மழை,மனிதர்கள்- கடலூர் சீனு

2

 

 

இனிய ஜெயம்,

இன்று மதியம், இழந்த சில பொருட்களை மீண்டும் சீர் செய்து தர, கடலூர் துறைமுக தர்க்கா சென்றோம். எங்கெங்கிருந்தோ வசதி அற்ற குடும்பங்கள் தங்கள் மனநோய் கண்ட குடும்ப உறுப்பினரை  நாற்பது நாள் மந்திரிக்கவேண்டி அங்கே தங்க வைத்து அவர்களும் அங்கே கிடக்கிறார்கள்.

எந்த வசதியும் அற்ற ஒழுகும் கூரை கொண்ட  கட்டிடம். அதற்கு சற்று தள்ளி ஒரு சின்ன சாய்ப்பில் வரிசையாக கல் அடுப்புகள் கொண்ட சமையல்கட்டு. பின்பக்கம் ஏனோ தானோ மறைப்பில் குளியல் மற்றும் கழிப்பிடம். அனைத்தும் மழையில் பிசுபிசுத்து  கால் வைக்கும் இடமெல்லாம் உருகிய காட்பரிஸ் போல சேறு. அழுகிய முட்டையும் தழை நாற்றமும் கலந்த துர்வாடை. அங்கேதான் சில மனநோயாளிகள் வந்து போகிறார்கள். சிலர் நிரந்தரமாக கிடக்கிறார்கள்.

நாங்கள் சென்ற போது ஒருவன் இளையவன் வேகமாக ஆவலுடன் வந்தான் நாங்கள் தந்த உணவுப் பொருட்களை ஆவலுடன் பெற்றுக் கொண்டு மேலும் ஆவலுடன் எங்களை நோக்கினான். நாங்கள் அனைத்தையும் முடித்து வெளியேறும் வரை எங்களையே பார்த்துக் கொண்டிருந்தான். வெளியேறும் கணம், அவன் முகம் வலிப்பு போல கோணிக் கொண்டது. கையில் உள்ளவற்றை வீசி எறிந்தான்.  ”டேய் என்ன அம்மாகிட்ட போக விடுங்கடா” என்று கதறி அழுதபடி ஓடி வந்து சங்கலி தடுக்கி குப்புற விழுந்தான்.

வயதுப் பெண் ஒருவர், எதுவும் பேசாமல் உறங்காமல் நின்றுகொண்டே இருக்கிறார். பல மாதமாக .அவரது நோய் அல்லது அவரைப் பற்றிய பேய் அது. அவருடன் யாருமில்லை அவரது அம்மா மட்டும் கூடவே காத்துக் கிடக்கிறார், முடிவிலி நோக்கிய காத்திருப்பு. ஊழி வந்து மட்டுமே நிறைவு செய்யக்கூடிய காத்திருப்பு.

