குகைச்செதுக்கு ஓவியங்களும் டீக்கடையில் இலக்கியமும்

 

எனக்கு ஒரு செல்பேசி அழைப்பு. அப்துல் ஷுக்கூர் எனத் தன்னை அறிமுகம் செய்து கொண்டார். என்னுடைய நூறு நாற்காலிகள் மலையாளத்தில் ஒரு சிறு நாவலாக வெளிவந்துள்ளது. அதற்கு பதிப்புரிமை இல்லை என அறிவித்திருந்தமையால் ஏழு வெவ்வேறு பதிப்பகங்கள் வெளியிட்டிருக்கின்றன. இரண்டு லட்சம் பிரதிகள் வரை விற்றிருக்கிறது அது. அந்நாவலைப்பற்றி ஒரு விவாதம் நிகழ்த்தவேண்டும் என ஷுக்கூர் அழைத்தார்.

நான் அமைப்புசார்ந்த இலக்கியக் கூட்டங்களை விரும்பாதவன். கல்லூரிகளின் கூட்டங்களைப்போல வீண்வேலையே வேறில்லை. ஆனால் ஷுக்கூரின் கூட்டம் என்னைக் கவர்ந்தது. காரணம் அவர் நடத்தும் டீக்கடையிலேயே அந்தக்கூட்டம் நடக்கும் என்றார். பயணச்செலவு ஏதும் தரமுடியாது. விற்கும் நூல்களின் பணத்தைக்கூட நோயுற்றிருக்கும் ஓர் எழுத்தாளருக்கு அளிக்கவிருக்கிறேன்” என்றார். அந்த இலட்சியவாதம் எனக்குப்பிடித்திருந்தது. ”வருகிறேன்” என்றேன்

 

முந்தைய நாளே நானும் ஈரோடு கிருஷ்ணனும் திருப்பூர் கதிரும் ராஜமாணிக்கமும் கதிரின் காரில் கோவையிலிருந்து கிளம்பினோம். மானந்தவாடிக்கு அருகே உள்ள இடைக்கல் என்னும் குகையிலுள்ள கற்செதுக்கு ஓவியங்களைப் பார்ப்பதற்காகச் சென்றோம். சுமார் ஒரு லட்சம் ஆண்டுகளுக்கு முன்னால் ஒரு பெரிய பாறை பிளந்து உருவானது இடைக்கல் என்னும் குகைப்பிளவு. அந்தப்பிளவில் விழுந்து சிக்கி நிற்கும் பெரும்பாறை அப்பெயரை அளித்திருக்கிறது

அம்புக்குட்டிமலை என்னும் இடத்தில் கடல்மட்டத்திலிருந்து 1200 மீட்டர் உயரத்திலுள்ளது இடைக்கல் குகை. புதிய கற்காலத்தைச் சேர்ந்த மக்கள் வாழ்ந்த குகை இது. தோராயமாக எட்டாயிரம் வருடங்களுக்கு முன்பு. இவை குகை ஓவியங்கள் அல்ல. கூரிய கற்களால் பாறையை தோண்டித் தோண்டி கோடுகள் அமைத்து வரையப்பட்ட சிற்ப ஓவியங்கள். தொல்லியலில் இவை Petroglyphs என அழைக்கப்படுகின்றன.

 

ஆளோய்ந்து கிடக்கும் என நினைத்தோம். ஆனால் மைசூர் அருகே என்பதனால் நல்ல கூட்டம். ஒரு சுற்றுலாமையத்தின் சூழல் இருந்தது. உப்பிலிட்டு ஊறவைக்கப்பட்ட நெல்லிக்காய் கிடைத்தது. எனக்கு மிகவும் பிடிக்கும் அது. வாங்கித் தின்றபடி மூன்று கிலோமீட்டர் தூரம் மலை ஏறிச் சென்றோம். கொஞ்சம் கஷ்டமான ஏற்றம்தான். அதன்பின் இரும்பால் படியமைத்து மேலே செல்ல வசதி செய்திருந்தனர். பலதட்டுகளாக நானூறுபடிகள். மேலே இருந்தது இடைக்கல் குகை
இடைக்கல் குகைச்செதுக்குகள் நம்முடைய தொல் வரலாற்றாய்வில் முக்கியமானவை எனக் கருதப்படுகின்றன. இவற்றுக்கிணையான கற்செதுக்கு ஓவியங்கள் இந்தியாவில் பிறிதில்லை. பிரான்ஸில் உள்ள குகைகளின் செதுக்கு ஓவியங்களுடன் இவற்றுக்குள்ள ஒற்றுமை பிரமிக்கச்செய்வது.

