மலேசியாவில் இருந்து திரும்பினேன்

ஒன்பதாம் தேதி சுங்கைப்பட்டாணி எழுத்தாளர் சங்கத்தில் ஒரு நிகழ்ச்சி. சங்கத்தினர் ஓர் எழுத்தாளராக என்னை அறிந்திருக்கவில்லை. ஆகவே நானே என்னை விரிவாக அறிமுகம் செய்துகோண்டேன். நவீன இலக்கியத்தின் தோற்றம், இயல்பு ஆகியவற்றைப் பற்றிப் பேசினேன். மரபிலக்கியம் மற்றும் பின் நவீனத்துவம் குறித்து பல வினாக்கள் எழுந்தன. அவற்றுக்குப் பதில் சொன்னேன்.

பொதுவாக சங்க அமைப்பாளர்களுக்கு மலேசிய இலக்கியம் குறித்த என்னுடைய கருத்துக்கள் மீது மனவருத்தம் இருந்தமை அவர்களின் உரையில் தெரிந்தது. மலேசிய-சுங்கைப்பட்டாணி தமிழ் இலக்கியவாதிகளின் ஒரு நீண்ட பட்டியலை வாசித்தார்கள். அது இயல்பே. அந்த உணர்வுகளுடன் உரையாட இயலாது, பயனும் இல்லை.

மலேசிய இலக்கியம் குறித்தல்ல எந்த மொழி இலக்கியம்பற்றியும் அச்சூழலின் அனைத்து ஆக்கங்களையும் வாசித்து ஒருவர் கருத்துச்சொல்ல முடியாது. அச்சூழலின் இலக்கியவெற்றிகளாக சில ஆக்கங்கள் காலப்போக்கில் அச்சூழலாலேயே முன்னிறுத்தப்படும். அவற்றை வைத்தே நாம் கருத்துக்களை உருவாக்குகிறோம்.

மலேசிய இலக்கியம் குறித்த என் மனப்பதிவுகள் அவர்களின் மிகச்சிறந்த ஆக்கங்களாகச் சொல்லப்பட்ட சிலவற்றை வாசித்ததில் இருந்து உருவானவையே. அவை தமிழகத்தின் வணிக இலக்கியவாதிகளான அகிலன்,நா.பார்த்தசாரதி ஆகியோரை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதப்பட்டவை. மலேசிய நாளிதழ்களின் ஞாயிறுமலர்களின் வாசகர்களை முன்னால்கண்டு உருவானவை. அந்த எல்லையை விட்டு அவை முன்னகரவில்லை

உலக இலக்கியம் குறித்த நோக்கும், நவீன தமிழிலக்கியத்தின் சாதனைகளை முன்னுதாரணமாகக் கொண்டு எழுதவேண்டும் என்ற முனைப்பும் கொண்ட எழுத்துக்கள் இப்போதுதான் உருவாகி வருகின்றன. வல்லினம், மௌனம், அநங்கம் போன்ர சிற்றிதழ்களை சுட்டுகிரேன். அவற்றிலும் நான் சாதனைகளை பார்க்கவில்லை, துடிப்பையே காண்கிறேன். வாய்ப்புகளை மட்டுமே காண்கிறேன்.

இத்தகைய இலக்கிய மதிப்பீடுகளை பொதுவாக தரமான இலக்கிய ஆக்கங்களை வாசித்த, அல்லது வாசிக்கச் சித்தமாக இருக்கிற வாசகர்களை உத்தேசித்தே முன்வைக்க முடியும். நாம் விமர்சிக்கும் நூல்களை எழுதியவர்களிடம் விவாதிப்பது வீண். ஆகவே நான் நவீன இலக்கியம் என்ற இயக்கத்தின் தனித்தன்மை குறித்து மட்டும் பேசினேன்.

பொதுவாகவே மலேசியாவில் வாசகர்களும் எழுத்தாளர்களும் பின்நவீனத்துவம் போன்ற சொற்களைக் கேட்டு மிரண்டு போயிருப்பது தெரிந்தது. பின் நவீனத்துவம் என்றால் கெட்ட வார்த்தை எழுதுவது என்ற குழப்பம். நான் அது பொதுபோக்கு என்றும் அதில் எத்தனை வகையான எழுத்துமுறைகள் உள்லன என்றும் விரிவாகச் சொல்ல வேண்டியிருந்தது.

