கடந்த நான்கு நாட்களாக, மாலை 6.30 மணியிலிருந்து கீதையை பற்றிய ஜெவின் மிகத் தீவிரமான உரை, பிறகு ஓரிரு மணி நேரங்கள் அவருடனும் நண்பர்களுடனும், வேடிக்கையும், வேதாந்தமும் கலந்த உரையாடல்கள் என்று போய்க கொண்டிருந்ததில்,, இன்று மாலை திடீரென்று பெரும் வெறுமையாக உள்ளது.(கடலூர் மூழ்கிக்கொண்டிருக்கும் போது கீதை உரையா என்று கேட்கும் சீனுவிடம் உரிய மன்னிப்பை கோருகிறேன்)
இந்தப் பேருரைகளின் மூலம் ஜெ, தனது இலக்கிய மற்றும் பொது வாழ்வில் வேறொரு தளத்திற்கு சென்று கொண்டிருக்கிறார் என்பதுதான், முதலில் தோன்றும் எண்ணம். இனி இந்த உரைகளை தமிழகமெங்கும் உள்ள நகரங்களிலும், வெளி மாநிலங்களிலும், வெளி நாடுகளிலும்,அவர் நிகழ்த்த வேண்டியிருக்கும். ஏற்கனவே நேர நெருக்கடி மிகுந்த அவர் வாழ்வில் இந்த உரைகளுக்கென ஒரு தனித்த நேரத்தை அவர் ஒதுக்க வேண்டியிருக்கும் கோவையில் இந்த உரைகளுக்குக் கிடைத்த வரவேற்பினை கண்டபின் எவருக்கும் தோன்றக்கூடிய எண்ணமே இது.
மழை அச்சுறுத்திக்கொண்டும், அவ்வப்போது பெய்து கொண்டிருமிருந்த இந்த நான்கு நாட்களிலுமே உரையைக் கேட்கக் கூடியிருந்த கூட்டத்தின் அளவு, மிகவும் வியப்பளித்தது. முதல் தினம ஞாயிறு மாலை என்பதால் அன்று வந்த ஒரு 450-500 பேர் கொண்ட கூட்டம் வியப்பளிக்கவில்லை. ஆனால் தொடர்ந்து வந்த மூன்று வேலை நாட்களிலும், தினந்தோறும் ஒரு 10 சதவீதம் கூட்டம் பெருகிற்றே தவிரக் குறையவில்லை. ஜெவே இதை தன பேச்சில் குறிப்பிட்டார்
இது போன்ற ஒரு தீவிரமான உரை இலக்கியத்துக்கு சம்பந்தமில்லாத நம் பொது மக்களுக்குப் பழக்கமில்லை. அதிலும் கீதை எனும்போது, பக்தி பரவசம் மிகுந்தக் குட்டிக்கதைகள், நகைச்சுவைத் துணுக்குகள் ஆகியவற்றுக்கே பழகியுள்ளவர்கள், இந்தளவு தீவிரம் கொண்ட, பல அடிப்படைகளை கலைத்து ஒரு மறு வாசிப்பை கோருகின்ற ஒரு உரையை நன்றாகவே வரவேற்றார்கள் என்றே எனக்குத் தோன்றுகிறது. கலைந்து செல்லும் கூட்டத்தினரிடையே இகழ்ச்சியான முகபாவங்களையும், விட்டேத்தியான எதிவினைகளையும் காண முடியவில்லை. ஒரு தீவிர முகபாவத்தையும், கீதை குறித்து தாங்கள் இதுவரை எண்ணியிருந்ததை மறு பரிசீலனை செய்ய வேண்டுமோ என்ற சலனத்தையும் வெளிப்படுத்தும் எதிர்வினைகளையுமே காண முடிந்தது.
சரி உரை எப்படி? என் பார்வையில், நான்கு நாட்களையும் இப்படிச் சொல்வேன். முதல் நாள் பேசியது. ஆராய்ச்சியாளர் ஜெயமோகன் இரண்டாம் நாள் படைப்பாளி ஜெயமோகன், மூன்றாம் நாள் சிந்தனையாளர் ஜெயமோகன். நான்காம் நாள், தலைசிறந்த நுட்பமான இலக்கிய வாசகனும், மிக முக்கியமான விமர்சகரும், தமிழின் மகத்தான படைப்பாளிகளில் ஒருவருமான ஜெயமோகனால் மாற்றி மாற்றி நிகழ்த்தப்பட்டது.
