நவீன இலக்கியம்- கடிதங்கள்

அன்புள்ள திரு ஜெயமோகன் அவர்களுக்கு,

தாங்கள் தளத்தில் சமீபத்தில் வெளியான இரண்டு கட்டுரைகளுக்கு எதிர்வினையாகவே இந்தக் கடிதம்.

முதலில் நவீன இலக்கியம் வாசிக்கும் முறை பற்றி நீங்கள் அழகாக விவரித்திருந்தது கண்களைத் திறப்பதாக இருந்தது. என் குறுகிய வாசிப்பு அனுபவத்தில் கவிதையைப் புரிந்து கொள்வது என்பது வாசித்த உடன் அது தரும் கவிதை அனுபவத்தைச் சார்ந்து இருக்கிறது என்று ஒரு அளவு கோல் வைத்திருந்தேன்.
கல்யாண்ஜி, தேவ தேவன், தேவ தச்சன், ஞானக்கூத்தன் போனதோர் கவிதைகள் எளிமையாகவே புரிகின்றன. இருப்பினும் பல நவீன கவிதைகள் முதல் வாசிப்பில் மட்டுமல்லாமல், ஆழ்ந்து வாசித்த போதும் பிடிபடுவதில்லை. அவற்றைப் புரிந்து கொள்ளும் அளவுக்கு மனம் இன்னும் நுண்மையாகவில்லை என்று அறிந்து கொள்கிறேன். இருப்பினும் இன்று எழுதப்படும் ஆயிரக்கணக்கான கவிதைகள் வேண்டுமென்றே மர்மமானதும் குறியீட்டுத் தன்மை கொண்டதுமான மொழியில் பூடகமாக எழுதப்படுவதைப் போல் தோன்றுகிறது. அவற்றை வாசிக்கப் புகுந்தால் நம்மைத் தவறான வழியில் அவை இட்டுச் சென்று விடுமோ என்று ஐயமாக இருக்கிறது. எனக்கு பழந்தமிழ் இலக்கியப் பயிற்சி இல்லை. ஆனால் குறைந்த பட்சம் எதைப் படிக்கவேண்டும் என்ற அறிவு இருக்கிறது. புதுக்கவிதையில் அந்த வழிகாட்டுதல் மிகக் குறைவு. நாவல்களுக்கும், சிறுகதைத் தொகுப்புகளுக்கும் வரும் நலம் பாராட்டல் கட்டுரைகள் அளவுக்கு கவிதைக்கு வருவதில்லை. வந்தாலும் அவை மூலக்கவிதைகளை விட சிரமமான மொழியில் இருக்கின்றன. ஒரு நல்ல கவிதை ஒவ்வொருவருக்கும் ஒருவித அனுபவத்தைக் கொடுக்கும் என்றாலும்
கவிதையில் உயர்ந்த புரிதல் கொண்ட ஒருவர் அதை எளிமையாக விளக்கும்போது மிகுந்த உதவியாக இருக்கும். முன்பெல்லாம் மு.மேத்தா, அப்துல் ரகுமான் கவிதைகளுக்கெல்லாம் நலம் பாராட்டல் வந்து கொண்டிருந்தன. பிரமிள், நகுலன், ஆத்மாநாம், போன்றோருக்கும் நலம் பாராட்டல் எளிய வடிவில் இருந்தால் நன்றாக இருக்கும்.
அடுத்து கீதையும் யோகமும் என்ற கட்டுரை படித்ததும் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தேன்.அது பற்றித் தனியாக மின்னஞ்சல் அனுப்ப விரும்புகிறேன்.

ஜெகதீஷ் குமார்
மாலத்தீவுகள்

அன்புள்ள ஜெகதீஷ் குமார்

நான் பேசுவது கவிதைகளைப் பற்றி. கவிதைகளைப்போல செய்யப்படும் செயற்கையான புதிர்மொழிகளை ஒன்றும்செய்ய முடியாது. சில சமயம் சில கவிஞர்களின் மொழி மற்றும் அந்தரங்க படிமங்கள் நம்முடன் உரையாடுவதில்லை. ஆரம்பகாலத்து பிரமிள் கவிதைகள் அப்படிப்பட்டவை. ஆனால் நீடித்த வாசிப்பு மற்றும் விவாதம் உதவும் என்பது என் கவனிப்பில் உறுதியாகி உள்ளது. மிகமிக அபூர்வமாக ஒரு மகத்தான கவிதை புரியாமலே போகலாம்- ஒன்றுமே செய்யமுடியாது

முற்றிலும் புரிவதும் முற்றிலும் புரியாததும் நல்ல கவிதை அல்ல என்று சுந்தர ராமசாமி சொல்வதுண்டு

ஜெ

இலக்கிய வாசகர்கள் படித்து, சிந்திக்கவேண்டிய சிறந்த கட்டுரை, ஜெ.

