ராஜாஜி பிரதமராகியிருக்கலாமா?

 

ஜெ
அரவிந்தன் கண்ணையனின் அற்புதமான கட்டுரையை அறிமுகம் செய்துவைத்தமைக்கு நன்றி. அதில் ஒரு பின்னூட்டம் இப்படிச் சொல்கிறது.

ராஜாஜிக்குப் பிரதமராகித் தன் கொள்கைகளைச் செயல்படுத்தும் வாய்ப்பு கிடைக்கவில்லை. அப்படிக் கிடைத்திருந்து சுதந்திரப் பொருளாதாரத்தை அவர் நடைமுறைப்படுத்தியிருந்தால் ஒருவேளை இதைவிட வேகமாகவும் அதிகமாகவும் வறுமை ஒழிக்கப்பட்டிருக்கலாம்

இதைப்பற்றி நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?

சாமிநாதன்

 

அன்புள்ள சாமிநாதன்,

குறுகிய பதில்கள் எப்போதும் தவறான சித்திரங்களை உருவாக்கி பிழையான விவாதங்களுக்குள் கொண்டுசெல்கின்றன. ஆகவே நான் விரிவாகவே பதிலுரைப்பது வழக்கம். இப்போது அதற்கு நேரமில்லை. ஆகவே முன்னர் நான் சொன்னவற்றை மட்டும் நினைவுறுத்திவிட்டு மேலே சொல்கிறேன்

ராஜாஜியைப்பற்றி இங்குள்ள முற்போக்காளர், அரைவேக்காட்டுத் திராவிடக்கருத்தியலாளர்கள் சொல்லும் அவதூறுகளை மிகக்கடுமையாக கண்டித்திருக்கிறேன். அவரது நேர்மை, செயல்திறன், நடைமுறை நோக்கு ஆகியவை மாமனிதர்களுக்குரியவை.

அவர் குலக்கல்வியை கொண்டுவந்தார், சாதியநோக்குடன் செயல்பட்டார் போன்றவை அற்பமான அவதூறுகள் மட்டுமே. குலக்கல்வி என இல்லாத ஒன்றை கண்டுபிடித்து முன்வைத்து அவரது மகத்தான தியாகத்தையும் சமூகசேவைப்பின்னணியையும் அவமதித்தனர் இழிந்த அரசியல்வாதிகள்.

ராஜாஜியின் பொருளியல்கொள்கைகள் குறுகலானவை என்றே நான் நினைக்கிறேன். அவை பொருளியலின் அடித்தளமாக இருக்கவேண்டிய ‘நலம்நாடல்’ என்னும் அம்சத்துக்கு அழுத்தம் அளிக்காதவை. அந்தக்காலகட்டத்திற்கு அவை பொருந்துவன அல்ல. ஆயினும் பொருளியல்விவாதங்களில் வலுவான ஒரு தரப்பு அது. அவரது பல உள்ளுணர்வுகள் மதிக்கத்தக்கவை.

ஆயினும் ராஜாஜி இந்தியப்பிரதமராக ஆகியிருக்கக் கூடாது என நான் எண்ணுகிறேன். ஏன்?

1. அவர் மக்கள்த் தலைவர் அல்ல. இந்தியச் சுதந்திரப்போராட்டத்தின் வழியாக உருவாகி வந்தவர் என்றாலும் அவர் ஒருபோதும் மக்களைத் தலைமைதாங்கி நடத்துபவரவாகவோ அவர்களிடம் நேரடியாக உரையாடுபவராகவோ இருந்ததில்லை. அவர் தேர்தல்களில் வெல்வதே அரிதாக இருந்தது. ஆர்.வெங்கட்ராமன் போல, சி.சுப்ரமணியம்போல அவர் ஒரு அரசியல்-பொருளியல் நிபுணர் மட்டுமே.அத்தகையோர் பிரதமராகக் கூடாது. பிரதமர் என்பது ஒரு நிர்வாகப்பதவி அல்ல. அது ஒரு குறியீடும்கூட. அவர் மக்கள்த் தலைவராக இருக்கையில் மட்டுமே தேசத்துடன் உரையாடமுடியும். உணர்வூட்டவும் வழிநடத்தவும் முடியும்.