மலபாரின் பிரிட்டிஷ் போலீஸ் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய ஃப்ரெட் பாசெட்
[ Fred Fawcett] அவர்களால் கண்டுபிடிக்கப்பட்ட குகை இது. பழங்குடிகள் இவற்றை அறிந்திருந்தனர். இவை தங்கள் தெய்வங்கள் தங்குமிடமென எண்ணியிருந்தனர். நெடுங்காலம் இக்குகை புழக்கத்தில் இருந்திருக்கலாமென ஊகிக்கிறார்கள். கிமு 5000 முதல் கிமு 1000 வரை. ஆரம்பகாலக் செதுக்குகளில் வளைவுகள் குறைவாக வரையப்பட்ட பறவைகளும் மனிதர்களும் மிருகங்களும் உள்ளனர். பிற்காலச் செதுக்குகளில் எழுத்துக்களைப்போன்ற வடிவங்கள் உள்ளன. அவை ஹரப்பன் நாகரீகத்தின் எழுத்துக்களுடன் காட்சிக்கு ஒத்துப்போகின்றன.

இக்குகை ஓவியங்களில் திரும்பத்திரும்ப வரும் படிமங்களில் முக்கியமானது சூரியன். மலர்போல சக்கரம்போல அதை வரைந்துள்ளனர். சூரியன் இவர்களின் தெய்வமாக இருந்திருக்கலாம். இன்னொரு சின்னம் வண்டி. நான்கு சக்கரங்கள் கொண்டது. ஆனால் மாடுகள் இல்லை. இப்பகுதிப் பழங்குடிகள் இப்போதுகூட மனிதர்கள் இழுக்கும் வண்டிகளைச் செய்கிறார்கள். அவையாக இருக்கலாம். எட்டாயிரம் வருடங்கள். நமக்கு மகாபாரதம் எத்தனை தொன்மைக்காலமோ அதேயளவுக்கு மகாபாரதகால மக்களுக்கு இவர்கள் தொன்மையானவர்கள்.

 

செதுக்கோவியங்களை முதலில் பார்த்ததும் கிருஷ்ணன் ‘மிருகமோ பறவையோ ஒண்ணும் இல்லை சார், வெறும் வடிவங்கள்தான்” என்றார். ஆனால் கொஞ்சம் கண்பழகியதும் உருவங்கள் தெரியத்தொடங்கின. வழிகாட்டி சுட்டிக்காட்டி விளக்கத்தொடங்கியது, ஒவ்வொரு உருவமாக எழுந்துவந்தன. முதலில் தெரிந்தது தலையில் இறகுகள் போல விரிந்த தலையணி அணிந்து மார்பில் கவசம் சூடி கைகள் விரித்து நிற்கும் அரசனின் உருவம். அருகே உள்ள படம் அவரது பின்பக்கத்தோற்றம். மேலே பெண்கள். யானை. மயில் அல்லது இருவாய்ச்சி பறவை.

இங்கே உள்ள வடிவங்களை இன்னமும் ஆய்வுசெய்து முடிக்கவில்லை. வரலாற்றாய்வாளார் எம் ஆர் ராகவவாரியர் இவற்றில் ஒரு வடிவம் நீர்க்குடம் ஏந்திய மனிதன் என அடையாளம் கண்டிருக்கிறார். அது இறுதிச்சடங்கு செய்யும் படமாக இருக்கலாம். குடமுடைத்துச் சடங்குசெய்வது இன்றும் நீளும் பழக்கம். இந்த இலச்சினை ஹரப்பன் பண்பாட்டிலும் இருப்பதனால் இந்தியாமுழுக்க ஹரப்பன் பண்பாடு இருந்திருக்கலாம் என அவர் சொல்கிறார். இங்குள்ள எழுத்துக்களுக்கு பிராமி லிபியுடன் அணுக்கம் உள்ளதை ஐராவதம் மகாதேவன் சுட்டிக்காட்டியிருக்கிறார். பலவகையிலும் இன்னமும் ஆய்வுக்குரிய ஒரு பெரிய சுரங்கம் இக்குகைச்செதுக்குகள்.

