2009ல் நான் ஆஸ்திரேலியா சென்றபோது எழுத்தாளர் அருண் விஜயராணியைச் சந்தித்தேன். இலங்கையிலிருந்து புலம்பெயர்ந்து ஆஸ்திரேலியாவுக்குக் குடியேறியவர். அங்குள்ள கலையிலக்கியச் செயல்பாடுகளில் தீவிரமாக இருந்தார். அவரது மறைவை நண்பர் முருகபூபதி எனக்கு அறிவித்தார்.
அருண் விஜயராணிக்கு என் அஞ்சலி.
முருகபூபதியின் செய்தி
ஈழத்து இலக்கிய உலகில் 1970 இல் பிரவேசித்த கலை இலக்கியவாதியும் சமூகப்பணியாளருமான எழுத்தாளர் திருமதி அருண் விஜயராணி, நேற்று ஞாயிற்றுக்கிழமை 13 ஆம் திகதி மதியம் அவுஸ்திரேலியா மெல்பனில் காலமானார்.
இலங்கை வானொலியிலும் அவுஸ்திரேலியா தமிழ் வானொலிகளிலும் நிகழ்ச்சிகளை நடத்தியும் உரைகள் நிகழ்த்தியும் சிறுகதைகள் கட்டுரைகள் பத்தி எழுத்துக்கள் எழுதியும் தமிழ் கலை இலக்கியப்பங்களிப்பு நல்கியவரான அருண்.விஜயராணி அவுஸ்திரேலியாவில் தமிழர் ஒன்றியம் – தமிழ் இலக்கிய கலைச்சங்கம் மற்றும் இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் பெரும் பங்கினையாற்றியவர்.
தமிழர் ஒன்றியத்தில் கலாசார செயலாளராகவும் அந்த அமைப்பின் வெளியீடான அவுஸ்திரேலியா முரசுவின் ஆசிரியராகவும் இயங்கியவர். பின்னாளில் தமிழ் இலக்கிய கலைச்சங்கம் – இலங்கை மாணவர் கல்வி நிதியம் ஆகியனவற்றில் தலைவராகவும் பணியாற்றியவர்.
இவருடைய கன்னிகா தானங்கள் என்ற சிறுகதைத்தொகுப்பு 1991 ஆம் ஆண்டு சென்னை தமிழ்ப்புத்தகாலயத்தினால் வெளியிடப்பட்டது.
அருண் விஜயராணிக்கு அஞ்சலி