ராஜாஜியின் பொருளியல்கொள்கைகள்

C_Rajagopalachari_Feb_17_2011

 

 

மபொசி,காமராஜ், ராஜாஜி..

ராஜாஜி பிரதமராகியிருக்கலாமா?

ஜெ
நேரு- ராஜாஜி விவாதத்திற்கு நன்றி. நான் கேட்டதில் இன்னொரு பகுதி மிச்சமிருக்கிறது. ராஜாஜியின் பொருளியல் குறுகியது என்கிறீர்கள். நான் அதை ஒத்துக்கொள்ளமாட்டேன். நீங்கள் உங்கள் தரப்பைச் சொல்லலாம் என நினைக்கிறேன்

சாமிநாதன்

அன்புள்ள சாமிநாதன்,

ராஜாஜியின் சுதந்திரவாதப் பொருளியலை நோக்கி நாம் எழுபதுகளிலேயே சென்றிருந்தால் முன்னரே வறுமையொழிப்பு நிகழ்ந்திருக்கும் என்று வாதிடக்கூடிய தரப்பு இன்றுஓரளவு வலுவாக உருவாகியுள்ளது. நரசிம்மராவ் காலகட்டத்தில் தொடங்கிய தாராளமயமாதலால் இந்தியாவில்  வேலையில்லாமையும் பட்டினியும் குறைந்திருப்பது கண்கூடான உண்மையாக தெரியும்போது அக்குரல் மேலும் ஓங்குகிறது.

ஆனால் இவர்கள் சொல்வதுபோல எழுபதுகளிலேயே இந்தியப்பொருளியல் தாராளமயப்படுத்தப்பட்டிருக்கவேண்டுமா என்று கேட்டால் எனக்கு ஐயமாகவே இருக்கிறது. நான் பொருளியல் அறிந்தவன் அல்ல. ஆனால் தொழிற்சங்கம் வழியாக ஓர் அடிமட்ட யதார்த்தத்தை தொடர்ந்து பார்க்கும், விவாதிக்கும் வாய்ப்பு பெற்றவன். என் புரிதல் எண்பதுகளுக்கு முன்னர் ராஜாஜி முன்வைத்த தாராளமயமாதல் நிகழ்ந்திருந்தால் இந்தியா பெரும் இழப்புகளைச் சந்தித்திருக்கும் என்றுதான்

 

அதற்கான காரணங்களை இப்படி வரிசைப்படுத்துவேன்.

 

3

 

 

அ. இந்தியப்பொதுத்துறை அன்று வளரும் நிலையிலேயே இருந்தது. அதன் முதிர்வும் தேக்கநிலையும் எண்பதுகளின் இறுதியிலேயே உருவாயின. இந்தியாவில் அன்று பெருமுதலீடு என்பது பொதுமக்களிடமிருந்து திரண்டுவர வாய்ப்பிருக்கவில்லை. ஆகவே அரசே நிதிதிரட்டி உருவாக்கும் பொதுத்துறைகளன்றி வேறுவழியிருக்கவில்லை.

 

இந்தியப்பொதுத்துறையே இந்தியாவின் அனைத்துத் தொழில்வெளிகளிலும் அடித்தளத்தைக் கட்டி எழுப்பியது. பின்னாளில் உருவான அனைத்து தனியார் தொழில்களும் இந்தியப்பொதுத்துறைமேல் ஊன்றி எழுந்தவைதான்.தொழில்துறைக்கு அவசியமான அடிப்படைக்கட்டுமானங்களை இந்தியப்பொதுத்துறை உருவாக்கியபோது அது லாபகரமான தொழிலாக இருந்திருக்கமுடியாது. அரசுநிதி அதற்குச் செலவிடப்பட்டது அதற்காகவே

.இன்றும் இந்தியாவின் பொதுத்துறைதான் தனியார்த்துறையின் அடிக்கட்டுமானமாகவும், மக்கள்நலம்நாடும் பேரமைமைப்பாளாகவும் நிலைகொள்கிறது. பொதுத்துறை இல்லையேல் இன்று இந்தியாவில் சாலைப்போக்குவரத்து போன்ற துறைகள் என்னாகும் என சிந்தித்தால் அதன் முக்கியத்துவம் புரியும். தனியார்த்துறைக்கு மிகப்பெரிய போட்டியாகவும், ஆகவே தார்மீகமான கட்டாயங்களை அளிப்பதாகவும் பொதுத்துறை விளங்குகிறது.