2. ராஜாஜிக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இருக்கவில்லை. தனிமனிதர் என்றவகையில் அவர் நேர்மையானவர். விமர்சனங்களை ஏற்பவர். ஆனால் நவீின ஜனநாயகத்தின் அமைப்புகள் மேல் அவர் மதிப்புடன் இருக்கவில்லை. குறுக்குவழிகள், அரசியல்சூழ்ச்சிகள் ஆகியவற்றை அவர் நம்பினார். தயக்கமில்லாமல் அவற்றில் ஈடுபட்டார். அவரது நோக்கம் என்னவாக இருந்தாலும் தேசப்பிரதமர் என்றவகையில் அது மிகமிகத் தவறான முன்னுதாரணம்

3. ராஜாஜிக்கு மக்களுக்கு நலம்புரியும் அரசை அமைப்பதிலும் முன்னேற்றங்களைக் கொண்டுவருவதிலும் உண்மையான ஈடுபாடு இருந்தது.ஆனால் அதை ஒரு சர்வாதிகாரப்போக்கிலேயே நிகழ்த்த முற்பட்டார். ஆனால் நல்ல ஆட்சியாளன் என்பவன் மக்களின் பல்வேறு அதிகாரசக்திகள், சமூகவிழைவுகள் நடுவே ஒருவகை சமரசத்தை உருவாக்கிக்கொண்டே இருப்பவனாக இருக்கவேண்டும். அந்தச் சமரசப்புள்ளியே அரசு என்பது. ராஜாஜியின் மூர்க்கமான அதிகாரநிலைப்பாடு முரண்பாடுகளையும் கொந்தளிப்புகளையும்தான் உருவாக்கியது. பிரதமராக அவரது பிடிவாதம் அழிவை கொண்டுவந்திருக்கும்

4. ராஜாஜி ஓர் ஆட்சியாளர், நடைமுறைப்புத்திக்கூர்மை மிக்கவர். ஆனால் கனவுகளை உருவாக்குபவர் அல்ல. சொல்வலன் அல்ல. ஆகவே அவரால் தேசத்தை வழிநடத்த முடியாது. தேசத்தின் ஒட்டுமொத்த இலட்சியவாதத்தை தொட்டு எழுப்பியிருக்க முடியாது. தேசத்தின் இக்கட்டான நிலைகளில் மக்களை ஒருங்கிணைக்கமுடியாது. அவர் இலட்சியவாதியான தலைவர் தலைமையின்கீழே பணிபுரிகையில் மட்டுமே சிறப்பாகச் செயல்படுபவர்.

5. அனைத்துக்கும் மேலாக தன்னை ஆட்சியாளராக மட்டுமே உணர்ந்த ராஜாஜிக்கு ஓர் ஆட்சியாளனுக்கு இருந்தாகவேண்டிய பெருங்கருணை இருக்கவில்லை. அத்தகைய ஆட்சியாளர்கள் வலுவான அமைப்புகளை உருவாக்கி ஆளமுடியும், ஆனால் நீண்டகால அடிப்படையில் அழிவுகளையே உருவாக்குவார்கள்.

கடைசியாக ஒன்று, ராஜாஜியை வெறுப்பவர்கள் அவரை வெறும் சாதியநோக்கிலேயே பார்க்கிறார்கள். அவரது சாதனைகளையும் தியாகங்களையும் பார்ப்பதில்லை. ஆனால் அவரை மிகையாகத் தூக்கிவைப்பவர்களும் சாதியநோக்கிலேயே அதைச்செய்கிறார்கள். முந்தையது ஒருவகையில் இயல்பானது. பிந்தையது ராஜாஜியை இழிவுசெய்யும் நோக்கு

 

ஜெ

 

நேருவின் பொருளியல்

முந்தைய கட்டுரை‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 5
அடுத்த கட்டுரை‘வெண்முரசு’ – நூல் ஒன்பது – ‘வெய்யோன்’