வாழ்க்கையின் எல்லா அம்சங்களிலும், இலக்கிய ஆக்கத்தில் இலக்கிய வாசிப்பில் கூட “சமன்வயம்” என்பதே உங்கள் பார்வையாக இருப்பதைக் காணமுடிகிறது. வேதாந்தமும், காந்தியும், கீதையும் அளித்த தத்துவப் பின்னணி இதற்குக் காரணமோ?

ஆனால் உங்கள் சமன்வய நோக்கு பொத்தாம் பொதுவாக மொத்தையாக உள்ளதல்ல, கறாரான மதிப்பீடுகளின் அடிப்படையில் அமைந்தது என்று புரிந்து கொள்கிறேன். மரபுக் கவிதைகளைக் கூட ஒரு சராசரி வழிபாட்டுணர்வோடு ஏற்றுக் கொள்ளாமல் அவற்றின் தனித்தன்மையை, சிறப்பியல்பியல்களை உணர்ந்து ரசிக்க வேண்டும் என்பதே உங்கள் பார்வையாக உள்ளது. இன்றைய தமிழ் இலக்கிய வாசகனுக்கு ஒரு ஆசானாகவே நின்று நீங்கள் இந்த விஷயங்களைக் கற்பித்து வருகிறீர்கள்.

கம்பனையும், சங்கப் பாடல்களையும், திருமூலரையும், நம்மாழ்வாரையும் இன்றைய நவீன இலக்கிய வாசிப்புப் பயிற்சியுடன் இணைத்து கற்கும்போது எல்லைகள் விரிவதை என் சொந்த வாசிப்பு அனுபவத்திலேயே காண்கிறேன்.

அன்புடன்,
ஜடாயு

அன்புள்ள ஜடாயு

ஆம் அதுவே என் வழி- மத்திம மார்க்கம். அந்த நோக்கில் மரபுக்கும் நவீனத்துக்கும் பழமைக்கும் புதுமைக்குமான ஒர் எல்லைக்கோட்டில் அடக்கவே நான் விரும்புகிறேன். ஆகவேதான் முரணியக்கத்தை எப்போதுமே முன்னிறுத்துகிறேன்

நன்றி

ஜெ

இலக்கியமும் நவீன இலக்கியமும் ….
ஆறு , ஊற்று நீரின் வடிகால் மட்டுமல்ல . மழை நீருக்கும் அது வடிகால் .மழை நீரின்றி ஊற்று நீருக்கு வளமில்லை .பல ஆண்டுகளாக மழை இல்லை என்றால் ஊற்றே சிறுத்துவிடும் . வெள்ளபெருக்கு ஊற்று நீரால் ஏற்படாது .மலைநீரால்தான் ஏற்படும் .சுயாக்கங்களும் ,பிறராக்கங்களும் ஒவோவ்மொழிக்கும் தேவை . ஒப்பீட்டுக்கும் மறுமலர்ச்சிக்கும் பிற மொழி ஆக்கங்கள் அவசியம். அதை கட்டுரை நன்கு விளக்கியது .குறிப்பாக – பிரசாதமும் (ஆத்ம திருப்தி ), பலசாதமும்(உடல் ஆரோக்கியம்) வேண்டும் .நல்லது !

பாலுச்சாமி

அன்புள்ள பாலுச்சாமி

நமக்கு ஒரு மிரட்சியை கொடுக்காத புது விஷயம் ஏதும் இல்லை. அதை குறைத்து குறுக்கி இவ்வாறுதான் என்று பார்ப்பது ஒரு தொடக்கம். விரிவாக்கம் அதன்மேல் நிகழ்ந்துகொண்டே செல்லலாம்

அதுவே என் அணுகுமுறை

ஜெ

முந்தைய கட்டுரைஇலக்கியத்தின் பயன் சார்ந்து…
அடுத்த கட்டுரைமரபை அறிதல், இரு பிழையான முன்மாதிரிகள்