலைக்கழித்துக்கொண்டிருந்தது.

இன்னொரு கேள்வியும் கூட என்னை ஆட்டிப்படைத்தபடி இருக்கிறது..

கலைத்துறையை எடுத்துக்கொண்டால் இசை [கர்நாடகம்,மெல்லிசை], நடனம்,ஓவியம், நாடகம்.திரைத் துறை என எல்லாவற்றிலுமே அடுத்த கட்டத்துக்கு அந்தக்கலையைக்கொண்டு செல்லும் முயற்சி சாஸ்வதமாக நடந்து கொண்டே இருக்கிறது. கல்வித் துறைமட்டும் பின்னோக்கிய கதியில் வீழ்ச்சியை நோக்கிச் செல்வது போல உணர்கிறேன்; இது என் மனப்பிரமை இல்லை …‘’அந்தக்காலம் மாதிரி வருமா’’ என்ற வழக்கமான வயதானவர்களின் வெற்றுப் புலம்பலும் இல்லை என்பது என் உள்ளுணர்வுக்குத் தெரிகிறது. ஆங்காங்கே அரிதாக ஊக்கமும் துடிப்பும் வாசிப்பும் உள்ள ஒரு சிலர் – இளைய தலைமுறையினர்- கல்வித் துறையிலும் இருக்கலாம்…அதில் ஒரேயடியாக நான் நம்பிக்கை இழந்து விடவில்லைதான்.

ஆனால் வாசிப்பில் நாட்டமோ , பாம்புச் சட்டை உரிப்பதுபோலப் புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டியது கல்வி என்ற பிரக்ஞையோ துளியும் அற்றவர்களாய்க் கல்விப்பணியால் பெறும் ஊதியத்தை , மேலும் மேலும் பணம் பெருக்கக் கிடைத்த முதலீடாக மட்டுமே கொண்டு அதிலேயே நாட்டம் செலுத்தும் பல மூத்த ஆசிரியர்கள்,,இளைய தலைமுறைகொள்ளும் ஊக்கத்தை முளையிலேயே கிள்ளிப்போட்டு விட்டு அவர்கள் தங்களை விட அதிகமாகத் தலையெடுக்காமல் பார்த்துக் கொள்வதில் மட்டுமே விழிப்பாக இருக்கிறார்கள்; தங்கள் மாணவப்பருவ வாசிப்பை வைத்தே ஆசிரியக்காலத்தை ஓட்டியபடி ’வெறுமே உருப்போட வைத்தால் போதும்’என்று அடுத்த தலைமுறைக்கும் மூளைச்சலவை செய்தபடி நாளடைவில் அவர்களையும் தங்களைப்போல வெறும் உலகியலாளர்களாக மட்டுமே ஆக்கிச் சிறுத்துப்போகச்செய்து விடுகிறர்கள்.அடுத்த தலைமுறைக்கான அறிவைக்கடத்துவதில் [அதை உருவாக்காவிட்டாலும் கூட] தாங்கள் பாலமாக இருக்கிறோமென்ற சிறு நல்லுணர்வு கூட அவர்களுக்கு இல்லாமல் போய் விட்டது. நான் பணி ஓய்வு பெற்ற பிறகும் பல இடங்களில் நிதரிசனமாகக்கண்டு மனம் வருந்தும் உண்மை இது.

அடுத்து தங்களிடம் ஒரு கோரிக்கை

பழம்புராணங்கள் இதிகாசங்கள் ஆகியவற்றில் இந்தத் தலை முறை கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்லக்கூடிய வகையில் அவற்றை எதிர்கொள்ள நாம் தயாராக வேண்டும் என்ற உங்கள் கருத்து மிகவும் பொருத்தமானது. 20 வருடம்முன் வகுப்பறையில் சிறுத்தொண்டர் புராணமோ, காரைக்கால் அம்மையோ எடுத்தது போல இன்று செய்வதில் பல வீரியமான கேள்விகளை நாம் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அதற்கு ஏற்ப தன்னைத் தயார் செய்து கொள்வதும் ஒரு கல்வியாளரின் முக்கிய கடமையாகிறது.

தங்களுக்கு நேரமும் மனநிலையும் வாய்க்கும்போது பழைய தொன்மங்கள் பலவற்றுக்கு இந்தக்கால அறிவின் வெளிச்சத்தில் நீங்கள் அவ்வப்போதாவது சிறுசிறுவிளக்கங்கள் அளித்து ஒளி பாய்ச்ச முடிந்தால் அசட்டுத்தனமான நாத்திக எதிர்நிலை வாதங்களோ, ,கண்மூடித்தனமான பக்தி வியாக்கியானங்களோ,அற்ற நடுநிலையான அறிவியல் பார்வை அடுத்த தலைமுறைக்குக்கிடைக்கும்; தொன்மங்கள் பற்றிய சரியானபுரிதல் அவர்களுக்கு வாய்க்க இது ஒரு திறப்பாக அமையும்.

நன்றி.

எம்.ஏ.சுசீலா

 

அன்புள்ள ஜெயமோகன் சார், வணக்கம்! நலமா?

‘கீதை உரை’ கேட்டேன். இதுவரை ஓஷோவின் உரை மட்டுமே
எனக்கொரு திறப்பாக இருந்தது.
உங்கள் உரையை கேட்டுவிட்டு, இனிமேல் எந்த உரையை படித்தாலும்
அது புதிய தரிசனங்களை தரும் என்று நம்புகிறேன்.
மற்றும் இதன் ஒலி அமைப்பு அவ்வளவு தரமானதாக இல்லை.
நீங்கள் பேசியதை மைக்கின் வழியாக பதிவு செய்யாமல்,
நேரடியாக ரெக்கார்ட் செய்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.
இதுபோன்ற அரிதான பதிவுகள் இன்னும்
தெளிவாக இருந்தால் சிறப்பாக இருக்கும்.
 அன்புடன்,
எம்.எஸ்.ராஜேந்திரன்

 

 

முந்தைய கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’
அடுத்த கட்டுரை‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 6