பத்தாம் தேதி தியான ஆசிரமத்தில் கீதையும் யோகமும் என்ற கருத்தில் பேசினேன். ஏழுமணிமுதல் பல இலக்கிய நண்பர்கள் வந்திருந்தார்கள். இரவு பதினொரு மணிக்கு கூட்டம் முடிந்தபின்னரும் விடிகாலை மூன்று மணி வரை பேசிக்கொண்டிருந்தோம். இத்தகைய தனிப்பட்ட சந்திப்புகளில் படிபப்டியாக அந்தரங்கமான ஒரு தீவிரம் உருவாகிவிடுகிறது.

‘வல்லினம்’ ஆசிரியர் ம.நவீனும் அவரது மனைவி மணிமொழியும் ஒன்பதாம்தேதியே பினாங்கு வந்திருந்தார்கள். ஒன்பது,பத்தாம் தேதிகளில் அவர்களும் பினாங்கில் இருந்தார்கள். பதினொன்றாம் தேதி காலை ஆறு மணிக்குக் கிளம்பி அவர்களுடன் காரில் கொலாலம்பூர் வந்தேன். பன்னிரண்டாம் தேதி இரு நிகழ்ச்சிகள்.

மலேசியாவின் நெடுஞ்சாலை நான் அமெரிக்காவில் அல்லது ஆஸ்திரேலியாவில் இருக்கும் உணர்ச்சியையே அளித்துக்கொண்டிருந்தது. அதே மாதிரி வேலியிடப்பட்ட பக்கவாட்டு தோற்றம். ஆனால் இங்கே எண்ணைப்பனை வயல்கள். பச்சைராணுவம் போல அவை வந்தபடியே இருந்தன.

கோலாலம்பூரில் நவீன் ஏற்பாடு செய்திருந்த விடுதியறையில் தங்கினேன். மாலை யுவராஜ், சிவா பெரியண்ணன், மலேசியஓவியர் சந்துரு, மணிமொழி, கவிஞர் தோழி ஆகியோர் வந்திருந்தார்கள். இடைவிடாது இலக்கியம் பேசிக்கொண்டிருதோம். ஏழு மணிக்கு கிளம்பிச்சென்று ஓர் ஓட்டலில் மாலையுணவு சாப்பிட்டோம்.

அங்கே டாக்டர் சண்முக சிவா வந்தார். அன்று வினாயகர் சதுர்த்தி. எங்களை முன்னாள்கைதிகளால் நடத்தப்பட்ட ஒரு வினாயகர் சதுர்த்தி பூஜைக்குக் கொண்டுசென்றார். அந்த இடத்துக்கு சென்றது ஒரு விசித்திர அனுபவம். சென்றமுறை மலேசியா சென்றபோது மலேசியக் கிராமங்களுக்குச் சென்றோம். மலேசியா என்பது கொலாலம்பூரின் வானளாவிய கட்டிட்ங்கள் மட்டுமல்ல என்று சொன்ன அனுபவம் அது. இதுவும் அத்தகையதே

பழைய பொருட்களை வாங்கி விற்கக்கூடிய எளிய தமிழர்கள் வாழும் அடுக்குமாடிக்குடியிருப்பின் அருகே இந்த விழா நடந்தது. பிள்லையார் சதுர்த்தி விழாவுடன் அங்கே ஓர் இலவச கல்விப்பயிற்சி நிலையத்தையும் ஆரம்பித்திருந்தார்கள். விருந்தும் உண்டு என்று தோன்றியது.

இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தவர் ஒரு முன்னாள்கைதி. இப்போது மெய்க்காவலராக பணியாற்றுகிறார். தமிழ்ப்படங்களின் வில்லன் போல உடையணிந்திருந்தார். மொட்டை, தாடி, கறுப்புக்கண்ணாடி, அடர்நீல ஜிகினாச்சட்டை, பல்வேறு சங்கிலிகள், கம்மல்…ஆனால் மிகப்பணிவாகப் பேசினார். அதி தீவிர ரஜினி ரசிகர்.

அந்த கைதிகளைப் பொருத்தவரை அவர்கள் தங்கள் அடையாளங்களை விட்டு மேலெழ இந்த வகையான சேவைகள் உதவுகின்றன என்றார்கள். அத்துடன் இந்த மக்களுக்கு அவை அவசியமாகவும் தேவைப்படுகின்றன. மிகத்தரமற்ற கல்வியே இவர்களுக்கு கிடைக்கிறது. அத்துடன் இவர்கள் கல்விகற்பதற்கான குடும்பச்சூழலும் வாழ்க்கைச்சூழலும் அங்கே இல்லை.