வெளியே வந்தோம் ”ச்சே இப்டி வாழறதுக்கு பேசாம செத்துடலாம் இல்லன்னா ” என்றார் என் நண்பர் அருள்.  வாழ்வோ சாவோ எப்போதும் என் உடன் நிற்பவர்.  நிவாரணப் பணிகளில் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருப்பவர்.  ஒரு நாள் முன்பு இதே வார்த்தைகளை வேறு தொனியில் சொன்னார்.< ஒரு மையத்தில் வந்து குவிந்த கூட்டத்துக்கு வண்டிக்குளிருந்து நிவாரண பொருள் பைகளை எடுத்து தந்து கொண்டிருந்தார். ஒரு தாய்க்குலம் பைக்குள்ளிருந்த உபயோகித்த உடைகளை மட்டும் வெளியே எடுத்து மீண்டும் வண்டிக்குள் எறிந்தது. மனிதர் அவமதிப்பால் சிறுத்து விட்டார். இப்படி பல தருணங்கள், பல அவமதிப்புகள். அருள் பாடி பில்டர். அடக்கமுடியாத கோபம் வந்தால் யாரையாவது போட்டு அடிப்பார். அடக்க முடிந்த கோபம் வந்தால் தண்டால் போடுவார். எனக்கு கோபம் வந்தால் இலக்கியம் என்றால் என்ன என்றே அறியாத அவருடன் இலக்கியம் பேசுவேன். பல சமயம் தண்டால் போட்டபடிதான் என் இலக்கிய பேருரைகளை கேட்பார். ஒரு நாள் அடக்க மாட்டாமல்  யோவ் இருய்யா நீ எப்பவும் பொலம்புற ஜெயகாந்தனோட ரெண்டு கதயவாவது படிச்சிட்டு வந்து உன்ன சாத்துறேன் அப்ப தெரியும் உன்கிட்ட நான் படுற வேதன. என்றார். அதிர்ச்சியாக  தனது மொபைலில் ஜெயகாந்தனை இறக்கி வாசிக்கவும் தொடங்கி விட்டார். ஒரு நாள் திடீர் என போனில் ''அண்ணா நீ ஏன் எப்பவும் ஒரு மாதிரியாவே இருக்கன்னு தெரிஞ்சு போச்சி. இதெல்லாம் வெறும் கதை இல்ல.கொஞ்சம் வாழ்க்கை'' என்றார்.  இலக்கியம் ஒருவனுக்குள் மலரும்  மாய தருணத்தை அக் கணம் மீண்டும் கண்டேன். இப்டித்தான் அந்த குஷ்ட ரோகியை நீயெல்லாம் ஏன் உயிரோட இருக்கன்னு ஒருத்தி கேட்டுட்டா'' என்றார் தண்டாலில் மூச்சிரைத்தபடி. அவர் குறிப்பிட்டது ஜெயகாந்தனின் நான் இருக்கிறேன் கதையை.. ''அதுல ஒருத்தி அவனுக்கு சோறு போடுவா. அவள ஜெயகாந்தன் வள்ளலார் மாதிரியே காண்பிச்சிருப்பார்.பொம்பள வள்ளலார். பசிக்கு கை என்துனவன ஒருத்தி சாவ சொல்லுறா. இன்னொருத்தி அவன் பசி தெரிஞ்சி அவன காயப்படுத்தினதுக்கு அழுதுக்கிட்டே சோறு போடுறா'' அங்கிருந்து துவங்கி கதையை ரசித்து சொல்லிக்கொண்டே போனார். அவன் குஷ்ட ரோகிதான் ஆனா கூ..............ப்பு புடிச்ச ஆளு. ரத்தக்கண்ணீர் எம்மார் ராதா மாதிரி. அண்ணா குரூபி கிட்ட மட்டும் சராசரியா யார் கிட்டயுமே பாக்க முடியாத தீவிரம் சிலத பாக்கலாம். தீவிரமான அன்பு செலுத்துற குரூபிய நான் பாத்திருக்கேன். அந்த மாதிரி ஆளு இவன்.  அதுல ஒரு அழகு பாருங்க அழகில்லாதவன்தானே அழகு பத்தி யோசிக்க முடியும்? இவனும் அழகைத் தேடுறவன்தான். ஆனா அழகுக்காக ஏங்குறவன்  இல்ல. எது அழகோ அதத் தெரிஞ்சவன். வானம் நிலா காத்து ஆறுன்னு அழகோட மடிலதான் கிடக்கான். அவனுக்கு ட்ரைன் வர நேரம் தெரியும், அதனாலதான் ட்ராக்ல விளையாடுற குழந்தைய தூக்குறான். அது தெரியாம அதோட அம்மாப்பா அழுகுன கையால எப்டி எம் புள்ளைய தொடலாம்னு அவன்கிட்ட சண்டைக்கு போறாங்க. அவன் குழந்தைய மட்டும் இல்ல. ஆடு மாடு எல்லாத்தையும் அந்த நேரம் ட்ராக்ல நிக்கும் எதையும் காப்பாத்துறான். உதவிப் பணிகளுக்கு இடையே ஜெயகாந்தன் ஆளுமை குறித்த வசீகர கதைகளை அவருக்கு சொல்லிக் கொண்டிருந்தேன். உத்வேகத்துடன்  உதவிப் பணிகளை செய்தபடியே பேச்சை தொடர்ந்தார்.  தற்கொலைக்கு ட்ராக்ல படுக்குற முடவன இத்தனை நம்பிக்கை வார்த்தை சொல்லி வாழ்க்கை நோக்கி திருப்புனவன் ஏன் தற்கொலை செஞ்சுக்கணும்?  ..அது நிச்சயம் தற்கொலைதான் அவனுக்கு ட்ரைன் வரும் நேரம் எல்லாம் தெரிஞ்சிருக்கு. அப்போ வாழ்ந்தது போதும்னு முடிவு எடுத்துட்டான் அவ்வளவுதான்.  அழகா இல்ல. வாழ முடியாம சாகுறது வேற, வாழ்ந்தது போதும்னு முடிச்சிக்கறது வேறதானே. இங்க ஜெயகாந்தன் கலக்கிட்டாரு.  அது முடிவெல்லாம் இல்ல. கதை தலைப்பை பாருங்க நான் இருக்கிறேன். அப்டின்னா என்ன ?  அந்த குழந்தைல, அவன் காப்பத்துன மாட்டுல, முடவன்ல வாழும் வேட்கையா அவன் இருக்கான். அதுதானே? வாழும் வேட்கை அதுதான் ''நான்'' இலையா?< நான் ஆதூரத்துடன் அவர் தோள் தட்டினேன் '' என் கூடவே இருக்குற இலக்கிய வாசகன இத்தனை நாள் தெரிஞ்சுக்காம இருந்துட்டேன் போல இருக்கே' பணிகள் தொடர்ந்து கொண்டிருக்க அருள் உத்வேகத்துடன் திரும்பி கேட்டார்'' அந்த குரூபி அவன்கிட்ட என்ன இருக்கோ அதை அதை இங்கே கொடுத்துட்டு போய்ட்டான். அதுதான் நான் இருக்கிறேன். ஜெயகாந்தன் அவர்கிட்ட என்ன இருக்கோ அதை இங்க கொடுத்துட்டு போயிருக்கார். அப்டி பாத்தா  ஜெயகாந்தனுக்கெலாம் சாவே கிடையாது இல்லையான்னா?'' >வெல்லப்பிள்ளையாரை எந்தப் பக்கம் கடித்தாலும், எத்தனை கொஞ்சமாக கடித்தாலும் அவர் இனிக்கவே செய்வார். அதன் சாட்சியாக என் நண்பனையே கண்ட இக் கணம் பாலை கண்ட  வான் மழை போல் பரவசம் அளித்தது.

