கடிதங்கள்

அன்புள்ள ஜெயமோகன் சார்,

நலமா. நீங்கள் ஆப்பிரிக்காவில்  வாழும் நண்பர்கள்  பற்றி எழுதிய  பதிவை படித்தேன்.
உங்களுக்கு கடிதம் எழுதி  நீண்ட நாட்கள் ஆகிறது. 2012  மே முதல் நான்  இந்தியாவில்  புனேவில்தான் இருந்தேன். கே.ஜே. அசோக் குமார் கூட உங்களுக்கு  2014இல்  புனே  வரமுடியுமா என்று  கேட்டு  ஒரு  மெயில்  அனுப்பி இருந்தார். அந்த சமயம் நான் அங்கேதான்  இருந்தேன். புனேவில்  இருக்கும்போது  உங்களை பார்க்கவேண்டும்  என்று  பிரசாத்  பாலாஜி  திருமணத்திற்கு  திருச்சி  வந்திருந்தேன். ஆனால் நான்  மண்டபத்திற்கு  வந்து  சேர்ந்த  நேரத்தில்  நீங்கள்  வந்துவிட்டு  சென்றுவிட்டதாக  பிரசாத்  சொன்னார். நண்பர் விஜராகவனை  அங்கு பார்க்க முடிந்தது. என்னுடைய அதிர்ஷ்டம் அவ்வளவுதான். என்ன செய்ய.
2014 ஆண்டு தொடக்கத்தில் புனேவில்  வீடு வாங்கி அங்கேயே குடும்பம் வைத்தாயிற்று. நவம்பர் 2014 முதல்  நான்  மட்டும் மறுபடியும்  துபாய் வந்து சேர்த்திருக்கிறேன். நீங்கள் கூட என்னையும் , கென்யாவில்  இருக்கும் நண்பர் வெங்கட்டையும் எங்களது ஆப்ரிக்க அனுபவங்கள்  வைத்து  எழுத சொல்லி இருந்தீர்கள். வேலை தேடுவது , வேலையில் செட்டிலாவது  என்று 2015 முழுவதும் ஓடிவிட்டது.  படிப்பதை மொபைல்  போனில்  செய்ய  முடிவதால் அதில்  ஒன்றும் குறை இல்லை. ஆனால் எழுவதற்குதான்  அவகாசம்  கிடைப்பதில்லை. அப்படியும் ஒரு  நாற்பது பக்கங்கள் கையெழுத்து  பிரதியாக  எழுதியிருக்கிறேன். இன்னும் எழுத வேண்டும். எழுத எழுத வந்துகொண்டே இருக்கிறது. என் மனம்  பயணிக்கும்  வேகத்திற்கு  கை ஓடுவது இல்லை. இப்போதுதான்  தனிமை  கிடக்கும் வகையில்  ஒரு பிளாட்  என்னுடைய  பெயரில்  எடுத்திருக்கிறேன். இனிமேல்  எழுத வேண்டும். நிறைய படிக்க வேண்டும். இன்னும்  இரண்டு  மாத காலத்தில்  நான்  எழுதி  முடிக்கவேண்டும்  என்று  ஒரு  எண்ணம்  உண்டு.
சொல்புதிது குழுமத்தில்  கடிதங்கள்  எழுதுவது  இல்லை என்றாலும் , தினமும் நமது  இணையத்தளத்தில்  உள்ள பதிவுகளை  படித்துவிடுவதுதான்  வழக்கம். வெண் முரசு என் தலையை தாண்டிய வெள்ளமாக  போய்விட்டது. வெண்முரசு புத்தகங்கள்  வாங்கி  வைத்திருக்கிறேன். என்னடைய  துணைவியார்  வாங்கியவரை அனைத்தையும்  படித்து விட்டார்கள். நீங்கள்  வியாசருடைய  வேலையையும் விநாயகருடைய  வேலையையும்  ஒன்றாகவே  செய்கிறீர்கள். வாழ்த்த வயதில்லை  வணங்குகிறேன்.

