நேருவின் பொருளியல்கொள்கை பற்றி…

3

 

இந்திய ஜனநாயகத்திற்கும் ஒரு நவீனப்பொருளியலாக இத்தேசம் எழுந்து வந்தமைக்கும் நேருவின் பங்களிப்பு எத்தனை பெரியது என்று இந்தியர்கள் அனைவரும் உணர்ந்தே ஆகவேண்டிய கட்டாயத்தை இங்குள்ள அடிப்படைவாதிகள் உருவாக்கிக்கொண்டிருக்கும் காலம் இது. அரவிந்தன் கண்ணையனின் இந்த நீளமான கட்டுரை பலகோணங்களில் நேருவின் முன்னோடிப் பங்களிப்பை அலசுகிறது.

 

இருவகையில் நேருவின் பங்களிப்பை மதிப்பிடவேண்டுமென இக்கட்டுரை சொல்கிறது. ஒன்று நேரு என்பவர் ஒரு தனிமனிதர் அல்ல., அவர் ஒரு காலகட்டத்தின் முகம், ஒரு கருத்தியலின் மையம். இந்தியா நவீன ஜனநாயக யுகம் நோக்கி எழுந்த காலகட்டம் அது. அன்றைய சுதந்திரவாத மதிப்பீடுகளின் முகம். அவ்விழுமியங்களை இலட்சியவாதமாக ஏற்றுக்கொண்ட ஒரு பெரும்கூட்டம் அவரைசூழ்ந்து  இருந்தது. அந்தமுன்னோடிகளின் சாதனையே நேருவின் சாதனைகள் என்கிறோம். நேருயுகத்தின் சாதனைகள் என்று அவற்றைச் சொல்வதே சரியானது

 

இன்னொன்று நேரு யுகத்தின் சவால்களையும் முன்னுரிமைகளையும் அவரது காலகட்டத்தைப்புரிந்துகொண்டு மதிப்பிடவேண்டும் என இக்கட்டுரை வாதிடுகிறது. நான்குபக்கமும் சூழ்ந்த பட்டினியுடன் போரிடுவது, மதத்தாலும் மொழியாலும் பிரிந்து போரிட்டு சமூகஒருங்கமைவே குலைந்து சீர்கெட்டிருந்த இந்தியச்சமூகத்தை  உணர்வுரீதியாக ஒருங்கிணைப்பது, உருவாகிவந்த புதியதேசத்தின் அடிப்படைக் கட்டுமானங்களை உருவாக்குவது ஆகியவை நேருவின் சவால்கள். அவர் அவற்றை எப்படி எதிர்கொண்டார் என்று நோக்கத்தெரிந்தவனே வரலாற்றை சற்றேனும் புரிந்துகொண்டவன்

 

நேரு ஒருசெயல்வீரர் அல்ல. ஒரு நடைமுறைவாதி அல்ல. கனவுஜீவி. கனவுஜீவிகளுக்குரிய அனைத்துக் குழப்பங்களும் பலவீனங்களும் கொண்டவர். ஆனால் தன்னைச்சூழ்ந்திருந்த அனைவரிடமும் அக்கனவை உருவாக்க அவரால் முடிந்தது. உலகப்போருக்கும் மதக்கலவரங்களுக்கும் சர்வதேசப்பொருளியல் இறுக்கநிலைக்கும் எதிர்வினையாக உருவாகிவந்த அச்சமும் நிராசையும் நிறைந்திருந்த சூழலில் நம்பிக்கையையும் ஊக்கத்தையும் அவரால் பற்றவைக்க  முடிந்தது.

 

பிறருக்கும் கனவுகளை அளிப்பவர்கள் சாமானியர்கள் அல்ல, யுகபுருஷர்கள். நேருவைச் சூழ்ந்து அன்று உருவாகி வந்த பொறியாளர்கள், அறிவியலாளர்கள், அறிஞர்கள், இதழாளார்களின் ஒருபட்டியலே அவர் யார் என்று காட்டும்.

 

நேரு யுகத்தின் முடிவில் எழுந்த அவநம்பிக்கையின் கசப்பே இன்று நம் நாட்டைச் சூழ்ந்திருக்கிறது. இன்று நாம் கடக்கவேண்டிய முதல்பெரும் தடைச்சுவரே இதுதான்.சகமானுட வெறுப்பும். அனைத்துக்கும் எதிரிகளைக் கண்டடைந்து குற்றம்சாட்டி கடந்துபோகும் பொறுப்பின்மையும் ,செயலுக்குப்பதில் வாய்ச்சவடால்களும் நிறைந்துள்ள இன்றைய சூழலில் மறைந்த தந்தையை குற்றவுணர்ச்சியுடன் நினைத்துக்கொள்ளும் வேகத்துடன் நாம் நேருவுக்குத் திரும்பிக்கொண்டிருக்கிறோம்

 

மறைந்த ராஜம் கிருஷ்ணன் அவர்களின் கணவர் திரு கிருஷ்ணன் அவர்களை இத்தருணத்தில் நினைவுகூர்கிறேன். அவரை நான் இருமுறை சந்தித்திருக்கிறேன். நேரு யுகத்தின் இலட்சியவாதத்திற்கும் செயலூக்கத்திற்கும் வாழும் உதாரணம் அவர் என அன்று தோன்றியது. ஒரு உயர்நிலைப்பொறியாளர். தமிழகத்தின் பல அணைக்கட்டுகள் மற்றும் துறைமுகமேடைகளின் கட்டுமானத்தில் பெரும் பங்கு வகித்தவர். ஒரு தவம் போல அர்ப்பணிப்புடன் ,சலிப்பே இல்லாத செயல்வெறியுடன் அவர் பணியாற்றியிருக்கிறார்.  தன் பங்களிப்பை ஆற்றியபின் எந்த அங்கீகாரமும் இன்றி நிறைவின் புன்னகையுடன் ஓய்வுபெற்றார்

 

நேருகாலகட்டத்தின் பெரும்கட்டுமானங்களை இன்று எவரும் மதிப்பிடலாம். நம் தேசத்தின் விளைநிலங்களை அவை விரிவாக்கின. சாலைகளையும் கல்விக்கூடங்களையும் அமைத்தன. அந்தக்குறுகிய காலகட்டத்திற்குப்பின் சென்ற அரைநூற்றாண்டாக நடந்த தேசநிர்மாணப்பணிகளைவிட அவை ஒட்டுமொத்தமாகப் பெரியவை. பின்னர் கட்டுமானமென்பதே கமிஷனாக மாறியது இங்கே.

 

கிருஷ்ணன் நேருவால் ஊக்கம்கொண்ட அந்தமுன்னோடிகளில் ஒருவர்.”அது நேருயுகம். அப்ப எல்லாருமே மயனாகவும் விஸ்வகர்மனாகவும் இருந்தோம்” என்று அவர் மெல்லிய புன்னகையுடன் சொன்னதை நினைவுகூர்கிறேன்

 

1

 

அரவிந்தன் கண்ணையனின் இக்கட்டுரைக்கு நன்றிசொல்கிறேன்

 

நவ இந்தியாவின் முதன்மை சிற்பி: நேரு. பொருளாதாரக் கொள்கை 

முந்தைய கட்டுரை‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 4
அடுத்த கட்டுரைகம்பனும் குழந்தையும்- கடிதங்கள்