இதில் என் தனிப்பட்ட சிக்கல் என்னவென்றால், வரலாற்றுப் பொருள்முதல்வாதம், இயங்கியல் பொருள்முதல்வாதம், வரலாற்றின் முரணியக்கம் ஆகியவை தெரிந்த அளவுக்குக் கூட கீதை எனக்குத் தெரியாது என்பதே. கீதை குறித்த எனது அறிவு, ஒரு சராசரி தமிழ் வாசகனுக்கு இருக்கக் கூடிய பொதுப் புத்தி சார்ந்த ஒன்றுதான்.நான் இரு உரைகளையே படித்திருக்கிறேன். பாரதி மற்றும் கண்ணதாசன். எனது கீதா முகூர்த்தம் இன்னும் திறக்கவில்லை என்றே சொல்ல வேண்டும்.
இந்த உரைகள் முக்கியமாக ஒரு விவாதத் தரப்பை முன்வைக்கின்றன. இதனோடு முரண்பட்டு விவாதிக்கும்போதுதான் இவை இன்னும் மேலதிகமாக விரிவடைந்து வளரும்.போகப்போக, கீதையின் காலம் , இ ந்து ஞான மரபில் அதன் இடம் ஆகியவற்றை நிறுவ வேண்டிய அவசியம் இருக்காது. (இதில் எளிதாக ஒரு consensus வந்துவிடும்). கீதையின், முரண்பட்டு விவாதித்து மேல்செல்லும் தன்மை குறித்து ஜெயமோகன் சொல்வதும், குலக்கலப்பு குறித்த கருத்துக்களும்,பெரிதும் விவாதிக்கப்படும்.மேலை நாட்டின் இயங்கியல் தத்துவமும், நமது யோக மீமாம்சையும் (அல்லது யோகம் என்ற சொல் கீதையில் எப்படி பொருள் படுகிறது என்பதும் ) ஒன்றா என்பது போன்ற விவாதங்கள் வரலாம். மேலும் ஒவ்வொரு அத்தியாயத்திற்குமே, அவரது கோணத்திலிருந்து விளக்கங்கள் எதிர்பார்க்கப்படும்
இந்த உரைகளில் மரபான உரைகளுக்கு மாற்றாக, ,ஜெ முழுமையான நம்பிக்கையுடன் முன்வைத்த கருத்துகள் உண்டு. சற்றே தயக்கத்துடன், (என் பார்வையில்) முன்வைத்த இடங்களும் உண்டு. குறிப்பாக, உடலென்பது சட்டை, ஆத்மா என்பது உடல் என்ற கீதையின் கருத்துக்கு அவரது விளக்கம், சம்பிரதாய விளக்கத்தைத் தாண்டி போகவில்லை என்று நினைத்தேன். (ஒவ்வொன்றிலும் மாறுபட்டு இருக்க வேண்டும் என்பதொன்றுமில்லை என்றாலும்).
ஜெவின் படைப்புகளைப படித்தவர்களுக்கும், பயின்றவர்களுக்கும்கூட இந்த உரைகள் ஒரு திறப்பை உருவாக்கும் ஜெவின் .இந்தச் சிந்தனை முறைக்கு முற்றிலும் அந்நியமானவர்கள் அறிமுகம் இல்லாதவரகள் இது பற்றி என்ன நினைக்கிறார்கள் என்பதை அறிய மிக ஆவலாக இருக்கிறது. முக நூலில் ஒரு சில பதிவுகளைக் கண்டேன். ஆழ்ந்து கவனித்திருக்கிறார்கள் என்று புரிந்தது. இன்னும் அதிகப் பதிவுகள் வரும்போது இன்னமும் துலங்கும்.
இதம் சர்வம் ஜகத் மோஹிதம், ஈசாவாஸ்யம் இதம் சர்வம் போன்ற வாக்கியங்களைக் கேட்டபோது, சம்ஸ்க்ருதம் படிக்காமல் விட்டுவிட்டோமே என்று ஒரு ஆதங்கம் எழுந்தது.(காலம் இருக்கிறது என்ற நம்பிக்கை இருக்கிறது) உரையைப் பொறுத்தவரை இது ஒரு துவக்கம்தான் என்றே தோன்றிக் கொண்டிருகிறது.
சுரேஷ் கோவை.