கம்பனும் குழந்தையும் -கடிதங்கள் 2

1

 

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

  வணக்கம்.
   உங்களது எழுத்துகளைஆர்வத்துடன் தொடர்ந்து   வாசித்து வருகிறோம் .  அண்மையில் வாசித்தவற்றுள் 14-12-2015 அன்று பதிவாகிய ’கம்பனும் குழந்தையும்’ என்ற  பதில் குறிப்பு   மிக உச்சமானது என்பது  எமது கணிப்பு.
   ஒரு காவியத்தை  எப்படித்தரிசிக்கவேண்டுமென்பதற்கும் குறிப்பாக,கம்பனை எவ்வாறு தரிசிக்கவேண்டுமென்பதற்குமான  ஒரு  ’பாட’மாகவே  தங்களது இந்த  பதிற்குறிப்பு  அமைந்துளது.
        ’
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல்  சானகியை … ’ என்ற கம்பனது பாடலை  நீங்கள் அணுகியுள்ள முறைமை  மிகவும் சிறப்பாக அமைந்திருந்தது.
‘’கம்பன் இங்கு நிகழ்ந்தபின் எழுந்த காவியங்கள்பல அதன் நிழல்கள்.  … புலவர் குழந்தை இமயமலையின் முன்னால் உள்ளங்கையில் கூழாங்கல்லுடன் நின்றிருக்கும்  எளிய மனிதர் . துணிந்தார் என்பதே பெருமை . துணிந்திருக்கலாகாது என்பது உண்மை நிலை. ’’என அமைந்த நிறைவுப்பத்தி,இப்பதிற்குறிப்பின்  ’சிகர’மாகும்.
அன்புடன்
நா.சுப்பிரமணியன்
கௌசல்யா சுப்பிரமணியன்.
 அன்புக்கும் மதிப்புக்கும் உரிய நா.சுப்ரமணியம் மற்றும் கௌசல்யா சுப்ரமணியம் அவர்களுக்கு,
நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? கம்பனுக்குள் ஒரு திடீர் நினைவுபோலச் செல்லவைத்த கேள்வி அது. அத்தகைய துளிகளாக ஒரு காவியம் நினைவுக்கு வருவதென்பது ஓர் இனிய அனுபவம்
ஜெ

===================================

அன்பு ஆசிரியருக்கு,

வணக்கம். நன்றிகள். தங்கள் அறிவுறுத்தலின்படி தான்சானியா குறித்து எழுத ஆரம்பித்து உள்ளேன். நில அமைப்பு, இந்தியர்களின் வாழ்க்கை முறை, இந்தியர்களின் தொழில் நிறுவனங்கள் மற்றும் சொத்துக்கள், தான்சானியா அரசு மற்றும் மக்கள் வாழ்க்கை குறித்து முடிந்த அளவு தகவல்களை சேகரித்து தங்களுக்கு அனுப்புகிறேன்.
பதிவை படித்து கண்கள் கண்ணீர் திரையிட உங்களை மனமார வணங்கும் அனுபவத்தை தந்துகொண்டே இருப்பீர்கள்.  கம்பனும் குழந்தையும் படித்து சிலிர்த்து போனேன். கம்பராமாயணம் முழுவதும் படிக்க இந்த முறை இந்தியாவரும் பொழுது புத்தகம் எடுத்து தொடங்கவேண்டும்.
கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி
இது போன்ற வரிகளை அறிமுகம் செய்து வைப்பதற்காகவே ஆயுளுக்கும் வாசகர்கள் உங்களுக்கு நன்றிக்கடன் பட்டிருக்க வேண்டும். பொறியியல் படிக்கும் பொழுது கல்லூரிகளுக்கு இடையேயான நாடக போட்டியில் ராமாயணம் குறித்து ஒரு நாடகம் செய்திருந்தோம். சரியா என்று தெரியவில்லை.
ராமன் “ராவணன் உன்னை உன் சம்மதமின்றி சிறை எடுத்து இருந்தாலும்,அவன் மிகுந்த காதல் கொண்டவன் உன்மேல், எனவே  நீ உன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாய்” என்று தீயிரங்க சொல்வதற்கு பதில் மொழியாக சீதை, “உங்கள் மேல் மிகுந்த காதல் கொண்ட பெண்களை நான் பார்த்து இருக்கிறேன். சூர்ப்பனகை கூட.எனவே ஏன் நான் உங்களையும் நிரூபிக்க சொல்ல கூடாது” என்று தீயிரங்க ராமனையும் அழைப்பது போலவும். ராமன் மனம் வருந்தி சீதையிடம் மன்னிப்பு கோருவது போலவும் காட்சி அமைத்து இருந்தேன். முதல் பரிசு கிடைத்தது.
இது சரியா? எனக்கு என்றும் மதம் சார்ந்து ஆரோக்கியமான விவாதம் வரும்பொழுது ராமனின் செய்கையை விமர்சிப்பவர்களிடம் சொல்வதற்கு நியாயம் என்னிடம் இருப்பதில்லை. மனைவியை சந்தேகபடுவது மனிதனின் குணம்.ராமன் மனிதன் என்றால், ஒரு சாதாரண மனிதனுக்கு இருக்கும் குணங்களை கொண்டவரை ஒரு சத்தியபுருஷனாக ஏற்கமுடியமா? எல்லாம் தெரிந்திருந்தும் ஏன் அன்னையை இப்படி வேதனைக்குள்ளாக்கினார்? எப்படி அவரை வணங்குவது?
அதிகப்பிரசங்கிதனமாக இருந்தால் மன்னிக்கவும். எப்பொழுதும் இருக்கும் ஐயம்.
தாழ்மையுடன்,
சரவணகுமார்
துபாய்.

 

 

 

 

அன்புள்ள சரவணக்குமார்,

 
உங்கள் வினாவுக்கான பதில் ஒன்றே, கம்பனைப் படியுங்கள். நீங்கள் கேட்கும் இந்தக்கேள்விக்கான விடையாகவே கம்பராமாயணம் எழுதப்பட்டுள்ளது. மானுடனின் உணர்வுநிலைகளுடன் அறத்தின் தெய்வம் ஒன்று எப்படி நிகழமுடியும் என்பதற்கான விளக்கமே அக்காவியம்

 

 

அதை வாசிக்காமல் வெளியே நின்று உதிரிவரிகளையும் வெற்று உலகியல்நியாயங்களையும் கொண்டு அதை விவாதிப்பதில் பொருளே இல்லை. இதையல்ல எந்தக்காவியத்தையும் அப்படி விவாதிக்கமுடியாது.

 

 

காவியங்கள் ஏன் தேவைப்படுகின்றன? ஒற்றைவரி உதிரிப்பதில்கள் பொருந்தாமலாகும் பெரிய வினாக்கள் எழும்போது அல்லவா? நம் உள்ளூர் அரசியல்வாதிகளை, சாதித்தலைவர்களை தெய்வங்களாக்கும் எளிமையான முறைமைகளுக்கு அப்பால் செல்லும் உள்ளம் கொண்டவர்கள் சென்றடையவேண்டியவை காவியங்கள்.

 

 

ஆகவே இதே கேள்வியுடன் கம்பனுக்குள் செல்லுங்கள்.

 

 

ஜெ

 

முந்தைய கட்டுரைஜெல்லி மீனே… ஜெல்லி மீனே…
அடுத்த கட்டுரைவேராழம்