கீதை கடிதங்கள் -6

IMG_20151208_182416

ஜெ,

இந்த உரையை நான் இந்த தலைப்புகளுக்குள் வைத்துபார்க்கிறேன்,

•கீதையின் வரலாறு
•கீதையின் மீதான நவீன மனிதனின் பார்வை
•கீதையை அணுகும் வழிமுறைகள்
•கீதையை படிக்கும் போது செய்ய கூடியதும் கூடாததும்
•கீதையின் மீதான அவதூறுகளுக்கான விளக்கங்கள்
•கீதை எதை பற்றி பேசுகிறது என்பதான ஒரு தொகுப்பு பார்வை
•கீதைக்கு இருக்கும் கவிமொழியின் நுட்பங்கள்
•கீதையின் வரிகளிலிருந்து சில எடுத்துக்காட்டுகள்
•சொந்த அனுபவம் மற்றும் ஆளுமைகளை முன்வைத்து சில குட்டிக்கதைகள்.

மொத்தமாக இந்த உரையை “கீதை உரை” என்று சொல்வதை விட “கீதையின் அறிமுக உரை” என்று சொல்வேன். உரையில் கீதைக்குள்ளே நுழையாமல் கீதையின் மீதான ஒரு தொகுப்பு பார்வையை முன்வைத்து பல்வேறு கோணங்களிலிருந்து பேசுகிறார். கீதையின் பாடல்களுக்குள் நுழையாமல் போவதற்கான காரணத்தையும் சொல்லிவடுகிறார். கீதையின் உள்ளடக்கத்தை பாரம்பரிய முறையில் ஒரு குருவினோடு அமர்ந்தும், தனது சொந்த கற்பனைகளினாலும், அனுபவங்களாலும் அதில் உள்ள பொருள் உணரவேண்டும் என்று கூறுகிறார்.

கீதையின் பொருள் என்று எல்லாருக்கும் பொதுவான ஒரு அர்த்தத்தை எடுத்துசொல்வது முடியாது என்றும் அது ஒவ்வொருவரின் தனிப்பட்ட இயல்பை பொறுத்து கீதையை வாழ்வு தோறும் மனதில் வைத்து வாழ்வில் பொறுத்தி பார்க்கும் வகையில் அதன் அகவயமான பொருளை ஒவ்வொருவரும் உணரவேண்டும் என்று வலியுறுத்துகிறார். அதனால் கீதையை அறிமுகம் செய்வதோடு நிறுத்திகொண்டார் என்று நான் நினைக்கிறேன். கீதையின் தத்துவ தளங்களில் கூட அதிகமாக இறங்கி பேசவில்லை. இதை சொல்வதற்கு நான் கீதை படித்திருக்க வேண்டும். ஆனால் அவர் பேசியதை வைத்து பார்த்தால் அதில் பெரும்பாலும் வரலாறும், அணுகுமுறை சார்ந்த விளக்கங்களே இருந்ததே தவிர தத்துவம் என்பது குறைவு.

ஆனால் இந்த அறிமுக உரை மிகவும் முக்கியமானதாக எனக்கு தெரிகிறது. கீதையின் என்னென்ன பேசபட்டிருக்கிறது, அது யாருக்காக என்று தெளிவாக வரையறுக்கப்படும் போது கீதை மூலம் எங்கு சென்றடைவோம் என்று புரிகிறது. அதனால் அதன் மீதான ஆர்வம் அதிகரிக்கிறது.

ஹரீஷ்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நான் அலுவலக வேலையாக கடந்த 8ம் தேதி சென்னையிலிருந்து கோவை
வந்திருந்தேன். ஆகவே அன்று ஒரே ஒரு நாள் மட்டும் உங்கள் கீதை உரையை கேட்கமுடிந்தது. அதில் நீங்கள் கோரக்பூர் கீதை உரை பற்றி கூறியதும்
சித்பவானந்தரின் உரை குறித்து விளக்கியதும் எது முதலில் படிக்க வேண்டியது
எனும் தெளிவை எனக்கு அளித்தது… கீதா முகூர்த்தம் பற்றி கூறினீர்கள்.
அத்தகைய ஒரு முகூர்த்ததின் பாதிப்பே தங்கள் வலைதளத்தை ஒண்ணரை ஆண்டுகள்முன்பு கண்டடைய காரணமாக இருந்தது. நான்கு நாட்களுக்கு சென்னையில் என்வீட்டருகே ஏற்பட்ட வெள்ள பெருக்கும் மின்சாரம் இனிமையும் கடும்மனச்சோர்வை அளித்த நிலையில் கோவைக்கு வந்து ஒரு நாள் தங்கள் உரையைகேட்டது மகிழ்ச்சி அளித்தது

சிவக்குமார்

சென்னை

ஜெ

மரபின் மைந்தன் முத்தனையா அவர்கள் தங்கள் கீதையுரை பற்றிய் எழுதிய நான்கு கட்டுரைகள் கவனத்திற்குரியவை என நினைக்கிறேன்

கீதை உரை தொடர்பாக 1

பொன்படகும் பட்டுநூலும் 2

ஒளி ஊடுருவும் தருணம் 3

இறகின் நிறங்கள் 4

சிவக்குமார்

 

முந்தைய கட்டுரைடீக்கடை இலக்கியம்
அடுத்த கட்டுரைசிங்கப்பூர் உரையாடல் 2015