 

ஷுக்கூர் இக்கா பேசுகிறார்

ஒரு வரலாற்று இடம் சுற்றுலாமையம் ஆவதன் அனைத்துச் சிக்கல்களையும் இடைக்கலில் கண்டோம். எவருக்கும் அந்த ஓவியங்களில் ஆர்வமில்லை. ஒரே கூச்சல் . அங்கே நின்று ஒரு தற்படம் எடுத்துக்கொள்வதைத்தவிர எவரும் எதிலும் நிலைக்கவில்லை. காவலர் கூச்சலிட்டுக்கொண்டே இருந்தார். வேலியிடப்பட்டிருந்தமையால்தான் குகைச்செதுக்குகள் அழியாமல் எஞ்சியிருக்கின்றன.

பார்த்ததைவிட திரும்பும்போது கண்ணுக்குள் பெருகின அந்த ஓவியங்கள். மழையீரமும் குளிருமாக இருந்த சாலையில் காரில் சென்றோம். மதிய உணவை மாலை சாப்பிட்டோம். இருட்டிய பின்னர்தான் கண்ணனூரை அடைந்தோம். ஒரு விடுதியில் அறைபோட்டு தங்கினோம். காலையில் எழுந்து கண்ணனூர் கடலோரம் இருந்த செயிண்ட் அஞ்சலோ கோட்டையைச் சென்று பார்த்தோம்.

 

பெரும்பகுதி ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள கோட்டை இது. போர்ச்சுக்கீசியர்களால் கட்டப்பட்ட கடல்கோட்டை. அவர்களின் பண்டகசாலையாக இருந்தது. பின்னர் பிரிட்டிஷாரின் சிறையாக இருந்தது. காலையில் ராணுவவீரர்கள் அதைச் சுத்தம்செய்துகொண்டிருந்தனர். கடலில் இப்பகுதிக்குரிய சிறிய டால்பின் மீன்கள் துள்ளி விழுவதைக் கண்டோம்.,

காலை உணவுக்குப்பின் ஷுக்கூர் வாழும் பெடயங்கூர் என்னும் சின்னஞ்சிறு கிராமத்திற்கு வழிவிசாரித்துச் சென்றோம். சாலையில் ஒரு பெட்டிக்கடையில் ஷுக்கூர் பற்றி கேட்டோம். கடைக்காரர் ஒரு கவிஞர், மூன்று தொகுதிகள் பிரசுரித்திருக்கிறார். ”அதோ அந்தக்கடைதான். நானும் வருவேன்” என்றார். ஷுக்கூர் எங்களை சாலையிலேயே கைகாட்டி அழைத்தார்

சின்னஞ்சிறிய டீக்கடை. ஷுக்கூர் சைக்கிளில் மீன் வாங்கிக்கொண்டுவந்து கூவிவிற்கும் தொழிலைத்தான் இருபதாண்டுகளாகச் செய்துவந்தார். அதற்குமுன் மண்வெட்டும் கூலித்தொழிலை பத்தாண்டுக்காலம் செய்தார். மகன் துபாயில் வேலைக்குப் போனபின் டீக்கடை நடத்துகிறார். ஐந்தாம் வகுப்புதான் படிப்பு. சுயமாக இலக்கியம் கற்று மூன்று தொகுப்புகள் வெளியிட்டிருக்கிறார். பெடயங்கூரில் வீடுவீடாக இலக்கியத்தை அறிமுகம் செய்து வருகிறார். என் நூறுசிம்ஹாசனங்ஙள் நூலை மட்டும் நாநூற்றைம்பது பிரதிகள் அச்சிட்டு வெளியிட்டிருக்கிறார். இந்த டீக்கடை இலக்கியம் அவரது கனவுகளில் ஒன்று

