கம்பனும் குழந்தையும்

1

மதிப்பிற்குரிய ஜெயமோகன் அவர்களுக்கு,

இக்கடிதம் புலவர் குழந்தை எழுதிய ‘இராவண காவியம்’ பற்றியது…இராவணனை நேர்மறை நாயகனாக காட்டியதில் வெற்றிபெற்ற குழந்தை அவர்கள், இராமனை எதிர்மறை நாயகனாக காட்டுவதில் வெற்றி பெறவில்லை. வால்மீகி கூட இராமனின் எதிர்மறைத்தன்மையை காட்டியிருக்கிறார் என்றே நினைக்கிறேன்.

நான் சொல்ல வருவது என்னவென்றால் குழந்தை அவர்களின்
படைப்பின் நோக்கம் பாதியளவே நிறைவேறியிருக்கிறது என்பதுதான்.
இராவண காவியம்’ பற்றிய உங்களது கருத்துக்களை அறிய ஆவலாக இருக்கிறேன்…..
இப்படிக்கு,
பாலமுருகன்,
தஞ்சாவூர்

1

அன்புள்ள பாலமுருகன்,

இப்படி புலவர் குழந்தை பற்றி ஒரு கேள்வி வரும் என நினைக்கவே இல்லை. திராவிடக்கட்சிகளின் கல்வி ஊடுருவலின் ஒரு பகுதியாக [அதில் பிழையில்லை, ஏனென்றல் மக்கள் அவர்களுக்கு வாக்களித்திருக்கிறார்கள்] பாடத்திட்டங்களில் இணைக்கப்பட்ட ஒரு பிரச்சார நூல் அது. அதை ஒரு கவிதை நூலாக எவரும் வாசிப்பதை நான் பார்த்ததில்லை. நீங்கள் ஆராய்ச்சி செய்கிறீர்கள் என நினைக்கிறேன்.

புலவர் குழந்தையின் ராவண காவியத்தை தமிழில் அனைத்தையும் வாசிக்க வேண்டும் என்பதற்காகவே மூச்சுப் பிடித்து நான் வாசித்து முப்பதாண்டுக் காலம் கடந்துவிட்டது. இன்று நினைவுகளைத்தான் சொல்லமுடியும்.

அவரது ஆற்றல் யாப்பில் உள்ள அபாரமான பயிற்சி. திராவிட இயக்கக் கவிஞர்களில் பெரும்பாலானவர்களுக்கு உள்ளூர இசை கிடையாது. அவர்களின் உள்ளம் சொற்பொழிவால் ஆனது. ஆகவே உரைநடையை யாப்பில் மடித்து அமைத்தது போன்ற தன்மை அவர்களின் செய்யுட்கள் அனைத்திற்கும் உண்டு. பாரதிதாசன் உட்பட. விதிவிலக்கு, குழந்தை.

இயல்பான இசைத்தன்மை கூடிய, செய்தல் வெளித் தெரியாத செய்யுள்களால் ஆனது என்பதே ராவண காவியத்தின் சிறப்பு. தமிழ்ப்பண்பாடு என அன்று தமிழியக்கங்களால் முன்வைக்கப்பட்ட வாழ்க்கைக் கூறுகள், தமிழிசை போன்ற அனைத்தையும் தன் காவியத்தில் ஒன்றாகத் தொகுக்க அவரால் முடிந்ததும் ஒரு சாதனையே.

என்னென்ன குறைகள்? முதல் விஷயம் முற்றிலும் கவிதையெழுச்சியே இல்லை என்பதுதான். உவமைகள் வர்ணனைகள் அனைத்துமே மிக மிகச் சம்பிரதாயமானவை. புதிய சொல்லாட்சிகளை அனேகமாக காணவே முடியாது. ஆகவே ஒரு கவிதை வாசகன் ஆழமான ஏமாற்றத்தையே எப்போதும் அடைய முடிகிறது அதில்

அதைவிட முக்கியமானது காவியத் தன்மை என்பதை குழந்தை அவர்கள் புரிந்து கொள்ளவே இல்லை என்பதுதான். அவரது மனம் எளிமையான திராவிட இயக்கப் பேச்சாளரின் தளத்தில்தான் செயல்பட்டது. சாதாரணமான கறுப்பு வெள்ளைச் சித்திரங்களை, வெறுப்பரசியலை அது சமைத்துப் பரிமாறிக் கொண்டே செல்கிறது

காவியம் என்பது கடல்போல் விரிந்து செல்லும் பேருள்ளம் கொண்ட கவிஞனால் கடவுளுக்கு நிகரான இடத்தில் நின்று இவ்வாழ்க்கையை நோக்கி எழுதப்படுவது. அவனுக்கு அந்தத் தளத்தில் மானுட உண்மைகளே கண்ணுக்குப்படுகின்றன, எளிய விருப்புவெறுப்புகள் அல்ல.

கம்ப ராமாயணத்தின் நாயகன் ராமன். அறத்தின் மூர்த்தியாக ஒரு மானுடனைப்பற்றிப் பேசுவதே கம்பனின் நோக்கம். ஆனால் காவியகர்த்தனாகிய கம்பன் கவிதையின் ஆயிரம் கால் புரவியில் ஏறிக்கொள்ளும் போது கம்பன் எனும் மானுடனை சிறிதாக்கி மெலெழுகிறான். அது நிகழாவிடில் அந்நூல் காவியமே அல்ல.