இன்று மற்றொரு உவகையான நாள். காலையிலேயே பாரத் பிரதான் மந்த்ரி கி ஜெய் சொல்லிவிட்டு அருகிலிருந்த காலனியை [மழை நின்றிருந்ததால்] சுத்தம் செய்யும் பணியுள் அங்கிருந்த நண்பர்களுடன் இணைந்து களமிறங்கினோம்.

கடலூர் சீனுமதியம் ஜோ என்று பெய்த மழையில் எருமை போல நனைந்தோம். நிவாரண பொருட்களுடன் சேலத்தில் இருந்து சுதீந்திர சாஸ்திரிகள் அவரது நண்பர் டிரைவர் குமார் அவர்களுடன் வந்து எங்களை அணுகினார். அவருடன் அருகிலிருந்த யாரும் வந்து தீண்டாத காலனிக்குள் நுழைந்தோம்.

ஐயர் தி கிரேட் இறங்கிய கால் மணி நேரத்தில் காலனி மக்களுடன் ஐக்கியம் ஆகி விட்டார். அவர் கொண்டு வந்திருந்த உடைகளில் ஒன்றினை ஒரு குழந்தை உடனடியாக அணித்து வந்து அவர் வசம் காட்டியது. ஏரியாவே அவரை கொண்டாடியது. கிளம்புகையில் பஞ்சாங்கம் பார்த்து மழை எப்போது ஓயும் என நல்ல சேதி சொல்லி விட்டே பிரியா விடை பெற்றார்.

அவரும் குமாரும் பால்யம் முதல் சிநேகிதர்கள். குமார் தந்து நண்பர் குறித்து ”சார் இவன் ஆச்சாரமான பிராமணன். யாருக்கும் தெரியாமத்தான் கறி சாப்புடுவான்”. சாஸ்த்ரிகள் சிரித்துக்கொண்டே இவரை கிண்டல் செய்ய ரகளையான நண்பர்கள்.

அனைத்துக்கும் மேல் சாஸ்த்ரிகள் வந்தது முதல் கிளம்பும் வரை எனக்கு. ரிக் வேத பாடல்களை சம்ஸ்கிரிதத்தில் சொல்லி, தமிழில் அதற்க்கு பொருள் சொல்லிக் கொண்டே வந்தார். எப்போதேனும் சில சமயம் ஆசிரியர்களே நண்பனாக கிடைப்பது உண்டு அப்படிப் பட்ட நன்னாள் இது எனக்கு. சாஸ்த்ரிகளுக்கு வயது முப்பத்தி ஒன்று.

இனிய நட்பு ஒன்று கிடைத்த நாள் இன்று..

கடலூர் சீனு

முந்தைய கட்டுரைசிங்கப்பூர் உரையாடல் 2015
அடுத்த கட்டுரை‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 1