ஷுக்கூர் இக்காவின் வீட்டுக்குச் சென்று நெய்ச்சோறும் சிக்கனும் சாப்பிட்டோம். அவரது மனைவியும் திருமணமான மகளும் வீட்டில் இருந்தனர். அவர்களின் சமையல் வடக்குமலபாருக்கே உரிய மிதமான காரமுள்ள சுவைகொண்டது. அருகே உள்ள வளைபட்டணம் ஆற்றங்கரைக்குச் சென்று பகவதியின் காவலாளிகளாக கருதப்படும் மிகப்பெரிய மீன்கள் நிறைந்த நீர்ப்பெருக்கைப் பார்த்தோம்

 

 

1

இரண்டரை மணிக்குக் கூட்டம். வழக்கமாக முப்பதுபேர்தான் வருவார்கள். ஆனால் இக்கூட்டம் பற்றி மாத்ருபூமி, மலையாளமனோரமா நாளிதழ்கள் பெரிய அளவில் செய்திவெளியிட்டிருந்தமையால் நூறுபேர் வந்திருந்தனர். உட்கார இடமில்லாமல் பாதிப்பேர் சாலையில் அமர்ந்திருக்கநேரிட்டது.

மாவட்டம் முழுதிலிருமிருந்து கவிஞர்கள் , எழுத்தாளர்கள், விமர்சகர்கள் கலந்துகொண்டனர். நால்வர் நூலைப்பற்றிப் பேசியபின் நான் கேள்விகளுக்குப் பதிலளித்தேன். அத்தனைபேரும் நாவலை வாசித்திருந்தனர். சமானமான பிறநாவல்களுடன் ஒப்பிட்டும் பேசினர். உற்சாகமான உரையாடல். கூரிய மதிப்பீடுகள்.

 

மாலை ஆறுமணிக்கு சந்திப்பு முடிந்தபின்னரும் நின்றபடியே பேசிக்கொண்டிருந்தோம். கொஞ்சம் நக்கலும் கிண்டலும் இல்லாமல் கேரளத்தில் இலக்கியக்கூட்டங்கள் முடிவடைவதில்லை. நவீன இலக்கியத்தை நாங்கள் டீக்கடைகளில்தான் பேசிப்பேசி உருவாக்கினோம் என்றேன். முன்பு கேரளத்தில் கம்யூனிசமும் டீக்கடைகளில் உருவானதுதான் என்றார் தாஹா மாடாயி என்னும் விமர்சகர்

கிருஷ்ணனும் நண்பர்களும் கோவை சென்றனர். நான் ஏழு மணிக்கு விடைபெற்றுக் கிளம்பினேன். ஷுக்கூர் இக்கா என் கைகளைப்பற்றி “முதல்கூட்டம் கன்னட எழுத்தாளர் சிவராம காரந்தின் சோமனதுடி பற்றி. அந்த வேகம் உள்ள நாவல் இது… எனக்கு மிகவும் பெருமை” என்றார். நான் சம்பிரதாயமாக ஏதும் சொல்லவிரும்பவில்லை. “இக்கா, மறுபடியும் சந்திப்போம்” என்று மட்டும் சொன்னேன்.

மாத்ருபூமி நாளிதழ் இந்த நிகழ்ச்சிக்காக தங்கள் நிருபரையும் புகைப்படக்காரரையும் அனுப்பியிருந்தது. அவர்களின் காரிலேயே நான் கோழிக்கோடு கிளம்பினேன். அங்கிருந்து எர்ணாகுளம் வழியாக நாகர்கோயில். கீதை சொற்பொழிவுக்காக ஐந்தாம்தேதி ஊரைவிட்டுக் கிளம்பி கிட்டத்தட்ட பத்துநாட்களுக்குப்பின் மீண்டும் வீடு.

 

 

முந்தைய கட்டுரைவிழா 2015 கடிதங்கள் -8
அடுத்த கட்டுரைகோவை சங்கரர் உரை ஒலிப்பதிவு