பொதுத்துறை உருவாகிவந்த ஆரம்பகட்டத்தில் இங்கே தாராளமயம் அனுமதிக்கப்பட்டிருந்தால் எங்கு எதிர்காலத்திற்குத் தேவையோ அங்கு முதலீடு நடந்திருக்காது. போக்குவரத்து, செய்தித்தொடர்பு , அடிப்படைக்கட்டுமானம் போன்ற துறைகள் உதாசீனம் செய்யப்பட்டிருக்கும். எங்கு லாபம் இருந்ததோ அங்குமட்டும் முதலீடு சென்று சேர்ந்திருக்கும். பல ஆப்ரிக்க நாடுகளில் இன்றுகூட பொதுப்போக்குவரத்து உருவாகவே இல்லை என்பதைக் கவனிக்கலாம்.

 

அச்சூழலில் பொதுத்துறையுடன் தனியார்த்துறை போட்டியிட்டிருந்தால் லாபமுள்ள பகுதிகளை தனியார்த்துறையும் அரசு தன் கடமையை ஆற்றவேண்டிய நஷ்டம் வரும் பகுதிகளை பொதுத்துறையும் கையாளநேர்ந்திருக்கும். இந்தியப்பொதுத்துறையின் ஆரம்பகால நஷ்டம் என்பது உண்மையில் தேசவளர்ச்சிக்கான முதலீடுதான். அன்றே தனியார்த்துறை வந்திருந்தால் வேலிகட்டாத மரக்கன்றுகளின் நிலைக்கு நம் பொதுத்துறை ஆளாகியிருக்கும்.

 

பொத்துறை முளையிலேயே அழிந்திருந்தால் நம் பொருளியலின் அடித்தளம் அன்னியநிறுவனங்களால் அமைக்கப்பட்டிருக்கும். இந்தோனேசியாவின் கதி நமக்கு வந்திருக்கும். இக்கட்டான நிலைகளில் அந்நிறுவனங்கள் மொத்தமூலதனத்தையும் வெளியே எடுத்துவிட்டிருக்கும். அவை பெரும் சூழியல் அழிவுகளை, சுரண்டலை உருவாக்கும்போதுகூட அரசு ஒன்றுமே செய்யமுடியாத நிலை வந்திருக்கும்

இ. பொதுத்துறையே கட்டற்ற தனியார்த்துறைக்கு மாற்றுச்சக்தியாக இன்று நிலைகொள்கிறது. இன்று தாராளமயமாக்கம் நிகழும்போதுகூட அவசியமான தளங்களில் மட்டும் பொதுத்துறையை தக்கவைத்தபடி மிகக்கவனமாகவே தனியாரை அனுமதிக்கவேண்டும். எனேன்றால் இந்தியா வளர்ந்த நாடு அல்ல. நுகர்வோர், தொழிலாளர், மக்களின் நலன்களைக் காக்கும் மக்களமைப்புகள் இங்கே வலுவானவையாக இல்லை. தனியார்த்துறை கட்டற்றுச்செயல்பட அனுமதித்தால் கல்வியறிவற்ற ஒருங்கிணைக்கப்படாத நம் உழைப்பாளர் சுரண்டப்படுவார்கள். நுகர்வோர் ஏமாற்றப்படுவார்கள்.

. இந்தியாவின் தொழிலாளர்களில் தொண்ணூறு சதவீதத்தினரும் கல்வியும் நவீனப்பயிற்சியும் அற்ற உடலுழைப்புத்தொழிலாளர்களாக எண்பதுகள் வரை இருந்தனர். படித்த இளையதலைமுறையினரின் பெருக்கமே நாம் தாராளவாதப்பொருளியலில் சில வெற்றிகளை ஈட்ட முடிந்திருக்கிறது. அந்த கல்வி –தொழில்நுட்ப வளர்ச்சி நிகழ்வதற்கு முன்னரே இங்கே தாராளமயம் நிகழ்ந்திருந்தால் தொழில்துறையில் கடும் சுரண்டல்தான் உருவாகியிருக்கும்.

ராஜாஜியின் சுதந்திரப்பொருளியல் திட்டம் என்பது ஒரு வலுவான எதிர்தரப்பாக நின்று அன்றைய சோஷலிசக்கனவுகளின் நடைமுறைப் போதாமைகளைச் சுட்டிக்காட்டியது என்றவகையில் முக்கியமானது. அதன் இடம் அவ்வளவுதான். முந்திச் சொன்னார்  மூதறிஞர் என்றவகையான கூற்றுகளுக்கெல்லாம் பெரிய முக்கியத்துவம் இல்லை

 

ஜெ

ராஜாஜி பிரதமராகியிருக்கலாமா

நேருவின் பொருளியல் குறித்து அரவிந்தன் கண்ணையன்

நேருவின் பொருளியல்

 

ராஜாஜி, ஈவேரா-கடிதங்கள்

குலக்கல்வி,கலைகள்-கடிதம்

ராஜாஜி,மபொசி_ கடிதங்கள்

முந்தைய கட்டுரை‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 6
அடுத்த கட்டுரைஆ. மாதவனுக்கு சாகித்ய அகாடமி விருது