ராமனின் அனைத்துச் சிறுமைகளும் கம்பனால் தான் சொல்லப்படுகின்றன. ராவணனின் அனைத்து மாட்சிகளும் கம்பன் சொல்லாலேயே துலங்கி வருகின்றன. புலவர் குழந்தையே கம்பனில் அள்ளியே தன் காவியத்தை ஆக்கியிருக்கிறார். கம்பன் எவரையும் கீழிறக்கவில்லை. அவன் காவிய உச்சமாக அமைவது அதிமானுடங்கள் இரண்டு மோதிக்கொள்ளும் ஒரு புள்ளி.

ராவணன் ராமனின் அம்பு பட்டு விழும் உச்ச கட்டம். கம்பனின் சொற்கள் இப்படி எழுகின்றன. கோல் பட்டுச் சீறி எழும் ராஜநாகத்தைப் போல…


கள்ளிருக்கும் மலர்க்கூந்தல் சானகியை மனச்சிறையில் கரந்த காதல் உள்ளிருக்கும் எனக்கருதி உள் புகுந்து தடவியதோ ஒருவன் வாளி

இங்கே அரக்கனைக் கொல்லும் அவதாரம் அல்ல, அறமிலியை அழிக்கும் பேரறத்தான் அல்ல ஒரு கணவனும் இருக்கிறான். தன் மனைவி மேல் காமம் கொண்ட அன்னியனின் உள்ளத்தின் ஆழத்து அடுக்குகளுக்குள் சென்று தேடித் தேடித் துழாவிச் சலிக்கும் ஒரு கணவனின் உள்ளத்தை காணமுடிகிறது இவ்வரியில்.

ஒவ்வொரு சொல்லாலும் அந்த நுட்பத்தை நிகழ்த்துகிறான் தமிழ்த் தெய்வம் சன்னதம் கொண்டெழுந்த நாவினன். சீதை கள்ளிருக்கும் மலர்க் கூந்தல் ஆகச் சொல்லப்படுகிறாள். கற்பின் கனலாக அல்ல, மோகவல்லியாக. பித்தூட்டும் பெண்ணாக.

அசோகவனத்தில் கோடை நதியென மெலிந்து தெளிந்து ஒளி கொண்டு தவக்கோலம் பூண்டிருக்கும் நாயகி அல்ல அவன் நினைக்கும் அப்பெண். கள் மலர் சூடி கண்மலர்ந்து சிரித்து ராமனை களி கொள்ள வைத்த இளங்கன்னி. அவன் அங்கு தேடுவது அவளை.

ராவணன் அந்தக் கன்னியை தன் ஊன்விழிகளால் கண்டிருக்கவே மாட்டான், அவனுள் கரந்த காதலன் காணாமலிருப்பானா என்ன?

ராவணன் சீதையை கவர்ந்து வந்தது தெரிந்த காதலே. அப்படியென்றால் கரந்த காதல் எது? எங்கோ ஆழத்தில் அப்பாலும் ஒரு காதல் இருந்ததா? முற்றிலும் வேறானது? கள்ளிருக்கும் மலரா அவன் உள்ளம்?

ராவணனின் நகர்ச்சிறையிலிருந்து அவளை மீட்கலாம் ராமன், மனச்சிறையிலிருந்து எப்படி மீட்பான்? உள்ளிருக்கும் எனக் கருதி தடவுகிறது அம்பு. பதைப்புடன் ஏமாற்றத்துடன் சீற்றத்துடன்…

இன்னும் சிலநாட்களில் அவளை அனல்தேர்வுக்கு அனுப்பப் போகிறவன் அவன். அதற்கு ஒர் சலவைக்காரரின் சொற்கள் மேலதிகமாகத் தேவைப்படுகின்றன , அவ்வளவே. அதற்கான அந்தத் தவிப்பு அவனுள் இப்போதே இருக்கிறது.
இந்த உச்சத்தில் மானுட ராமனின் அம்பு பட்டுச் சரியும் அமரக்காதலனாகிய ராவணனே வாசகனின் கண்முன் பேருருவம் கொள்கிறான். அவனை நோக்கியே காவியகர்த்தனும் கண்ணீர் உகுக்கிறான் எனத் தோன்றுகிறது.

வீழ்ந்தான் அரக்கன் என அலையெழுந்து பூசல் கொண்டாடவில்லை கம்பனின் சொற்கடல். அங்குநிகழும் மானுட நாடகத்தின் உள்ளே புகுந்து தடவிச் செல்கிறது காவியச்சொல் எனும் வாளி. அங்கு கவிஞன் பிரம்மத்தின் சொல்வடிவத் தோற்றமென நின்றிருக்கிறான்.

பின்னும் மனம் விரியும் வாசகன் மட்டுமே பெருங்காதல் கொண்ட கணவனே ஆயினும் , பேரறத்தான் ஆயினும், புவியணைந்த பரம்பொருளே ஆயினும் அவன் மானுடன் என உணர்ந்து , அவன் ஆழம் தன் ஆழமே என உணர்ந்து அவனை மேலும் அறிவான். நீ நான் என இங்கு வந்தவன் அல்லவா என நெகிழ்வான்.

கம்பன் இங்கு நிகழ்ந்தபின் எழுந்த காவியங்கள் பல அதன் நிழல்கள். கந்தபுராணம் போல. அவை கம்பனால் ஒளிகொண்டவை மட்டுமே. புலவர் குழந்தை இமயமலையின் முன்னால் உள்ளங்கையில் கூழாங்கல்லுடன் நின்றிருக்கும் எளிய மனிதர். துணிந்தார் என்பதே அவரது பெருமை, துணிந்திருக்கலாகாது என்பது உண்மைநிலை.
ஜெ

முந்தைய கட்டுரை‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3
அடுத்த கட்டுரைஅஞ்சலி : அருண் விஜயராணி