அன்புடன்
குருமூர்த்தி  ப
அன்புள்ள குருமூர்த்தி அவர்களுக்கு
நீங்கள் வந்துவிட்டால்கூட நைஜீரிய அனுபவங்களை எழுதலாமே
ஜெ
அன்புடன் ஜெயமோகன் அறிவது,

உங்களுடைய இணைய தளத்தை அடிக்கடி வாசித்து வருகிறவர்களின் நானும் ஒருவன். எத்தனையோ தடவைகள் எழுத வேண்டும் என்று நினைத்தபோதும் அதை இன்றுவரை செய்யாமல் இருந்து வந்திருக்கிறேன். உங்களுடைய நூல்கள் சிலவற்றை வாங்கியிருக்கிறேன். விடுமுறைகாலத்தில் வாசிக்க ஆரம்பிக்க வேண்டும். காடு நூல் கிடைக்கவில்லை. என்னுடைய வலைப்பூவை நீங்கள் ஒருதடவை பார்த்திருக்கிறீர்கள். புலவர் தெய்வநாயகத்தையும் அவருடைய போதனைகளையும் பற்றிய கருத்துக்களை ஒரு ஆக்கத்தில் விளக்கியிருந்தேன். இதுபற்றி நேரம் கிடைக்கும்போது உங்களுக்கு எழுதலாமென்றிருக்கிறேன்.

நான் ஒரு கிறிஸ்தவ போதகன், போதிப்பதிலும், கிறிஸ்தவ இலக்கியப்பணியிலும் பலகாலமாக ஈடுபட்டிருக்கிறேன். நியூசிலாந்து நாட்டில் வாழ்ந்து வருகிறேன். அடிக்கடி தமிழகம் வந்து போகிறேன். ஒருமுறை சந்திக்கும் வாய்ப்புக் கிடைத்தால் மகிழ்ச்சியடைவேன்.

இந்தக் கடிதத்தை எழுதுவதற்குக் காரணம் ஜெயகாந்தனைப்பற்றிய உங்களுடைய சமீபத்திய ஆக்கந்தான். 1962ல் முதல் முதலாக ஜெயகாந்தனின் ‘உன்னைப்போல் ஒருவனை’ சிறுவனாக இருந்தபோது வாசித்து அவர் எழுதிய அத்தனையையும் வாசித்து முடித்திருக்கிறேன். அவருடைய தீவிர வாசகன் என்றுகூறினாலும் மிகையாகாது. எனக்கு எழுதக்கற்றுக்கொடுத்தவர்களில் அவரும் ஒருவர் என்றுகூட சொல்லலாம். நீங்கள் உங்களுடய ஆக்கத்தில் குறிப்பிட்டுள்ள மணா (எஸ். டி. லட்சுமணன்) எழுதி குமுதம் வெளியிட்டிருக்கும் தொகுப்பு சென்னையில் எங்கு கிடைக்கும் என்ற தகவலைத் தந்தீர்களானால் மிகுந்த உதவியாக இருக்கும்.  இதைத் தொல்லையாகக் கருதாமல் செய்வீர்கள் என்று நம்புகிறேன். மீண்டும் தொடர்புகொள்ளும் வாய்ப்பையும், உங்களைச் சந்திக்கும் வாய்ப்பையும் அடைய ஆண்டவர் கிருபை செய்யட்டும். ஜனவரி மாதம் தமிழகம் வரவிருக்கிறேன் (பெங்களூர், சென்னை).

நன்றியுடன்.

பாலா

அன்புள்ள பாலா

நலமாக இருக்கிறீர்கள் அல்லவா? ஜெயகாந்தன் பற்றிய நூல் சென்னை நியூபுக்லேண்ட் கடையில் கிடைக்கும். ஜனவரி என்றால் புத்தகக் கண்காட்சிக்கே போகலாமே.
ஜனவரியில் சந்திப்போம். எண்ணை அனுப்பியிருக்கிறேன். தொடர்ச்சியாக எழுதுவது தடைபட்டிருக்கிறது என நினைக்கிறேன். எழுதுங்கள்
முந்தைய கட்டுரை‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 2
அடுத்த கட்டுரை‘அத்துவானவெளியின் கவிதை’- தேவதச்சன் கவிதைகளைப்பற்றி- 3