நான் புரிந்துகொண்டவரை கிட்டத்தட்ட அமெரிக்காவில் கறுப்பர்கள் போலத்தான் இவர்களின் வாழ்க்கையும். வருமானம் குறைவான நிலையற்ற தொழில். பெற்றோருடைய குடிப்பழக்கம். ஆகவே வறுமை. நகர்ப்புற வறுமை சீக்கிரமாகவே குற்றங்களுக்கு கொண்டுசெல்கிறது. குற்றச்சூழலில் குழந்தைகள் மிக எளிதாக அதை நோக்கி ஈர்க்கப்படுகிறாகள்.

அவர்களை பயன்படுத்தி ஒரு அமைப்பு வலுவாக உருவாகிவிடுகிறதுகல்வியின்மை குற்றத்தை நோக்கியும் குற்றம் கல்வியின்மையைநோக்கியும் தள்ளுகிறது. குற்றமுத்திரை குத்தி மக்களை ஒடுக்கும்போது அவர்கள் குற்றவாளிகளாக ஆகியே தீரவேண்டியிருக்கிறது. . இது ஒரு விஷச்சூழல். அங்குள்ள பல குழந்தைகள் பெற்றோர் சிறையிலிருக்க பொது உதவியில் வாழக்கூடியவை

வடசென்னையில் ஒரு விழா போலவே இருந்தது. உறுமி மேளம், பட்டாசு வெடி. திரளாகச் சீனர்கள் வந்திருந்தார்கள். அவர்களுக்கு இந்து சடங்குகளின் பங்கேற்பதில் மனத்தடை இல்லை என்பதுடன் தாராளமாக நிதியும் வழங்குவார்கள் என்றார்கள். நானும் ஒரு சீனரும் சண்முகசிவாவும் விளக்கேற்றி பூஜையை ஆரம்பித்து வைத்தோம்

நான் அந்தக் கல்வியகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தேன். இம்மாதிரி சடங்குகள் பழக்கமில்லை என்பதனால் கொஞ்சம் சங்கடமாக இருந்தது. கல்வியகம் நேர்த்தியாகவே இருந்தது. இரு கூடங்கள். ஆசிரியர் அறை. பணம் திரட்டி ஊதியம் அளித்து ஆசிரியர்களை நியமித்து அவர்களைக்கொண்டு மாணவர்களுக்குக் கல்வி கொடுக்கப்போகிறாகள்.

கறுப்பர்களுக்கும் நம் மக்களுக்கும் உள்ள வேறுபாடு என எனக்கு தோன்றுவது நமக்கு இயல்பாகவே கல்விமீதுள்ள நாட்டமும் , குழந்தைகளை கல்விக்கு அனுப்புவதற்குச் சாதகமாக உள்ள உறுதியான குடும்ப அமைப்பும்தான். அது நம் மக்களைக் காக்கும், காக்கட்டும் என வேண்டிக்கொண்டேன்.

பன்னிரண்டாம்தேதி கொலாலம்பூர் எழுத்தாளர் சங்க சார்பில் ஒரு சிறுகதைப்பட்டறை. முப்பது பேர் வந்திருந்தார்கள். சிறுகதையின் வடிவம் சாத்தியங்கள் பற்றி வகுப்பு எடுத்தேன். ஐயங்களை விவாதித்தோம்.

முந்தைய நாள் இரவு நான் யுவராஜ் சிவா நவீன் ஆகியோர் பின்னிரவு மூன்று மணிவரைக்கும் பேசிக்கொண்டிருந்தோம். நான் என் இலக்கிய வாழ்க்கையில் மறக்கமுடியாத நாட்களாக நினைப்பவை சுந்தர ராமசாமி நாஞ்சில்நாடன் வசந்தகுமார் போன்ரவர்களிடம் பேசிப்பேசி விடியச்செய்த இரவுகளையே.

மதியம் தூங்கியபின்னர் மாலை மீண்டும் நிகழ்ச்சி. வல்லினம் இணைய இதழ் வெளியிட்டிருக்கும் ஆண்டுமலரை சண்முக சிவா வெளியிட்டார். நான் சிறப்புரை ஆற்றினேன். நாவல் என்னும் கலையைப்பற்றி. தினேஸ்வரி என்ற பேரில் எழுதும் சல்மா அழகி. அவர் தொகுத்து வழங்கினார்.

தினேசுவரி மலேசியாவில் சமீபகாலத்தில் பேசப்படுபவர். அவரது தந்தை இஸ்லாமாக மாறியவர். அவர் தன் குடும்பத்தினர் இஸ்லாமாக ஆகிவிட்டதாக என தெரிவித்து பதிவுசெய்திருந்தார். ஆகவே பிறப்பிலேயே தினேஸ்வரி இஸ்லாம். அந்த விஷயம் தெரியாமல் பிறந்து அம்மாவிடம் வளர்ந்த தினேஸ்வரி உறுதியான சைவப் பிடிப்புள்ள இந்துவாக வாழ்கிறார். இஸ்லாமிய சட்டத்தின்படி ஒருவர் எக்காரணத்தாலும் இஸ்லாமை விட்டு வெளியேற இயலாது.ஆகவே தினேஸ்வரி இஸ்லாமியப்பெண்ணே என இஸ்லாமிய நீதிமன்றம் கூறுகிறது.

ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு கொலாலம்பூர் தெருவில் நின்று நள்ளிரவு வரை பேசிக்கொண்டிருந்தோம். சண்முகசிவா இருந்தார். நவீனும் அவர் மனைவி மணிமொழியும் யுவராஜும் அவர் மனைவி கவிஞர் தோழியும் சந்த்ருவும் அவர் மனைவியும். இலக்கிய ஆர்வம் கொண்ட உற்சாகமான அழகிய மனைவியருடன் மனம் கவர்ந்த விஷயங்களைப்பற்றி அகம் தாளாத தீவிரத்துடன் பேசிக்கொண்டு சிரித்துக்கொண்டு நின்ற இந்நாட்கள் அவர்களின் வாழ்க்கையில் பொன்னாட்களாக இருக்கும், பலசமயம் அவை கடந்து சென்றபின்னரே அவற்றின் ஒளி தெரியவரும். அவர்களில் பலர் வரும்காலத்தில் அவர்களின் கனவுகளை சாதனைகளாக ஆக்கலாம். ஆனால் சாதனைகளை விட கனவுகளின் காலமே இன்னமும் அழகானது, உத்வேகமானது.

இரவில் விடுதி அறையில் யுவராஜ் நவீன் சிவா மூவருடன் மீண்டும் விடிகாலை மூன்று மணிவரை பேசிக்கொண்டிருந்தேன். மலேசியா போன்ற சூழலின் சிக்கல் என்னவென்றால் அத்தகைய விரிவான இலக்கிய அரட்டைகள் நிகழ்வதற்கான சூழலோ அவற்றை நிகழ்த்தும் மையங்களோ இல்லை என்பதே. அவை ஓர் இளம் எழுத்தாளனுக்கு கற்பிக்கும் அளவுக்கு நூல்கள் கற்பிப்பதில்லை. இப்போதல்ல, உலக இலக்கிய வரலாற்றின் எங்கும் எப்போதும் அப்படியே. மேல்நாடுகளில் அந்த உரையாடல்குழுக்கள் இலக்கிய இயக்கங்களாகக்கூட மாறியிருக்கின்றன.

தமிழில் நகுலன், சுந்தர ராமசாமி, தேவதச்சன்,ஞானக்கூத்தன்,ஞானி என பல மையங்கள் உண்டு. வசந்தகுமார் இன்றைய முக்கியமான மையம். ஒரு அற்புதமான உரையாடல்காரர்கள் அவர்கள். அவர்களின் சபைகளில் இருந்து புதிய எழுத்தாளர்கள் வந்துகொண்டே இருந்திருக்கிறார்கள். அத்தகைய உரையாடல்மையங்கள் பற்பல ஆண்டுகளுக்கு நீளும் அளவுக்கு ஓய்வான வாழ்க்கைமுறையும் இருந்தது. ஓரளவு இன்னும் இருக்கிறது. மனிக்கொடிக்காரர்களும் கசடதபற காரர்களும் வானம்பாடிக்காரர்களும் எல்லாம் அவ்வாறு பேசிப்பேசிக்கூடியவர்களே.

மறுநாள் பதிமூன்றாம் தேதி மதியம் வரை பேசிக்கொண்டிருந்துவிட்டு சுவாமி பிரம்மானந்தாவின் சீடர் ஒருவரின் இல்லத்துக்கு சென்றேன். அங்கே பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவு ஒன்பதரை மணிக்கு சென்னைக்கான மலேசியா ஏர்லைன்ஸ் விமானத்தில் ஏறினேன். மலேசியாவில் நண்பர்களிடம் பலவருடங்களுக்கு தேவையானவற்றை இந்த பத்து நாட்களில் பேசி விட்டேன் என்று நினைக்கிறேன்

நள்ளிரவில் சென்னைக்கு வந்திறங்கினேன். விமான நிலையத்துக்கு ஷாஜியும், தனசேகரும் வந்திருந்தார்கள். சென்னை மழைபெய்து ஈரமாக பளபளத்துக் கிடந்தது.

முந்தைய கட்டுரைகாந்தி, ஒரு கடிதம்
அடுத்த கட்டுரைசிறுகதை பட்டறையும் வல்லின கலை இலக்கிய விழாவும்